ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

செய்தி இதழ்

உலக அரசியல், சமூகம்,கல்வி, விஞ்ஞானம், வாணிகம், சமயம், முதலிய எல்லாத்
துறைகளிலும் கண்டுபிடிக்கப்படும் புதிய தகவல், நிகழும் புதிய நிகழ்ச்சிகள் அனைத்தும்
செய்திகளே ஆகும். இச்செய்திகளை தாங்கி வரும் செய்தி இதழ்களே பத்திரிக்கை ஆகும்.[ இன்று பத்திரிகை விட வேகமாக தொலை தொடர்பும் – கணினியும் செயல்பட்டு வருகிறது.]
சில பெரிய பத்திரிகைகள் வாணிகம், பொருளாதாரம், சமூகவியல், கல்வி, விஞ்ஞானம், சமயம்போன்ற எல்லா துறைகளைப்பற்றியும் செய்திகளை வெளியிடுகிறது.

இன்றையச் செய்தி இதழ்களை இருவகையாகப் பிரிக்கலாம்.
(1) நாளிதழ்கள்
(2) பருவ இதழ்கள்

நாளிதழ்களுக்கும் பருவ இதழுக்கும் முக்கிய வேற்றுமைகள் உண்டு. உலகில் அன்றாடும்
நடைபெறும் அரசியல், சமூக நிகழ்ச்சிகள், புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், சாதனைகள்
போன்ற புதிய செய்திகளுக்கே நாளிதழ்கள் சிறப்பிடம் அளிக்கிறது.
ஆர அமர இருந்து எண்ணி இலக்கிய இன்பத்தை வளர்க்கும் நாளிதழுக்கு இல்லை.
இவற்றை [ஞாயிறு] வார மலர், ஆண்டு மலர், சில இலக்கிய இதழுக்கு மட்டுமே இந்த
வாய்ப்பு உண்டு.

நாளிதழ்களைப்போல் நாளும் நேரத்துடன் போட்டியிட வேண்டிய அவசியம் பருவ
இதழுக்கு இல்லை. செய்திகளுக்குரிய பின்னணியையும், வரலாற்றையும், விளக்கப்படங்களையும் நிதானமாகத் தேடிச் சேகரித்து, ஆராய்ந்து கட்டுரை வடிவில்
இலக்கிய நயத்தில் வெளியிட போதிய காலம் உண்டு.

தமிழில் இப்போது பருவ இதழ்களில் வார இதழ், மாதமிரு இதழ்கள், மாத இதழ்கள்
என வந்துக்கொண்டிருக்கிறது.

தமிழ் நாட்டில் 1830 வரையில் தமிழில் தனி இதழ்கள் தொடங்கப் பெறவில்லை
எனத்தெரிகிறது. இத்துறையிலும் முதல் முயற்சியாக மேற்கொண்டவர்கள் பாதிரிமார்களே
ஆவர். தமிழ் நாட்டில் தரங்கம்பாடியில் முதல் அச்சகம் தோன்றியதாக தெரிகிறது. கிருத்துவ மதம் பரப்பவும் , பிரச்சாரம் செய்யவும் தமிழ் எழுத்துக்களை சீர்திருத்தம் செய்து முதன் முதலில் அச்சு வடிவில் தமிழை அச்சேற்றியவர்கள் ஜெர்மனியர்கள்.

[தமிழ் அச்சேறியது; அகராதி கண்டது; உரை நடை வளர்ந்தது; தமிழ் எழுத்து
சீர்திருத்தம் பெற்றது; இதழ்கள் தோன்றின; கட்டுரைகள் பெருகின. அறிவியல் தமிழ்
உருவாகியது. இன்னும் எத்தனையோ அருமை பெருமைகளை நம் அன்னைத்தமிழ்
பெற்றது பதினாறாம் நூற்றாண்டு முதல் ஐரோப்பியரின் தமிழ்ப்பணி தொடங்கிவிட்டது.

சிகன் பால்கு என்பவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர். இவர் 1709 ல் தரங்கம்பாடி
வந்தார். அச்சுப்பொறி கொணர்ந்து, முதலில் அச்சிட்ட தமிழ்ப்புத்தகம் வெளியிட்டவர்
இவரே. தமிழ் இலத்தின் ஒப்பிலக்கணமும் தமிழ் இலத்தின் அகராதியும் இவர் இயற்றியுள்ளார்.
தரங்கம்பாடியில் ஓர் அச்சு கூடத்தையும், அச்சடிக்கும் காகிதங்களைத் தயாரிக்கும்
காகிதத் தொழிற்சாலை ஒன்றையும் பெரும் பொருட்செலவில் நிறுவினார் ]

சென்னையிலிருந்த கிருத்துவ சமயப் பிரச்சாரக் கழகம் ( Religious Tract Society)
1831 -ல் செய்தி இதழ் ஒன்றினை முழுவதும் தமிழில் தொடங்கியது. அடுத்து 1835-ல்
மெட்ராஸ் கிரானிக்கிள் [Madras Chronicle ] என்ற பெயரில் தமிழிலும் , தெலுங்கிலும்
இதழ் வெளி வந்தாகத தெரிகிறது. இதுதான் தமிழில் முதலில் வந்த செய்தி இதழ் என
மார்க்ரெட் பார்ன்ஸ் என்பவர் குறிப்பிடுகிறார். ஆ னால், 1833 -லேயே ‘ விருத்தாந்தி ‘
என்ற பெயரில் தமிழிலும், தெலுங்கிலும் செய்தி இதழ் வெளி வந்ததாக ஜே.லாங் என்பவர்
கூறியுள்ளார். இதற்கு கிழக்கிந்திய கம்பெனி அரசினர் தரவு இருந்தும் 1838 -க்கு பிறகு
மறைந்து விட்டது. அடுத்து வந்த தமிழ் இதழ்களில் முக்கியமானது ‘ ராஜவர்த்தி போதினி ‘
ஆகும். இது 1855-ல் தொடங்கி மாதம் மும்முறை வெளிவந்தது. அதில் ஆ ங்கில இதழ்களில் வெளியான செய்திகளின் மொழி பெயர்ப்பும் இ டம் பெற்றன. அதே ஆண்டில் ‘ தினவர்த்தமானி’ என்னும் இன்னொரு தமிழ் வார இதழை பி. பெர்கிவல் ( Rev. P. Percival ) என்பார் நிறுவி, மக்களிடையே நல்ல செல்வாக்கு பெற்று விளங்கியதாக தெரிகிறது.

1857 -ல் முதலாவது சிப்பாய் கலகம் ஏற்படுவதற்கு முன்பு தமிழில் தோன்றிய செய்தி
இதழ்கள் மிகச்சிலவே. அவற்றில் ஒன்றிரண்டு 1860 ,1870 வரை நீடித்து வந்தன.

1857 சிப்பாய் கலக கிளர்ச்சிக்குப் பிறகு அடிமைத் தளையில் கிடந்த மக்கள்
விழிப்படைந்தனர். பல செய்தி இதழ்கள் தோன்றுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது.
அதே நேரத்தில் 1879 -ல் நாட்டுமொழிச் செய்தி இதழ்கள் சட்டமும் , எழுத்துரிமை
வலியுறுத்தி பல இ ந்திய மொழிகளில் புதிய இதழ்கள் தோன்றின. தமிழ் நாட்டிலும் பல
செய்தி இ தழ்கள் தோன்றின. சமய விளக்கங்களும், மறுப்புக்களும், சில சமய வளர்ச்சிகளுக்கும், சில பெண்கள் , இளையர், சிறுவர், தத்துவம் போன்றவைகளுக்கும்
சிறப்பாகப் பயன்பட்டன. 1831 முதல் 1900 வரை தோன்றிய தமிழ்ச்செய்தி இதழ்கள்
சுமார்56 எனத் தெரிகிறது. இவைகள் காலமெனும் கடுங்காற்றில் எதிர் நிற்க மாட்டாமல்
தலைசாய்ந்தன. அரசியல் கட்டுப்பாடு, ஆ ட்சியாளர்களின் கண்காணிப்பும் , கட்டுப்பாடுகளும்
இவற்றின் மறைவுக்கு முக்கிய காரணமாய் அமைந்தன எனலாம்.

1885- ல் இந்திய தேசீயக் காங்கிரஸ் தோன்றியதும் நாட்டின் அரசியல் துறையில்
புதிய வேகம் பிறந்தது. இந்தியச் செய்தி இதழ்களின் வரலாற்றில் புதிய அத்தியாயம்
துவங்கியது. சாதாரண மக்களுக்கும் நாட்டு நடப்பை உணர்த்த வேண்டிய அவசியம்
ஏற்பட்டது. அப்போதுதான் தாய்மொழி இதழிகளின் முக்கியத்துவம் உணரப்பட்டது.
தமிழ் நாட்டில் இத்தேவையை முதலில் உணர்ந்து, அதை நிறைவு செய்யும் முயற்சியில்
முனைந்தார் திரு. ஜி. சுப்பிரமணிய ஐயர். ‘ இந்து ‘ ஆ ங்கில இதழை 1878 -ல் துவங்கி
அதன் ஆ சிரியராக இருந்து வந்தார். 1882 – ல் ‘ சுதேசமித்திரன் ‘ என்னும் தமிழ்
செய்தி இதழைத் துவங்கினார். இந்திய மக்களின் அரசியல் துறையை மூடியிருந்த
திரையை விலக்கி தமிழ் மக்களுக்கு உண்மை நிலைமையைப் படம் பிடித்துக் காட்டியது.
தமிழ் மக்களின் உணர்ச்சிகளையும், உள்ளக்கிடக்கைகளையும் எடுத்துரைக்கும்
செய்தி இதழாக இருந்தது. ஆ ரம்பத்தில் வார இ தழாக வெளிவந்தது. அப்போது விற்பனையில் இதுவே முதலிடத்தில் இருந்தது [ 1500 பிரதிகள் ]

அந்நியராட்சியில் உழன்று, விடுதலைக்குத் துடித்துக் கொண்டிருந்த ஒரு சமுதாயத்தின்
உள்ளக்கிடங்கை – மனக்கொந்தளிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக 19 – ம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் தமிழ்ச் செய்தி இதழ்கள் விளங்கின. அவை எப்படித் தோன்றினும், யாரால்
தொடங்கப்பெறினும், அவை அக்கால மக்களின் உள்ளத்தை தொடுவனவாய், உறங்கி கிடந்த
நாட்டுணர்வைத் தட்டி எழுப்புவனவாய், அவ்வுணர்ச்சிகளின் வடிகாலாய் விளங்கின. செய்தி இதழ்கள் தெரிவித்த கருத்துக்களும், மக்களின் கருத்தைத் திரட்டுவதில் அவைகொண்ட பங்கும், அரசாங்கத்திற்கும் செய்தி இதழ் உலகிற்குமிடையில் உருவான பெரும் போராட்டத்திற்கு அடிகோலின. அதோடு அரசியல் சமூகச் சீர்திருத்தங்களில் செய்தி இதழிகளின் பங்கும் மகத்தானது.

இருபதாம் நூற்றாண்டு தொடங்கியபோது மதுரைத் தமிழ் போன்ற பல சங்கங்கள்
தமிழை வளர்க்கத் தோன்றின. இ ச்சங்கங்கள் மாத இதழ்களும், பிற வெளியீடுகளும்
வெளியாயின. இவற்றுள் சில நீண்டு வாழாமற் போனாலும், அவை அவ்வப்போது தோன்றித்
தமிழை வளர்த்தன்.

பாரதியார் தமது சுகந்திர தாகத்தை வெளியிடுவதற்குச் சொந்தமாக ஓர் செய்தி
இதழை, சுகந்திர வேட்கை கொண்ட ஒரு தேச பக்தரின் உதவியால் 1907 ஏப்ரலில்
‘ இந்தியா ‘ என்னும் இதழைத் துவங்கினார். பாரதியின் ‘ இந்தியா’ பாவலர் பாரதிதாசனின்
‘ இன்றைய சமாச்சாரம் ‘ திரு. வி.க வின் ‘ தேச பக்தன் ‘ ஆகியவை ஓர் புதிய இலக்கிய
நடையை செய்தி இதழ் உலகில் உலா வந்தன.

திரு. வி. கா விடம் பயிற்சி பெற்ற ரா. கிருஷ்ணமூர்த்தி என்னும் ‘ கல்கி ‘ [திரு. வி. கல்யாண
சுந்திரத்திடம் பேரன்பு கொண்ட கிருஷ்ணமூர்த்தி கல்யாணசுந்தரத்தின் முதல்
” கல் ” என்ற எழுத்துடன் தனது முதல் எழுத்தான ” கி ” யையும் இணைத்து ” கல்கி ” யாக
மாறிவிட்டார். கல்கி புது அவதாரம் எடுத்தார்]
கல்கி முதலில் ஆ னந்தவிகடனிலும், பின்னர் 1941- ல் கல்கி இதழை தொடங்கி
தொண்டாற்றினார். பாரதியார் தொடங்கிய தமிழ் மறுமலர்ச்சியைச் சிறந்த முறையில்
வளர்த்துப் பாதுகாத்து நன்கு பலன் தரும்படி செய்தார். மக்களுக்கு எப்படி எழுதினால், எதை
எழுதினால், எதை எந்த வகையில் சொன்னால் பிடிக்கும் என்றெல்லாம் ஆராய்ந்து செய்தி
இதழ் உலகில் பல புதிய உத்திகளை வகுத்தார்.

தமிழ் நாட்டில் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளிலும்
செய்தி இதழ்கள் பல தோன்றின. இலங்கையில் முதன் முதலாக தமிழ் இ தழ் 1841 -ல்
தோன்றியதாகத் தெரிகிறது. அவ்விதழின் பெயர் ‘ உதய தாரகை ‘ இது யாழ்பாணத்திலிருந்து மாதம்
இருமுறை வெளிவந்தது. பத்து ஆ ண்டுகள் வாழ்ந்ததாக தெரிகிறது. 1841- ல் ‘ இலங்கை நேசன் ‘ என்ற மாத இ தழ் வெளியாகியது. 1876 -ல் ‘ சத்தியவேத பாதுகாவலன் ‘இதழும் , 1889 – ல் இந்து சாதனம் ‘ என்னும் சைவசமய இ தழும் , 1892 -ல் ‘ ஞானதீபம்’ இதழும், 1908 -ல் ‘ ஞானசித்தி ‘ யும் – 1922 -ல் ‘ தமிழ் ‘ என்னும் மாத இதழும் தொடங்கியதாக தெரிகிறது. கொழும்பில் 1930 -ல் ‘ வீரகேசரி
ஈழகேசரி ‘ – 1932-ல்’ தினகரன் ‘ – 1933 ‘ ஞாயிறு ‘ இதழும் வெளிவந்துள்ளது.

மாலாயாவில் [ மலேசியா ] தமிழ் இதழ்கள் தோன்றுவதற்கு வழிகோலியது பினாங்கு
நகர அதே ஆண்டில் ‘ பினாங்குவிஜய கேதனன் ‘ – ‘ பினாங்கு வர்த்தமானி ‘ ‘ உலகநேசன் ‘ என்ற இரு இதழ்களும் 1897 –ல் வெளிவந்துள்ளது. பேராக்கிலிருந்து 1896-97 -ல் ‘ தேஜோபிமானி வந்துள்ளது.

1930 – ல் ஏற்பட்ட சமுதாய விழிப்புணர்ச்சி இந்தியர்களுக்கு ஓர் எதிர்கால
நம்பிக்கை ஏற்படுத்தியது. படித்த இந்திய தலைமைத்துவம் இந்த காலகட்டத்தில் தலை
தூக்கியது. இந்தத் தலைமைத்துவம் தமிழ்ப்பள்ளி சிரியர்கள், தொழில் அதிபர்கள்,
பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், ஆங்கிலம் படித்த முற்போக்குவாதிகள் என்று
பல குழுக்களாகப் பரிணாமம் கண்டது.

மலாயவில் இந்தியர்களின் சமுதாய விழிப்புணர்ச்சிக்கு மலாயாவின் இ ந்தியப்
பத்திரிக்கைகளின் பங்கு சிறப்பாக அமைந்தது. ‘ தமிழ் நேசன் ‘ ‘ தமிழ் முரசு ‘ மற்றும்
வேறு சில பத்திரிக்கைகளும் குறிபிடத்தக்கவை.

கி.நரசிம்ம ஐயங்கார் அவர்கள் திருச்சி [ தமிழ் நாடு ] நங்கைவரம் என்னும்
கிராமத்தில்1890-ல் பிறந்தார். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்றார். தமிழ்ப்புலவர் ந.மு. வேங்கடசாமி நாடார் அவர்களிடம் தமிழ் இலக்கியமும் கற்றார்.

1921 -ல் மலாயா வந்தார். தமது சகோதரர் நிர்வகித்த இண்டஸ்றியல் அச்சகத்தில்
உதவி நிர்வாகியாகினார். அப்போது ‘ தமிழகம் ‘ என்ற ஒரு பத்திரிக்கை நடத்தினார்.
தமிழகம் செய்தி தழ் மலாயாவின் முதல் தமிழ்ப்பத்திரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

1924 – ல் ‘ தமிழ் நேசன் ‘ வார தழைத் துவங்கி 1937 -ல் அதை தினசரி செய்தி
இதழாக்கினார்.

1904 -ல் தமிழகத்தில் பிறந்த திரு.கோ. சாரங்கபாணி அவர்கள் திருவாரூரில்
உயர்நிலைப்பள்ளியில் மெட்ரிக்குலேஷன் பரீட்சையில் தேரினார். 1924- ல் தமது
இருபதாவது வயதில் சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூரில் ‘ முன்னேற்றம் ‘ என்னும் பத்திரிக்கையில் துணையாசிரியராக தமது எழுத்துப் பணியைத் துவங்கினார்.

1930 ம் ஆ ண்டில் ‘முன்னேற்றம்’ பத்திரிக்கையின் ஆசிரியரானார். முன்னேற்றம்
பத்திரிகையில் வெளி வந்த சீர்திருத்தக் கருத்துக்களும் பகுத்தறிவுக் கட்டுரைகளும் மக்களை வெகுவாக கவர்ந்தன.
1934 -ல் ‘ தமிழ் முரசு ‘ செய்தி இதழாக வாரந்தோறும் முறையாக இதழ் ஒன்று
ஒரு காசு விலையில் விற்பனையானது. அதன்பின் மக்களிடம் அதிக செல்வாக்குப் பெற்ற
தமிழ் முரசு 1935-ல் தினசரியாக விரிவடைந்தது.

திரு.கோ.சா அவர்கள் ‘ சீர்திருத்தம் ‘ என்ற மாத இதழையும் ‘ ரிபார்ம் ‘ [ Reform ]
என்னும் ஆங்கில மாத இ தழையும் , ‘இந்தியன் டெய்லி மெயில் ‘ [ Indian Daily Mail]
என்ற ஆங்கில தினசரி செய்தி இதழையும் நடத்தினார்.

திரு. நரசிம்ம ஐயங்காரின் தமிழ் நேசன் இந்திய தேசிய உணர்வுகளையும், காங்கிரஸ்
கொள்கைளையும் தோட்டத் தொழிலாளர்களின் உயர்வு , விழிப்புணர்ச்சி, சாதிக் கொடுமை பற்றிய கட்டுரைகளையும் எழுதியது.

கோ.சா வின் தமிழ் முரசு பெரியாரின் கொள்கைகளையும் தமிழ் சீர்திருத்த சங்கத்தின்
முற்போக்கான இ லட்சியங்களையும் சாதி ஒழிப்பையும் பிராமண எதிர்ப்பையும் சனாதனக்
கொள்கைகளையும் எழுத்துக்களாக வடித்தது.

தமிழ் நேசன் – தமிழ் முரசு இரண்டுமே மலாயாத் தமிழரின் நலன் விரும்பினாலும்
கொள்கை ரீதியாக தீவிரம் காட்டியது தமிழ் முரசு. மிதமாகச் செயல்பட்டது தமிழ் நேசன்.

சீர்திருத்த சங்கங்கள், சுயமரியாதை சங்கங்களாகவும் திராவிட இயக்கங்களாகவும்
மாறிய போது நல்ல இ லட்சியங்களை நெஞ்சில் தாங்கிய செயல் வீரர்களின் பணி ,
அழுத்தப்பட்ட சமுதாயத்தையும் தாழ்த்தப்பட்ட சமுதாய முன்னேற்ற வளர்ச்சி
குன்றியவர்களையும் கவர்ந்த அளவிற்கு ஏனைய மேல்மட்ட இ ந்தியர்களைக் கவரவில்லை.
ஆதியில் ” ஒன்றே குலம் ; ஒருவனே தேவன் ” – தமிழர் முன்னேற்றமும் வளர்ச்சியும்
வேண்டிப்போராடிய தமிழ் முரசு , சீர்திருத்த திருமணங்களை வெகுவாக தரித்தது.

1927- ல் இந்துக்களின் வரலாற்றில் முதன் முறையாகப் புரோகிதர் அல்லாத
சீர்திருத்தத் திருமணம் சாதி ஒழிப்புக் கொள்கையோடு மலாயாவில் [ தெலுக்கன்சனில்-
இப்போது தெலுக் இந்தான்] நடந்தாக 11. 5. 1927- ஆங்கில தினசரி [ Straits Times ]
-யில் செய்தி வெளியிட்டிருந்தது.

இன்றைய நிலை

சுமார் 150 ஆ ண்டுகளுக்கு முன்னரே தோன்றிய செய்தி இதழ் .

” தபால்காரர்களைப் பார்த்து நாளாகிவிட்டது ” என்று ஆச்சரியமாக கூறும் காலம்
நெருங்கிக்கொண்டுள்ளது.

இந்த நூற்றாண்டின் தகவல் , தொலைதொடர்பு அந்த அளவுக்கு வளர்ந்துவிட்டது.
இந்த அறிவியல் கண்டுபிடிப்பில் செய்தி தாட்கள் போல் மின்னிதழும் வந்துவிட்டது.

ஆனால், இன்று தொலைக்காட்சியைத் தாண்டி, கணினி கண்டு பிடிப்பு தகவல் தொடர்பில்
இன்று பெரும் புரட்சியினை ஏற்படுத்திவிட்டது – ஏற்படுத்திக்கொண்டும் உள்ளது.
ஆங்கில எழுத்தான ” E ” செய்யும் நிஜமான உண்மை , நிஜமான ஜாலம்.
E- mail , E- Bank , E- commercc என்று சில காலமாகவே இந்த ” E ” நம் கண்முன் வித்தை
காட்டிக் கொண்டிருக்கிறது. இந்த புதிய ஆயிரமாண்டில் ”E ” தான் எலக்ரானிக் விஷய
பரிமாறல்கள் உலகை ளப்போகிறது.

இலக்கியத்திற்கு அடுத்தபடியாகச் சிறந்த இலக்கிய செல்வங்களாகச் செய்தி இதழ்கள்
உருவாகியுள்ளது. நாட்டின் முதுகெலும்பாக கருதப்படுகிறது. செய்தி இதழ் எல்லோரையும்
கவரவேண்டும்.
உலகில் நிகழும் செய்திகளையும், புதிய புதிய மாறுதல்களையும், கருத்துக்களையும் ,
செய்திகளையும் மக்கள் கவரும் வண்ணத்தில் தரவேண்டும்.

இக்காலச் செய்தி இதழ்கள் சில சிறு நிகழ்ச்சிகளையும் , உணர்ச்சியூட்டும்
வகையிலும்பெரிதுப்படுத்தியும் எழுதி வருகிறது.

சில தராதரங்களை வகுத்துக்கொண்டு , அதன் வரம்புக்குள் நின்று , ஆக்க முறையில்
தொண்டும் – நேரிய வழியினை வகுத்துக் கொண்டு – அதன் வழி நமது தமிழ் சமுதாயம் வளர
தமிழ் செய்தி இதழ்களின் கடமையாகும்.

ToTop