ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

புத்தாண்டில் உறுதி எடுக்கப்போகிறீர்களா? – கடைபிடிக்க 5 டிப்ஸ் இங்கே

இன்று (செவ்வாய்க்கிழமை) புத்தாண்டு.

2019 புத்தாண்டை கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்துகள்.

நம்மில் பலர் இன்று புத்தாண்டு உறுதிமொழி எடுக்கப்போகிறோம். புத்தாண்டில் நாம் தொடங்கும் புது செயல்கள் சுய முன்னேற்றத்துக்கான புதிய இலக்குகளை அடைய உதவும்.

நல்ல உடல்நலன் பெறுவதற்கோ அல்லது நல்லபடி பணத்தை சம்பாதிப்பதற்கோ, பணத்தை சேமிக்கவோ புதிய இலக்குகள் வைக்கப்படலாம்.

சிலர் சில பழக்க வழக்கங்களை முற்றிலுமாக விட்டுவிட எண்ணுவார்கள், சிலர் ஓய்வு நேரங்களில் ஆக்கப்பூர்வமாக செயல்பட புது இலக்குகள் வைப்பார்கள்.

என்னதான் நீங்கள் புது வருடத்துக்கான உறுதி எடுத்தாலும், அவற்றை முழுமையாக செய்து முடிக்க ஒரு விஷயம் நிச்சயம் தேவை (ஊக்குவித்தல்).

நிறைய பேர் புதுவருடத்தில் உறுதி ஏற்கிறார்கள் ஆனால் அவர்கள் அனைவராலும் உறுதியை வெற்றிகரமாக கடைபிடிக்க முடிவதில்லை அல்லது இலக்குகளை முழுமையாக அடைய முடிவதில்லை.

எட்டு சதவீத மக்கள் மட்டுமே புது வருட உறுதியேற்பை முறையாக கடைப்பிடித்து இலக்குகளை அடைகின்றனர் என்கிறது ஸ்கிரான்டன் பல்கலைகழகத்தின் ஓர் ஆய்வு.

நீங்களும் புது வருட உறுதி ஏற்பில் வெற்றியடைய விரும்புகிறார்களா?

தோல்விகளை தவிர்த்து உறுதி ஏற்பை முழுமையாக கடைபிடிக்க ஐந்து எளிய வழிகளை இருக்கின்றன அவற்றை பின்பற்றுங்கள் – வாழ்த்துகள்.

1. சிறியதாக தொடங்குங்கள்

சாத்தியமான இலக்குகளை மட்டும் வைப்பதே வெற்றியடைவதற்கான வாய்ப்பை அதிகரித்துவிடும்.

சில நேரங்களில் நாம் முற்றிலும் எளிதில் சாத்தியப்படாத இலக்குகளை வைக்கிறோம். இது மிக முக்கியமான பிரச்சனை. உதராணமாக புதுவருடத்திலிருந்து முற்றிலும் மாறக்கூடிய ஒரு புதிய மனிதனாகமுடியும் என ஊகிப்பதைச் சொல்ல முடியும் என்கிறார் உளவியல் நிபுணர் ராச்சேல் வெய்ன்ஸ்டெய்ன்.

ஒரு பெரிய இலக்கு வைப்பதற்கு முன்னால் சிறிய இலக்கை திட்டமிடுங்கள்.

”நான் மாரத்தானில் பங்கேற்பேன்” என உறுதியெடுப்பதற்கு முன்பு ஓடுவதற்கு ஏற்ற ஷூக்களை வாங்கி சிறிது தூரம் ஒடுங்கள். சமைக்க விருப்பம் இருந்தால் நன்றாக சமைக்கத் தெரிந்த ஒருவருடன் ஒவ்வொரு வாரமும் ஒரு வேளை உணவை தயார் செய்து உங்களது சமைக்கும் திறனை அதிகரியுங்கள்.

சிறிய இலக்குகளை வைப்பது என்பதே வெற்றி அல்ல. நீங்கள் உண்மையில் உங்களுடைய உறுதிஏற்பை எவ்வளவு தூரம் கடைபிடிக்கிறீர்கள் நீண்ட கால இலக்குகளை அடைவதற்கு என்ன முயற்சி எடுக்கிறீர்கள் என்பதே முக்கியம்.

மாற்றங்கள் தடாலடியாக நடந்துவிடாது. ஒவ்வொரு நேரத்திலும் சிறு சிறு அடியாக முன்னோக்கிச் செல்வதன் மூலமே மாற்றங்கள் நடக்கும் என விவரிக்கிறார் வெய்ன்ஸ்டெய்ன்.

2. தீர்க்கமாக இலக்குகள் வையுங்கள்

பல நேரங்களில் நாம் இலக்கு வைப்போம் ஆனால் அதைச் செயல்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்திருக்கமாட்டோம். இலக்குகளை மிகவும் நுண் திட்டங்களோடு அணுக வேண்டும்.

நான் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வேன் என பொத்தாம்பொதுவாகச் சொல்வதை விட ”நான் சனிக்கிழமை மாலையிலும், வியாழக்கிழமை காலையிலும் உடற்பயிற்சி கூடம் செல்வேன்” என எப்போது உடற்பயிற்சி கூடத்துக்குச் செல்ல சாத்தியமான நேரம் இருக்கிறது என்பது வரை திட்டமிட்டு இலக்குகளை வைக்க வேண்டும் என்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நீல் லெவி.

தீர்க்கமாகவும் செய்து முடிக்கக்கூடிய நடவடிக்கைகளை எடுப்பது, நீங்கள் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் எனும் எண்ணம் கொண்டவர் மட்டுமல்ல அதைச் நடைமுறைப்படுத்துவதற்கான செயல்களில் ஈடுபடுகிறீர்கள் என்பதை காட்டும்.

3. ஆதரவை கட்டமையுங்கள்

நீங்கள் மட்டும் தனியாக இலக்கு வைத்து உறுதியேற்காமல் மற்றவர்களையும் உங்களது பயணத்தில் இணைத்துக்கொள்வது ஊக்கமளிக்கக்கூடியதாக அமையும்.

உதாரணமாக ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். உங்கள் நண்பரோடு வகுப்புக்குச் செல்ல உறுதியெடுத்துக்கொள்ளுங்கள். உங்களது அர்ப்பணிப்பை வெளிப்படையாக காட்டும்போது, பெரும்பாலும் உங்கள் இலக்கை அடைய நீங்கள் முறையான நடவடிக்கை எடுக்க உந்துசக்தி கிடைக்கும்.

ஒரு பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்வதிலும் அதை கடைப்பிடிப்பதில் சமூக காரணிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்கிறார் வார்விக் பல்கலைகழகத்தின் தத்துவவாதி மருத்துவர் ஜான் மைக்கேல்.

4. தோல்வியை கடந்து வாருங்கள்

உங்களது முயற்சி தோல்வியை நோக்கி பயணித்தால், சட்டென நிதானியுங்கள் உங்களது திட்டங்களை மறுமதிப்பீடு செய்யுங்கள்.

நீங்கள் சந்திக்கும் தடைகள் என்ன? எந்த மூலோபாயம் அதிகம் பலனளிக்கக்கூடியதாக இருக்கிறது? எவை குறைவாக பலனளிக்கின்றன என்பதை கண்டறியுங்கள்.

யதார்த்தமாகச் செயல்படுங்கள். உங்கள் இலக்கில் நீங்கள் அடையும் சிறிய வெற்றியையும் கொண்டாடுங்கள்.

நீங்கள் உங்கள் உறுதி ஏற்பில் தீர்மானமாக இருக்கிறீர்கள், ஆனால் நடைமுறையில் தோல்வியை சந்திக்கிறீர்கள் எனில் இலக்குகளை அடைய நீங்கள் ஏன் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக உங்களது அணுகுமுறையை மாற்றக்கூடாது?

தினசரி நீங்கள் உங்களது வழக்கமான செயல்களில் இருந்து சிறு மாற்றங்களைச் செய்து பார்ப்பது நீங்கள் உங்கள் இலக்கை அடைவதில் சரியான திசையை நோக்கி பயணிக்க உதவும்.

உதாரணமாக நீங்கள் நல்ல உணவுகளை மட்டுமே சாப்பிடப்போவதாக உறுதியேற்றுக்கொண்டால் நீங்கள் மாவுச்சத்து உண்பதை குறைக்க, பாஸ்தா, மைதாவால் செய்யப்பட்ட பிரெட் ஆகியவற்றை உண்பதற்கு பதிலாக ஆரோக்கியமான முழு தானிய உணவுகளை உண்ணுங்கள். அல்லது கொழுப்புகளை குறைப்பதற்கு கேக், சிப்ஸ் போன்ற சிற்றுண்டிக்கு பதிலாக சத்துமிக்க காய்கறி உணவுகள், காய்கறி சாறு போன்றவற்றை அருந்துங்கள்.

5. நீண்ட கால இலக்குக்கு ஏற்றவாறு உறுதியேற்பு இருக்கட்டும்

ஒரு சிறந்த உறுதியேற்பு என்பது உங்களது நீண்டகால இலக்கை அடையமுடிவதற்கான சாத்தியப்படும் சிறிய இலக்குகளை வைத்ததுச் செயல்படுவதாக இருக்கவேண்டும். சிறிய இலக்குகள் பெரிய இலக்கை அடைவதற்கான பாலமாக அமையும். ஆசைக்காக தெளிவற்ற இலக்குகள் மீது உறுதியேற்காதீர்கள் என்கிறார் நடத்தை குறித்த உளவியல் நிபுணரான மருத்துவர் ஆன் ஸ்வின்பர்ன்.

நீங்கள் எப்போதும் விளையாட்டு குறித்து ஆர்வமே காட்டியிருக்காத பட்சத்தில் ஒரு அற்புதமான தடகள வீரனாக வேண்டும் என உறுதியேற்பது, இலக்கை அவ்வளவு எளிதில் சாத்தியப்படுத்தாது.

வெறும் தன்னம்பிக்கையை மட்டுமே பெரிதும் சார்ந்திருப்பவர்கள் தோல்வியடைவார்கள் என்கிறார் ஸ்வின்பர்ன்.

ஆகவே உண்மையில் நீங்கள் எதாவது ஒரு விஷயம் குறித்து உறுதியேற்க விரும்பினால், அதை நடைமுறைப்படுத்த முதல் தேதியில் இருந்து தெளிவாக திட்டமிடுங்கள். மேலும் உங்களது நீண்ட பயணத்தில் ஆதரவைப் பெற தயங்காதீர்கள்.

நன்றி: பிபிசி தமிழ்

ToTop