ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

என்கவுன்டர் கொலைகளை கொண்டாடுவது அபாயத்தின் அறிகுறி – எச்சரிக்கும் செயற்பாட்டாளர்கள்

காவல்துறை குற்றவாளிகளை என்கவுன்டர் மூலம் கொல்லும்போது பெரும்பாலானவர்கள் அதனை ஆதரிக்கிறார்கள். ஆனால், இம்மாதிரியான கொலைகளை ஆதரிப்பது எதிர்காலத்தில் மிக ஆபத்தான நிலைமைக்கு எடுத்துச் செல்லும் என்கிறார்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள். இந்த ஆதரவு எங்கிருந்து உருவாகிறது?

சமீபத்தில் தெலங்கானா கால் நடை மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, தீ வைத்து கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் குற்றவாளி என கருதப்பட்ட நான்கு இளைஞர்களை காவல் துறையினர் என்கவுன்டர் செய்தனர். இந்த என்கவுன்டரை நாடு முழுவதும் பலர் கொண்டாடினர். இது குறித்து மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்ரி திஃபேனிடம் பேசினோம்.

’’இந்த கொண்டாட்டத்திற்குப் பின்னால் உள்ள சில உண்மைகளை நாம் ஏற்க வேண்டும். மக்களால் நீதி மன்றத் தீர்ப்புகளைக் கொண்டாட முடியவில்லை. அதனால், இம்மாதிரியான என்கவுன்டர்களைக் கொண்டாடுகிறார்கள்.

நம்முடைய நீதிமன்ற விசாரணைகள் தாமதமாகின்றன. அவை மக்களுக்கு எதிராக இருக்கின்றன. நம்முடைய புலனாய்வு அமைப்புகள் மிக மோசமாக இருக்கின்றன. அரசு வழக்கறிஞரின் தரம் படுமோசமாக இருக்கிறது. ஆகவே, மக்கள் நீதி மன்றம் மூலம் வெற்றியைக் கொண்டாட முடியாத நிலையில் இருக்கிறார்கள்.

இந்தியாவைப் பொறத்தவரை, சாட்சிகளை, பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் சட்டமே இல்லாமல் இருந்தது. இப்போதுதான் அதற்கான சட்டம் வந்திருக்கிறது. டிசம்பர் 18தான் இந்தச் சட்டம் நாடு முழுவதும் அமலாகிறது. உன்னாவ் விவகாரத்தை எடுத்துக் கொள்வோம். அதில் பாதிக்கப்பட்டவர் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்.

இப்படி இந்த நான்கு பேரை என்கவுன்டர் செய்யலாம் என காவல்துறை அதிகாரிகள் முடிவெடுக்கும் மனநிலை எப்படி வருகிறது? இப்போது என்கவுன்டரில் ஈடுபட்ட அதிகாரி, 2008ல் காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தபோது, 2 மாணவிகள் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகிறார்கள். காவல் துறைக்குப் பெரும் நெருக்கடி உருவானது சிலர் கைதுசெய்யப்பட்டார்கள். இதையடுத்து, ஆசிட் வீசியவர்கள் என்கவுன்டரில் கொல்லப்பட்டார்கள். இதை மக்கள் கொண்டாடினார்கள். நீதிமன்றம் இதனை கேள்வி கேட்கவில்லை. அதனால், அவர் இதனைத் தொடர ஆரம்பித்தார்.

இப்போது இந்த விவகாரத்தில் 4 பேரைக் கைதுசெய்தார். அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்படவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்களை அதிகாலை 3 மணிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். உடன் 15 காவலர்கள் இருந்திருக்கிறார்கள். குற்றத்தை நிகழ்த்திக்காட்ட அந்த நள்ளிரவிலா அழைத்துச் செல்வார்கள். அந்த இருட்டில் எப்படி விசாரணை செய்ய முடியும்?

பச்சைப் படுகொலை நடந்திருக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஏழைகள் என்பதால் இது நடந்திருக்கிறது. அரசியல்வாதிகள், பணக்காரர்களுக்கு இது நடந்திருக்காது. பொள்ளாச்சி வழக்கில் தவறு செய்தவர்களை இதுபோல நெருங்க முடியுமா? இந்த நாட்டில் என்கவுன்டவுரில் கொல்லப்பட ஒன்று கீழ் சாதியாக இருக்க வேண்டும். அல்லது ஏழையாக இருக்க வேண்டும்.

இந்தப் படுகொலை சம்பவத்தை ஆந்திரா உயர் நீதிமன்றம் வேடிக்கை பார்க்கிறது. அங்கே மனித உரிமை ஆணையம் முழுமையாக செயலிழந்து கிடக்கிறது. இதேபோல ஆந்திர காவல்துறையினர் 20 பேரை செம்மரம் கடத்தவந்தவர்கள் என்று கூறி என்கவுன்டர் செய்தார்கள். அதில் இன்று வரை பதில் கிடையாது.

இன்றைக்கு எதைப் பார்த்து கை தட்டுகிறோமோ… அதேதான் நாளை நமக்கு நடக்கும். அப்போது நாம் சொல்வதைக் கேட்க யாரும் இருக்க மாட்டார்கள்.

பெண்களின் உரிமையைப் பாதுகாக்க, என்கவுன்டர்களால் முடியாது. நாம் நம் குழந்தைகளை சிறந்த குழந்தைகளாக வளர்க்க வேண்டும். பாகுபாடு இல்லாத சமுதாயத்தை அமைக்க வேண்டும். அதுதான் சரியான, நிரந்தரமான தீர்வு.

நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை போய்விட்டது – முன்னாள் நீதிபதி

இந்த என்கவுன்டரை யாரும் எதிர்க்கவில்லை. எல்லோரும் கொண்டாடுகிறார்கள். இதற்கு முக்கியமான காரணம், நம்முடைய நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை போய்விட்டதுதான். வழக்குகள் இழுத்துக்கொண்டே செல்கின்றன. சீக்கிரம் தீர்ப்புகள் வழங்கப்படுவதில்லை. ஆகவே, இது இந்தக் கொண்டாட்டம் என்பது இந்தியாவின் நீதி அமைப்புகளின் தோல்வி. சட்டத்தின் தோல்வி.

ஒருவருக்கு ஜாமீன் கொடுப்பதைத் தீர்மானிக்க 106 நாட்கள் ஆகின்றன. ஆனால், அதுவே ஜெயலலிதாவாக இருந்தால் 20 நாட்களில் கிடைக்கிறது.

தற்போது இந்தியாவின் முக்கியமான தேவை, நியாயமான வேகமான விசாரணை. இங்கே ஒரு மோட்டர் வாகனக் குற்றத்தில்கூட சிறிய தீர்ப்பை வழங்க நான்கு வருடங்கள் ஆகின்றன. இம்மாதிரி ஒரு அமைப்பின் மீது யாருக்கு நம்பிக்கை வரும். அதனால், இம்மாதிரி என்கவுன்டர்களைக் கொண்டாடுகிறார்கள்.

இந்த நான்கு பேரில் ஒருவர் குற்றம் செய்யாதவராக இருக்கலாம். குற்றம் செய்த வேறொருவர் வெளியில் இருக்கலாம். ஆனால், இந்த நான்கு பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்டதை மக்கள், ஊடகங்கள் என எல்லோருமே ஆதரிக்கிறார்கள்.

இங்கிலாந்தில் இம்மாதிரி வழக்குகளில் 6 மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் வழக்குகள் முடிந்து தீர்ப்பு வந்துவிடுகிறது. ஆகவேதான், அங்கு இம்மாதிரி என்கவுன்டர்களுக்கு கடும் எதிர்ப்பு இருக்கும். இங்கே நீதி தாமதமாவதால், இம்மாதிரி நடக்கிறது என சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் கூறுகிறார்.

ஹைதராபாத் என்கவுன்டர்கள் தொடர்பாக எழுந்திருக்கக்கூடிய கொண்டாட்டம் மிகவும் வருந்தத்தக்க விஷயம். ஒரு புதிய வழக்கம் உருவாகியிருக்கிறது. ஜனநாயகத்தில் எது எல்லாம் சரியல்ல என்று நினைக்கிறோமா, அதையெல்லாம் ஏற்கக்கூடிய, இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய வழக்கம் அது.

நம்முடைய நீதி அமைப்பின் மீது நம்பிக்கை இல்லாமல் இம்மாதிரி கொண்டாடுவதாகச் சொல்வதில் எனக்கு ஏற்பு இல்லை. காரணம், இன்றைக்கு இதைக் கொண்டாடுபவர்கள் நீதி அமைப்பை தீவிரமாக நம்புகிறார்கள். இவர்களைப் போன்றவர்களுக்கு வளைந்துகொடுத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிப்பதைத்தான் நாம் சமீபத்தில் அயோத்தியா வழக்கில் பார்த்தோம். இந்த புதிய போக்குத்தான் ஆபத்தானது.

நிர்பயா வழக்கிற்குப் பிறகு, பாலியல் பலாத்காரம் தொடர்பாக சட்டம் மிகக் கடுமையாக மாற்றப்பட்டிருக்கிறது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனைகூட கிடைக்கும். இதற்கிடையில் காவல்துறை ஏன் இப்படி செய்கிறார்கள் என்றால் இந்த புதிய போக்கு ஏற்கப்படுவதால்தான்.

ஹைதராபாதில் சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு என்கவுன்டர் நடந்தது. 5 இஸ்லாமியர்கள் அந்த என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். வாரங்கலில் இருந்து நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்படும் வழியில் அவர்கள் கொல்லப்பட்டார்கள்.

இந்த பாலியல் பலாத்கார வழக்கிலாவது தற்போது பிடிபட்டவர்களாவது குற்றவாளிகள் போலத் தெரிகிறது. ஆனால், இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அப்படி நடக்கவில்லை. அதற்கு முன்பாக, இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சொல்லப்படுபவர்களால் இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டிருந்தனர். அதனால், பாதிக்கப்பட்டிருந்த காவலர்களின் மனநிலையை மேம்படுத்த, வேறு வழக்கில் கைதுசெய்யப்பட்டிருந்த இந்த இஸ்லாமிய இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இன்றுவரை அந்த என்கவுன்டர் வழக்கில் நீதி கிடைக்கவில்லை. காரணம், அரசும் ஊடகமும் மக்களும் இந்தக் கொலைகளை அங்கீகரிக்கிறார்கள்.

இது மிக மிக பிற்போக்கான விஷயம். எதிர்காலத்தில் நம்முடைய ஜனநாயகத்தில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயம் என மனித உரிமை செயற்பாட்டாளர் அ. மார்க்ஸ் கூறுகிறார்.

முரளிதரன் காசிவிஸ்வநாதன்
பிபிசி தமிழ்

ToTop