ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

புத்த பூர்ணிமை

காலம் கடந்து நிற்கும் குறிக்கோளும், இனம், நிலம், மொழி ஆகியவற்றைக் கடந்த
மக்கள் நல நோக்கும் கொண்டது பெளத்த நெறி. (தருமம்) அது தமிழர்களின் வாழ்க்கை
நெறியாக இருந்துள்ளது என்பதற்கு வரலாற்றுச் சான்று இலக்கியச் சான்றுகளும் பல உண்டு.
ஒரு மொழியின் ஒப்பற்ற இலக்கியமாகப் போற்றப்படும் இலக்கியம் ஒன்றில் பேசப்படும்
கருத்துக்கள், அந்த இலக்கியம் தோன்றுவதற்கு முன்பே சமுதாய வாழ்வில் மக்களிடத்தில்
எத்துணைச் செல்வாக்குப் பெற்றிருந்தன என்பதற்கு தக்க ஒரு சான்றாகும். எனவே,
தமிழ் மொழிக்கும் பெளத்த நெறிக்கும் உடன்பாடான ஒன்றே யாகும். பழம் பெருமை
வாய்ந்த நம் நாட்டில் தோன்றிய பழைய சமயங்களுள் பெளத்த சமயமும் ஒன்று.
புத்தர் பெருமானுடைய வாழ்க்கை தியாகம் நிறைந்த வாழ்க்கை. அன்பையும் அறிவையும்
அடிப்படையாக கொண்டதாக வாழ்க்கை.

நீண்ட நெடிய பாரம்பரியத்தை கொண்ட சனாதன உயர்ந்த தத்துவார்த்தங்களைக் கொண்டது.
ஆனால் இடைக்காலத்தில் அதை நடத்திச் சென்றவர்கள் பல்வேறு
சடங்களையும் பிரிவினைகளையும் சார அனுஷ்டானங்களையும் அதனுடன்
இணைத்தார்கள். தத்துவம் பின் தள்ளப்பட்டுச் சடங்குகள் மேலுக்குக் கொண்டு
வரப்பட்டன. இந்தச் சடங்குகளில் சில பொருந்தியவை. பல பொருளற்றவை.
உதாரணமாக தெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுக்கும் சடங்கு நியாயமற்றது.
ஆட்டையும் கோழியையும் இன்னும் பலவற்றையும் கோவில்களிலே நிறுத்திக் கொல்வது
உயிர் கொலை செய்வது தெய்வத் தொண்டு அல்ல. தெய்வ நிந்தனையே ஆகும்.

வடமேற்கு இந்தியாவிலும், வடகிழக்கு இந்தியாவிலும், முக்கியமாக இரு மதங்களைப்
பின்பற்றி வாழும் மக்கள் வாழ்ந்தார்கள்.

வட மேற்கு இந்தியாவில் வேதங்களையும் அவற்றில் சொல்லப்படும் வேள்வி முறைகளையும்
பின்பற்றி பிராமணர்கள் வாழ்ந்தார்கள். இவர்கள் சாதிவேற்றுமைகளைத்
தீவிரமாக ஆதரித்தார்கள்.

பிற உயிர்களைப் பலியிட்டு வேள்வி செய்வதனால், தன் பாவங்களைப் போக்கிக்கொள்ள
முடியும் என்றும் அதனால் ஒருவன் மேலான கதியை அடையாளம் என்று சொன்னார்கள்.

ஜெயின மதத்தைச் சார்ந்தவர்கள் தீவிரமாக அஹிம்சையையுடன் கடுமையான தவ வாழ்வை
மேற்கொண்டு அம்மணக்கோலத்துடன் சஞ்சரித்தார்கள். உண்ணா நோன்பிருந்து சல்லேகனை
என்னும் பெயரில் உயிர் துறந்தனர்.

இப்படிப்பட்ட பல்வேறு சடங்குகளும் மூட நம்பிக்கைகளும் பரவி வேர் விட்ட நேரத்தில்
மனித ஜாதி ஒரு உன்னத வழிகாட்டியை தேடி நின்றது.

தீவிரப் போக்குள்ள இந்த இரு வித நடைமுறை தவிர்த்து ஒரு நடுத்தர வழியை அமைத்து
அறநெறிகளுக்கு அடித்தளமாக அமைய ஒரு ஒளி பிறந்தது.

புத்தர் பிறந்தார்.

காசிக்கு வடக்கே ரோஹினி நதிக்கரையில் கபிலவஸ்து என்கிற நகரம் உள்ளது. அதைத்
தலைநகரமாகக் கொண்டு சுத்தோதனர் என்கிற அரசர் ஆண்டு வந்தார். அவருக்கு இரண்டு மனைவிமார்கள். இவர்களில் மூத்தவர் மாயாதேவி. அவர் கர்ப்பவதியா னார்.
பிரசவத்திற்காகத் தாய் வீட்டுக்குப் போனார். பரிவாரத்தினர் புடை சூழ்ந்து வர உயரமான
சால மரங்களின் கிளைகள் தாழ்ந்து வரவேற்றன. அதன் கிளைகளிலும் ஐந்து
ஐந்து தாமரை மலர்கள் தோன்றின. பறவைகள் கீதமிசைத்து இனிய குரலில் பாடின.
மெல்லிய பூங்காகூழ் வீசிற்று. மரகிளைகள் தாழ்ந்து அரசியை சுற்றி திரைகள் உண்டாயின.
போகும் வழியில் லும்பினி தோட்டத்தில் ஓர் மகவை ஈன்றார்.
வைகாசி மாதம் பெளர்ணமி அன்று இந்தப் பூமியின் நலனுக்காகப் புத்தர் அவதரித்தார்.
இது நடந்தது கி.மு. 563. சுமார் [இன்றைக்கு] 2500 ஆண்டுகளுக்கு முன்பாக.
இந்த நிகழ்வைத் தொடர்ந்து ஒரு துன்பம் வந்தது. மகவு பிறந்த ஏழாம் நாள் அன்னை மாயாதேவி மரணமடைந்தார். சிற்றன்னைதான் சித்தார்த்தனை எடுத்து வளர்த்தார். சீரும் சிறப்புமாக அரண்மனை வாசம் செய்து வந்த சித்தார்த்தனுக்கு கோலிநாட்டு மன்னன் மகள் யசோதராவைத் திருமணம் செய்து வைத்தார்கள். இப்படி பத்து ஆண்டுகளை யாதொரு கவலையுமின்றி,
சித்தார்த்தன் சுகபோகத்தில் கழித்தான். இன்பமயமான வாழ்க்கையில் சில எதிர்பாராத சந்திப்புகள் நிகழ்நதன. அவை வாழ்க்கை நீரோட்டத்தை திசை திருப்பி விட்டன.

வெளியுலகைக் காண சித்தார்த்தன் பிரியப்பட்டான்.

வீதி தோறும் மக்கள் திரண்டு மலர்ந்த முகத்துடன் இருப்பதைக் கண்டு,
”உலகம் பார்க்கக் கவர்ச்சியாக இருக்கிறது – மக்கள் என்னைப்போல்
மகிழ்வுடன் வாழ்கிறார்கள்” என்று எண்ணி உவகையுடன் இருந்தபோது…,

கூன் விழுந்து தள்ளாடி நடந்து போனான் ஒரு வயோதிகன்.
அதைக்கண்ட சித்தார்த்தன் உள்ளம் சுருங்கியது.

நோயுற்ற நிலையில் ஒருவனைக் கண்டபோது,
உள்ளம் நொடித்து போனது.

பிணமொன்று போனதைப் பார்த்தபோது பிணி கொண்டது மனம்

மானுட வாழ்க்கையின் அவலங்களை நினைத்து மனம் அலைக்கழிந்தது.
ஏன்… ஏன்.. வையத்தில் இத்தனை துன்பம் என்று தன்னையே கேட்டுக்
கொண்டும், பதிலேதும் கிடைக்கவில்லை.

இதுவரை கவலை என்பதையே அறியாதிருந்த சித்தார்த்தன் உள்ளத்தில் அன்று முதல்
கவலை தோன்றலாயிற்று.

இதற்கிடையில் திருமணமாகிப் பத்து ஆண்டுகள் கடந்து விட்டன.
சித்தார்த்தனது மனம், அரண்மனை வாழ்வை வெறுத்தது.

இது சமயம் பணியாள் யசோதராவுக்கு ஆண் மகவு பிறந்திருக்கும் செய்தியினைக் கூறினான்.
இந்த செய்தியைக் கேட்டு சித்தார்த்தன் மகிழ்ச்சி அடையவில்லை.
”இந்தப் பிணிப்பிலிருந்து நான் விடுபட்டாக வேண்டும் ” என்று எண்ணினான்.

பிறந்த ஆண் குழந்தைக்கு ராகுலன் என்று பெயர் வைத்தார்கள்.

மானுட வாழ்க்கையின் துன்பங்களுக்குத் தீர்வு தேடியது சித்தார்த்தனது மனம்.

”எங்கு பார்த்தாலும் நிலையாமையின் ஆற்றல் மிகுந்து நிற்கிறது.
பிணி, மூப்பு, சாக்காடு என்னும் மூன்றும் உயிர்களை பாதிக்கிறது.
ஆகவே துக்கமே இல்லாத நிர்வாண நிலையை அடைய முயல்வது அவசியமாகும்”
என்று ஒரு முடிவுக்கு வந்தான் சித்தார்த்தன்.

ஒருநாள் இரவு மனைவியும் மகனும் உறங்கிக் கொண்டு இருந்தபோது, தன் பணியாள்
சன்னாவுடன் வீடு துறந்து வெளியேறினார். வழியில் பணியாளைத் திரும்ப அனுப்பிவிட்டார்.

காட்டில் புகுந்தார். இதன் சமயம் அவருக்கு வயது 29. தனக்குப் புதல்வன் பிறந்த ஏழாம்
நாளன்று, சித்தார்த்தன் துறவை மேற்கொண்டான். அன்று சுத்த பூர்ணமி என்றும் வெள்ளிக்
கிழமை என்றும் கூறுகிறார்கள். சித்தார்த்தன் மேற்கொண்ட துறவை, பெருந் துறவு
அதாவது மகாபிநிஷ்கிரமணம் என்று பெளத்த நூலோர் கூறுவர்.

உருலேலா காடுகளில் அலரா கால்மா என்கிற ரிஷியிடம் வேதம் கற்றார்.
பின்பு அவரைவிட்டு ஆச்சார்யா உத்தகாவிடம் பாடம் கேட்டார். எதுவும் அவரைத் திருப்படுத்தவில்லை.
அதைத் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் உண்ணா நோன்பும் மெளன நோன்பும் மேற்கொண்டு
மனதைஅடக்கித் தியானம் செய்தார். அவர் கேள்விகள் எதற்கும் பதில் கிடைக்கவில்லை.
பின்பு பல இடங்களில் அலைந்து திரிந்த புத்தர் கடைசியாக கயாவை அடைந்தார்.

நிரஞ்சனை நதியில் நீராடினர். மஞ்சள் நிற ஆடையினை அணிந்துக்கொண்டு
போதி மரத்தில் அரச மரத்தடியில் கிழக்குத் திசையை நோக்கி அமர்ந்தார்.

நாற்பத்து ஒன்பது நாட்களைப் போதி மரத்தடியிலேயே ஆழ்ந்த தியானத்தில் கழித்தார்.
அங்கு அவருக்கு இருள் நீங்கி ஞான ஒளி சித்தித்தது.

சித்தார்த்தன் புத்தர் என மாற்றம் கண்டார். புத்தர் என்றால் நிறை ஞானி என்பது பொருள்.
புத்தர் தான் கண்ட ஞான மார்க்கத்தை மக்களுக்கும் போதிக்கத் தொடங்கினார்.

முக்திக்கும் அமரத்துவத்துக்கும் அவர் பாதை வழி சொன்னது. வாரணாசி அடைந்து அங்குள்ள
சாரநாத் மான் தோட்டத்தில் முதலில் ஐந்து சீடர்களுக்கு நல்ல உபதேசம் செய்தார்.
இதைத் தொடர்ந்து சீடர்கள் கூட்டம் பெருகியது. அதைத் தொடர்ந்து 45 ஆண்டுகள்
புத்தர் உபதேசம் செய்வதிலே திளைத்து மனித ஜாதியின் விடுதலைக்கு வழி வகுத்தார்.
மன்னர்களும் மாமனிதர்களும் புத்தர் பாதையின் சிறப்பை உணர்ந்தவர்கள்.
அது ஒன்றுதான் துக்கத்தை துடைக்க வழி என்று கண்டு கொண்டார்கள்.
அப்படி உணர்ந்தவர்களில் பிம்பிசார மன்னரும் ஒருவர்.

ஊர் ஊராகச் சென்று உபதேசம் செய்து வந்த புத்தர் ஒரு சமயம் தன் ஊரான கபில
வஸ்துவை அடைந்தார். அவரது தந்தையும் மனைவியும் மகனும் அவர் மார்க்கத்தை
ஏற்றார்கள். சில நாட்களில் சுத்தோதனர் காலமானார்.
அவரது ஈமக்கடன்களை முடித்தார் புத்தர்.

பின்பு தான் கண்ட உண்மைகளை உலகத்துக்குக் கூற சங்கங்களை அமைத்தார்.
அவரது சீடர்கள் பிட்சுக்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் பல்வேறு இடங்களுக்குச்
சென்று புத்த கோட்பாடுகளைப் பரப்பினர்.

புத்தருக்கு சித்து விளையாட்டில் நம்பிக்கை கிடையாது. அவர் தத்துவ ஞானத்தை மட்டுமே நம்பினார். ஒரு சமயம் ஒரு பெண் அவரிடம் வந்தாள். இறந்த போன தன்
குழந்தையை உயிர்ப்பிக்க வேண்டினாள்.
புத்தர் அவளிடம்,
”மரணமே இல்லா ஒரு வீட்டிலிருந்து கொஞ்சம் கடுகு வாங்கி வா” என்று கூறினார்.
சுஜாதா என்ற அந்தப் பெண், ஊரெல்லாம் தேடி விட்டுப் புத்தரிடம் திரும்பி வந்து,
”மரணத்தைக் காணாத வீடே இந்த வையத்தில் இல்லை ” என்றாள்.
அதைக்கேட்ட புத்தர் ”அம்மா! வையத்தில் பிறப்புடன் இறப்பும் உண்டு.
இதனை உணர்ந்துக் கொண்டு நீ உன் மனதைத் தேற்றிக் கொள்” என்றார்.

புத்தர் கண்ட ஞானத்துக்கு மத்திய மார்க்கம் என்று பெயருண்டு.

கொல்லாமை, கள்ளாமை, காம்மின்மை, பொய்யாமை, புறங்கூறாமை, வன்சொல்,
பயனில மொழியாமை, வெ·காமை, வெகுளாமை, நற்காட்சி முதலிய தச சீலங்களைப்
புத்தம் கூறுகிறது.

துக்கக் கடலுக்கு அடிப்படைக் காரணமே நமது ஆசைகள்தான் என்பதை அறியவேண்டும்.

நிர்வாணம் என்கிற முக்தி நிலையை எய்த புத்தம் எட்டுக் கட்டளைகளை விதிக்கிறது.
நேர் சிந்தனை, நேர் தனிமை, நேர் தியானம், நேர் கொள்கை, நேர் நோக்கம், நேர் பேச்சு,
நேர் நடத்தை, நேர் தூய்மை என்பவை அவை.

அஞ்ஞானம் அழிந்துவிட மேற்கண்ட எட்டு தர்மங்களையும் ஏற்று ஒழுகுதல் வேண்டும்
என்கிறார் புத்தர். எட்டு வித சீலங்களை கடைப்பிடித்து ஒழுகுபவர்கள் யாராய் இருப்பினும்,
சமய வாழ்க்கையின் இன்பத்தை அவர்களால் பெறமுடியும்.

பேரின்ப நிலையை அடைய விரும்பும் ஒருவன் முதலில். நான்கு பேருண்மைகளை அறிவது
அவசியம் ஆகும். அவை:
துக்கம்
துக்க காரணம்.
துக்க நிவர்த்தி
துக்க நிவர்த்திக்கு உரிய வழிகள்

சீடர்கள்,
புத்தம் சரணம் கச்சாமி,
தர்மம் சரணம் கச்சாமி,
சங்கம் சரணம் கச்சாமி…
என்கிற தாரக மந்திரத்தை ஓத வேண்டும்.
இதன் பொருள் புத்தரைச் சரண் அடைகிறேன். தர்மத்தைச் சரணடையப் போகிறேன்.
சங்கத்தைச் சரணடைய போகிறேன் என்பதே இதை
”முத்திற மணியை மும்மையின் வணங்கி ” என்று மணிமேகலை கூறுகிறது.

சுகபோகத்தில் அழுந்திக் கிடப்பதும் தக்க பலனைத் தராது; கடும் தவம்
புரிவதும் தக்க பலனை தராது, தீவிரமான இந்த இரு போக்குகளையும் புத்தர் பெருமான் ஒதுக்கிவிட்டார்.

ஆசைப் பேய்க்கு அடிமையாகாமலும், உடலையும் உள்ளத்தையும் துன்புறுத்தி வாட்டி வதைக்காமலும் ஆனந்த நிலையை ஒவ்வொரு ஜீவனும் சுய முயற்சியால் அடையக் கூடிய
ஒரு வழியைப் புத்தர் பெருமான் கண்டறிந்தார்.
அந்த வழிக்கு ‘மத்திய மார்க்கம் ‘என்று பெயர்.

புத்தர் கூறிய வாழ்க்கை வழி மக்களிடம் வெகு விரைவில் பரவியது.
பர்மா, இலங்கை, இந்தோனேஷியா, சீனா ஜப்பான், திபெத், மங்கோலியா போன்ற
அனைத்து புத்தம் வேர் கொண்டு வளர்ந்தது.

45 ஆண்டுகள் கால் நோக ஊர் உலகமெல்லாம் புத்தர் நடந்து தேவவாக்கு
மானுட ஜாதிக்குப் புத்துயிர்ப்பு தந்தது.

உடல் நலம் தளர்ந்து விட்ட நிலையில் வாரணாசிக்குத் தொலைவில் காகுஸ்தா
நதிக்கரையில் உள்ள காசிநாரா கிராமத்தை அடைந்தார் புத்தபிரான்.
அங்கே மஹாபரி நிர்வாண நிலை அடைந்தார்.
அவரின் இறுதியாக கூறிய உபதேசம்.

”என் அருமை பிக்குகளே! பஞ்ச பூதங்களின் சேர்கையால் உண்டான எந்தப்
பொருளுக்கும் அழிவு உண்டு. இதை எப்போதும் நினைவில் இருத்திக்கொண்டு,
விழிப்புடன் இருங்கள். நிர்வாணப் பேற்றை அடைவதற்கு, உண்மையோடும்
ஊக்கத்தோடும் உறுதியோடும் முயலுங்கள்”
என்று சொன்னார்.

இதன் பின்னர் நான்கு ஞான நிலைகளை இடம், எண்ணம், உணர்வு, பேதாபேதம் முதலிய
நிலைகளை கடந்து, நிர்வாணப் பெரும் பேற்றை, பிறவாத ஒரு பெரு நிலையை அடைந்தார்

ஒரு சக்ரவர்த்திகுரிய மரியாதைகளுடன் அவரது திருமேனியை, வடதிசையில் அடக்கம் செய்தனர்.

அவர் நீத்த சாலா மரத்தடியில் பூ மழை பெய்தாக வரலாறு.

மானுட ஜாதியின் மகோன்னத ஞானி கெளதமபுத்தரை ஹிந்துக்கள் ஒரு அவதாரம்
எனக்கொள்வார்கள்.
மணிமேகலையின் செய்யுளோடு புத்தரின் நினைவுகளை நிறைவு செய்வோம்.

பேதமை சார்வா, செய்கை யாகும்
செய்கை சார்வா உணர்ச்சி யாகும்
உணர்ச்சி சார்வா அருவுரு வாகும்
வாயில் சார்வா ஊறா கும்மே
ஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும்
நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும்
வேட்கை சார்ந்து பற்றா கும்மே
பற்றிற் ஒன்றும் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரண மாக
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்
தோற்றம் சார்பின் மூப்புப் பிணி சாக்காடு
அவலம், அரற்று கவலை, கை யாறெனத்
தவலில் துன்பம் தலைவரும் என்ப.

–மணிமேகலை —

ToTop