ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

இந்த நாள் இனிய நாள்!

தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்று நாட்காட்டி யில் கை வைத்து எண்ணி, எண்ணி (தப்புத்தப்பாக) மகிழ்ச்சியடைந்த காலம் ஒன்று உண்டு. அப்பா தரப்போகும் பட்டாசுக்காசு, அம்மா செய்யப் போகும் பலகாரம், அப்பா ஆசியின் (வசவு) பேரில் அம்மா எடுத்துத் தரப்போகும் டிராயர் சட்டை இவையெல்லாம் கலர்க்கலர் கனவுகளாய் தூக்கத்தைக் கெடுக்க, மனசெல்லாம் மத்தாப்பாய் மகிழ்ந்த காலம் ஒன்று உண்டு.
சின்னச் சின்ன சந்தோஷங்களாய் சிறகடித்த அந்த மகிழ்ச்சி மலர்கள் இப்போது என்ன ஆயின? எங்கே போயின? இப்போது டப்பா, டப்பாவாகப் பலகாரங் களும் பை, பையாகப் புதுத்துணிகளும் பீரோ, பீரோ வாக நிரம்பி வழிந்தாலும் மனசு மட்டும் நிறைய வில்லையே… ஏன்? வளர்ந்து விட்டோமா? எதையோ இழந்து விட்டோமா? இது மாறுதலா? தேய்மானமா அல்லது ஞானோதயமா? கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

எதை அடைய வேண்டும் என்று ஏங்கினோமோ, எது எட்டவில்லை என்று வருந்தினோமோ… அது எட்டும் போது சந்தோஷம் மட்டும் கிட்டுவ தில்லையே… ஏன்? ஒரே காரணம்… மனசு… மனசு… மனசுதான்… அப்போ திருந்த மனோநிலை அப்படி! இப் போதிருக்கும் மனோநிலை இப்படி! கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேன்…

சட்டென்று விளங்கும்படி ஒரு கதை சொல்கிறேன்.

அரண்மனையில் பணிபுரியும் சாதாரண சேவகர் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்; கலகல என்று சிரித்தபடி கவலைகள் இல்லாதவ ராகக் காரியங்கள் செய்வார். அவரைப் பார்த்த அரசருக்கு ஒரே ஆச்சர்யம். எப்படி இந்த ஏழை இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறான்? இவனுக்கு வருமானமோ குறைவு. வசதிகளும் இல்லை. மிகச்சிறிய வீட்டில் அதிக நபர்களுடன் வாழும் அவலம்… அப்படி இருந்தும் இவன் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறான் என்று சிந்தித்தார் அரசர்.

“பிரமாண்டமான அரண்மனை, ஏகப்பட்ட எடுபிடிகள். மிக அதிக வருமானம் இத்தனையும் இருந்தும் நமக்கில்லாத நிம்மதி… மகிழ்ச்சி… இந்தப் பயலுக்கு எப்படி இருக்க முடியும்?’ என்ற எண்ணம் அவரைக் குடைந்தது. ஒருநாள் அவனை அருகில் அழைத்து, “உனக்கு வருத்தமே கிடையாதா? ஏன் இவ் வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய்?’ என்று கேட்டார் அரசர்.

“மேன்மை தங்கிய மன்னரே… நான் ஓர் ஏழைக் காவலன். எங்கள் குடும்பத்தின் தேவைகள் மிக மிகக் குறைவு. மழையையும், வெயிலையும் மறைக்க ஒரு கூரை… வயிறு நிரம்ப ஏதோ ஓர் உணவு… மானம் காக்க ஒரு துணி… இதற்கு என் வருமானம் போது மானது. வேறு எந்த ஆசைகளையும் நான் வளர்த்து கொள்வதே இல்லை… அதனால், நிம்மதியாக இருக்கிறேன்..’ என்று பணிவுடன் கூறினான் சேவகன்; விரக்தியாகச் சிரித்துக் கொண்டார் மன்னர்.

இந்த ஆச்சர்யமான நிகழ்ச்சியைத் தம் அமைச்சரிடம் பகிர்ந்து கொண்ட மன்னர், “இவ்வளவு வருமானம் உள்ள நாம் எப்போதும் கவலையில் இருக்கிறோம். நம்மை விடக் குறைந்த வருமானம் உள்ள அவன் கவலையில்லாமல் இருக்கிறானே! எப்படி இது சாத்தியம்?’ என்று பெருமூச்சு விட்டார். “வேண்டு மானால் அவனையும் நமது கவலைப் படுவோர் சங்கத்தில் உறுப்பினராக்கி விடலாம். ரொம்பவும் சுலபம்…’ என்று பணிவுடன் சிரித்தார் அமைச்சர்.

“அதென்ன கவலைப்படுவோர் சங்கம்?’ என்று வியப்புடன் கேட்டார் மன்னர். “அரசே… ஒரு பையை எடுக்க வேண்டும். அதில் 99 தங்கக் காசு களைப் போட்டுக் கட்ட வேண்டும். அந்த ஏழையின் வீட்டு வாசற்படியில் வைத்துவிட வேண்டும். பிறகு பாருங்கள் அவனது நடவடிக்கைகளை..’ என்று சிரித்தார் அமைச்சர். “அப்படியே செய்யுங்கள்…’ என்று உத்தரவிட்டார் அரசர். தன் வீட்டு வாசலில் கிடைத்த 99 பொற்காசுகளை ஒரு தடவைக்குப் பல தடவை எண்ணி, எண்ணி மாய்ந்தான் சேவகன். “ஒன்று குறைகிறதே… ஒன்று குறைகிறதே..’ என்று புலம்பினான். எங்கே போயி ருக்கும் என்று அங்கும் இங்கும் தேடினான். அமைதி போய் விட்டது. தன் வீட்டில் பொற்காசு இருக்கும் விவரம் யாருக்கும் தெரிந்து விடுமோ என்று தடுமாறி னான்.

எப்பாடு பட்டாவது பணம் சேர்த்து, அதை ஒரு தங்கக் காசாக மாற்றி நூறு பொற் காசுகள் என்று முழுமைப் படுத்த வேண்டும் என்கிற வெறி அவனுக்குள் ஏற் பட்டு விட்டது. அவனது கலகலப்பு, நிம்மதி, சந்தோஷம் எல்லாமே அந்த ஒரு தங்கக் காசு பற்றிய கவலைக்குள் கரைந்து போய்விட்டது.

அதிகம் உழைத்தான்; பட்டினி கிடந்தான். தன் குடும்பத்தவரை “பொறுப்பற்றவர்கள்… ஊதாரிகள்’ என்று சப்தம் போட்டான். பரபரப்பும், படபடப்பும் அவனது ஒவ்வொரு செயலிலும், சொல்லிலும் குடியேறி விட்டது! அது அரசருக்குத் தெரிந்தது. அமைச்சர் சொன்னார்… “அரசே… அவன் நமது 99 சங்க உறுப்பினர் ஆகி விட்டான்..’ என்று.

அதாவது, அனுபவிக்க ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தாலும், கிடைக்கத் தவறிய ஒன்றிற்காகவே ஏங்கும் முட்டாள்களின் உலகம் இது. இந்த மனோநிலை தான் நமது துயரங்களுக்கான முக்கிய காரணம். சந்தோஷப்பட வேண்டிய நேரத்தில் கூட சந்தோஷப்பட முடியாதபடி இந்த மனோபாவம் நம்மைக் கெடுத்து விடுகிறது.

சில கிராமங்களின் வழியாகக் காரில் போகும் போது அங்குள்ள நாய்கள் பாய்ந்து, பாய்ந்து நமது கார்களைத் துரத்தும். இந்தப் பாய்ச்சலால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை; நாய்தான் களைப்படைந்து எச்சில் வழிய நாக்கைத் தொங்கப் போட்டபடி பெருமூச்சு விடப் போகிறது.

இதே போலத்தான் வாழ்க்கை முழுவதும் ஏதாவது ஒன்றை நாமும் துரத்திக் கொண்டே இருக்கிறோம். வேக, வேகமாகத் துரத்துகிறோம். பிறகு வருத்தப்பட்டு அமர்ந்து விடுகிறோம். இந்த மனோபாவத்தை மாற்றிக் கொள்ள வேண்டாமோ?

நாற்பது வயது வரை பணம், பணம் என்று உடல் நலத்தை மறந்து உடல் நலத்தை இழந்து துரத்துகிறோம். நாற்பதாகும் போது துரத்திச் சேர்த்த பணத்தை மருத்துவமனைகளில் கொட்டி ஆஹா உடல் நலம், உடல் நலம் என்று துரத்துகிறோம். அதனால் தான் ஒரு காலத்தில் இனித்த வாழ்க்கை மறுகாலத்தில் கசக்கிறது.

சின்ன வயதில் எது கிடைத்தாலும் பெரிய விஷயமாகத் தெரிந்தது. ஒரு கோலிக் குண்டு கூட உலக உருண்டைபோல நமக்குப் பெரிய விஷயமாக இருந்தது. இப்போதோ உலக உருண்டையே கொடுத் தாலும், நமது பேராசைக்கு முன் அது வெறும் லாலிபாப் போல சிறுத்து விடுகிறது. மாற வேண்டிய மனோபாவம் இது. மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், மறுபடியும் ஒரு குழந்தையைப் போன்ற மனம் நமக்கு வேண்டும். அப்போது தான் அன்றைக்குத் தீபாவளி தித்தித்த மாதிரி இன்றைக்கும் தித்திக்கும்.

ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது. நரிக்கு ஏக குஷி… “நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். இவ்வளவு பெரிய எனக்குப் பசி தீர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு யானை அல்லது ஒட்டகமாவது கிடைத்தால் தான் கட்டுப்படியாகும்!’ என்று ஊளையிட்டது.

கொஞ்சம் சின்ன விலங்குகளை ஏளனத்துடன் அலட்சியப்படுத்தியபடி தன் பசிக்குக் குறைந்தபட்சம் ஒரு யானை, யானை என்றபடி காடு முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தது. தேடிக் கொண்டே இருந்தது; பாவம், ஒன்றும் கிடைக்கவில்லை. மதியம் தலைக்கு மேலே உச்சியில் சூரியன் வந்தபோது நரியின் நிழல் சிறுத்து அதன் காலடியில் விழுந்திருந்தது.

“ஆஹா… பசியால் நாம் எவ்வளவு இளைத்துப் போய்விட்டோம்…’ சிறுத்து விட்டோம் என்று வருந்தியது நரி. இளைத்துப் போன இந்த அளவுக்கு ஒரு ஆட்டுக் குட்டியோ, கோழியோ கிடைத்தால் கூட போதுமானது என்று தேடியது. ம்ஹூம், பயனில்லை. மாலையில் மேற்கே வந்த சூரியனால் நரியின் நிழல் நரிக்குப் பின்பாக விழுந்தது… அதனால், நரிக்குத் தன் நிழலே தெரிய வில்லை…

“ஆஹா.. நாம் வெகுவாக இளைத்து விட்டோம். நாம் இல்லவே இல்லை போலிருக்கிறது… ஒரு வேளை இறந்து போய் விட்டோமோ?’ என்று பயந்தது. பிறகு, “சீச்சி… நாம் உயிரோடு தான் இருக்கிறோம். இந்தப் பசிக்கு ஒரு கோழிக்குஞ்சு, ஏன், ஓர் எறும்பு கிடைத்தால் கூட போதும்..”‘ என்று நாக்கைத் தொங்க விட்டபடி தள்ளாடி, தள்ளாடி நடந்தது.

இந்த நரியின் கற்பனை மாதிரி தான்… சிலர் தங்களை வெகு பிரமாதமாக எண்ணிக் கொண்டு தங்கள் திருப்திக்கு எதை, எதையோ தேடுகின்றனர். கிடைத்த பல பரிசுகளை ஒதுக்கி விட்டு அலைகின்றனர். முடிவில் ஏதாவது கிடைக்காதா என்று ஏங்கி வாடுகின்றனர். இரண்டும் வேண்டாமே! கிடைத்த 99ஐ புறக்கணித்து விட்டு அதை நூறாக்கப் போராடும் இயல்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அனுபவிக்க ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் இல்லாத ஒன்றிற்காக ஏங்குவதை விட்டு மாற வேண்டும். காலை நரிபோல் கர்வத்தோடு தேடவும் வேண்டாம்; மாலை நரிபோல் கவலையோடு வாடவும் வேண்டாம். இயல்பாக இருப்போம், ஒரு குழந்தையின் மனதுடன் வாழ்வோம், வாழ்வைக் கொண்டாடு வோம்.

இந்தக் கருத்தை விளங்கிக் கொண்டால் இன்று மட்டுமல்ல, என்றுமே தீபாவளிதான். இதை உணர்ந்து விட்டால் இந்த நாள் ஓர் இனிய நாள்.

நன்றி: தினமலர்

ToTop