ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

மறைந்த தமிழ் நூல்கள்

தலைச்சங்கம் இடைச் சங்க காலத்தில், பாண்டி நாட்டின் தென் பகுதியில் இருந்த
சில நிலப்பகுதிகள் பெரிய கடற்கோள்களினால் மறைந்து விட்டன. அப்போது அப்பகுதியில்
இருந்த ஏட்டுச் சுவடிகளும் மறைந்து போயின.ஏரண முருவம் யோகம் இசை கணக் கிரதம் சாலம்
தாரண மறமே சந்தம் தம்பநீர் நிலமு லோகம்
மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணம் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரு மாள .. ..

என்னும் செய்யுள், கடல் பெருக்கெடுத்தப் பாண்டிய நாட்டின் பகுதியை அழித்த போது,
முதற்சங்க இடைச்சங்க நூல்கள் மறைந்து போனதைக் கூறுகிறது.
வேறு காரணங்களால் சில நூல்கள் மறைந்தன. அக்காலத்தில் அச்சுப் புத்தகங்கள் இல்லாத
முக்கிய காரணமாகும். அச்சுப் புத்தகங்கள் அக்காலத்தில் இருந்திருந்தால், அப்புத்தகங்கள்
பிரதிகள் பலரிடம் பல ஊர்களில் இருந்திருக்கும். அச்சுப் புத்தகங்கள் இல்லாத
அக்காலத்தில் நூலின் பிரதிகள், மிகச் சிலவே இருந்தன. அச் சில பிரதிகள் நீர், நெருப்பு,
சிதல் முதலிய காரணங்களால் மறைந்தும், அழிந்தும் போயின். இவ்வாறு மறைந்த போன
நூல்கள் பல.
சமயப் பகை காரணமாகவும் பல ஏட்டுச் சுவடிகள் மறைந்து போயின. தமிழ் நாட்டிலே
முற்காலத்தில் செழித்துப் பரவியிருந்த பொளத்த ஜைன மதங்கள் பல சமய நூல்களைக்
கொண்டிருந்தன. அந்த மதங்கள் பிற்காலத்தில் குன்றிப்போய் மறைந்தபோது அச்
சமயங்கள் இருந்த நூல்களும் மறைந்து போயின. ஆதரிப்போர் இன்றி பல நூல்கள்
காணாமல் போயின. அம்மதத்தவர் அல்லாத ஏனைய மதத்தவர், சமயப்பகை காரணத்தால்
அந்த வேறு மத நூல்களைப் போற்றாமல் விட்டனர்.

குண்டலகேசி விம்பசாரகதை, சித்தாந்தத் தொகை, திருப்பதிகம், புத்த ஜாதகக் கதைகள்
முதலிய பொளத்த நூல்களும், ஜைன ராமயணம், வளையாபதி, கிளிவிருத்தம், எலி
விருத்தம், சாந்தி புராணம், மல்லிநாதர் புராணம், நாரத சரிதை, பிங்கல கதை, வாமன அக்தை,
பிங்கல்கேசி, அஞ்சன கேசி, காலகேசி, தத்துவ தரிசனம் முதலிய ஜைன சமய நூல்களும்
இவ்வாறு மறைந்து போன நூலகள் என சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.
சமயப் பகைமையினால் சில பல நூல்கள் அழிந்தன. மூடக் கொள்கையால் – மூட
நம்பிக்கையால் பல நூல்கள் அழிந்தன். பதினெட்டம் பெருக்கு, கலைமகள் விழாவாகிய
சரஸ்வதி பூஜை, மாசிமகம் போன்ற காலங்களில் ஏட்டுச் சுவடிகளைக் கடலிலும் ஆற்று
வெள்ளத்திலும் போடுகிற வழக்கம் இருந்தது. பிற்காலத்தில் ஏற்பட்ட இந்த மூட பழக்கம்
சமீப காலம் வரையிலும் இருந்தது.
அதிவீரராம பாண்டியனின் புத்தகசாலையில் இருந்த ஏட்டுச் சுவடிகள், பிற்காலத்தில்
கோவில் அதிகாரிகளால் தீயில் இட்டுக் கொளுத்தப்பட்டனவாம்!

இந்தியா சுகந்திரம் பெற்ற சமயம் நடந்த உண்மை நிகழ்ச்சி.
தமிழ் நாட்டில் ஒரு ஜில்லாவுக்கு கலெக்டராக இருந்த ஒருஆங்கில அதிகாரிக்கு ஏட்டுச்
சுவடியின் மீதிருந்த ஆர்வத்தால் பல அரிய ஏட்டுச் சுவடிகளை சேகரித்து வைத்துள்ளார்.
அதில் பலத் தரப்பட்ட விஷயங்கள் இருந்திருக்கிறது.
இந்நிலையில் இந்தியா சுகந்திரம் பெறவே, தனக்கு அடுத்த வந்த இந்திய அதிகாரி இந்த
ஓட்டுச் சுவடிகளைக் கொடுத்து அதில் அடங்கி இருக்கும் அரிய செய்திகளையும் கூறி
பத்திரமாக பாதுக்க வேண்டி கொடுத்துள்ளார். அந்த இந்திய அதிகாரியும் அதனை
வாங்கி வைத்துக் கொண்டதோடு சரி.
சில காலத்திற்குப் பின் அந்த அதிகாரி மாற்றலாகவே, வேறு ஒரு அதிகாரி வந்தார்.
வந்த அதிகாரி இந்த ஏட்டுச் சுவடிகளைப் பார்த்து என்ன இந்த குப்பை இங்கிருக்கிறது
என்று கூறி ,பணியாளை அழைத்து அங்கிருந்து அப்புறபடுத்த சொல்லியுள்ளார்.
பணியாள் அந்த எட்டுச் சுவடிகளை தன் குடிசைக்கு எடுத்து சென்று பல காலம் அடுப்பு
எரித்துள்ளான்.

மதுரைத் தமிழ்ச் சங்கப் புத்தக சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஏட்டு சுவடிகள்
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு தீப்பிடித்து எரிந்து போயின. அதில் அச்சில் வராத
பல எட்டுச் சுவடிகளும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. திருக்குறளின் பத்து உரைகளும்
அதில் இருந்தாகக் கூறப்படுகிறது. வேறு சில அருமையான நூல்களும் இருந்தனவாம்.
நமது நாட்டுக்குச் சாபக்கேடாக இயற்கையில் அமைந்த சிதல் என்னும் பூச்சிகள்,
ஏட்டுச் சுவடிகளுக்கும் பெரும் பகையாக அமைந்தன. இப்படி அழிந்த சுவடிகளுக்கு
கணக்கில்லை. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூன்று சிவனடியார்கள் இயற்றிய
தேவாரப் பதிகங்களில் நூறாயிரம் பதிகங்களுக்கு மேல் செல்லரித்து போயின. இப்போதுள்ள
தேவராப் பாடல்கள் அவற்றில் எஞ்சி நின்ற சிறு பகுதியே.
தமிழரல்லாத வேற்றரசர்கள், தமிழ் நாட்டில் போர் செய்து அரசைக் கைப்பற்றிய
காலத்தில் தமிழ் நூல் நிலையங்கள் கவனிக்கபடாமல் மறைந்து போயின. விஜயநகர
அரசால் அனுப்பபட்டு, தமிழ் நாட்டைப் பிற்காலத்தில் அரசாண்ட நாயக்க மன்னர்கள்
பாண்டிய நாட்டையும் சோழ நாட்டையும் அரசாண்டனர். அவர்கள், சமயங்களையும்
சமயப் புலவர்களையும் போற்றினார்களே தவிர தமிழ்மொழிப் புலவரைப் போற்றவில்லை.
பழைய தமிழ் நூல்கள் நிலையங்களையும் போற்றவில்லை.

இலங்கையில், யாழ்பாணத்தை ஆரியச் சக்கரவர்த்திகள் என்னும் பெயருடன் அரசாண்ட
மன்னர்கள் தமிழர்கள். அவர்கள் பாண்டிய மன்னரின் தொடர்புடைவர்கள். யாழ்பாணத்தில்
அவ்வரசர்கள் தமிழ்ச்சங்கங்கள் வைத்து தமிழ் வளர்த்தவர்கள். சரஸ்வதி மாகலயம் என்னும்
புத்தச சாலையையும் வைத்திருந்தார்கள். பிற்காலத்தில், சிங்கள மன்னன் மன்னர்களுடன்
போர் செய்தபோது, யாழ்ப்பாணத்திலிருந்து இந்தப் புத்தகசாலையை
அழித்துவிட்டான். அவன் சிங்களவன். கையால் தமிழ் நூல்களை அழிப்பது பற்றி அவன்
கவலைபடவில்லை.

சேரநாடு பிற்காலத்தில், கி பி 16 -நூற்றாண்டில் மலையாள மொழியுள்ள நாடக மாற்றம்
பெற்றது. ஆகவே சேர அரசர்களும் மலையாள மொழியைப் போற்றினார்கள். தமிழ்
நூல்களைப்பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. சேர நாட்டு தமிழ் நூலகளும் போற்றுவார்
அற்று மெல்ல மெல்ல மறைந்து போயின.
தமிழ் நாட்டில் கி.பி.17 ,18 -ம் நூற்றாண்டுகளில் அரசியல் நிலை மிக மோசமாய்
விட்டது.மத ஒற்றுமை இல்லாத வேற்று மதக்காரர்களும் நமது நாட்டிலே வந்து அரசியல்
குழப்பங்களையும் போர்களையும் உண்டாக்கி நாட்டின் அமைதியைக் கெடுத்துப் பாதுகாப்பை அழித்தனர். பிரெஞ்சுக் கிழக்கிந்திய கம்பெனியாரும், ஆங்கில கிழக்கிந்தியக்
கம்பெனியாரும், முகம்மதியர்களும், மராட்டியரும் அந்த நூற்றாண்டில் தமிழ் நாட்டில்
நிகழ்த்திய கலகங்கள், கொள்ளையடிப்புகள், போர்களாளும் பெரும் பான்மையான பழைய
நூல்கள் அழிந்து போயின.

உயிருக்கும், பொருளுக்கும் பாதுகாப்பில்லாமல் இருந்த மக்களுக்கு, நுல்களைப் போற்றி
வைப்பதில் கவனமில்லை. சமயப் பகைமையாலும், சிதல்களுக்கும் தப்பியிருந்த எஞ்சிய
நூலகள் அரசியல் குழப்பங்களால் பெரிதும் மறைந்துவிட்டன.
இவ்வாறு சில முக்கிய காரணங்களால் பல தமிழ் நூல்கள் மறைந்து போயின. எத்தனை
நூல்கள் மறைந்து போயின என்று கணக்கிட இயலவில்லை. உரையாசிரியர்களும் ,
நூலாசிரியர்களும் சாசனங்களும் குறிப்பிட்டுள்ள மறைந்துபோன நூல்களைப் பற்றித்தான்
தெரிந்துக் கொள்ள முடியும். குறிப்பிடாமல் மறைந்துபோன நூல்களைப் பற்றி நாம்
அறிந்துக் கொள்ள வழியில்லை.
இன்றும் கூட சில நூல்கள் ஏட்டுப் பிரதிகளாகவே உள்ளன. அவைகள் விரைவில் அச்சிட்டு
வெளிப்படுத்தாவிட்டால் அவையும் மறைந்துவிடும் என்பதில் ஐயமில்லை.

ToTop