ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

புதிய யுனிகோட் (TANE) பற்றிய பழைய செய்திகள்!

தமிழ் எழுத்துகளுக்கு கம்ப்யூட்டர் சாஃப்ட்வேரில் அதிகமான இடம் ஒதுக்குவது குறித்து உலகளாவிய அமைப்பான 'யூனிகோட் கன்சார்டியம்' ஆராய்ந்து வருகிறது.

இந்தக் கூட்டமைப்பில் யாகூ, கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட உலகின் மிகப் பெரிய கணிநிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
உலகளாவிய சாஃப்ட்வேரில் தமிழுக்கு தற்போது ஒதுக்கப்பட்ட இடங்கள் குறைவு.
அதாவது '8 பிட்' அளவு இடங்களே உள்ளன. இதன் மூலம் கணினியில் தமிழை
இயக்குவதற்கு போதிய அளவுக்கு திறமோ, தரமோ இருக்காது என்று தமிழக அறிவியல்
வல்லுநர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

எனவே, தற்போதுள்ளதை விட அதிகமாக அதாவது, ஆங்கிலம் போல் '16 பிட்' அளவு
இடங்களை, தமிழுக்கு ஒதுக்க வேண்டும் என்று தமிழகம் கோரி வருகிறது. இது குறித்து ஆய்வு செய்வதற்காக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.ஆனந்தகிருஷ்ணன், பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மு.பொன்னவைக்கோ உள்ளிட்டோர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அக்குழு பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, '16 பிட்' இடங்கள் தேவை குறித்த காரணங்களைப் பன்னாட்டுக் கூட்டமைப்பின் முன் வைத்துள்ளது. இதையடுத்து, சென்னைக்கு வந்த பன்னாட்டுக் கூட்டமைப்பு தமிழக வல்லுநர் குழுவுடன் விவாதித்தது.

முதல் கட்டமாக தமிழ் அறிவியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளபடி தமிழ் எழுத்துகள் அனைத்துக்கும் குறைவான இடங்களால் ஏற்படும் பிரச்னை குறித்து கன்சார்டியம் உணர்ந்துள்ளது.

'தமிழ் எழுத்துருக்களுக்கு தற்போதைய 8 பிட் இடம் போதாது. 16 பிட் இடம் ஏன் தேவை என்ற காரணத்தை விளக்கிய பிறகு தற்போது இதில் உள்ள சிக்கலை பன்னாட்டு கூட்டமைப்பு புரிந்து கொண்டிருக்கிறது. இது மிகப் பெரிய முன்னேற்றம்' என்று தமிழக அரசு வட்டாரம் தெரிவித்தது.

16 பிட் முறை நடைமுறைக்கு வந்துவிட்டால், ஆங்கிலம் போல் ஒவ்வொரு தமிழ் எழுத்துக்கும் ஒவ்வோர் இடம் கிடைக்கும். ஒரே இயக்கத்தில் ஓர் எழுத்து எளிதில் பதிவாகும். 25 சதவீத நேரம் மிச்சமாகும். தமிழ் இயக்கத்தை விரைவில் செயல்படுத்தலாம். தரமும் மேம்படும். உலக அளவில் வணிகம், அறிவியல், ஊடகம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் தமிழ் எழுத்துகளை விரைவில்
பதிவு செய்யலாம்.

எல்லாவற்றையும் விட, தற்போதைய முறையால் ஏதேனும் எழுத்துப் பிழை நேர்ந்தால், அதனால், சட்டச் சிக்கல் தோன்ற வாய்ப்புண்டு. 16 பிட் இடம் கிடைத்தால், அச்சட்டச் சிக்கல் தோன்றவே வழியில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி: தினமணி

 

தமிழ் எழுத்துருவைத் தரப்படுத்த ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் பணிக்குழு
சென்னை, நவ. 14:

தமிழ் எழுத்துருவைத் தரப்படுத்துவதற்காக ஒரு பணிக்குழுவைத் தமிழக அரசு அமைத்துள்ளது.

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன (எம்.ஐ.டி.எஸ்.) தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தலைமையிலான இக்குழுவின் துணைத் தலைவராக எஸ்.ஆர்.எம். பல்கலை. இயக்குநர் மு.பொன்னவைக்கோ உள்ளார்.

இதில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் விவரம்:

ம. இராஜேந்திரன் (இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை), என்.பாலகிருஷ்ணன் (இணை இயக்குநர், இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூர்), ஏ.மோகன் (இணை இயக்குநர், தேசிய தகவல் தொழில்நுட்ப மையம், சென்னை), விஞ்ஞானி சுவரண் லதா (மத்திய தகவல்தொடர்புத் துறை), எஸ். ராமகிருஷ்ணன் (செயல் இயக்குநர், சி.டி.ஏ.சி., புனே), எம்.என். கூப்பர் (மாடுலர் இன்ஃபோடெக், புனே), பி.செல்லப்பன், மா. ஆண்டோ பீட்டர் (இருவரும் கணித்தமிழ்ச் சங்கம்), வி.கிருஷ்ணமூர்த்தி (கிரெசன்ட் பொறியியல் கல்லூரி), என்.அன்பரசன் (ஆப்பிள்சாஃப்ட், பெங்களூர்).

இவர்களுடன், வெளிநாட்டில் வசிக்கும் மணி. மணிவண்ணன் (கலிபோர்னியா, யு.எஸ்.), கே.கல்யாணசுந்தரம் (சுவிட்சர்லாந்து), கலைமணி (சிங்கப்பூர்) ஆகிய வெளிநாட்டவரும் இடம்பெற்றுள்ளனர்.

கணிப்பொறியில் தமிழ் எழுத்துகளை இடம்பெறச் செய்ய "8 பிட்' எனப்படும் இட அளவு ஒதுக்கப்பட்டுள்ளது. மாறாக, "16 பிட்' இட அளவை ஒதுக்கவேண்டும் என்று தமிழ் அறிஞர்களும் விஞ்ஞானிகளும் கருதுகின்றனர். தற்போது ஆங்கில எழுத்துகள் அவ்வாறு உள்ளன. இந்த விரிவாக்க முறை தமிழுக்கும் செயல்படுத்தப்பட்டால், கணினியில் தமிழை வெகு விரைவாகப் பயன்படுத்த இயலும்.

இது தொடர்பான கருத்தரங்கு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அண்ணா பலைகலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக இப்பணியை மேற்கொள்ள ஆனந்தகிருஷ்ணன் குழு அமைக்கப்பட்டது.

இத்தகவலை தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குநர் ப.அர. நக்கீரன் தெரிவித்தார்.

நன்றி: தினமணி

 

தமிழ் 16-பிட்டு அனைத்து எழுத்துருக் குறியீடு – பரிந்துரைகள்
தமிழ் 16-பிட்டு அனைத்து எழுத்துருக் குறியீடு தொடர்பாக உலகின் பல பகுதிகளிலிருந்து வரப்பெற்ற கருத்துகளை ஆய்வு செய்தும் கருத்தரங்கக் கலந்தாய்வின்போது வழங்கப்பட்ட கருத்துகளைத் தொகுத்தும் பார்க்கையில் எந்தவொரு ஐயத்திற்கும் இடமின்றித் தமிழ் மொழிக்கு ஒரேஒரு எழுத்துருத் தரப்பாடு மட்டுமே இருக்கவேண்டுமென்றும்; அந்த ஒரு தரப்பாடு தமிழ் 16-பிட்டு அனைத்து எழுத்துருக் குறியீடாகத்தான் இருக்கவேண்டுமென்றும் ஒருமனதாகப் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் இந்த அனைத்து எழுத்துத் தரக்குறியீட்டினை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் செயல்படுத்தத் திட்டம் வகுக்கவேண்டுமென்றும் பரிந்துரைக்கப்பட்டது. அந்த அடிப்படையில் கீழ்க்காணும் செயல்திட்டங்கள் அரசுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன:

1, தமிழ் 16-பிட்டு அனைத்து எழுத்துருக் குறியீட்டினைச் சோதித்தறியவும், ஏற்புடைமை பற்றிக் கலந்தாய்வு செய்யவும், இத்திட்டம் தொடர்பான ஏனைய செயல்பாடுகளை மேற்கொள்ளவும் ஒரு திட்டக்குழுவைத் தமிழக அரசு அமைக்கவேண்டுமெனப் பரிந்துரைக்கப்படுகிறது,

i. 2006 டிசம்பர் திங்களுக்குள் தமிழ் 16-பிட்டு அனைத்து எழுத்துருக் குறியீட்டினை வரையறுத்து முடிவு செய்தல்,

ii. தமிழ் 16-பிட்டு அனைத்து எழுத்துருக் குறியீட்டினை மின் ஆளுமை, இணையதள வெளியீடு போன்ற பயன்பாடுகளில் ஆழச் சோதித்தல்,

iii. தமிழ் 16-பிட்டு அனைத்து எழுத்துருக் குறியீட்டினை உலகளவில் பரவச் செய்தல்,

iv. தமிழ் 16-பிட்டு அனைத்து எழுத்துருக் குறியீடு தொடர்பான ஓர் உலகக் கருத்தரங்கினை ஏற்பாடு செய்து இக்குறியீட்டினைச் செயல்படுத்துவது தொடர்பான இறுதி முடிவினை எடுத்தல்;

ஆகியன இத்திட்டக் குழுவின் செயல்பாடுகளாக அமையும்.

2, தமிழ் 16-பிட்டு அனைத்து எழுத்துருக் குறியீடுபற்றித் தமிழ் மொழியை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடுகளிடமிருந்து கருத்துகளைப் பெறத் தமிழக அரசு ஆவன செய்யவேண்டுமெனப் பரிந்துரைக்கப்படுகிறது.

3. இதுவரை, இப்போது பயன்பாட்டில் உள்ள யூனிகோடு தமிழ் TAM, TAB போன்ற தரப்பாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள தகவல்களையும் மென்பொருள்களையும் புதிய தமிழ் 16-பிட்டு அனைத்து எழுத்துரு குறியீட்டிற்கு மாற்றத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

4. புதிய தமிழ் 16-பிட்டு அனைத்து எழுத்துருக் குறியீட்டினைச் செயல்படுத்துவதற்குத் தேவையான மென்பொருள் கருவிகளையும், இயக்க மென்பொருள்களையும், உருவாக்குவதற்கு வேண்டிய நிதி ஒதுக்கீட்டினையும் செய்யுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

5. தமிழ் 16-பிட்டு அனைத்து எழுத்துருக் குறியீட்டினை யூனிகோடு குழுமத்திற்குப் பரிந்துரைக்க வாய்ப்புப் பெறும் வகையில், தமிழக அரசு யூனிகோடு குழுமத்தில் வாக்குரிமை பெற்ற உறுப்பினராவதற்கு ஆண்டுக்கு 15 ஆயிரம் அமெரிக்க டாலர் என்ற வீதத்தில் ஒருசில ஆண்டுகளுக்குச் செலுத்தி உறுப்பினராகவேண்டுமென்று பரிந்துரைக்கப்படுகிறது.

நன்றி: தமிழ் இணையப் பல்கலைக்கழகம்

 

தமிழை கணினி மொழியாக்க உதவும் அறிக்கை முதல்வரிடம் ஒப்படைப்பு

சென்னை, செப். 9:

தமிழ் மொழியை கம்ப்யூட்டர் மொழியாக்க உதவும் வகையில் "16 பிட்' அமைப்பில் மென்பொருள் தயாரிக்க வேண்டிய அவசியம் குறித்து முதல்வர் கருணாநிதியிடம் முன்னாள் துணை வேந்தர் வா.செ. குழந்தைசாமி வெள்ளிக்கிழமை அறிக்கை சமர்ப்பித்தார்.

தமிழ் இணைய பல்கலைக்கழகத் தலைவராக இவர் உள்ளார். தமிழ் மொழியில் அனைத்து எழுத்துகளையும் கொண்டதாக எழுத்துருக் குறியீடுகளை உருவாக்க "16 பிட்' அமைப்பில் மென்பொருள் தயாரிக்க வேண்டும் என்ற கருத்து நிலவி வந்ததால், அதுபற்றி பரிந்துரைகள் கூற முன்னாள் துணைவேந்தர்கள் மு. ஆனந்தகிருஷ்ணன், பொன்னவைக்கோ உள்ளிட்டோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

தமிழ் "16 பிட்' முறையில் அனைத்து எழுத்துருக் குறியீட்டினை சோதித்து அறியவும் ஏற்புடமை பற்றி கலந்தாய்வு செய்யவும் இத் திட்டம் தொடர்பான ஏனைய செயல்பாடுகளை மேற்கொள்ளவும் திட்டக் குழு ஒன்றை அரசு அமைக்க வேண்டும் என இக் குழு பரிந்துரை செய்துள்ளது.

அக் குழு இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து எழுத்துருக் குறியீட்டினை வரையறுத்து முடிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட யோசனைகளை இக்குழு கூறியுள்ளது.

சென்னையில் வெள்ளிக்கிழமை "கனெக்ட் 2006' என்ற கருத்தரங்க தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதியிடம் இவற்றை வா.செ. குழந்தைசாமி அளித்தார்.

தமிழ் எழுத்துகளை உள்ளடக்கிய மென்பொருள் தயாரிக்க தற்போதுள்ள "8 பிட்' அமைப்பில் 128 இடங்கள் தான் கிடைக்கும். அதில் 247 எழுத்துகளை சேர்க்க முடியாது என்பதால் "16 பிட்' அமைப்பை நிபுணர்கள் வலியுறுத்து வருகின்றனர்.

கடந்த வாரம் சென்னை வந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் இக் கருத்தை வலியுறுத்தினார். "16 பிட்' அமைப்பை உருவாக்கி, தமிழை கம்ப்யூட்டர் மொழியாக ஆக்கிட வேண்டும் என அவர் கூறினார்.

அதன் தொடர்ச்சியாக இப்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக எல்லா முயற்சிகளையும் தாம் எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட முதல்வர் கருணாநிதி, இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறினார்.

நன்றி: தினமணி

 

16 பிட் தமிழ் யுனிகோட்: அரசுக்கு பரிந்துரை
செப்டம்பர் 09, 2006 சென்னை :

16 பிட் கொண்ட தமிழ் யுனிகோட் எழுத்துருவை உருவாக்குவது தொடர்பான பரிந்துரை அறிக்கை முதல்வர் கருணாநிதியிடம் வழங்கப்படடுள்ளது.

தமிழ் எழுத்துருவில் பல நூறு வகைகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. ஆனால் எல்லோரும் பயன்படுத்தும் வகையில் யுனிகோட் எழுத்துருக்களை உருவாக்கும் வேலைகளும் நடந்து வருகின்றன.

இதில் முழு அளவில் வெற்றி கிடைக்கவில்லை. யுனிகோட் பாண்ட்களில் பல பிரச்சனைகள் உள்ளன. இவற்றைக் களையும் வகையிலும், தமிழ் மொழியில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் உள்ளடக்கிய 16 பிட் யுனிகோட் எழுத்துருவை உருவாக்குவது தொடர்பான மென்பொருளை தயாரிக்க வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகிறது.

சமீபத்தில் இது தொடர்பாக தமிழக அரசுக்கு ஜனாதிபதி கலாமும் வேண்டுகோள் வைத்தார். யுனிகோட் பாண்ட்களை முழுமையாக உருவாக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்றார்.

16 பிட் கொண்ட யுனிகோட் தமிழ் எழுத்துருவை உருவாக்கினால் மட்டுமே தமிழை முழுமையான இணைய தள மொழியாக மாற்ற முடியும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதையடுத்து யுனிகோட் எழுத்துரு குறித்து அரசு செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து பரிந்துரைக்குமாறு முன்னாள் துணை வேந்தர்கள் அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டன.

இந்தக் குழு தனது பரிந்துரையை தமிழ் இணையதள பல்கலைக்கழக வேந்தர் வா.செ.குழந்தைச்சாமியிடம் அளித்தது.

சென்னையில் நேற்று நடந்த கனெக்ட் கருத்தரங்க தொடக்க விழாவின்போது வா.செ.குழந்தைச்சாமி இப்பரிந்துரை அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தார்.

தமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் தற்போது உள்ள 8 பிட் அமைப்பில் உள்ளடக்க முடியாது. அதில் 128 எழுத்துக்களை மட்டுமே அடக்க முடிகிறது. எனவேதான் 16 பிட் கொண்ட எழுத்துருவை உருவாக்க கோரிக்கை எழுந்துள்ளது.

நன்றி: தற்ஸ்தமிழ்

ToTop