ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

கொல்லாமை

‘கொல்லாமை ‘ என்பதை தலையாய அறமாக அனைத்து சமய தமிழ் இலக்கியங்களும்
எடுத்து இயம்புகிறது. தத்துவரீதியாகப் பார்க்கும்போது பெளத்தவர்கள் கொல்லாமையை
வலிறுத்தினாலும், புலால் உண்ணாமையை வலியுறுத்தவில்லை. ‘கல்பய மாமிசம்’, அகழுதூபூ
மாமிசம் என்று புலாலை ஏற்றுக்கொள்ளகூடிய , ‘ஏற்றுக்கொள்ளாத இயலாத’
என இருவகைப்படுத்தினர். ‘பிறர் கொன்று தரும் புலாலை, இறந்த விலங்குகளின் புலாலை ஏற்பது தவறன்று’ என்பது
அவர்கள் கொள்கை. ஆனால், கொல்லாமைக் கோட்பட்டை முழுமையாக வலியுறுத்திய
நூல்கள் பெரும்பாலும் சமண இலக்கியங்களில் காணப்படுகிறது.

இந்தக் கோட்பாட்டை வாழ்க்கையில் தவறாது பின்பற்ற வேண்டும் என்று பேசிய சமய இலக்கியங்களும் தமிழில் உள்ளன. வள்ளலாரும் – வள்ளுவரும் இதனை மிகையாகவே வலியுறுத்தியுள்ளனர். ஆகவே, கொல்லாமைக் கோட்பாட்டை நாம் தமிழ் இலக்கியங்களில்
சமய எல்லைகளைக் கடந்தும் காணமுடிகிறது.

கொல்லாமை என்பது வெறும் அறநெறி என்று கூறுவது பொருந்தாது. விலங்குகளைப்
பேணாமை, ஊனப்படுத்துதல் ஆகியவற்றைச் செய்யாமல் இருத்தலும் கொல்லாமைக்
கோட்பாட்டில் அடங்கும்.

அனைத்து உயிரினங்கள்பாலும் கருணை காட்டுவதும் கொல்லாமை.
”ஆன்ம நேய ஒருமைப்பாடு ” என்பதே இந்தக் கோட்பாட்டின் முழுமை வடிவம் என்றும் கொள்ளலாம்.

” ஒன்றாக நல்லது கொல்லாமை
மற்று அதன் பின்சாரப் பொய்யாமை நன்று ” என்பது குறள்.

தலையாய அறம் கொல்லாமை என்று குறள் உரைக்கிறது.

”அறவினை யாதெனின் கொல்லாமை
கோறல் பிறவினை எல்லாம் தரும் ” என்ற குறள், கொல்லாமைக் கோட்பாடே பிறவினைகள்
அணுகுவதைத் தவிர்க்கும் என்பதைத் தெளிவாக்குகிறது.

கொல்லாமை, பொய்யாமை, களவாடாமை, மிகுபொருள் விரும்பாமை, பிறன் மனை விழையாமை
ஆகியவற்றை ‘அணு விரதம் ‘ என சொல்லப்படுகிறது.

தமிழ் இலக்கியங்களில் கொல்லாமைக் கோட்பாட்டை எடுத்துக்கூறும் பல பகுதிகளைக்
காணலாம். அறம் எனப்படுவது ஆரூயிர் ஓம்பல், வாதம், எனப்படுவது கொல்லா விரதம்’
என்ற பொருள் பொதிந்த பாடல்களை நாம் காணலாம்.

”பொய்யாமை நன்று பொருள்நன்று உயிர்நோவக்
கொல்லாமை நன்று கொழிக்கும்கால் ”
-சிறுபஞ்சமூலம் .39.

” கொல்லாமை நன்று கொலைதீது எழுத்தினைக்
கல்லாமை தீது கதம்தீது – நல்லார்
மொழியாமை முன்னே முழுதும் கிளைஞர்
பழியாமை பல்லார் பதி ”
-சிறுபஞ்சமூலம் ,51

கொன்றான் கொலை உடம்பாட்டான்
கொன்றதனைக் கொண்டான் கொழிக்குங்கால் கொன்றதனை
அட்டான் அடவுண்டான் ஐயவரினும் ஆகுமென்
சுட்டெரித்த பாவம் கருது
-சிறு பஞ்சமூலம் ,70.

கொல்லான் உடன்பாடன் கொல்வார் இனஞ்சேரான்
புல்லான் பிறர்பால் புலால்மயங்கல் – செல்லான்
குடிப்படுத்துக் கூழ் ஈந்தான் கொல்யானை ஏறி
அடிப்படுப்பான் மண்ணாண்டு அரசு.
ஏலாதி. 42

கொல்லாமல் கொன்றதைத் தின்னாமல்
– பட்டினத்தார்

கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்க
எல்லார்க்கும் சொல்லுவது என் இச்சை பராபரமே
-தாயுமானவர்.

உயிர்கள் ஓம்புமின் ஊன்விழைந்து உண்ணன் மின்
செயிர்கள் நீங்குமின் செற்றம் இகழ்ந்து ஓரீஇக்
கதிகள் நல்லூருக் கண்டனர் கைதொழு
மதிகள் போல மறுவிலர் தோன்றுவீர்
-வளையாபதி.

கொன்றூ நுகரும் கொடுமையை உள்நினைந்து
அன்றே ஒழிய விடுவானேல் – என்றும்
இடுக்கண் எனவுண்டோ இல்வாழ்க்கைக் குள்ளே
படுத்தானாம் தன்னைத் தவம்
– அறநெறிச்சாரம் 63

புலையும் கொலையும் களவும் தவிர்.
– கொன்றை வேந்தன்

ஊன் ஊண் துறமின் ! உயிர்கொலை நீங்குமின்
– சிலப்பதிகாரம்

தன்னுயிர் தான் பரிந்து ஓம்புமாறு போல்
மன்னுயிர் வைகலும் ஓம்பி வாழுமேல்
இன்னுயிர்க்கு இறைவனாய் இன்ப மூர்த்தியாய்ப்
பொன்னுயி ராய்ப்பிறந்து உயர்ந்து போகுமே..
– சீவக சிந்தாமணி

இவ்வுலகின் எவ்வுயிரும் எம்முயிரின் நேர் என்று
அவ்வியம் அகன்று இருள் சுரந்து உயிர் வளர்க்கும்
செவ்விமையின் நின்றவர் திருந்தடி பணிந்து உண்
எவ்வினை கடந்துயிர் விளங்குவிறல் வேலோய்
– யசோதர காவியம்

யசோதர காவியத்தில் கோழியைக் கொல்வது பாவம் என்று எடுத்தோதப்படுகிறது.
யசோதரன் அல்லல் தீர கோழியைப் பலியிட முனையும் போது, சிந்தனையில் இம்சை
எண்ணம் இருப்பதே பாவம் என்று தாய் யசோதமதி அறிவுரை கூறுவதை பின்வரும்
பாடலில் காணலாம்.

இன்னுமீது ஐய கேடக
யசோதமதி தந்தை யாய
மன்னவன் அன்னையோடு
மாவினிற் கோழி தன்னைக்
கொன்னவில் வாளில் கொன்ற
கொடுமையிற் கடிய துன்பம்
பின்னவர் பிறவி தோறும்
பெற்றன பேச லாமோ

தன்னுடைய வழி பயணத்தில் புலால் உண்ணாமையையும் கொல்லாமையும் போதித்த
சீவகனை சிந்தாமணியில் திருத்தக்க தேவர் காட்டுகிறார்.
மேரு மந்திர புராணம் என்ற இன்னொரு காப்பியமும் இந்தக் கொல்லாமைக் கோட்பாட்டைப் போதிக்கிறது.
கொல்லாமை விரத்ததைப் பின்பற்றாவிட்டால் கொடு நரகு கிடைக்கும் என்று அச்சுறுத்துகிறது.

கொல்லாமை தவிர்த்தல் என்பது தமிழர்களிடையே தொன்று தொட்டு வந்த மரபாகும்.
திருவள்ளுவர் உள்ளிட்ட அனைவரும் போரும்கொலையும் , கொல்லாமையும் தவிர்க்க
கோரினார்கள். அதற்கு மகுடம் வைத்தார் போல் வள்ளலார் கொலை, புலால் ஒழித்தல்
கொள்கையில் தலையாகக் கொண்டவர்.

உயிர் எல்லாம் பொதுவில் உளம்பட நோக்கவேண்டுமாயின் அதற்கு அடிப்படையாக
அமையவேண்டியது அன்பும் , கருணையும் ஆகும். அன்பை மையமாக வைத்து சமூகத்தில்
ஒழுகியவர்கள் தமிழ்ச் சமுதாயத்தில் ஏராளம்.

புலால் மறுத்தலை வலியுறுத்தினார். எவ்வுயிரையும் தம் உயிர்போல்
“அன்பு செய்யவேண்டும். இப்படிச் செய்வோர் உள்ளத்திலேதான் இறைவன் தங்கி உறைவன் ”
என்று தம் கருத்துக்களை வல்லளார் வலியுறுத்தி வந்தார்.
தம் கண்ட இந்த நெறிக்கு ‘சமரச சுத்த சன்மார்க்கம்’ என்று பெயா¢ட்டார்.

· நோன் பென் பதுவே
· கொன்று தின்னாமை

கொல்லாமை மேற்கொண்டொழுவான்
வாழ்நாள் மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று
– என்கிறது குறள்.
ஆனால், நாம் ஊனை தின்று ஊனை வளர்க்கிறோம்.

ஊனை சுருக்கி உள்ளளியையினை வளர்க்க மறந்து, மறைத்து வருகிறோம்.

இதனை நாம் சிந்திக்கதக்கது.

ToTop