ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

யுத்தச் சுற்றுலா!

உயிர் பிழைத்திருப்போர் அடுத்த வேளை உணவைப்பற்றிய கவலையிலும்,வன்முறை நிறைந்த கடந்தகாலத்தை எண்ணி இன்னமும் பிரமை பிடித்தவர்களைப்போல இருக்கையில் அங்கு ஒரு யுத்தச் சுற்றுலா நடக்கிறது.

ஒருகாலத்தில் தடைசெய்யப்பட்டிருந்த குண்டும் குழியுமான ஏ-9 நெடுஞ்சாலை வழியாக ஸ்ரீலங்காத் தலைநகரத்திலிருந்து சனக்கூட்டம் நிரம்பி வழியும் பேரூந்துகள் சடசட வென்ற ஒலியுடன், தோற்கடிக்கப்பட்ட தமிழ் புலிகளால் கால் நூற்றாண்டுக்கு மேலாக சிறப்பான பகுதியாகவும் முன்னணி நிலையாக பாதுகாக்கப்பட்டு  தற்போது விடுவிக்கப்பட்டிருக்கும் பிரதேசமான வடக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றன.
போகும் வழியில் பேரூந்துகள் நிறுத்தப்பட்டு சூடான மதிய வெய்யிலில் பயணிகள் கீழே இறங்கி, உடைந்து நொறுங்கி காட்சிதரும் தண்ணீர் தொட்டிகள், கைப்பற்றப்பட்ட படகுகள், கவச வாகனங்கள் மற்றும் இராணுவத்தினருக்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் நினைவுச் சின்னங்கள் என்பனவற்றை புகைப்படம் பிடிப்பதற்காக தங்கள் செல்லிடத் தொலைபேசிகளை வெளியே எடுத்து தயாராகிறார்கள். சில இடங்களில் அவர்கள் குளிரான உணவுப் பதாhத்தங்கள் மற்றும் நினைவுச் சின்னமாக பாதுகாக்க ஒரு மேற்சட்டை என்பனவற்றை வாங்குகிறார்கள்.

இந்து மகா சமுத்திரத் தீவில் 25 வருடங்கள் பழமையான உள்நாட்டு யுத்தம் றிறைவடைந்து இரண்டு வருடங்களுக்குப் பின்னர், ஸ்ரீலங்காவின் ஒரு முழுத் தலைமுறைக்குமே இதுவரை தாங்கள் செல்வதற்குத் தடையாக இருந்த தங்கள் நாட்டின் ஒரு பகுதியைப் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது. அது அவர்கள் கேள்விப்பட்டு மட்டுமே இருந்த ஓரிடம், ஆனால் அங்கு வருகை தருவோம் என்று அவர்கள் கற்பனையில்கூட நினைத்திருக்காத ஓரிடம், யுத்தத்தின் வடுக்களிலிருந்து இப்போது மெல்ல குணமடைந்துவரும் ஓரிடம்.

“இவைகளையெல்லாம் பார்ப்பது உண்மையில் சுவாராஸ்யமானது” என்று தெரிவித்தார், தலைநகர் கொழும்பைச் சேர்ந்த கயான் எனும் 33 வயதான கணக்காளர் ஒருவர். அவர் கைப்பற்றப்பட்ட ஒரு இராணுவ ஊர்தியின் முன்பாக நின்று புகைப்படத்துக்கு காட்சி தரும் தனது தந்தையையும் சகோதரனையும்  புகைப்படம் எடுப்பதற்காக தனது பிளாக் பெர்ரி செல்லிடப் பேசியை தயாராக கைகளில் பிடித்திருந்தார். இது 25 வருட உள்நாட்டுப் போரின்போது தொடர்ச்சியாக அடுத்தடுத்து மோதல்கள் இடம்பெற்ற மூலோபாயம் மிக்க இராணுவத் தளமான ஆனையிறவில் இராணுவத்தினரால் நடத்தப்படும் ஒரு வீதியோர சுற்றுலா விடுதியில் காணப்பட்ட காட்சி.

“வளர்ந்து வரும் நாங்கள் புலிகளைப்பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம். மற்றும் கொழும்பில் நடக்கும் அவர்களின் தாக்குதல்களையிட்டு அச்சமடைந்திருக்கிறோம். எனவே சமாதானம் உண்டாவது அத்துடன் வடபகுதியை பார்வையிடுவது எல்லாமே நல்லதுதான்” என்று விடுதியிலிருந்து பனிக்கட்டிபோல குளிரான கோக் பானத்தை உறிஞ்சியபடியே சொன்ன அவர் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு காலத்தில் புலிகளுக்குச் சொந்தமாகவிருந்த ஏனைய யுத்த நினைவுச்சின்னங்களான ஒரு உழவு யந்திரம் மற்றும் மரத்தால் செய்யப்பட்ட படகு என்பனவற்றை ஆய்வு செய்வதில் தனது கவனத்தை திருப்பினார்.

ஸ்ரீலங்கா இராணுவம்  ஆசியாவின் நவீனமயமான நீண்ட மோதலை ஒரேயடியாக முடிவுக்கு கொண்டு வருவதன் ஒருபகுதியாக 34 மாதங்களாக சண்டையிட்டு 2000ம் ஆண்டு முதல் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆனையிறவை திரும்ப பெற்றுக் கொண்டது. அத்துடன் மே 2009ல் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தீவின் மூன்றிலொரு பகுதி பரப்பளவையும் பயங்கர அழிவுகளை ஏற்படுத்திய இறுதிப்போரில் பிரிவினைவாதிகளைத் தோற்கடித்தது மூலம் திரும்பப் பெற்றது.

கொழும்பு உட்பட நாட்டின் தென்பகுதியினர் தொடர்ச்சியாக அச்சமடைந்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களின் கொலைகளுக்கு காரணமான 30க்கும் மேற்பட்ட நாடுகளின் பயங்கரவாதப் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் புலிகளின் தரக் குறியீடான தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் இதர தாக்குதல்களுக்கு இந்த வெற்றி ஒரு முடிவுகட்டியது.

இப்போது சமூகங்கள் திரும்பிவந்து பார்க்கும் போது அவர்களது வீடுகள் அழிந்து போய், உடமைகள் காணாமற்போய் வருமானம் தேடுவதற்கு வழியற்ற ஒரு நிலையில் அந்த மக்கள் இருப்பதை காண்கின்றனர்.

சில தொண்டு நிறுவனப் பணியாளர்களும் மற்றும் உள்ளுர்வாசிகளும், உயிர்பிழைத்தவர்கள் தங்கள் அடுத்தவேளை உணவுக்கு அல்லாடும் நிலையிலும் கடந்தகால வன்முறைகளினால் துயரமான ஒரு சூழலில் வாழும்போது இந்த போர்ச் சுற்றுலா அவசியமா என்று கேள்வியெழுப்புகிறார்கள்.

“போர் முடிவடைந்தது அற்புதமான ஒரு விடயம்தான்” என்று தெரிவித்தார் தனது பெயரை வெளியிடவேண்டாம் என்கிற நிபந்தனையுடன், அப்படி வெளியிட்டால் அது அரசாங்கத்தைப் பாதிக்கும் என அச்சமடைந்திருந்த வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தை அடிப்படையாக கொண்டு பணியாற்றும் ஒரு வெளிநாட்டு தொண்டு நிறுவனப் பணியாளர்.

“ஆனால் அது மோசமான ஒரு முடிவை ஏற்படுத்தியுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் உடைந்து நொறுங்கிப்போன தங்கள் வாழ்க்கையை மீளக்கட்ட முடியாமல் மோசமான நிதி நிலமையினாலும், உணர்ச்சி மேலீட்டினாலும் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலமைகளிலிருந்து ஒரு சிறிய வணிக ஆதாயத்தை பெற நினைப்பதோ அல்லது பொதுமக்களின் மரணங்களுக்கு ஓரளவு பொறுப்பானவர்களுக்கு நினைவுத்தூபிகளை எழுப்புவதோ மிகவும் விரைவானதும் அறிவுபூர்வமற்றதுமாகும்” என்று அவா மேலும் தெரிவித்தார்.

இறுதிக்கட்ட மோதலின்போது சுமார் 300,000 வரையான மக்களை எதிர்த்துப் போரிடும் புலிகள் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தபோது அரசாங்கம் வேண்டுமென்றே பொதுமக்களைக் கொன்றது என்று எழுந்த குற்றச்சாட்டை அரசாங்கம் நிராகரித்து விட்டது.

வெளிநாட்டு தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பிரிவினைவாதிகளுடன் பணியாற்றவேண்டிய அவசியம் இருப்பதாலும் மற்றும் அவர்களின் அமைப்புகளில் புலிகளின் செயற்பாட்டாளர்கள் ஊடுருவியிருக்கலாம் என்பதாலும் அவர்களின் பிரசன்னத்துக்கு விசேடமாக வடக்கில் அரசாங்கம் ஆப்பு வைத்துவிட்டது.

ரீ- சேர்ட்டுகளும் இராணுவ குறிப்பேடுகளும்

அரசாங்கம் இராணுவ நடவடிக்கை மூலம் நூறாயிரக் கணக்கான தமிழ் பொதுமக்களை வெளியேற்றும்வரை பெரும்பாலான தமிழ் பொதுமக்கள் புலிகள் செல்லுமிடமெல்லாம் கூடச்சேர்ந்து செல்வதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். இவர்கள் வெளியேற்றப்பட்டதும் முறையான சுகாதார வசதிகளற்ற சன நெருக்கடிமிக்க இடப்பெயர்ச்சி முகாம்களுக்கு அனுப்பப் பட்டார்கள். போரின் கடைசி மாதங்களில் ஏற்பட்ட மோதல்களில் எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு இறுதியான கணக்குகள் எதுவுமில்லை

ஐநாவின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு அறிக்கை தெரிவிப்பது, ”ஆயிரக்கணக்கான சிலவேளைகளில் பதினாயிரக்கணக்கான பொதுமக்கள் குண்டுத் தாக்குதல்களினாலும் மற்றும் மோதல்களினாலும் கொல்லப்பட்டுள்ளார்கள் என்பதற்கு நம்பிக்கையான ஆதாரங்கள் உள்ளன” என்று. ஆனால் அரசாங்கம் இவை புலிகளின் பிரச்சார அமைப்புகளினால் ஆரம்பம் முதலே எழுப்பப் பட்டுள்ள கண்டுபிடிக்கப்படாத போலிக் குற்றச்சாட்டுகளை நிறைத்து வெளியிடப்பட்டுள்ளது என விமர்சித்திருக்கிறது.

இருந்தாலும் இந்த சுற்றுலாப் பேரூந்துகளில் இருந்து இறங்கும் ஒருவராவது இந்த இரத்தம் தோய்ந்த போரின் முடிவினைப்பற்றியோ, அல்லது உயிர்பிழைத்திருப்பவர்கள் படும் இன்னல்களைக் குறித்தோ குறிப்பிடுவதில்லை, தவிரவும் அங்கு காணப்படும் சீருந்துகள், உலக உணவுத்திட்டம் என்று பொறிக்கப்பட்ட சாக்குகளில் நிறைக்கப்பட்ட தானியங்களை ஏற்றியுள்ள பாரஊர்திகள், மற்றும் யு.என் என நீல எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பெரிய வெள்ளை நிற ஊர்திகள் என்பன இங்கு இன்னமும் உதவிகள் தேவைப்படுகின்றன என்பதன் அடையாளத்தை வெளிக்காட்டினாலும் அவர்கள் அதைப்பற்றிப் பேசுவதில்லை.kilinochchi watertank

கிளிநொச்சி நகர மத்தியை ஊடறுத்துச் செல்லும் ஏ-9 நெடுஞ்சாலை ஓரமாக சீமெந்தினால் கட்டப்பட்ட பிரமாண்டமான நீர்த் தாங்கி ஒன்று தரையில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கிடக்கிறது. இது புலிகள் தமிழை மட்டுமே முக்கியமான மூலவளமாகக் கொண்டு தாங்கள் செதுக்க நினைத்த நாடான தங்களது தமிழீழத்தின் தலைநகராக தாங்கள் ஒருதலைப்பட்சமாக பிரகடனப்படுத்திய ஓரிடத்தை விட்டு பின்வாங்கி ஓடும்போது வெடிவைத்து தகர்த்தது.

இந்த அழிக்கப்பட்ட தாங்கி ஒரு சுவருடன் இணைக்கப்பட்டு ஒரு பெயர் பொறிக்கப்பட்ட கல்லாக உள்ளதோடு மற்றும் நினைவுப் பொருட்கள் விற்கும் கடையாகவும் இராணுவத்தினரால் நடத்தப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகள் இங்கு சில புகைப்படங்களை எடுப்பதுடன், குளிர்பானங்களை அருந்துவதும் மற்றும் “கிளிநொச்சி மீள் எழுகிறது” எனும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட கறுத்த ரீ-சேட்டுகளையோ அல்லது தொப்பிகளையோ அல்லது வெற்றி வீரர்களான இலங்கை இராணுவத்தினரது களக் குறிப்பேடுகளையோ சில நூறு ஸ்ரீலங்கா ரூபாய்களைக் கொடுத்து வாங்கிச் செல்வதுமாக உள்ளனர்.

“வாரநாட்களில் அநேக பேரூந்துகள் இங்கு நி;றுத்தப்படுகின்றன. வார இறுதியில் நாங்கள் கிட்டத்தட்ட 600க்கும் மிக அதிக தொகையிலான வருகையாளர்களைப் பெறுகிறோம்” என்றார் சாதாரண உடை தரித்திருந்த நாலக்க விஜேபால எனும் 24 வயதான ஸ்ரீலங்கா இராணுவ வீரர் ஒருவர். அவரது தலையின் இடது பக்கத்தில் போரின்போது துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்ட காயத்தின் வடு தெரிந்தது.” இதை இராணுவத்தினரே நடத்துகின்றனர்…இது மிகவும் பிரசித்தமானது” என அவர் மேலும் சொன்னார்.

பாதை நெடுக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மற்றும் பல நினைவுச் சின்னங்களில் முக்கியமானவை – துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான கனசதுரக் குற்றி, சிவப்பு, பச்சை, மற்றும் தங்க வர்ணம் கொண்ட ஸ்ரீலங்கா கொடியை ஏந்தி நிற்கும் ஒரு தாமரை மலர் மற்றும் அதில் “இந்த நாட்டை அச்சுறுத்திவந்த மிருகத்தனமானதும் கொடூரமானதுமான பயங்கரவாதத்தை அழிப்பதற்காக மேற்கொண்ட கம்பீரமான செயற்பாட்டில் பங்காற்றிய ஸ்ரீலங்கா இராணுவத்தின் நினைவாக” என்கிற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் வெகு விரைவாக அதன் இராணுவ வீரர்களையும் மற்றும் சொத்துக்களையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் யுத்தத்தின் பின்னான அபிவிருத்தி என்ற இயக்கத்தின் ஒரு பகுதியாக பொதுமக்களின் நோக்கங்களுக்காக மீளவும் பயன்படுத்தி வருகிறது. மற்றும் அரசாங்கம் வடபகுதியில் சுமார் 100,000 வரையான படை வீரர்களை யுத்தம் நிறைவடைந்த பின்னும் அது விரும்பியதை அடைவதற்காக ஈடுபடுத்தி வருகிறது.

ஆனால் யுத்தத்தில் உயிர்பிழைத்து எஞ்சியிருக்கும் சிலருக்கு இவைகள் யாவும்  வெறுமனே வேகவேகமாக நடக்கும் நிகழ்ச்சிகளைப்போலத் தோன்றுகிறது.

நிறுவப்பட்டுள்ள கனசதுர நினைவுச் சின்னத்துக்கு  சில நூறு மீட்டர்களுக்கு அப்பால் வீதியோரத்தில் காய்கறி வியாபாரம் நடத்திவரும் சுபேந்தினி எனும் 35 வயதான யுத்த விதவை கூறுகையில்

“அவர்கள் வந்து போகிறார்கள்…. அவர்கள் தங்கள் புகைப்படங்களை மட்டுமே எடுக்கிறார்கள். அவர்கள் எங்களிடம் எதுவும் கேட்பதில்லை அல்லது என்ன நடந்தது என்பதைக்கூட அறிந்துகொள்ள விரும்புவதில்லை” என்றார்.

நிற்றா பகல்லா ( Nita Bhalla)

(தொகுப்பு: பிரைசன் ஹல் மற்றும் றெபேக்கா கேர்ட்டிஸ்)

நன்றி: ரொய்ட்டர்ஸ் – அலேர்ட்நெட்

தமிழில்: எஸ்.குமார்

நன்றி: தேனீ.காம்

ToTop