ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

நாம் எங்கே போகின்றோம்?

உலகில் மிகத் தொன்மையான இந்து மதம்; காலாதி காலமாக நமது முன்னேர்கள், ஆன்றோர்கள், சமயக் குறவர்கள் கட்டிக்காத்து வந்த இந்து மதம்; இன்று மனிதனின் விஞ்ஞானத்தின் ஆரம்பத்திற்கு, அன்றே அடித்தளம் வகுத்த இந்து மதம்; எம்மதமும் சம்மதம் என்ற உயரிய கோட்பாடுடன் கடவுள் ஒருவனே என்று உலகுக்கு இடித்துரைத்த இந்து மதம்; மனிதனை மனிதப் பண்புடன் வாழ வழிகாட்டிய இந்து மதம்; இன்று எங்கே போய்க் கொண்டிருக்கிறது?..நாம் வளர்ச்சி கண்டு கொண்டிருக்கிறோமா?…. அல்லது வீழ்ச்சியின் ஆரம்பத்திற்கு அடித்தளம் இட்டு வகுத்துக் கொண்டிருக்கிறோமா?… நமக்கே விளங்காத நிலையில் உள்ளோம் எனபதுதான் நிசர்த்தனமான உண்மை.

நாம் பாடப் புத்தகங்களினூடாக படித்து தெரிந்த சமய உண்மைகள், நமது தாய், தந்தை, பாட்டன், பாட்டி வழியாக செவி வழி புகுந்த சமயக் கோட்பாடு எந்த அளவு நம்மால் கடைப்பிடிக்கப்படுகின்றன…?

கோட்பாட்டுரீதியாக இருந்த கொள்கைகள் நடைமுறையாக எவ்வளவுக்கு முரண்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நிதர்சனமாக கண்கூடாக கண்டு கொண்டிருக்கிறோம். இதன்
பாதிப்புக்களையும், அதற்கு நாம் எவ்வாறு துணைபுரிகின்றோம் என்பதையும், இதனை
நிவர்த்திக்கும் வழிவகைகளையும் நாம் ஆராய முற்படவேண்டும் என்பதே நமது அ வா.

நம் நாட்டை பொறுத்த வரை கோவில்களில் சமய வழிபாட்டு முறைகள், காலம் காலமாக
கடைப்பிடித்து வந்த பல பாரம்பரிய முறைகளிலிருந்து விலக ஆரம்பிப்பதை நம்மால் காண
முடிகிறது. பல அடிப்படை பண்பாட்டு, கலாச்சார நெறிகள் கண்கூடாக மீறப்படுவதை நாம்
பார்த்துக் கொண்டுத்தான் இருக்கிறோம். இதனையும் மீறி மனதை ஒரு முகப்படுத்தி
வணங்கத்தான் முடிகிறதா…?

மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உண்டு என்பதை எல்லா மதங்களும்- அம்மதங்களை சார்ந்தவர்களும் ஏற்றுக்கொண்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதைத்தான் கடவுள் என்கிறோம். மனிதனை நல்வழிப்படுத்தி இந்த மானிட வாழ்வை பயனுள்ளதாக்குவதற்கு வழிகாட்டியாக, ஊடகமாக அமைந்துள்ளது நமது சமயங்கள்.
இந்தவகையில் நாம் எத்தனை பேர் சமய ஒழுக்கங்களுடன் வாழ்கிறோம் என்று ஆராய்வதை விட
இளம் சந்ததியினரும் , இளையருக்கும் மார்க்க போதனைகளை வழங்கி நலவழிப்படுத்த
இந்த சமூகம் அதாவது இந்து மதத்தை முன்னெடுப்பதாக கூறிக்கொள்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஆராய்வதே சிறந்தது எனலாம்.

இன்று நாட்டில் காணப்படும் சில பிரசித்தி பெற்ற கோவில்கள் தொடக்கம் ஏனைய
கோவில்கள் வரை எவ்வாறு நம் பாரம்பரிய செயற்பாடுகளிலிருந்து விலகிச் செல்கிறது என்பதை காணமுடிகிறது. உதாரணமாக மனதை இறைவன் பால் ஈர்க்க வைக்கும் மங்கள
இசையில் முக்கியமானது நாதஸ்வர மேளங்களே. இறைவனே இசைக்கு அடிமையானவன்
தான். அவ்வகையில் அமைந்த இசைக்கருவிகளின் பங்களிப்பு இன்று எந்தளவுக்கு இருக்கிறது? இறைவனின் இசைபாட வேண்டிய இவைகள் சினிமா பாடல்களை கோவில்களில் ஒலிபரப்பி வருகிறார்கள். நாம் ஒன்றும் ஞானிகளோ சித்தர்களோ அல்ல.
இந்த ஒலிகளை பொருட்படுத்தாமல் வணங்கிக் கொடிருப்பதற்கு. இந்த சந்தர்ப்பங்களில்
இளவட்டங்கள் வணக்க ஸ்தலங்களிலிருந்து மனதை திரைப்பட பாடல் காட்சிகளுக்கு
அவன் மனம் நாடுகிறது.

நாட்டில் சில பிரசித்தி பெற்ற நகரங்களில் இடம்பெறும் தேர்திருவிழாக்கள், மற்றும்
ஏனைய சமய விழாக்களிலும் இந்துமத ஒழுக்க நெறி மீறப்பட்டு கேலிக்கூத்தாகும் செயலை
காண முடிகிறது. பெயருக்கு ஒன்றிரண்டு நாதஸ்வர மேளங்களை தவிர மற்றும்படி துள்ளிசையை உருவாகும் இசைகளுடன் தம்மை மறந்து துள்ளுகின்றது ஒரு இளையர் கூட்டம்.
” அரோகரா ” என்ற ஓர் புனிதமான சொல் அங்கே எத்தனை மெட்டுக்களுடன் தடம் புரண்டு கொண்டிருக்கிறது. பாரம்பரியம். பண்பாடு என்று பேசும் நமக்கு இது தேவைதானா?

வேறு சிலமதத் தலங்களுக்கு வேற்று மதத்தவர்கள் செல்ல முடியாது. ஆனால் நாம் எம்மதமும் சமமதம் என்ற நிலையில் நமது சமயத்தலத்தில் எல்லோரையும் அனுமதிக்கிறோம். பல உல்லாச பிரயாணிகளின் காட்சிக் கூடங்களாக கோயில்கள் மாறி வருவதை நாம் காண முடிகிறது. பூஜை நடக்கிறதோ இல்லையோ, அந்த அரைகுறை ஆடைகளுடன் நிற்கும் உல்லாசப் பிரயாணிகளுடன் நாம் கும்பிட வேண்டிய நிலை! வேற்று மொழி ஒன்றின் கொள்கை விளக்கத்திற்கு மத்தியில் நாம் தேவார, திருவாசங்களை பாடவேண்டிய நிலை!
நமது மதம் கட்டுப்பாடில்லாத மதம்தான். யாரும் வரலாம், போகலாம். அதற்காக நமது சுய
கட்டுப்பாட்டை மீற வைக்கும் இந்த கலாசாரச் சீரழிவுகளை நாம் அனுமதிக்க வேண்டுமா?
ஓர் அடைதியான சூழலில் தம் குறைகளை இறைவனிடம் முறையிட வந்த பக்தர்களுக்கு இது ஒரு பெரிய இடையூறுகளாகும்.

அன்று சமய குரவர்களாலும், ஞானிகளாலும், சித்தர்களாலும் மட்டுமன்றி சாதாரண சமயத் தலைவர்களினாலும் உலகாவிய ரீதியில் முன்னெடுக்கபட்ட இந்து மதத்திற்கு இன்றைய சமயத் தலைவர்கள், ஆலய குருக்களினாலும் என்ன , எவ்வாறான பங்களிப்பு
இருக்கிறது? அன்று சிக்காக்கோ நகரில் இந்து மதத்தின் பெருமைகளை மிக இலகுவான
வழியில் எடுத்துரைத்து, முதல் தடவையாக மற்றைய மதத்தவர்களின் மனங்களில் ஓர் நிலையான இடத்தை பிடித்துக் கொண்ட விவேகானந்தரின் திறமை இன்று எந்த மதவாதியிடம் இருக்கிறது.

ToTop