ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

அடுத்த நூற்றாண்டில் தமிழ் அழிந்துவிடும் ?

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழ் என்பார்கள். ஆனால் அந்த தங்கத்தமிழ் அடுத்த நூற்றாண்டில் இருக்காது என்னும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருக்கிறது. மொரிஷியஸ் நாட்டில் வாழ்பவர்களில் பலர் தமிழர், தமிழ்ப் பெயர்களில்தான் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தமிழ் பேசவோ எழுதவோ தெரியாது. அந்த நிலை தமிழ் நாட்டுக்கும் வந்து விடும் என்கிறார், தமிழ் இணையப் பல்கலைக் கழக இயக்குனர் மு. பொன்னவைக்கோ.

தற்போது உலகம் முழுவதும் 6000 மொழிகள் உள்ளன. ஆனால் வருகிற 22-ம் நூற்றாண்டில் அதாவது அடுத்த நூற்றாண்டில் 80 சதவீத மொழிகள் இருக்காது என்னும் அதிர்ச்சியூட்டும் தகவலை யுனஸ்கோ அறிவித்துள்ளது.

மற்றொரு ஆய்வு உலகில் அடுத்த நூற்றாண்டில் 12 மொழிகள் மட்டும்தான் வளமையுடனும், செழிப்பாகவும் இருக்கும் என்கிறது. இந்த இரண்டு ஆய்வறிக்கைகளிலும், கூறப்படும் எஞ்சியுள்ள மொழிகளில் தமிழ் இல்லை. இந்தியாவில் தற்போதுள்ள 18 மொழிகளில் இரண்டே இரண்டு மட்டும் தான்
எஞ்சி நிற்கப் போகின்றன. அவை இந்தி, வங்காளி மட்டுமே.
தமிழ் கூறும் நல்லுலகம் என்ன பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்யப் போகின்றன?

ஒவ்வொரு ஆண்டும் பல மொழிகள் சிதைந்து மறைந்து வருகின்றன. கடந்த சில நூற்றாண்டுகளில் நடந்த மாற்றங்களால் பல மொழிகள் மறைந்தன. மறைந்து வருகின்றன.
இன்னும் நூறு ஆண்டுகளில் அழியக் கூடிய மொழிகளின் பட்டியலில் தமிழும் இடம் பெற்று இருக்கிறது.

மொழிகள் ஏன் மறைகின்றன என்ற வினாவுக்கு விடைகள் பல உள்ளன. மொழி பேசுவோரை அடியோடு அழித்துவிட்டால், அவர்களை உலகெங்கும் சிதறடித்து விட்டால் மொழி அடியோடு மறைந்து போகலாம்.

அமெரிக்கப் பழங்குடிகள், யூதர்கள், ஆர்மினியர்கள், ஈழத்தமிழர்கள் போன்றோர் இந்த இடரை நோக்கிச் செயல்பட்டிருக்கின்றனர். அவர்களில் சிலர் தம் மொழியைக்
காப்பாற்ற அரும்பாடுபட்டு வெற்றியும் கண்டிருக்கின்றனர். இருப்பினும், பெரும்பாலும் மொழிகள் அழிவது அந்தந்த மொழி பேசும் குடிகள் தாமாகவே தம் மொழியை உதறுவதால் தான் என்பது அறிஞர்கள் கருத்து. ஏன்? தாய் மொழியை உதறி வேறு மொழியை ஏற்கிறார்கள் என்பதை அறிஞர்களால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதைப் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

பிஷ்மன் என்ற அறிஞரின் கருத்துப்படி
அவ்வகைக் காரணங்களில் சில.. புலம் பெயர்தல், இடம் விட்டு இடம் பெயரும் மக்கள் பிழைப்புக்காக வேறு மொழியைக் கற்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். குழந்தைகள் வேற்று மொழி மக்களை மணமுடித்துக் கொண்டால், மொழியை உதற வேண்டிய இக்கட்டுக்கு ஆளாகலாம்.
பொருளாதார சிக்கல்கள்.. வேலைவாய்ப்புக்காகவும், வணிகத்துக்காகவும் ஆதிக்க மொழியைக் கற்க வேண்டி வரும். நாட்டுப்பறங்களில் வேளாண்மையை நம்பிப் பிழைத்துக் கொண்டிருக்கும்போது தாய் மொழியை விட்டு விடத் தேவையில்லை. ஆனால், மற்ற குடிகளோடு வணிகம் செய்யும் போது ஆதிக்க மொழிகளை எதிர்ப்பது கடினமே. உங்கள் வாடிக்கையாளர்களின் மொழியே உங்கள் மொழியாக வேண்டிய நிலையில் தாய் மொழியைத் தக்க வைத்துக் கொள்வது எளிதல்ல.
ஊடகங்கள்.. தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாட்கள், இணையம் போன்ற ஊடகங்கள் ஆதிக்க மொழியின் வீச்சுக்கு அடிமையாகின்றன. எம்.டிவி. மற்றும் அமெரிக்கத் தொலைக்காட்சிகளின் வல்லமையை அளவிட முடியாது. கணினி
விளையாட்டுகள் போன்றவையும் மனமகிழ்ப் போர்வையில் ஊடுருவுகின்றன.
மேட்டுக்குடி குறியீடுகள்.. மக்கள் பெரும்பாலும் தாம் மதிப்பவர்களைப் போல் மேட்டுக்குடியினரைப் போல் வாழ நினைப்பார்கள். ஆளும் வர்க்கத்தின் பழக்க வழக்கங்களை மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பது பல முறை நடந்திருக்கிறது.
ஆதிக்க மொழியின் மோகத்தில் தாய் மொழியைத் தவிர்ப்பதும் அடிக்கடி நடப்பதுதான். தாய் மொழியையும், தம் பண்பாட்டையும் தாழ்வாக நினைத்து அவற்றைத் துறப்பதைப் பல நாடுகளில் காணலாம். அதில் குறிப்பாக இளைஞர்களிடம் காணலாம். நாம் இதுவரை குறிப்பிட்ட அறிகுறிகள் தமிழ்
பேசும் மக்களிடம் இல்லையென்று மறுக்க இயலாது. கூடிய மட்டிலும் தமிழில் எழுதத் தெரிந்தவர்கள், அதிலும் தமிழ் நூல்களைக்கற்றுக் கொள்ளத் தெரிந்தவர்கள் தமிழ் மடற்குழுக்களில் எழுதும் பொழுது தமிழிலேயே எழுத வேண்டும். அவர்களும் ஆங்கிலத்தில் எழுதுவதைத் தமிழுக்கு வரும் இன்னொரு இடர்ப்பாடு என்று கருத வேண்டியிருக்கிறது. வடமொழிக் கலப்பால், தெலுங்கு, கன்னடம், பிறகு மலையாளம் ஏற்பட்டது போல் இப்பொழுது தமிங்கிலர் என்ற புதிய மொழி
பேசுபவர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். எப்படிச் சிங்களர்கள், கலிங்கர்கள் தமிழர் கலப்பால் தோன்றிப் பின் தமிழரையே புறந்தள்ளினரோ, அது போல இந்தத் தமிங்கிலர்கள் தமிழரைப் புறந்தள்ளத் தயங்க மாட்டார்கள். இதற்குத்
தமிழ்நாட்டின் சில அரசியலாளர்களும், முன்னிலையில் இருக்கும் அறிஞர்களும் உடந்தை. தமிழ்நாட்டில் உள்ள அதிகார வர்க்கமும் இதற்கு உறுதுணையாக உள்ளனர். இனியும் இருப்பார்கள். இவர்களுக்கு இன்னொறு உறுதுணையாக இருப்பது சர்ச் கான்வென்ட், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் கல்வி வணிகர்கள். இந்த பாழாயப்போன தமிழாசிரியர்கள் ஒருகாலத்தில் நாட்டுப்புறங்களில் தலைமையாசிரியரைக் காட்டிலும், தமிழாசிரியருக்கு ஊரிலும் மாணவரிடத்திலும் கூடவே மதிப்பு இருந்தது. பட்டி மன்றம், வழக்காடு மன்றம்
என்று அலைந்து தங்கள் பொருளாதார நலம் பேணுவதிலேயே குறியாய் இருந்து தங்களுக்கென்று இருந்த தலைமைப் பண்பை இழந்து தறுதலையாய்ப் போனார்கள். மக்கள் வழி பிறழ்ந்தார்கள். இது புண்படுத்துவதாய் இருக்கலாம்.
ஆனால் உண்மை நிலைமை மிகவும் பாடாவதியாக இருக்கிறது.
தேர்வடம் பிடிக்க எத்தனை பேர் வருவீர்கள் என்பதுதான் கணக்கே தவிர, வடம் பிடிக்கலாமா என்பதல்ல. இப்படியே இருந்தால், என்றைக்கு வடம் பிடிப்பது? என்றைக்குத்தேர் நிலை கொள்வது?

நன்றி:
கதிரேசன்
வசந்தம் இணைப்பிதழ்
தினகரன்
17 பெப்ரவரி 2002

ToTop