ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

தாயம்மாவின் தாகம் தண்ணீர்த் தாயகம்

பொன்னகரில்தான் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில்நுட்ப பீடம் எல்லாம் உள்ளன. அத்தனையும் புத்தம் புதிய கட்டிடங்கள். நவீன அமைப்பில் புதுப்பொலிவோடு ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த மூன்று பீடங்களுக்குமான நில அளவு எவ்வளவு தெரியுமா? கொஞ்ச நஞ்சமல்ல 650 ஏக்கராகும். இந்தப் பெரிய நிலப்பரப்பில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால்….! அதிலும் ஆக மூன்றே மூன்று பீடங்கள் மட்டும்தான் என்றால் எவ்வளவு பெரிய இடத்தில் சும்மா சுற்றிக் காடளக்கலாம். காற்றை அளையலாம். விரும்பிய பாட்டுக்கு எங்கும் திரியலாம். மாலை நேரத்தில் மயில்கள் வந்து உலாத்தும். சிலவேளைகளில் மான் கூட்டத்தையும் பார்க்கலாம்.

அங்கேதான் மிகப் பெரிய தொழில் நுட்பக் கல்லூரியும் இருக்கிறது. ஜேர்மனி நாடும் இலங்கையும் இணைந்து நிர்மாணித்து இயக்கும் கல்லூரி. புதிய அமைப்பிலான கட்டிடத்தொகுதி. பெரியதொரு நிலப்பகுதியில் விஸ்தீரணமாக உள்ளது. அதற்குப் பக்கத்திலே சுற்றுச் சூழல் மற்றும் கனிய வளங்கள் திணைக்களத்தின் பிராந்தியப் பணிமனை இருக்கிறது. அதற்குச் சற்றுத் தள்ளி இலங்கை மத்தியவங்கியின் பிராந்தியக் காரியாலயம் உண்டு. அதற்கு மேலே மேற்கில் வனஜீவராசிகள் திணைக்களம், காலநிலை அவதானிப்பு நிலையம் இரண்டும் இருக்கின்றன. இடையில் படை முகாம்கள். பல்கலைக்கழகத்துக்கு முன்பாக, நுழைவாயிலின் எதிர்ப்புறத்தில் இரண்டு ஆடைத்தொழிற்சாலைகள். அதற்குப் பக்கத்தில், தொடருந்து நிலையத்தோடு Gargils உணவு பதினிடும் நிலையம் உள்ளது.

இதையெல்லாம் பார்க்கும்போது நிச்சயமாக வளர்ந்த அல்லது வளர்ச்சியடைந்த நகரொன்றின் தோற்றம் உங்கள் மனதில் எழலாம். பெருந்தெருவின் முகப்பிலேயே அறிவியல் நகர் என வேறு எழுதி வைத்திருக்கிறார்கள். பொன்னகரிலேயே அறிவியல் நகரும் உள்ளது. அறிவியல் நகரில்தான் பல்கலைக்கழகமும் ஆடைத்தொழிற்சாலையும் தொழில் நுட்பக் கல்லூரியும் உள்ளன.

ஓ… எவ்வளவு அருமையான ஒரு அமைப்பு? இதற்கெல்லாம் பின்னணியில் ஒரு வரலாற்றுக் குறிப்புண்டு.

2000 ஆண்டுகளில் இந்த இடத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காக விடுதலைப் புலிகள் திட்டமிட்டனர். அப்படி அந்தப் பல்கலைக்கழகம் இயங்குமாக இருந்தால், அது தமிழ் பல்கலைக்கழகமாகவே இருக்க வேண்டும் என்பது புலிகளுடைய விருப்பம். அதற்கு ஏற்றமாதிரி கிளிநொச்சி – பொன்னகரில் 250 ஏக்கர் நிலத்தை அவர்கள் எடுத்தனர். அப்பொழுது அது அரச காணி. காட்டுப்பகுதி. காடென்பதால் அது வனவிலாகாத் திணைக்களத்துக்குரியது. ஆனால், அந்தக் காலப்பகுதியில் வன்னி புலிகளின் ஆட்சியின் கீழே இருந்தது. புலிகளின் ஆட்சிக்குக் கீழிருந்த அனைத்திற்கும் அவர்களே ஆட்சியுரித்துடையவர்கள். ஆகவே அனைத்தையும் அவர்களே தீர்மானித்தனர். ஆகவே அது புலிகளின் காணி.

அந்தக் காணியில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை நிர்மாணிக்கும் வேலைகள் நடந்தன. புலிகளின் நிதிப்பிரிபுப் பொறுப்பாளராக இருந்த தமிழேந்தியே இந்தத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிர்மாணத்துக்குப் பொறுப்பு. புலம்பெயர் நாடுகளில் இருந்த வல்லுநர்கள் சிலருடைய ஆலோசனைப்படி, பல்கலைக்கழகத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பமாகின. பல்கலைக்கழகத்தின் உட்கட்டமைப்புக்கான வரைபடங்களையும் தொழில் நுட்ப ஆலோசனை மற்றும் வழிப்படுத்தல்களையும் புலம்பெயர் நாடுகளிலிருந்த சிலரே செய்தனர். மளமளவெனப் பல்கலைக்கழகக் கட்டுமாணப்பணிகள் நடந்து கொண்டிருந்தன. அப்போதுதான் அந்தப் பகுதிக்கு அறிவியல் நகர் என்ற பெயரைப் புலிகள் வைத்தனர். பல்கலைக்கழக வளாகத்துக்கு சற்றுத்தள்ளி தமிழ் ஊடகவியற் கல்லூரி ஒன்றையும் நிர்மாணித்தனர். அதனுடைய அடிக்கல் வைக்கும் வைபவத்திற்கு தராகி டி. சிவராமும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவனும் வந்திருந்தனர்.

ஓரளவுக்கு பல்கலைக்கழகத்தின் முதற்கட்ட நிர்மாணப்பணிகள் நிறைவடையும் நிலையை எட்டியிருந்தன. அப்படி நிர்மாணப்பணிகள் நிறைவடைந்தால், அடுத்த கட்டமாகக் கற்கை தொடங்கும். அதற்கான புர்வாங்க வேலைகளையும் புலிகள் ஆரம்பித்திருந்தனர். ஆனால், இதற்கு எதிர்மறையாக நிலைமை மாறியது. 2006 இல் யுத்தம் எதிர்பாராத விதமாகத் தொடங்கியது. கிழக்கில் தொடங்கிய யுத்தம் அப்படியே விரிவடைந்து வடக்கிற்கும் வந்தது. காட்டில் நெருப்புப் பற்றிக் கொண்டால் எப்படி மளமளவென எல்லா இடமும் விரிந்து கொண்டு போகுமோ அப்படியே கிழக்கு யுத்தம் வடக்கிற்கு வந்து வன்னியை நோக்கி விரிந்து கொண்டிருந்தது.

யுத்தம் தீவிரமடைய வன்னிச் சூழலே யுத்த மயமாகியது. புலிகளின் அத்தனை கட்டமைப்புகளும் சிந்தனையும் யுத்தத்தை எதிர்கொள்வதிலேயே குவிந்தது. பல்கலைக்கழகத்தைப்பற்றிச் சிந்திப்பதற்கான வாய்ப்பே இல்லை. மட்டுமல்ல, அந்தப் பகுதியே 2008 இல் படைகளிடம் வீழ்ச்சியடைந்தது. 2009 மேயில் நிலைமை முற்றாகவே மாறியது.

2009 க்குப் பிறகு அறிவியல் நகர் படையினர் நகராக மாறியிருந்தது. புலிகள் நிர்மாணித்திருந்த பல்கலைக்கழக வளாகத்தில் படையணிகள் நிலை கொண்டிருந்தன. யாரும் அங்கே போக முடியாது. அங்கே குடியிருந்த சனங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்து குடியேறின. ஏனையவர்கள் அங்கே வந்து குடியேறுவதற்குப் பின்னின்றனர். அதற்குக் காரணங்களுமிருந்தன. முக்கியமாக அங்கேயிருந்த பெரிய படைமுகாம். அது படையினரின் பயிற்சித் தளம். பயிற்சித்தளம் என்றால் எப்போதும் பதற்றத்துக்குரியமாதிரியான உணர்வையே தந்து கொண்டிருக்கும். இதனால் கலவரமுற்றவர்கள் பொன்னகரில் வந்து குடியேறுவதற்குத் தயங்கினர். ஆனால், அதற்காகப் படையினரிடம் அந்தப் பகுதியை விட்டுவிட முடியுமா? எனச் சனங்கள் கொந்தளித்துக் கொண்டேயிருந்தனர். அதற்காக அவர்கள் இதை எப்படி மாற்றியமைக்கலாம் என யோசித்தனர். ஒரு கட்டத்தில் இதற்குரிய மாற்றங்களைச் செய்யக்கூடிய நிலையில் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த முருகேசு சந்திரகுமாரை அவர்கள் நாடிச் சென்று இந்தப்பிரச்சினையைப் பற்றிப் பேசினார்கள். அவர் ஒரு ஏற்பாட்டைச் செய்தார்.

பல்கலைக்கழக வளாகத்துக்குப் பக்கத்தில் ஆடைத்தொழிற்சாலைகளைக் கொண்டு வந்து அமைத்தார். அப்படியே இந்திய உதவியினால் நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்புத்திட்டக் குடியிருப்பை உருவாக்கினார். அப்படியே மீள்குடியேற்றத்தை முழுமைப்படுத்தினார். அடுத்த கட்டமாக பல்கலைக்கழகத்தை மீட்கும் நடவடிக்கை தொடங்கியது. பல சிரமங்களின் மத்தியில் பல்கலைக்கழக வளாகம் விடுவிக்கப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் அதைப் பொறுப்பேற்பதில் துணைவேந்தரையும் இன்னும் ஒரு சில விரிவுரையாளர்களையும் தவிர்ந்த ஏனையவர்களுக்கு அது உவப்பாக இருக்கவில்லை. என்னதான் அறிவியல் நகர், பொன்னகர் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் அப்போது அவை காடென இனங்காணப்படும் பகுதியாக இருந்ததால், நகர மனப்பாங்குடன் இருந்தவர்களுக்கு அதை ஜீரணிக்கக்கடினமாக இருந்தது. இருந்தாலும் கிளிநொச்சி கல்விச்சமூகமும் பொது மக்களும் மாவட்டச் செயலக நிர்வாகமும் இணைந்து பல்கலைக்கழக வளாகத்தைச்சிரமதானம் மூலமாகத் துப்புரவு செய்து அதைப் புதுப்பொலிவுக்குக் கொண்டு வந்தன. தொடர்ந்து பல்வேறு உதவிகள், திட்டங்களின் மூலமாக இன்று அது பெரிய பல்கலைக்கழக வளாகமாக மாறி விட்டது.

ஆனாலும் பொன்னகரில் மக்களின் நிலையில் பெரிய முன்னேற்றங்கள் ஏதுமில்லை. இன்னும் அங்கே தண்ணீருக்கு வழியில்லாத சனங்கள் இருக்கிறார்கள். சீரில்லாத தெருக்கள் உள்ளன. வீடில்லாத குடும்பங்கள் இருக்கின்றன. வேலை முடிக்கப்படாத – தண்ணீரில்லாத பொதுக்கிணறு உள்ளது. பாலங்கள் அமைக்கப்படாத அறுத்தோடிகள் உள்ளன. வேலையில்லாத ஆட்கள் இருக்கிறார்கள். இனி என்ன செய்வது என்று தெரியாத நிலையில் முன்பு போராளிகளாகச் செயற்பட்டவர்கள் இருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தை விட்டு இடை விலகும் சிறார்கள் உள்ளனர். சாப்பாட்டுக்கே கதியில்லாத சனங்கள் இருக்கின்றனர். ஒரு சிறு நிழலுக்காக ஏங்கும் முதியவர்கள் உள்ளனர். ஒரு நாட் பொழுதைக் கழிக்க முடியாத ஒட்டியுலர்ந்துபோன மனிதர்கள் இருக்கிறார்கள். ஆசைப்பட்டுப் பிள்ளைகள் கேட்கும் பொருட்களை வாங்கிக் கொடுக்க வழியில்லாத பெற்றோர்கள் உள்ளன.

அங்கே புஞ்செடிகள் இல்லை. பூஞ்செடிகள் இல்லை என்றால் பூக்களும் இல்லை. “குடிக்கிறதுக்கே தண்ணீரில்லாமல் இருக்கும்போது பூங்கன்றுகளை எப்பிடி நட்டுப் பராமரிக்கிறது?” என்று கேட்கிறார் ஒரு முதியவர். காய்ந்த வரண்டுபோயிருக்கிறது சூழல். அனலடிக்கிறது நிலம். பரட்டையாகியிருக்கின்றன குழந்தைகள். பஞ்சம் என்றால் வரட்சி. வரட்சி என்றால் பஞ்சம் என்பதைச் சொல்லி விளக்கத் தேவையில்லை.

பொன்னகரில் இருக்கும் எண்ணூறு குடும்பங்களுக்கும் பசியும் தண்ணீரும்தான் பெரிய பிரச்சினை. “பிள்ளையைக் குடுத்தம். புருசனைக் குடுத்தம். அண்ணன் தம்பிகளைக்கூடக் குடுத்தம். எங்கட ஒவ்வொ வீட்டலயும் யாராவது ஒருத்தர் போராட்டத்தில சாவடைஞ்சிருக்கிறாங்க. எத்தனை பெட்டைப் புள்ளங்க கூட சாவடைஞ்சிருக்கெண்டு தெரியுமா? இப்பிடியெல்லாம் தியாகம் பண்ணிட்டு, இப்ப நாங்க ஒரு குடம் தண்ணிக்கே வழியில்லாமக் காஞ்சு கெடக்கோம்ல. இதைக் கேட்கிறதுக்கு இந்த மண்ணில யாருமே இல்லயா அய்யா? நாங்க இப்ப என்னத்த தமிழீழமா கேட்குறோம். ஒரு எடத்தில வெச்சு தண்ணியக் கொடுங்க. தாகத்துக்கு தண்ணியே கொடுக்காதவன்லாம் என்னய்யா பெரிய மனிசன்? எங்க எல்லாம் போய்ட்டாங்க?

வெயிலை விட, அங்கே அடிக்கிற அனலை விட, சிந்தப்பட்ட இரத்தத்தை விட, தாகமுடைய இந்தக் குரல்களின் அனலும் சூடும் அதிகம்.

பொன்னகரில் உள்ள சனங்களை யாரும் பெரிதான மனிதர்களாக மதிப்பதில்லை. அப்படி மதித்தாலும் அது தேர்தல்கால மதிப்பே தவிர, மற்றும்படி அவர்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கை புறம்போக்கு வாழ்க்கைதான். பிழைப்பில்லை. பெரும்பாலானவர்கள் கூலிக்கே போகிறார்கள். அதுவும் ஆண்கள்தான். வீடுகளில் பிள்ளைகளைத் தனியே விட்டு விட்டுத் தாம் வேலைக்குப் போக முடியாது. பாதுகாப்பில்லாத பிதேசம்.. பாதுகாப்பில்லாத வீடுகள். ஆகவே தாங்கள்தான் இல்லாத்துக்கும் காவலிருக்க வேணும்.

“ஒத்தை ஆள் ஒழைச்சிட்டு வந்தா இந்தக் குடும்பத்துக்குப் போதுமா? என்னமோ நாள் ஓடுது. பஞ்சத்திலதான் வாழ்க்யெ பொதைஞ்சிருக்கய்யா” என்று சொல்லிக் கொண்டு தலையிலிருந்த விறகுக் கட்டை கீழே போட்டார் தாயம்மா. தாயம்மாவுக்கு ஆறு பிள்ளைகள். ஒருவர் ஈழ மக்கள் புரட்சிகர மக்கள் முன்னணியில் இணைந்து செயற்பட்டு மடிந்து விட்டார். மற்ற இரண்டு பிள்ளைகள் புலிகளில் இணைந்து அவர்களும் மடிந்து விட்டனர். இப்போது மூன்று பிள்ளைகள் மட்டும் உண்டு. அதில் ஒருவருடைய காலில் குண்டடிபட்டு அந்தக் காலும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு பிள்ளையுடன் தங்கியிருக்கிறார்.

வெறுங்குடத்தைக் கையில் ஏந்திக்கொண்டு நடந்து போகிறார் தாயம்மா. இனி மீண்டும் திரும்பி வருவதற்கு அரை மணி நேரமாவது ஆகும். ஒரு குடம் தண்ணீருக்காகத்தான் போகிறார் தாயம்மா? ஆமாம் மூன்று பிள்ளைகளைப் போராட்டத்துக்குக் கொடுத்த தாய்.

தாயம்மாவின் தாகம் தண்ணீர்த் தாயகம்.

–சிக்மலிங்கம் றெஜினோல்ட்

ToTop