ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

மின்னஞ்சல் அனுப்புவதை குறைப்பதால் கார்பன் உமிழ்வு குறைகிறதா? நம்ப முடியாத சாத்தியம்

நீங்கள் அடிக்கடி நன்றி சொல்பவரா? அதை மின்னஞ்சல் மூலம் சொல்பவர் என்றால், நீங்கள் அதை நிறுத்த வேண்டும் என சுற்றுச்சூழலை காக்க விரும்பும் பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

நாம் அனைவரும் ஒரு நாளைக்கு, குறைவான மின்னஞ்சல்களை அனுப்ப ஊக்குவிக்கப்படுவோம் என ஃபைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகை கூறுகிறது.

இப்படிச் செய்வதால், ஏகப்பட்ட கார்பன் மிச்சப்படுத்தப்படுகிறது என க்ளாஸ்கோவில் நடக்க இருக்கும் சிஓபி26 பருவநிலை மாற்ற உச்சிமாநாட்டில் பங்கெடுக்க இருக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால், இது உண்மையாகவே ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வருமா?

மின்னஞ்சல்கள் ஏன் கார்பனை உற்பத்தி செய்கின்றன?

பலரும் இணையம் என்பது எங்கோ வானத்தில் இருக்கும் ஒரு விஷயம், அது தங்களின் கணிணி போன்ற இயந்திரங்களுக்கு வெளியே இருக்கிறது என நினைக்கிறார்கள்.

ஆனால், உண்மையில் நீங்கள் ஒரு மின்னஞ்சலை அனுப்பினால், அது மின்சாரத்தை செலவழிக்கும் எலெக்ட்ரானிக்ஸ் இயந்திரங்களின் சுழற்சியில் செல்கிறது.

உங்கள் வைஃபை ரவுட்டர் – வயர் வழியாக, உள்ளூரில் இருக்கும் இணைப்பகத்துக்கு சிக்னல் கொடுக்கிறது, அதன் பின் சாலையில் இருக்கும் கிரீன் பாக்ஸுக்கும், அதன் பின், டெலிகாம் நிறுவனத்துக்கும் அதன் பின் பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் தரவுகள் மையத்துக்கு் அது செல்கிறது. இவை எல்லாமே மின்சாரத்தால் இயங்குபவை.

ஒரு மின்னஞ்சல் பரிவர்த்தனை, இந்த மிகப்பெரிய கட்டமைப்பின் மீது ஏற்படுத்தும் அழுத்தம் குறைவு தான். ஆனாலும் பின்னணியில் இயங்கக்கூடிய அதற்கான செயல்முறை வியப்பூட்டக்கூடியது.

என்னுடைய மின்னஞ்சல்கள், சுற்றுச்சூழலுக்கு பெரிய ஆபத்தா?

மரபுசார் எரிசக்தி நிறுவனமான ஓவோ எனர்ஜி, ஒரு வருடத்துக்கு முன் ஒரு விஷயத்தை குறிப்பிடுகிறது.

அதை வைத்து தான், இந்த அதிகாரி, இந்த யோசனையை முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக ஃபைனான்ஷியல் டைம்ஸ் தெரிவிக்கிறது.

பிரிட்டனைச் சேர்ந்தவர்கள், “ஒரு நன்றி” மின்னஞ்சலைக் குறைவாக அனுப்புகிறார்கள் என்றால், அது ஒரு ஆண்டுக்கு, 16,433 டன் கார்பனை சேமிக்கும் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், இது மொத்த கார்பன் உமிழ்வில் சிறு துளி தான்.

2019ஆம் ஆண்டில் பிரிட்டன் வெளியிட்ட பசுங்குடில் வாயுக்களின் அளவு 435.2 மில்லியன் டன். இதில் 0.0037% குறித்து தான் நாம் பேசிக் கொண்டு இருக்கிறோம். எல்லா பிரிட்டன் மக்களும், தங்களின் மின்னஞ்சலைக் குறைத்துக் கொண்டால் மிச்சப்படுத்தலாம். இது சாத்தியமாகலாம்.

மைக் பெர்னஸ் – லீ என்கிற மதிப்பிற்குரிய பேராசிரியரின் ஆராய்ச்சிகள், ஓவோ எனர்ஜியால் பயன்படுத்தப்பட்டது. இவர் ஃபைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகையிடம் பேசிய போது, “இது back-of-the-envelope என்கிற கணித முறையைப் பயன்படுத்தி, 2010-ம் ஆண்டில் இருந்து கணிக்கப்பட்டு வருகிறது. இதை வைத்து, பேசத் தொடங்கி இருக்கிறோம். ஆனால் இதில் பெரிய கேள்விகள் இருக்கின்றன” என கூறி இருக்கிறார்.

“ஒரு மின்னஞ்சல் எவ்வளவு கார்பனை உருவாக்கும் என்கிற மதிப்பீடு, சம்பந்தப்பட்ட அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது” என்று பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் நிலைத்தன்மை மற்றும் கணினி அமைப்புகளின் பேராசிரியர் கிறிஸ் ப்ரிஸ்ட் கூறுகிறார்.

இது சர்வர்கள், உங்கள் வீட்டு வைஃபை, உங்கள் மடிக்கணினி ஆகியவற்றால் பயன்படுத்தப்படும் ஆற்றலையும் கணக்கில் சேர்த்துக் கொள்ள முயற்சிக்கிறது – தரவு மையக் கட்டடங்களை நிர்மாணிக்க பயன்படும் கார்பனின் மிகச் சிறிய பங்கு கூட சேர்த்துக் கொள்ள முயற்சிக்கிறது.

“உண்மை என்ன என்றால், ஏகப்பட்ட அமைப்புகள், மின்னஞ்சலை அனுப்பினாலும், அனுப்பவில்லை என்றாலும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்கிறார் பேராசிரியர் ப்ரிஸ்ட்.

உங்கள் மடிக்கணிணி செயல்பட்டுக் கொண்டு இருக்கும், உங்கள் வைபை செயல்பாட்டில் இருக்கும், உங்கள் வீட்டில் இருக்கும் இணையம் செயல்பட்டுக் கொண்டு இருக்கும், நீங்கள் மின்னஞ்சலைக் குறைத்தாலும், உங்கள் அகண்ட அலைவரிசை கிட்டத்தட்ட அதே அளவு மின்சாரத்தைத் தான் பயன்படுத்திக் கொண்டு இருக்கும்.

மின்னஞ்சலை ஹோல்ஸ்டிங் செய்யும் தரவு மையத்தில் மட்டும் ஒரு சிறிய சேமிப்பு இருக்கும், குறிப்பாக இது சில குறைவான சர்வர்களைப் பயன்படுத்த அனுமதித்தால் தான் இந்த சேமிப்பும் நடக்கும். ஆனால் சேமிக்கப்பட்ட கார்பன் ஒரு மின்னஞ்சலுக்கு 1 கிராமை விட மிகக் குறைவாக இருக்கும்.

எது மாற்றத்தைக் கொண்டு வரும்?

ஒப்பீட்டளவில் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் மின்னஞ்சல்களைப் பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக, சில ஆராய்ச்சியாளர்கள் ஆன்லைன் விளையாட்டு மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் க்ளவுட் சேமிப்பு போன்ற சேவைகளில் நம் கவனத்தைத் திருப்ப வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர், அவை மிகப் பெரிய விளைவை ஏற்படுத்துகின்றன.

ஆனால் இந்த தலைப்பு மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. இதற்கான மதிப்பீடுகளை எவ்வாறு கணக்கிடப்பட வேண்டும் – அதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்பது பற்றி ஒரு விவாதம் இருக்கிறது.

பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், ஏற்கனவே, கார்பன் சமநிலையில் இருப்பதாக, பெருமையாகச் சொல்கிறது. நமக்கு மின்னஞ்சல் மற்றும் யூ டியூப் போன்ற சேவைகளை வழங்குவதன் மூலம் வெளிப்படுத்தும் கார்பனை சமன் செய்ய, சுற்றுச்சூழல் தொடர்பான திட்டங்களுக்கு மானியம் கொடுக்கிறார்கள்.

உண்மையில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், குறைந்த டேட்டா கிட் வாங்குவது, அதை அதிக காலம் வைத்திருப்பதற்கு ஒப்பாகும் என்று பேராசிரியர் ப்ரிஸ்ட் கூறுகிறார்.

“ஆனால் இதை உங்கள் பயணத்துடன் ஒப்பிடும்போதும், உங்கள் வீட்டை சூடாக்குவது மற்றும் நீங்கள் சாப்பிடுவதோடு ஒப்பிடும் போது, இது மிகச் சிறியது” என்கிறார் ப்ரிஸ்ட்.

வாடிக்கையாளர்கள், சுற்றுச்சூழலை பாதிக்கும் விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது, சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் வேலை, முடிந்தவரை ஆற்றல் மற்றும் வளங்கள் மிச்சப்படுத்தும் வழியில் சேவைகளை வழங்க தங்கள் அமைப்புகளை வடிவமைக்க வேண்டும். “

மின்னஞ்சலைக் கையாள்வது, பயன்படுத்துவது மற்றும் நன்றி செய்திகளைப் பற்றிய அவரது ஆலோசனை?

“அந்த மின்னஞ்சலைப் பெறுபவர், அதை மதிப்பார் என்று நீங்கள் நினைத்தால், ஒரு மின்னஞ்சலை அனுப்புங்கள், அவர்கள் அப்படிச் செய்யமாட்டார்கள் என்றால், அனுப்பாதீர்கள்” என்று அறிவுறுத்துகிறார் ப்ரிஸ்ட்.

டேவிட் மாலி
பிபிசி தொழில்நுட்ப நிருபர்

ToTop