ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

மகளிர் மறுமலர்ச்சி

எழுத்திலக்கியத்தில் , சமூகவியல் கண்ணேட்டத்தில் தமிழ்ப் பெண்கள் இன்று மேலான பார்வையில் தான் உள்ளார்கள். தமிழ்ப் பெண்கள் காலந்தோறும் வாழ்ந்து வந்த நிலையினைக் கணிக்கும் போது இன்றைய நிலையில் மேலோட்டத்தில் உள்ளது. ஆயினும், தமிழ்ப் பெண்களின் மறுமலர்ச்சி என்னும் போது , ஏற்கனவே ஒரு மலர்ச்சி காலமிருந்தது. அக்காலம் சங்க காலம்.
இடைக் காலத்தை நோக்க , சங்க காலப் பெண்கள் உரிமை பெற்றிருந்தனர். இக்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் பெண்களுக்கு இருக்கும் பல்வேறு வாய்ப்புக்கள், வசதிகள், உரிமைகள் பழங்காலத்தில் இல்லை என்றாலும் சங்க காலச் சமூகம் , தாய்வழிச் சமூக மரபு மிகத் தொன்மையாகப் போய்விட்ட ஆணாதிக்க சமூகமாக விளங்கினாலும் , குடும்பம் என்ற பாங்கில் பெண் அடிமை போல நடத்தப்பட்டார் என்றோ, அடக்கு முறைக்கு ஆளானாள் என்று இல்லை.

தாய்வழிச் சமூக மரபில் பெண்களுக்கிருந்த உரிமை ‘ உடன்போக்கு மணம் ‘ என்னும் பழக்கத்தில் தொடர்ந்திருக்கிறது. ஏற்பாட்டு திருமணத்திற்கும் எதிரான பெண்களின் காதல் மண உரிமையாக இது விளங்கியது.
ஆண்களுக்கு இணையான இலக்கியப் புலமை பெண்களுக்கு இருந்தும் அந்தப் புலமைக்கு சமூக மதிப்பு இருந்தது என்பதும் தமிழ்ப் பெண்களின் வரலாற்றில் உள்ள செய்தியாகும்.

உப்பு , மீன், மோர் , பூ விற்றல் போன்ற சிறு தொழில், கலைத்திறன் காட்டுபவர்களாகவும்
[ விறலியர்] பெண்கள் சமூகத்தில் இருந்துள்ளனர்.

நீராடல், வண்டல் அயர்தல், ஊசல், பந்தாடல், ஓரையாடல் போன்ற பல்வேறு
விளையாட்டுகளிலும் பெண்கள் ஈடுபட்டிருந்தனர் என்னும் பொழுது , பெண்கள் மகிழ்வு, சமூகம் ஒத்துக்கொண்ட கருத்து என புலப்படுகிறது. பெண்கள் வீட்டின் புறத்தே சென்று விளையாடும் உரிமை பெற்றிருந்தனர். போர்க்கள வீரம் போற்றும் மனத்திண்மையுடைய மகளிரை புறநானூற்றில் காணலாம்.

இவையெல்லாம் பெண்களுக்கு சமூக மதிப்புகள். மற்றபடி சங்க காலப் பெண்கள், அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு இவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக தள்ளப்பட்டார்கள்.
கணவர் இறந்தால் , கட்டாயத் துயர்ச்சூழலுக்கு உள்பட்டார்கள். குலமகளீர் , பதி இல்லாதர்
[ பரத்தையர்] என பிரித்துக் காட்டும்போது – காணும்போது பெண்ணடிமை மனோபாவத்தின் உருவாக்கம் காணப்படுகிறது.

பெண்களின் ஒப்பனையும் கூட ஆண்களுக்காவே இருந்திருக்கிறது. அதனால்தான், ஆ ண்களின் மரணபிரிவிலும் அணி நீக்கம் நிகழ்ந்துள்ளது. போர் , பரத்தன்மை, பொருள்தேவை காரணமாக, ஆடவர் அடிக்கடி பிரிந்த சூழலில் , மகளீர் பெரிதும் துயருற்றிருந்தனர்.

இடைக்காலத்தில் காப்பியங்கள் , பக்தி இலக்கியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியம் இவற்றின் வழியே பெண்களின் சித்தரிப்பைக் காணும்போது, இவர்கள் பெரிய மாறுதலை அடைந்தாக கூற இயலாது.

அச்சம், நாணம், மடம், கோட்பாடுகள் தொடர்கிறது. ஒரு கணவன் முறை நீடிக்கிறது. கலைகளைப் பயிலுதல், பெண்கல்வி, உயர்குடிமகளிர்களுக்கும் இருக்கிறது. பெண்கள்துறவறம் ஏற்கும் சூழல் உருவாகியுள்ளது. இல்லறத்திலும், துறவத்திலும் பெண்களின் பக்தி நெறிக்கு சமூக மதிப்பு ஏற்பட்டுள்ளது.

கண்ணகி சக மாதவி இன்னும் ஒரு படி மேலே போய் கோவலன் இறந்ததும்
துறவு பூண்டு தன் காதலையும் கற்பையும் நிருபித்தாள்.
மணிமேகலை பொளத்த பிக்குணியாகுகிறாள்.
கோப்பெருந்தேவி உயிர் துறந்தாள்.
பெரிய புராணம் இருபத்தியெட்டு பெண்களைப்பற்றி குறிப்பாக சொல்கிறது.
அதில் 21 பெண்கள் நாயன்மார்களின் மனைவி.
புனிதவதி என்னும் காரைக்கால் அம்மையார், இசை ஞானியர், மங்கையர்கரசி
ஆகியோர் நாயன்மார்களுக்கு இணையாக நிலைப் பெற்றவர்கள்.

உணர்வு பொங்க, பக்தி இலக்கியம் பாடிய ஆ ண்டாளைத் தவிர , சிறந்த பெண் இலக்கியப் படைப்புகளை காணமுடியவில்லை. கந்தியார் என்றொரு பெண்பாற் புலவர்இருந்ததாக இலக்கிய வரலாறு கூறுகிறது. இக்கால கட்டத்தின் இறுதியில் பிற்கால ஒளவையார் குறிப்பிடத்தக்கவர்.

ஆ ங்கிலேயர் நுழைவு, ஆ ங்கிலேயர் ஆ ட்சி தமிழ்பெண்களின் வாழ்க்கையில்,
வாழ்வியல் அமைப்பில் மிகப் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. அவற்றில் ஒன்று பரவலாக ஏற்படுத்திய பெண் கல்வி. பெண் கல்வி , சமூக அறிவின் ஒளி விளக்காக அமைந்தது. அவலத்தில் சிக்குண்டு தவித்த பெண்களுக்கு சமூக விடுதலை கிடைக்கத் தொடங்கியது.

கல்வி அறிவால் ‘ மடம் ‘ நீங்கப் பெற்றவுடன் ‘ அச்சம் ‘ அகன்றது. தேவையற்ற
‘ நாணம் ‘ நீங்கப் பெற்றது. பெண்களின் சிந்தனை , சமூக பங்களிப்பது பார்வை
பெண் ணுக்கு நிகரான அறிவுடையவள் , திறனுடையவள் என்பதான மதிப்பீடுகளும் உருவாக தொடங்கியது.
தமிழகத்தில் தமிழ்ப்பெண்களின் மறுமலர்ச்சி பலநிலைகளிலும் வெளிப்படிருக்கிறது. அரசாளும் தகுதியும் வல்லமையும், அரசின் தலைமைப் பொறுப்பேறவும் முடிந்திருக்கிறது.
பெண்கள் காவல் துறையில் உயர் அதிகாரிகளாகப் பணிபுரிகின்றனர். கராத்தே போன்றவீர விளையாட்டுகளில் பயிற்சி பெறுகிறார்கள். விளையாட்டு வீராங்கனையாகத் திகழ்கின்றனர்
பல்வேறு கலைத்துறைகளிலும் உலகளாவிய புகழ் பெறுகிறார்கள். பெண்கள் உரக்க பேச கூசும் காலம் போய் , மாறி இன்று நாடெங்கும் மேடையேறிப் பேசும் சிறந்த பெண் பேச்சாளர்கள் உருவாகி வருகிறார்கள்.

பெண்கள் தங்கள் உரிமைகளைப் போராடிப் பெறும் வழியில் ஊர்வலம் சென்று தங்கள் தேவைகளை உரக்க முழக்கமிடுகின்றனர். இலக்கியத்துறையில் நூற்றுக்கணக்கான, பெண்கள் , கவிதை , கதை புனையும் சிறந்த படைப்பிலக்கியவாதிகளாக விளங்குகினறனர்.

பெண்கள் , பெண்ணுரிமை சிந்னையில் தாங்களே பத்திரிகைகள் நடத்துகின்றனர். ஆண்களுக்கு இணையாக விமானம் , வாகனங்கள் ஓட்டுகிறார்கள்.

சமூகத்தின் பல்வேறு தளங்களில் ஆ ண்களுக்கு இணையாகப் பணி புரிகிறார்கள். பொருளாதார வளர்ச்சி காரணமாகவும், பணிவாய்ப்புகாரணமாகவும் வணிகம்,
பெரு வணிகம் இவற்றிலும் குறிப்பிடும் தக்க அளவு விளங்குகிறார்கள்.

மறுமணம் எளிதாக அமையவில்லை என்றாலும் , விதவைகளின் தனிக்கோலம்
மறையத்தொடங்கி இருக்கிறது. காதல் மணம் ,கலப்பு மணம் சட்டரீதியாகவும் ,
சமூக ரீதியாகவும் ஒப்புதல் பெற்றுள்ளது.

கற்புக் கோட்பாட்டை ஒரு வலுவான கோடரியாகக் கொண்டு ,பெண்களை காலம் காலமாக வதைத்து வந்த பண்பாட்டுச் சீரழிவு மாறுகிறது. அறிஞர் அண்ணா ,
ஈ. வே.ரா.பெரியாரின் பெண்ணிய சிந்தைகள் மெல்லப் பரவுகிறது. பெண்கள் சொத்துரிமை பெறுகிறார்கள்.

இன்றைய இச்சுழல் பெண்களுக்கு இத்தைய சிறப்புக் கூறுகள் காணப்பட்டாலும், வீட்டுக்கூட்டிலிருந்து விடுபட்டு வெளிப்பட்டு வந்தாலும், சமூக பரப்பில் சிறகடித்துப் பறப்பதால் பெண்களுக்கு சில சேதனைகளும் , வேதனைகளும் ஏற்பட்டுள்ளன.

‘ முதிர்கன்னியர் ‘ என்று திருமணமாகமலே வயது முதிர்ந்து வரும் பெண்கள் இன்று அதிகமாக உள்ளனர். வரதட்சணை கொடுமை , படித்து பணி புரிவதால் வயதாகிவிடல், பெண்ணின் வருமானம் குடுத்தாருக்கு தேவைப்படல் போன்ற காரணங்களால் முதிர் கன்னியர் பெருக்கம் அதிகமாக உள்ளது.

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் இடர்கள் ஏற்படுகினறன. பாலியல் வன்முறை பரவலாக உள்ளது. கற்புக் கோட்பாட்டின் நெகிழ்ச்சியால் , பெண்கள் பரத்தை தொழிலில் விரும்பி ஈடுபடுவதும் நிகழ்கிறது. சிறுமியர் கூடப் பரத்தமைத் தொழிலுக்குக் கட்டாயமாகக் கட்டாயமாக உட்படுத்தப்படும் அவலமும் காணப்படுகிறது.

வீட்டுப்பணி , அலுவகப்பணி என்பதாகப் பெண்களுக்கு இரட்டை பணிச்சுமை
ஏற்படுகிறது. இவைகள் எல்லாம் நாகரீக , பொருளாதார புதிய சிக்கல்! இத்தகைய
சிதைவுகள் தென்பட்டாலும், ஆக்கங்கள் பலவாகத் தென்படுகின்றன. மன நிலையிலும்
வாழ்வமைப்பிலும் பெருத்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பாதிப்புகளும், சேதங்களும் ஏற்படும் பொழுது இன்று அவர்கள் அமைதியாக இருந்ததில்லை. போராடும் வல்லமை பெற்றிருக்கிறார்கள். சொத்துரிமையில் சமபங்கு, வரதட்சணைத் தடுப்புச் சட்டம், கற்பழிப்புச் சட்ட விதிகள், பெண்களுக்கு தனிக்காவல் நிலையங்கள் போன்றவைகள் சட்ட ரீதியாக ஏற்பட்டுள்ளன.

இவைகளின் பயன்பாடு, பெண்களின் விழிப்புணர்வுக்கேற்ப மேலும் பெருகும்.

உலக அளவில் தமிழ்ப்பெண்கள் தங்கள்திறனைக்காட்டத்
தொடங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ToTop