ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்..

பூமிப்பந்தில் கண்டங்களையும், நாடுகளையும் தேடி அலைந்த மனிதன் இன்று அண்டவெளியில் கிரகங்களை தேடி அலைகிறான். பூமி தட்டை வடிவானது என்று அதை உருண்டை வடிவானது என்றவர்களை கொலைக்களம் அனுப்பிய மனிதன் இன்று, இவ்வுலகம்மட்டுமல்ல இந்த அண்டத்தின் தோற்றம் தோன்றி காலம் என்பவற்றை அறிவதில் வெற்றியையும் அணுகி நிற்கின்றான். சாதாரண சிறிய சிறிய நோய்களுக்கு பரிகாரம் செய்ய இயலாமல் மரணங்கள் சம்பவிக்க அனுமதித்த மனிதன், இன்று உடல் உறுப்புக்களை மாற்றீடு செய்வதில் இருந்து புதிதாக தனது கட்டுப்பாட்டில் உயிர் அணுக்கள் மூலம் உயிர்களை உண்டாக்குவது வரை, மருத்துவத்துறை வளர்ச்சியில் வேகநடைபோடுகின்றான். அயற்கிராமத்துடன் தொடர்பு கொள்வதற்குக்கூட எத்தனையோ நாட்கள் பயணத்தை மேற்கொண்ட மனிதன், இன்று கணணி என்றும் உலகம் எங்கிலும் ஒரு தொடர்பு வலையை ஏற்படுத்தி ஒரு நொடிப்பொழுதில் உலகம் எங்கும் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்கின்றான்.

இப்படியாக அனைத்துத் துறைகளிலும் மனிதன் வேகமாக வளர்ச்சி கண்டுள்ளான் என்பது உண்மை. ஆனால் இவ் வளர்ச்சி உலகளாவி சமச்சீராய் உள்ளதா? என்றால் இல்லை என்பதே தெளிவாகின்றது. வானுக்கு விண்கலம் அனுப்பிய மனிதன் வாழும் பூமியில், நரமாமிசம் புசிக்கும் மனிதனும் இருக்கின்றான் என்பது நம்பமுடியாத உண்மையாகும்.

ஒரு நாட்டின் வளர்ச்சி அந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனிலும் தங்கியுள்ளது. இதைத்தான் அமெரிக்காவின் அதிபராக இருந்த ஜோன் எஃப் கென்னடி “நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே நீ நாட்டுக்கு என்ன செய்தாய்” என்று கூறினார். இன்றும் நாம் தமது தாய்மொழியை விட்டுக்கொடாத பிரான்ஸ் நாட்டவரையும் தமது கலாச்சாரத்தை விட்டுக்கொடாத சீன நாட்டவரையும் காண்கின்றோம். பிரான்ஸ் சீனா நாடுகளின் வளர்ச்சியையும் கண்கூடாகக் காண்கின்றோம்.

நாம் ஈழவர், எமது நாடு ஈழம், எமது நாடு போர்ச் சூழ்நிலையால் வளர்ச்சியின்றி பின்தள்ளப்பட்ட நிலையிலேயே உள்ளது. சிங்கள அரசின் அடக்கு முறையினாலும் அதனால் வெடித்து இன்று ஆலமரம் போல் விழுதெறிந்து நிற்கும் சுதந்திரப் போரிற்குள் இளம் சந்ததியினர் தள்ளப்பட்டுள்ளதாலும் எமது இனத்தின் கல்வி வளர்ச்சி மிகவும் குன்றிப்போயுள்ளது. இடப்பெயர்வும், அகதி வாழ்வும் மக்களின் தொழில் வாய்ப்பை பெரிதும் பாதித்துள்ளது. அது மட்டுமல்லாமல் தனிமனிதன் வாழ்வுக்காலம் சராசரியாக விழுக்காடு கண்டுள்ளது. சிசு மரணம் அதிகரித்துள்ளது. மொத்தத்தில் ஈழமக்களின் வளர்ச்சிப்போக்கு பின்னோக்கியே சென்று கொண்டிருக்கின்றது. இதை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம், மலரப்போகும் எம் சுதந்திர தாய்நாட்டை எப்படி வளர்ச்சிப் பாதையை நோக்கி நகர்த்தலாம்?

ஈழத்திலே நடைபெற்றுக்கொண்டு இருக்கும் சுதந்திரப்போரை சாட்டாகக் கொண்டே நாம் இன்று இலட்சக்கணக்கில் புலம்பெயர்ந்து வாழ்கின்றோம். அங்கு உயிர்விடும் ஒவ்வொரு மனிதனாலும் தான் எமக்கு இவ்வாழ்வு கிடைத்தது. இவ்வாழ்வை தனிப்பட்ட எம் ஒவ்வொருவருக்கும் மட்டுமன்றி மலரப்போகும் எம்நாட்டிற்கும் பயனுள்ளதாக மாற்றுவது எம் ஒவ்வொருவர் கையிலும் தான் உள்ளது. ஒரு நாட்டின் குடிமகன் அந்நாட்டின் மீது கொள்ளும் அன்பும் அக்கறையும்தான் அந்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

ஈழத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சுதந்திரப்போரிற்றும்  அங்கு ஏதிலிகளாக அல்லலுறும் மக்களுக்கும் பல உதவிகளை புலம்பெயர்ந்து வாழும் ஈழவராகிய நாம் செய்துவருகின்றோம். ஆனால் மலரப்போகும் நம் தாய்நாட்டின் வளர்ச்சிக்கும் அங்கு வாழப்போகும் நம் சந்ததிக்கும் நாம் செய்யப்போவது என்ன?

அங்கு அருகிக்கொண்டு செல்லும் சாதியக்கோட்பாடுகளையும், மூடக்கொள்கைகளையும் நாம் இங்கிருந்து கட்டிக்காத்துக் கொண்டு செல்வது முறையாகுமா? அல்லது ஓய்வுறக்கம் இன்றி சேகரிக்கும் செல்வம் எல்லாவற்றையும் அங்கு கொண்டு சென்றாலும் சிறந்த கல்வியறிவும் தொழில் நுட்பமும் இன்றி அச் செல்வம் பயனுள்ளதாகுமோ?

இதைத்தான் புரட்சிக்கவி பாரதி இப்படிச் சொல்கின்றார். – சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.

மனிதன் தன்னை வரையறைப்படுத்திய காலம் தொட்டு இன்றுவரை எத்தனையோ இன மக்கள் தமது நிலங்களை உரிமைகளை இழந்து சுதந்திரத்திற்காக போராடி வருகின்றார்கள். 2000 ஆண்டுகளிற்கு முன் யூத இனம் தன் சொந்த நாட்டிலிருந்த விரட்டியடிக்கப்பட்டது. அண்மையில்தான் அது தனது நாட்டைத் திரும்பவும் பெற்றது. இன்று உலகில் வளர்ச்சி அடைந்து முன்னணியில் நிற்கும் நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று என்றால் அது ஆச்சரியமான உண்மை. இந்த வளர்ச்சிக்குப்பின் 2000 ஆண்டுகள் நாடின்றி நாடோ டிகளாக இருந்த யூத இன மக்களின் மொழிப்பற்றும் நாட்டப்பற்றும் அது காரணமாக அவர்கள் தம் தாயகத்தை தஞ்சம் புகுந்த நாடுகளில் இருந்து தம்முடன் கொண்டு சென்ற கலைச்செல்வங்களும் பொருட்செல்வங்களும் தான் காரணமாகவிருந்தது.

வியட்நாமில் இருந்து அமெரிக்கா வெளியேறும்போது வியட்நாம் ஒரு சுடுகாடு போலவே இருந்தது. ஆனால் இன்று அந்த வியட்நாம் மிகக்குறைந்த காலத்திற்குள் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு கண்ட ஒரு ஏற்றுமதி நாடாக விளங்குகின்றது. போரினால் இடம்பெயர்ந்து வேற்று நாடுகளில் பட்டப்படிப்புக்களை முடித்த வியட்நாமிய கல்விமான்களின் உழைப்பே இதற்குக் காரணம்.

இதேபோன்று சில்லி, பலஸ்தீனம் போன்ற நாடுகளிலும் போர் காரணமாக புலம்பெயர்ந்து வாழ்ந்த எத்தனையோ மக்கள் தம்மை வளர்த்துக்கொண்டு தம் நாட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

நாம் எமது மண்ணை இழந்து யூத இனத்துடன் ஒப்பிடும்போது, மிகக்குறுகிய காலத்திற்குள்ளேயே அந்த இழந்த நிலம் எமது கைக்கு திரும்பவும் கிடைக்கப்போகின்றது என்பது உறுதி.

பாரதியார் சொன்னது போல் உலகின் எட்டுத்திக்கும் வருவது எமக்குக்கிடைத்த ஒரு அரிய சந்தர்ப்பம். இவ்வரிய சந்தர்ப்பத்தை பயனுள்ளதாக்குவோம். மூடக்கொள்கைகளையும் களைந்தெறிவோம். நாம் வாழும் நாடுகளில் உள்ள அரிய கலைகளைக் கற்போம். தமிழ் ஈழத்தின் வளர்ச்சிக்கு உழைப்போம். எமது நாடும் மிகக்குறுகிய காலத்திற்குள் வளர்ச்சி கண்ட ஓர் நாடாக மிளிரும்.

க.முருகசிம்மன்
நன்றி: சங்கமம்

ToTop