ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

மரணம்..

deathஜனனம் பரிவைக் காட்டுகின்றது.
மரணம் பிரிவைக் காட்டுகின்றது
ஒரு ஆத்மா தான் செய்த பாவத்தை தீர்க்கவே பிறவி எடுக்கின்றது.
அது தீர்ந்ததும் போய்ச் சேர்ந்து விடுகின்றது.
அனைத்து உடலும் மண்ணுக்கே சொந்தம். அது மண்ணோடு மண்ணாக அழியும். ஆனால் ஆத்மா அழிவதில்லை.
பகவான் நம்மிடம் ஒரு காரியத்தை ஒப்படைத்துள்ளான் , அது முடிந்ததும் நமக்கும் அழைப்பு வரும்.
மரணம் தான் வாழ்க்கையின் கடைசிச் சத்தியம்.

ஜனனத்தின்பின் சத்தியம்  எவ்வளவோ நிகழ்வுகளை எடுத்துக் காட்டியுள்ளது. ஆனால் பிரிவு தான் அதை எல்லாம் விட நிரந்தர சத்தியம்.
நேற்றுவரை நம்மை யார் பார்த்தார்களோ பேசிக்கொன்டிருந்தார்களோ ஆதரவு காட்டினார்களோ அன்பைப் பொழிந்தார்களோ அவர்களை உறவாகத்தான் பார்க்கின்றோம். அத்தகைய உறவுகள் எல்லாம் இந்த உயிரைத் தந்தவனுக்கும் எடுப்பவனுக்கும் இடையில் பதிந்து கிடக்கின்றது.

உயிர் இருகும்வரை அந்த  மாறாத உறவு கலையாமல் இருக்கின்றது.

ஆனால் மூச்சு நின்ற மறு வினாடி அது இன்னொரு உறவைத் தேடிப் போய் விடுகின்றது.

உருவாவதும் மறைவதும் அதற்குண்டான நியதி.

மரணம் நிதர்சனமானது. மனிதனுக்கு  அதை மாற்றவும் தடுக்கவும் உரிமை கிடையாது.

வாழ்க்கை ஒரு மகா சமுத்திரம் அதில் பந்தங்கள் அலை போன்றது. கூடியசீக்கிரமே மறைந்துவிடும். பிரிவை உண்டாக்கிவிடும். யாரும்யாருடனும் போகமுடியாது. இது ஆண்டவன் நியதி. மாறாத சத்தியம். என்று பிறக்கின்றோமோ அன்றே இறப்பும் நிச்சயமாகின்றது.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் நாம் பயணம் செய்யும் தூரம்தான் வாழ்க்கை.

ஜனங்களின் செயல்பாடுகள்தான் இன்று விதியாகமாறி சதி செய்து கொண்டிருக்கின்றது.

செயல்களால் ஏற்படும் நன்மையும் தீமையும் ஒன்று சேர்ந்து பிறப்பையும் இறப்பையும் முடிவு செய்து கொண்டிருக்கின்றன. மக்களின் இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரணம் அவர்களின் செயல்கள் தான்.

மரணம் எல்லோருக்கும் ஏற்படத்தான் போகின்றது, அதிலிருந்து யாராலும் தப்ப முடியாது. அதற்காக துக்கப்படக்கூடாது. தெய்வம் எல்லாவற்றையும் நன்மைக்காகத்தான் செய்கின்றான். உடல் பெற்ற ஆத்மா சிறுவயதில் இருந்து இளமைக்கும், பின் முதுமைக்கும் மாறுவதுபோலவே மரணத்தின் போது வேறு உடலுக்கு மாறுகின்றது.

தன்னை உணர்ந்த ஆத்மா இது போன்ற மாற்றத்தால்  திகைப்பதில்லை.

மரணம் என்றால் என்ன?

ஜனனத்திற்கு கிடைக்கின்ற நிம்மதியான முடிவுதான் மரணம்.

ஆத்மா நடத்தும் யாத்திரையின் முடிவுக் கட்டம் .

அந்தநேரத்தில்தான் பல பூர்த்தியடையாத கனவுகள் வந்து நிழலாடுகின்றது.

அந்தக்காலம் வரும்போது பகவானின் நினைவோடு இருப்பதுதான் நல்லது.

இந்தப் பயணத்திற்கு செளகரியமாக இருப்பதற்காக  இந்த உடலை ஏற்றுள்ளது.

பயணம் முடிந்ததும் வெளியேறி விடுகின்றது. இது தெரிந்தும் கூட  நாம் சரீரத்துக்காக அழுது புலம்புகின்றோம். எதற்கு துக்கம்?

நம் உறவுகள் யாவும் போன ஜென்மத்து தொடர்பால் ஏற்பட்டவையே.

நீங்கள் செலுத்தவேண்டிய கடன் பாக்கி இருப்பதனால் தான் இந்தத் தொடர்பும் நீடிக்கின்றது.

கடன் முடிந்ததும் அவர்களைவிட்டு விலகிவிடுகின்றோம்.

ஒவ்வொரு ஜீவனும் தனித்தனி ஆத்மா ஆனதால் தனது உடலையும் ஒவ்வொரு ஜீவனும் மாற்றிக் கொண்டே இருக்கின்றான்.

ஆனால் ஆத்மா மாறாதது.  இந்த தனி ஆத்மா மரணத்தின் போது பழைய உடலில் இருந்து புது உடலுக்கு புதிய சக்தியோடு மாறுகின்றது.

ஒருவனது வாழ்க்கையில் அவன் ஆற்றுகின்ற செயல்களுக்கேற்ப பல்வேறுபட்ட இன்ப துன்பங்களுக்கேற்ப பல்வேறுபட்ட இன்பதுன்பங்களை அடையப் போவதன்  கணக்கீடாக இந்த உடல் மாற்றங்கள் அமைகின்றன. எனவே நல்லாத்மாக்கள்  மறுவாழ்வில் ஆன்மீக உடல்களை அடையவோ குறைந்தபட்சம் பெளதீக நிலையின் உயர்ந்த இன்பங்களை அனுபவிக்கவோ செய்வார்கள். எனவே இவ்விரண்டு  நிலைகளிலும் கவலைப்படக் காரணமில்லை. எனவே உடல்களின் மாற்றங்களைக் கண்டு மயங்காதே.

இந்த உலகம் என்று தோன்றியதோ அன்று தொட்டே மரணமும் நடந்துகொண்டே இருக்கின்றது.

சாகாமல்  உயிர் வாழ்ந்தவர் எவரும் இல்லை. அப்படி எனில் உனக்கு ஏன் இந்தத் துக்கம்.

உன் மனம் சமாதானம்  அடைவதாக.

உண்மையை ஏற்றுக் கொள்வாயாக. தயங்காதே.

அந்த  உண்மையை ஏற்றுக்கொள்ளும்போது உன் மனம் வலிமை அடையும்.

சுய நினைவிற்கு வா.

எல்லா மனிதர்க்கும் உறவுகள் தொடர்புகள் உண்டு. ஏதோ பந்தத்தினால் பிணைக்கப்பட்டுள்ளன.

பிரிவு தாங்கமுடியாதெனில் அழு நன்றாக அழு உன் மனதில் உள்ள பாரங்கள் குறையும்.

ஜனனம் தகப்பனின் படைப்பு.

மரணம் ஆண்டவன் அழைப்பு.

இடைப்பட்ட வாழ்க்கை.

அரிதாரம் பூசாத நடிப்பு.

தீராத வேதனையே வாழ்க்கை.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அடையாளமே மரணம் என்னும் திரை.

-நளினி மகேந்திரன்

ToTop