ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

கூகுள் தந்த பதினெட்டு ஆண்டு சேவை

google_logoஒவ்வொரு நொடியிலும், ஏறத்தாழ 40 ஆயிரம் கேள்விகளைப் பெற்று அவற்றிற்கான பதில்களை நொடியில் நமக்குத் தரும் திறன் படைத்த, கூகுள் தேடுதல் தளம் தொடங்கப்பட்டு, 18 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆம், Google.com என்ற பெயருடன் தேடுதல் தளம் அமைக்கப்பட்டு ஆண்டுகள் 18 கடந்துவிட்டன. இணையத்தில், எல்லையற்ற தகவல்களை மக்களின் பயன்பாட்டிற்குத் தேக்கி வைத்துத் தரவேண்டும் என்ற இலக்குடன், லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகியோர் தொடங்கி வைத்த கூகுள் தேடல் தளம், தன் 18 ஆண்டுகள் சேவையை முடித்துத் தொடர்ந்து செயல்படுகிறது.

1997 ஆம் ஆண்டு, செப்டம்பர் 15 அன்று, இந்தப் பெயருடன் தேடல் தளத்தினை கூகுள் அமைத்தது. தொடக்க காலத்தில், நாளொன்றுக்கு 10 ஆயிரம் கேள்விகளுக்குப் பதில் அளித்தது இந்த தளம். தொடர்ந்து இமாலய வளர்ச்சி பெற்று, தற்போதைய நிலையை அடைந்துள்ளது. 
கூகுள் ஒரு நிறுவனமாகப் பதிவு பெற்று தொடங்கப்பட்டது செப்டம்பர் 4, 1998ல் தான். மே 9, 2000 ஆண்டில், பத்து மொழிகளில் தேடல்களை கூகுள் கையாளத் தொடங்கியது. தற்போது 150 மொழிகளில் தேடல்களை, கூகுள் தளத்தில் மேற்கொள்ளலாம். உலக அளவில் கொண்டாடப்படும் நினைவு தினங்களில், நிகழ்வுகளின் போது, டூடில் என்ற ஒரு வகை அனிமேஷன் இலச்சினையை வழங்கும் பழக்கத்தினையும் கூகுள் கொண்டுள்ளது. 

வரும் 2020 ஆம் ஆண்டில், கூகுள் 60 கோடி பயனாளர்கள் இணையத்தைப் பயன்படுத்துவார்கள் என்றும், இதில் 50 கோடி பேர் கூகுள் தளத்தில் உள்ள விடியோக்களைக் கையாள்வார்கள் என்றும் கூகுள் எதிர்பார்க்கிறது. 
பன்னாட்டளவில் நிகழும் பல நிகழ்ச்சிகள், நினைவு தினங்களை ஒட்டி, டூடில் வெளியிடும் கூகுள், தன் தளத்தின் பதிவு நாளின் ஆண்டு தினத்தன்று அதனை நினைவு படுத்தவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

2014 ஜூலை மாதத்தில் கூகுள் மேப்ஸ் தளம், ஹிந்தி மொழியில் தரப்பட்டது. ஹிந்தி பேசப்படும் பல வகைகளை எடுத்துக் காட்டி, பின்னர், மேப் தளத்தில் ஹிந்தி மொழியிலேயே வழி காட்டும் தொழில் நுட்பமும் இணைக்கப்பட்டது. 
கூகுள் வெளியிட்ட கணக்கின்படி, 2013ல், கூகுள் நிறுவனத்தின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டமான ஆண்ட்ராய்ட், நூறு கோடி சாதனங்களில் பயன்பாட்டில் இருந்தது. தற்போது அதனையும் தாண்டி வேகமாக இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
Android One என்ற பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட் போன் ஒன்றை, 2014 செப்டம்பரில், இந்தியாவில், மூன்று ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்களின் துணையோடு கூகுள் அறிமுகப்படுத்தியது. 
2000 டிசம்பரில், கூகுள் டூல் பார் என்ற பிரவுசர் ப்ளக் இன் டூல் அறிமுகமானது. கூகுள் ஹோம் பேஜ் செல்லாமலேயே, இந்த டூலைப் பயன்படுத்தி தேடல்களை மேற்கொள்ளும் வசதி தரப்பட்டது. இதனைத் தொடர்ந்து Google Images, Google News, Google Books மற்றும் Orkut எனப் பல பயன்பாட்டு வசதிகள், முறையே 2001 ஜூலை, 2002 செப்டம்பர், 2003 டிசம்பர் மற்றும் 2004 ஜனவரியில் தரப்பட்டன. 

இதோ கீழே, கூகுள் நிறுவனம் கடந்து வந்த பாதையின் சில மைல்கற்களை பார்க்கலாம்.
செப்டம்பர், 1997: கூகுள் தளம் பெயர் பதிவு செய்யப்பட்டது.
ஆகஸ்ட் 30, 1998: முதல் கூகுள் டூடில் வெளியானது. அமெரிக்காவில் நடைபெற்ற Burning Man திருவிழாவினை ஒட்டி இது வெளியானது.
ஏப்ரல் 1, 2000: கூகுள் நிறுவனத்தின் முதல் முட்டாள்கள் தினத்திற்கான நையாண்டி.
மே 9, 2000: ப்ரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், ஸ்வேதிஷ், பின்னிஷ், ஸ்பானிஷ், போர்த்துகீசியம், டச், நார்வேஜியன் மற்றும் டேனிஷ் மொழிகளில், தேடல்களை மேற்கொள்ள வசதி தரப்பட்டது. தற்போது தமிழ் உட்பட 150 மொழிகளுக்கு மேலாக தேடல்கள் அனுமதிக்கப்படுகின்றன.
ஜூன், 2000: உலகின் மிகப் பெரிய தேடல் தளமாக இடம் பெற்று, தொடர்ந்து அதனைத் தக்க வைத்துள்ளது கூகுள்.
டிசம்பர், 2000: கூகுள் டூல் பார் வெளியானது.
ஜூலை, 2001: Google Image வெளியானது. தொடக்கத்திலேயே 25 கோடி படங்களுடன் இந்த வசதி தரப்பட்டது. தற்போது இணையத்தில், அதிக அளவில் படங்களின் 
அடிப்படையில் தேடல், கூகுள் தளத்தில் தான் மேற்கொள்ளப்படுகிறது. 
ஆகஸ்ட், 2001: பன்னாட்டளவில் தனக்கு ஓர் அலுவலகம் தேவை என, முதன் முதலில் டோக்யோவில் தன் அலுவலகத்தினை, கூகுள் தொடங்கியது.
செப்டம்பர், 2002: செய்திகளைத் தரும் 4,000 அமைப்புகளுக்கும் மேலாக இணைப்பு ஏற்படுத்தி, Google News என்ற சேவை வெளியானது. தற்போது, செய்திகளைத் தர 50,000க்கும் மேற்பட்ட அமைப்புகள், கூகுள் நிறுவனத்துடன் இணைந்துள்ளன. பல்வேறு மொழிகளில், 70க்கும் மேற்பட்ட தனி மொழி பதிப்புகள் வெளியாகின்றன.
பிப்ரவரி, 2003: தன் தேடல் வசதிகளில், ஒத்த பொருள் தரும் சொற்களைத் (synonyms) தேடும் வசதியையும் கூகுள் இணைத்தது. இதற்கென Blogger என்னும் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. 
டிசம்பர், 2003: Google Print, என்னும் பிரிவு உதயமானது. தற்போது இது (Google Books) கூகுள் புக்ஸ் என அழைக்கப்படுகிறது. நூல்கள் குறித்துத் தேடுகையில், அவற்றிலிருந்து சிறிய பகுதி இதில் காட்டப்படும். இந்த திட்டம் 2004ல் விரிவுபடுத்தப்பட்டு, நூலகங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு, நூல்கள் டிஜிட்டல் ஸ்கேனிங் முறையில் தரப்பட்டன. இதுவரை இந்த வகையில் 2 கோடி நூல்கள் தரப்பட்டுள்ளன. 
ஜனவரி, 2004: கூகுள் ஆர்குட் (Orkut) என்னும் சமூக வலைத் தளம் தொடங்கப்பட்டது. பல நாடுகளில் இது அறிமுகமானது. வேறு சமூக இணைய தளங்கள் வரும்வரை, இதுவே சிறப்பானது எனக் கருதப்பட்டது.
ஏப்ரல் 1, 2004: முட்டாள்கள் தினத்தன்று, கூகுள், ஜிமெயில் வசதியை அறிமுகப்படுத்தியது. தொடக்கத்தில், ஒருவரின் அழைப்பின் பேரிலேயே இதனைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. தற்போது 42 கோடியே 50 லட்சம் பேருக்கு மேலாக இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அக்டோபர், 2004: பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய இந்திய நகரங்களில் கூகுள் தன் அலுவலகங்களைத் தொடங்கியது. இந்தியாவில் இயங்கிய கூகுள் பொறியாளர்கள், பல செயலிகளை (Map Maker, Ads to Chrome etc.,) கூகுள் நிறுவனத்திற்கென தயாரித்து வழங்கியுள்ளனர். 
பிப்ரவரி, 2005: கூகுள் மேப்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பின்னர், சாட்டலைட் காட்சிகள் சேர்க்கப்பட்டு, இரண்டு இடங்களுக்கிடையேயான வழி காட்டும் வசதி தரப்பட்டது. 
ஏப்ரல், 2005: யு ட்யூப் தளத்தில் முதல் வீடியோ பதிவு செய்யப்பட்டது. 2007ல், யு ட்யூப் 9 நாடுகளில் இயக்கப்பட்டது. 2015ல், 75 நாடுகளில், 61 மொழிகளில், யு ட்யூப் இயக்கம் அறிமுகமானது. தற்போது, ஒவ்வொரு நிமிடத்திலும், 100க்கும் மேற்பட்ட மணி நேரம் ஓடக்கூடிய விடியோ பைல்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 600 கோடி மணி நேரம் இயங்கக் கூடிய விடியோ பைல்கள் மக்களால் பார்த்து ரசிக்கப்படுகின்றன. இவற்றில் பாதி அளவு வீடியோ பைல்கள், மொபைல் சாதனங்களில் பார்க்கப்படுகின்றன.
ஜூன், 2005: மொபைல் இணைய தேடல் டூல் வெளியானது. மொபைல் போன்களில் தேடல் முடிவுகளைக் காண்பதனை மையமாகக் கொண்டு இந்த டூல் வடிவமைக்கப்பட்டு தரப்பட்டது.
இதே மாதத்தில், சாட்டலைட் செயல்பாட்டின் அடிப்படையில் கிடைக்கும் படங்களைக் கொண்டு இயங்கும் Google Earth என்ற செயலி வெளியிடப்பட்டது. இதன் மூலம், உலகின் எந்த ஓர் இடத்திற்கும், நாம் மெய்நிகர் சுற்றுலா சென்று, அந்த இடம் குறித்து அறியலாம். இதுவரை இந்த செயலி, நூறு கோடி முறைக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது.
நவம்பர், 2005: Google Analytics செயலி வெளியானது.
ஏப்ரல், 2006: முதன் முதலாக அரபிக் மற்றும் ஆங்கில மொழிகளுக்கிடையே மொழி பெயர்க்கும் டூல் பயன்பாட்டிற்கு வந்தது. இது Google Translate எனப் பெயரிடப்பட்டு கிடைத்தது. தற்போது இயந்திர மொழி பெயர்ப்பு அடிப்படையில், 80க்கும் மேற்பட்ட மொழிகளுக்கிடையேயான மொழி பெயர்ப்பு கிடைக்கிறது. 
மே, 2006: Google Trends என்னும் டூல் வெளியானது. இதன் மூலம் எந்த வகை தேடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று காட்சித் தோற்றம் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
பிப்ரவரி, 2007: கூகுள் மேப்ஸ் செயலியில், சாலைகளில் போக்குவரத்து குறித்த தகவல்கள் இணைத்து தரப்பட்டன. தொடக்கத்தில் அமெரிக்காவில் தொடங்கி, பின்னர் தற்போது 50க்கும் மேற்பட்ட நாடுகளில் அப்போதைய போக்குவரத்து குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. நெடுஞ்சாலிகள் மற்றும் தெருக்கள் குறித்த தகவல்கள் தற்போது 600க்கும் மேற்பட்ட நகரங்கள் சார்ந்து கிடைக்கின்றன. இவற்றில் இந்தியாவும் அடங்கும்.
மே, 2007: தான் மேற்கொள்ளும் தேடல்களில், விடியோ, நூல்கள், செய்திகள், படங்கள் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு தரும் வசதியை கூகுள் தரத் தொடங்கியது.
மே,2007: கூகுள் மேப்ஸ் செயலியில் Google street view என்ற ஒரு வசதி முதலில், அமெரிக்காவின் 5 நகரங்களுக்கானவை தரப்பட்டன.
நவம்பர், 2007: ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து அறிவிப்பு வெளியானது. Open Handset Alliance என்ற அமைப்பின் கீழ் மொபைல் சாதனங்களுக்கான மையம் தொடங்கப்பட்டது.
மே, 2008: கூகுள் தனது இயக்க முறைமையில், செயலிகளை வடிவமைப்பவர்களுக்கான முதல் ஆண்டு கருத்தரங்கினைத் தொடங்கியது. சான் பிரான்சிஸ்கோவில் இது நடத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்த கருத்தரங்கில், கூகுள் தன் புதிய இலக்குகளையும் திட்டங்களையும் வெளியிடும். ஆண்டு தோறும், செயலிகளை வடிவமைப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. அவர்கள் இந்த கருத்தரங்குகளில் கலந்து கொள்கின்றனர். அது மட்டுமின்றி, பல லட்சக்கணக்கான மக்கள், கூகுள் நிறுவனத்தின் புதிய திட்டங்கள் குறித்து உடனுக்குடன் தெரிந்து கொள்ள, ஆன்லைன் வழியாகவும் இதில் பங்கேற்கின்றனர்.
செப்டம்பர், 2008: ஆண்ட்ராய்ட் இயக்க முறைமையில் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன் G1 வெளியானது.
செப்டம்பர் 02, 2008: கூகுள் குரோம் பிரவுசர் பயன்பாட்டிற்கெனத் தரவிறக்கம் செய்திடத் தரப்பட்டது. தற்போது 75 கோடி பேருக்கு மேல் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.
பிப்ரவரி, 2009: ஆண்ட்ராய்ட் இயக்கத்தில், ஒலி வழி தேடலை (Voice Search) கூகுள் வெளியிட்டது. பட்டன் ஒன்றை அழுத்தி, ஆண்ட்ராய்ட் பயனாளர்கள், ஒலி வழி தங்கள் தேடலை மேற்கொள்ளலாம். இதன் மூலம் மொபைல் வழி இணையத் தேடல் எளிதானதாகவும், விரைவானதாகவும் ஆகியது. தற்போது 38க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த தேடலை மேற்கொள்ளலாம். 
ஜுலை, 2009: கூகுள், முதலில் லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கான, ஓப்பன் சோர்ஸ் எனப்படும் திறவூற்று இயக்க முறைமையினை, Google Chrome OS என்ற பெயரில் வடிவமைக்கத் தொடங்கியது. 
ஜனவரி, 2010: ஆண்ட்ராய்ட் சாதனங்களில் என்னவெல்லாம் செய்திடலாம் எனக் காட்ட Nexus One என்னும் சாதனத்தினை, கூகுள் வெளியிட்டது. இது தொடர்ந்து பெருகி, தற்போது டேப்ளட் பி.சி. மற்றும் போன் என விரிவடைந்துள்ளன.
மே, 2010: பிரபலமான PAC-Man விளையாட்டு தொடங்கி, 30 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாட டூடில் ஒன்றை கூகுள் வெளியிட்டது. இதன் சிறப்பு என்னவென்றால், அந்த டூடிலையே விளையாட்டு தளமாகப் பயன்படுத்தி, பயனாளர்கள் விளையாட முடிந்தது.
செப்டம்பர், 2010: தேடல்களில் ஒரு புதிய பரிமாணம் தரப்பட்டது. நாம் தேடலுக்கான டெக்ஸ்ட்டை அமைக்கும்போதே, அமைத்தவரைக்குமான தேடலுக்கான முடிவுகள், தகவல்கள் தரப்பட்டன. இதனால், நமக்கு வேண்டிய தகவல்கள் மிக வேகமாக நமக்குக் கிடைத்தன.
பிப்ரவரி, 2011: தற்போது Google Cultural Institute என அழைக்கப்படும் Google Art Project தொடங்கப்பட்டது. இதுவரை பல லட்சக்கணக்கான கலைப் பொருட்கள் டிஜிட்டல் வடிவில் அமைக்கப்பட்டு, காண்பதற்காகத் தரப்பட்டுள்ளன. இதற்கென 40 நாடுகளில் பல அமைப்புகளுடன் கூகுள் ஒப்பந்தம் மேற்கொண்டு இயங்கி வருகிறது. ஒரு மெய்நிகர் அருங்காட்சியகமாக இது கிடைக்கிறது.
பிப்ரவரி, 2011: கூகுள் நிறுவனத்தில் வேலை பார்க்க, எத்தனை வல்லுநர்கள் விரும்புகின்றனர் என்பது தெரிய வந்தது. அமெரிக்காவில் 6,000 பணியிடங்களுக்கு, 75 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை அளித்தனர். 
மே, 2011: கூகுளின் இணைய தளத்தை இந்த மாதம் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை நூறு கோடியைத் தாண்டியது.
ஜுன், 2011: டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களில், குரோம் பயன்படுத்துபவர்களுக்கு, ஒலி வழி தேடல் வசதி வழங்கப்பட்டது. கூகுள் தேடல் கட்டத்தில், ஒலி வாங்கி பட்டனை அழுத்தி, குரல் ஒலி வழி தேடலை மேற்கொள்ளலாம்.
ஆகஸ்ட், 2011: குரோம் பிரவுசர் பயனாளர்களுக்கு, ஜிமெயில், காலண்டர் மற்றும் டாகுமெண்ட்ஸ் பிரிவுகளில், இணையத் தொடர்பற்ற ஆப் லைன் நிலையில், அணுகும் வசதி தரப்பட்டது.
அக்டோபர் 2011: கூகுள் எர்த் செயலியைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நூறு கோடியைத் தாண்டி, சாதனை படைத்தது.
டிசம்பர், 2011: தற்போது கூகுள் பிளே (Google Play) என அழைக்கப்படும், “ஆண்ட்ராய்ட் மார்க்கட்டிலிருந்து”, ஒரு மாதத்தில், செயலிகள் தரவிறக்கம் செய்யப்பட்டது 1000 கோடி என்ற எண்ணிக்கையைக் கடந்தது. 
பிப்ரவரி, 2012: ஆண்ட்ராய்ட் இயக்க முறைமையில் இயங்கும், குரோம் பிரவுசர் அறிமுகமானது. எனவே, எங்கு சென்றாலும், அனைத்து சாதனங்களிலும், இணையத்தை அணுகித் தேவையானதைப் பெற முடிந்தது.
ஏப்ரல், 2012: கூகுள் ட்ரைவ் (Google Drive) உதயமானது. வீடியோ, போட்டோ, டாகுமெண்ட்ஸ் மற்றும் பி.டி.எப். பைல்களை, பத்திரமாகப் பாதுகாக்க, இணையத்தில் வசதி தரப்பட்டது. 
மே, 2012: கூகுள் தேடலில் Knowledge Graph என்னும் அரிய வசதி அறிமுகமானது. சரித்திர நிகழ்வுகள், புகழ் பெற்ற மனிதர்கள், நகரங்கள், விளையாட்டுகள், குழுக்கள், திரைப்படங்கள், கலைப் பொருட்கள் என இன்னும் பல விஷயங்கள் சார்ந்த தகவல்களை, இந்த வகை தேடல் மூலம் விரைவாகவும், எளிதாகவும் பெற முடிந்தது. 
ஜூன், 2012: நாம் கேட்கும் முன்னரே சில தகவல்களைத் தரும் Google Now வெளியானது. இன்றைய சீதோஷ்ண நிலை, போக்குவரத்து சிக்கல்கள் போன்றவற்றை நாம் கேட்காமலேயே தரக் கூடிய வசதி இது.
ஜூன், 2013: விண்வெளியில் பலூன்களைப் பறக்கவிட்டு, அவற்றில் வைத்து இயக்கப்படும் சாதனங்கள் மூலம், இணையத் தொடர்பு கிடைக்க இயலாத இடங்களில் வசிப்பவர்களுக்கும், இணையத் தொடர்பு கிடைக்கும் வசதியினை Project Loon என்ற திட்டத்தின் மூலம், கூகுள் அறிமுகப் படுத்தியது. 
இதன் மூலம், தொலை தூரக் கிராமங்கள், யாரும் எளிதில் அணுக இயலாத இடங்கள் ஆகியவற்றில் வசிக்கும் மக்களுக்கு இணையத் தொடர்பு கிடைக்கிறது. இவர்கள், பெருஞ்சிக்கலில் மாட்டிக் கொள்ளும் நிகழ்வுகளில், வெளி உலகத்தினைத் தொடர்பு கொண்டு உதவி பெற இதன் மூலம் இயலும்.
ஜூலை, 2013: கூகுள் மேப்ஸ் செயலியின், மேம்படுத்தப்பட்ட தொகுப்பு வெளியாகியது.இது ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பி.சி.க்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
செப்டம்பர், 2013: ஆண்ட்ராய்ட் இயக்க முறைமை இயங்கும் சாதனங்களின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியது. இது, ஆண்ட்ராய்ட் குறித்து உலகெங்கும் உள்ள மக்கள் கொண்டுள்ள ஆர்வத்தின் வெளிப்பாடாய் இருந்தது.
ஜூலை, 2014: கூகுள் மேப்ஸ், ஹிந்தி மொழியில் வெளியானது. ஹிந்தியில் குரல் வழி இடம் தேடிப் பெரும் வசதியும் அறிமுகமானது.
செப்டம்பர், 2014: இந்தியாவில் ஆண்ட்ராய்ட் ஒன் அறிமுகமானது.
அக்டோபர், 2014: கூகுள் வாய்ஸ் வழி தேடல், தற்போது இந்தியர்களின் வித்தியாசமான உச்சரிப்பினையும் ஏற்று செயல்படும் வகையில் மேம்படுத்தப்பட்டது.
பிப்ரவரி, 2015: கூகுள் மேப்ஸ், தன் செயல்பாட்டினைத் தொடங்கி, 10 ஆண்டுகளை முழுமை செய்தது.
ஜூன், 2015: கூகுள் போட்டோஸ், கூகுள் வெப்லைட் மற்றும் கூகுள் ரியல் டைம் விசுவல் மொழி பெயர்ப்பு ஆகியவை வெளியிடப்பட்டன.
செப்டம்பர் 01, 2015: கூகுள் புதிய இலச்சினை ஒன்றை தனக்கென வெளியிட்டது. இது அனைத்து சாதனங்களுக்குமாக வெளியானது. பலவகை உள்ளீடுகளைப் பல வகையான சாதனங்களில் கூகுள் மேற்கொள்கிறது என்பதைக் காட்டும் வகையில், இந்த இலச்சினை வெளியானது.
இந்தியாவினைப் பொறுத்த வரை, கூகுள் தன் அலுவலகத்தினை 2004ல், ஐந்து பேர்களுடன் அமைத்தது. தற்போது, மும்பை, குர்கவான், ஹைதராபாத் மற்றும் பெங்களூருவில் தன் அலுவலகங்களை, 2000 பேருடன் இயக்கி வருகிறது. 
வரும் 2020 ஆம் ஆண்டில், கூகுள், 60 கோடி இணையப் பயனாளர்களை எதிர்பார்க்கிறது. இணைய வெளியில் உள்ள வீடியோக்களை, 50 கோடி பேர் அணுகிப் பெற்று பயனடைவார்கள் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது.
கூகுளின் பயணம் மானுடம் உள்ளவரை தொடர்ந்து கொண்டே இருக்கும். மேம்படுத்தப்பட்டு, மனித வாழ்க்கைக்குக் கூடுதல் வசதிகளைத் தந்து கொண்டிருக்கும். 

நன்றி: தினமலர்

ToTop