ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

ஆதிசங்கரர் அருளிய பஜகோவிந்தம்

வீடுபேறு பேறுவதற்கு முதற்படியாக விளங்குவது பற்றினை அறுத்து யான் எனது என்ற
இருவகை உலகைப்பற்றை, விளக்கி அதனின்று வெளிவருவது. சொல், உணர்ச்சி, கருத்துக்
கோவை எல்லாம் சத்தியத்தை மூடி மறைக்கும் போர்வையாகும். மனித மனத்தை அருள்வழிப்
படுத்தி அவற்றிற்கு உரிய பக்குவமடையும் நெறிகளுக்கு அழைத்துச் செல்லும் ஆன்மீக
காவியங்கள் நிறைய உண்டு.அதில் ”ஆதி சங்கரர் ” அருளிய ‘ பஜகோவிந்தம் ‘ ஒன்று.
அதிலிருந்து சில பாடல்களை தமிழில் காண்போம்.

காமம்:

· இள மங்கையின் கனதனங்களையும் அவர்களது
· இடையையும் கண்டு பித்தம் கொள்ள வைக்கும்
· மோகத்துக்கு இரையாகதே !
· மாமிசத்தின் – கொழுப்பின்… ஓர் உருவம் இது.
· இவ்வாறு மனத்தினுள் மீண்டும் மீண்டும் நன்கு சிந்தனை செய்.

தோகை எனும் கார்குழலைப் பாடுகிற நெஞ்சமதில்
துள்ளிவரும் ஆசை கோடி!

துள்ளிவரும் கட்டழகை அள்ளிவிட முந்துகிற
சொல்லழகின் ஓசை கோடி!

தேகமதில் மன்மதனின் பீடமதைக் கண்டு சுவை
தேடுகிற காலை கோடி!

செவ்விளநீர் என்று சிலர் தேன்குடங்கள் என்று சிலர்
செப்புற பாடல் கோடி!

தாகமுள காலமதில் தாவிவரும் ஆசைவெறி
தாகங்காமல் வந்த சேதி!

தாமிவைகள் சிந்தித்தால் வெண்கொழுப்பும்
செங்கறியும் தானென்பதாகும் உணர் நீர் !

நீர் மேல் குமிழி

o தாமரை இலையின் மீது தளிர் நடை போடும் தண்ணீர்த்துளி
o மிகமிக நிலையற்ற வாழ்வு நிகழ்த்துகிறது. அதே போன்றுதான்
o வாழ்க்கை என்றும் நிலையற்றது. இந்த மானிட வாழ்வு சையினாலும்,
o பற்று பாசத்தாலும், காமத்தாலும் அலைக்கலைப்பட்டு துன்பம் என்னும்
o வேதனைகளினால் துளைக்கப்பட்டு தொலைப்படுகிறது என்பதை
o மனமே அறிந்துகொள்.

”தண்ணீரிலே தோன்றி தண்ணீரில் மறைகின்ற
தாமரை இலைத் தட்டிலே

தத்தளித்து உருள்கின்ற நீர்முத்துப் போல்
தவிக்கின்ற மனித வாழ்வு !

கண்ணீரிலே தோன்றி கண்ணீரிலே முடியும்
கதையினை உனர் நெஞ்சமே

காரிருளில் இடிமின்ன லொடு தோன்றி மறைகின்ற
காளான்கள் போன்ற தன்றோ !

புண்ணீரும் வடிகின்ற சீழ்குருதி நோய்முட்டை
புழுக்கூட்டம் துளைக்கு தம்மா!

புன் புலால் யாக்கையில் வேதனையும் சோதனையும்
புகுந்து அரிகின்ற தம்மா !

எண்ணாமல் காலத்தை ஓட்டுகிற நெஞ்சமே !
இறைவனைச் சிந்தையில் வைப்பாய்

ஏகாந்த இறைவனை எப்போதும் கொண்டாடு மனமே நீ !

யார் வருவார்

· உன்னால் பொருளீட்டவும் சேமிக்கவும் முடிகின்ற
· வரை உன் மக்கள் உன்னோடு ஓட்டிக்கொண்டு
· இருப்பார்கள். பிற்பாடு தேகம் மூப்புற்று தளர்வடையும்
· போது வீட்டில் உள்ளோர்கள் ஒரு வார்த்தை கூட பேசமாட்டார்கள்.

ஓடி ஆடி நடமாடுகிற காலம் வரை உன்னுடைய
உற்றார்கள் தேடி வருவார்கள்.

ஊக்கௌடல் உள்ளவரை பார்க்கும் எழில் குன்றும் வரை
உற்றவளும் ஆசை தருவாள்.

தேடிவரும் காசு பணம் மீறும் நிலை மாறும் வரை
சேர்ந்தாவர்கள் கூடி மகிழ்வார் !

சேர்ந்த பணம் குன்றிவிடில், சோர்ந்த உடல் ஆகிவிடில்
சேர்ந்தவர்கள் ஓடி மறைவர் !

வியடு விக்கல்வர பூவிழிகள் மங்கிவிட
யாருனக்குக் கூட வருவார்.

ஆசை மொழி சொன்னவர்கள் பாசமென நின்றவர்கள்
அங்கஙகே நின்று மறைவர்

கூவுகிற வேளையிலும் கோலூன்றும் மாலையிலும்
பரமன் ஓடி வருவான்

பெயர் நீக்கிய உடல்.

· உடலிலே மூச்சு உள்ளவரை தான் உலகத்தோர்
· உன்னை நலம் விசாரிக்கிறார்கள்.
· மூச்சுப் போய் விட்டால் , பெரினை நீக்க்¢ பிணமெனமாகிறாய்
· உடல் அழுகுகிறது. கண்டு மகிழ்ந்த மனைவி கூட அஞ்சுகிறாள்.

கட்டழகு கட்டிலுயிர் ஒட்டி உறவாடும்
வரை கண்காட்சி ஊர்கோலமே !

கண்டவர்கள் மற்றவர்கள் நலம் விசாரிக்க
கல்யாணத் திருக்கோலமே !

பட்ட உயிர் ஒடியபின் கெட்ட உடல் நாறிவிடும்
பாசங்கள் மாறி விடுமே !

பாரியெனும் காரிகை கண்டு மனம் அஞ்சிகிற
பான்மையது வந்து விடுமே !

சிட்டுகளைப் போல உனைச் சுற்றியவர்கள் அத்தனையும்
சேதி சொல்லி ஓடி விடுவார்கள் !

சிங்காரித்திட்ட உடல் தன்னையிட்டு மண்மூடி
செய்யும் வழி செய்து விடுவார்.

கொட்டு மழை அன்பாகி பரமன் காலடியில்
கோடி மலர் போட்டு விடு நீ !

” ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.”

[ திருமந்திரம் – 145]

காலத்தின் கோலம்

· பிள்ளை பிராயத்திலே ஒருவன் விளையாட்டில்
· ஈடுபாடு கொண்டவனாய் இருக்கிறான்
· வாலிபப் பருவத்திலேயே ஒருவன் யெளவனப்
· பெண்ணிடம் நாட்டம் கொண்டுள்ளான்
· வயோதிகப் பருவத்திலேயே கவலையில்
· மூழ்கி இருக்கிறான்.
· எனினும், ஒருவன் கூட பிரம்மத்திடம் பற்றுக்
· கொண்டவனாய் இருப்பதில்லையே !

துள்ளி விளையாடுகிற காலத்தில் விளையாட்டு
தூண்டுதலில் நாள் பேனதே !

சுழல்கின்ற வாலிப பருவத்தில் மோகத்தில்
சொக்கியே நாள் போனதே !

அள்ளிவிடும் ஆசையிலும் ஆழ்கின்ற கவலையிலும்
அஞ்சியே நாள் போனதே !

ஆறாத நெஞ்சோடு அங்கம் தளர்ந்து விழ
அதில் மீதி நாள் போனதே !

கள்ளூறும் போதைவெறி மீறிவர மீறிவர
கண்ணிலொளி தான் போனதே !

காலவிளையாட்டில் சதுரங்கம் ஆடுகிற
கடவுளை எண்ண விலையே !

கொள்ளை கொளும் நெஞ்சிலவன் கோவில் கொள
வந்து நமை கொண்டாடும் ஞானவடிவானை

நினைந்து பாடு மனமே நீ !

மீண்டும் ஒரு கருவிலடைப்பு

· மீண்டும் பிறப்பு ; மீண்டும் இறப்பு ;
· மீண்டும் தாயின் கருப்பையிலே படுக்கை.
· இந்த சம்சார முறை கடப்பது அரியது…. ஓ முராரி
· உனது அருளினால் என்னைக் காப்பாற்று.

மீண்டும் ஒரு நாள் பிறப்பு மீண்டும் ஒரு பாழிறப்பு

மீண்டும் ஒரு கருவிலடைப்பு.

மீளாமல் சுழல்கின்ற சக்கரத்தைப் போலவரும்
மேதினியில் வாழ்க்கை அமைப்பு

தாண்ட முடியாத ஒரு மாகடலைப் போன்றதிந்த
தாரணியின் ஜீவ வகுப்பு

தத்தளிக்கும் வாழ்விலொரு தோணியினைப் போல அருள்
தாளிணைகள் காட்டு கண்ணனே

காண்டீபன் போர்க்களத்தில் தான் மயங்கும் வேளையிலே
காவியம் சொன்ன தலைவா

காரிருளில் வழிமாறும் வேளையில் கண்ணின் ஒளி
காட்டி ஒரு வழி காட்டவா

கூண்டினிலே பட்டகிளி போலதுயர் மாற இங்கே
கூவிவிடுவோம் கண்ணன் அவனை.

கொடியவளே , இளவஞ்சி கொம்பே

அசை என்னும் கடலில்

· பகலும்,இரவும், அந்தியும், உதயமும்,
· மாரியும் வசந்தமும் மாறி மாறி வருகின்றன.
· காலம் கதியாக ஓடுகிறது.
· வாழ்க்கை விரைவாக கழிகிறது.
· அப்படியும் ஒருவன் தன் சைக்
· காற்றை விட்டுவிட மறுக்கிறான்.

காலைபகல் மாலைஎன் ஓடியுள நாட்கள் தொகை
யார்கணக்கில் கூற இயலும் ?

கார்காலம் கோடைபணி காற்று வரு பருவமென
காலவட்டம் போனது எத்தனை

நாளையெனும் காலமது நாள்கடர நாள் கடர
இன்றாக மாறி விடுமே

நடக்கின்ற காலமது நாழிகைகள் ஓடியபின்
நேற்றென்ற பெய ராகுமே

கோலமிட்ட பூமியினிலே மாறிவரும் வண்ணங்கள்
கோடிபல கோடி எனினும்

கொந்தளிக்கும் மாந்தனவன் நெஞ்சிலவன்
ஆசையினை கொஞ்சமும் விட வில்லையே.

ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன்
கைப்பாசத்தில் அல்லற்பட இருந்தேனே,
நின் பாதம் என்னும் வாசக் கமலம் தலை
மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன் ?
ஈசர் பாகத்து நேரிழையே. [ -அபிராமி அந்தாதி ]

அகந்தை

என் உடைமை , என் மக்கள், என் யெளவனம்
என்று ஆணவம் கொள்ளாதே.
காலம் ஒரே நிமிடத்தில் இவற்றினை
சூறையாடி சென்று விடும்.
இவற்றின் மாயையான தன்மையை
உணர்ந்து இவைகளை விடுத்து,
பிரம்ம நிலையை எய்த முனைவாயாக !

ஆளடிமை வாகனங்கள் மாளிகை கொண்டுவரும்
ஆணவத்தில் என்ன பயனோ ?
அன்புமக்கள் சுற்றமொடு அண்டியவை சீர்த்தி என்னும்
அகந்தையினால் என்ன விளைவோ ?
வாழ்வுபெறும் காலமதில் வாலிபத்தின் ஆணவத்தில்
வந்துதித்த வெற்றி நிலையோ ?
வார்த்தைகளில் சொல்ல முடியாதபடி காலமது
வற்றிவிடச் செய்யும் நொடியில்

பாழ்படுத்தும் மாயைநிலை பற்றாதுன் சிந்தையில்யினில்
பரம்பொருளை எண்ணி விடு நீ

பரமார்த்தம் பள்ளிகொளும் அந்தரங்கக் கோயில் தரும்
படையலுக்கு முந்தி விடு நீ

” கெட்டவழி ஆணவப் பேய் கீழாக மேலான
சிட்டருனைப் பூசை செய்வார் பாரபரமே.
– தாயுமானவர் –

நாடக வேடம்

ஒருவன் சந்நியாசி போன்று ஜடாமுடியுடனும்,
ஒருவன் மொட்டைத் தலையுடனும்,
ஒருவன் காஷாய உடையுடன் பவனி வந்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
உண்மையில் இந்த வேடமும் உடைகளும் அவர்களுடைய
வயிற்று பிழைப்புக்குதான்.

வேடமிட்ட நாடகமாய் ஆடுகின்ற பூமியின்
வேதனையின் உருவமெத்தனை
வேண்டாத தாடிசடை தான் வளர்த்து சன்யாச
வேற்றுமையின் பாக மெத்தனை

காவிகட்டி ஊர்சுற்றி தான்பவனி தந்து சுழல்
காட்சிகளும் விந்தைகளும் எத்தனை
காயமதில் தன் தலையை மொட்டையிட்டு மற்றவர்க்கு
காட்டுகின்ற பேர்க ளெத்தனை

அவ்வளவு பேர்களுமே தன்வயிற்றைத் தான் வளர்க்க
ஆக்கி வைத்த சொந்த வழியே
கூடுவிட்டுப் போனவர்கள் கொள்கைவற்றி போனவர்கள்
கூட்டத்தை நம்பிடாதே .

நாடகத்தால் உன் அடியார்
போல்நடித்து நான் நடுவே
வீடு அகத்தே புகுந்திடுவேன்
மிகப் பெரிதும் விரைகின்றேன்
ஆடு அகம் சீர் மணிக்குன்றே
இடையறா அன்பு உனக்கு என்
ஊடு அகத்தே நின்று உருகத்
தந்தருள் என் உடையானே.

திருவாசகம் [ திருச்சதகம்]

தீமையும் – தினவும்

மனிதன் சிற்றின்பங்களில் திளைத்து இன்புறுகிறான்.
அதனால் விந்தினை பாழாக்கி தேகத்தில்
நோய்களை தனதாக்கிக்கொள்கிறான்.
உலகத்தில் இறுதியான முடிவு மரணம்தான்
என்றாலும் மனிதன் தனது பாவ நடத்தைகளை
விடுவான இல்லை.

காமமெனும் ஏரியினைக் கால் கடுக்க நீந்தியவர்
கரையேற வழியின்றியே

கண்ணிமைக்கும் சிற்றின்பக் கள்ளூரும் போதையிலே
காலத்தை ஓட்டி மகிழ்வார்

எமனுக்குச் சீட்டெழுதி வேதனைக் கூட்டெழுதி
எத்தனையோ விருந்து வைப்பார்.

இறுதி ஒருநாள் சாவு உறுதி என்ற போதிலும்
எண்ணாமல் நாள் கழிப்பார்.

ஊமை மனம் ஆகிடுவார் ஆமையென வாழ்ந்திடுவார்
உத்தமரை பூமி சுமந்தே

உள்ளவரை சத்தியமும் நித்தியமாய் வாழுமதால்
உலகம் நிலைத்திருக்கும்

கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல்
அட்டத்தைக் கட்டிக் அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து
நட்டமிருக்க நமனில்லை தானே.

– திருமந்திரம் –

ToTop