ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

கோசலை

cycle

"குலம்!….மாடுகளுக்குக் கொஞ்சம் வைக்கல் இழுத்துப்போடு மேனே" குலம் மல்லாந்து படுத்துக் கிடந்தான். ஓலைப்பாயில் தலையணைகூட இன்றித்தான் இவன் படுப்பான். முதுகு வலிக்குமா, இல்லையா? இவன் ஏன் ஒரு காட்டுப் பிறவி மாதிரி இருக்கிறான்!

அம்மா திண்ணைக் குந்தில் கால் நீட்டி உட்கார்ந்தவாறே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள். "கொஞ்சம் வைக்கல் இழுத்துப் போடன் அப்பன்….மாடுகள் கத்துதெல்லவே!……" குலம் நெற்றியில் முழங்கைகளை அழுந்தப் போட்டவாறு, கால்களை ஆட்டியவாறு படுத்துக் கிடந்தான்.

அம்மா இவனையே பார்த்துக் கொண்டிருந்தான். மார்பில் உரோமங்கள் படர்கிற வயது. முரட்டுதனமான உடல்பாகு. குரல்கூடக் கட்டைக்குரல் இவனுடைய அப்பா மாதிரி நெற்றியில் தூக்கிப் போட்டிருந்த கைகளைப் பார்த்தாள். நரம்புகள் புடைத்துக்கொண்டு விம்மித் தெரிந்தன. உள்ளங்ககைகள் முதலையின் முதுகு மாதிரி காய்த்துப் போயிருந்தன. விரல்கள் ஒயிலும் கிறீஸும் படிந்து பழுப்புநிறமாகத் தெரிந்தன. நகக் கண்களில் கறுப்பாக ஒயில் அழுக்குப் படிந்திருந்தது.

"குலம்!….கொஞ்சம் வைக்கல்….. அவசரமாகப் பாய்ந்து இடை வெட்டியவாறு மகன் சிடுசிடுத்தான். "நீயே இழுத்துப்போடேன்…எனக்கு ஒரே அலுப்பு" அம்மா சற்றே வேதனையின் சாயல் படியச் சிரித்தாள். சீலன் இருந்தால் இப்படியா எல்லாம் இருக்கும்? அம்மா சொல்லாமலே வேலை செய்து கொடுப்பான். மாடுகளுக்கு வேளாவேலைக்கு வைக்கோல் இழுத்துப் போடுவான். தண்ணீர் கொண்டு போய் வைப்பான் கோழிகளைக் கவனித்துக் கூடுகளில் அடைப்பான். சமயத்துக்கு தேங்காய் கூட அம்மாவுக்கு துருவிக் கொடுப்பான். எவ்வளவு அருமையான மகன்! அவன் ஏன் அப்படிப் போனான்?

ஊரை நீங்கித் தூரே வயல்வெளிகள் பரந்திருக்கின்றன. இடையிடையே பனங்கூடல்களும் திடல்களும் தனித்துக் கிடக்கின்றன. மாலைநேரங்களில அம்மா அவ்விடங்களில் புல் செதுக்கிக் கொண்டு வரப்போவாள். சைக்கிள் ஓட்ட முடியாது அவ்விடங்களில், சீலன் சைக்கிளில் சாய்ந்தபடியே ரோட்டில் காத்து நிற்பான்.

அம்மா புல்லுக் கட்டுடன் திரும்பி வரும் நேரங்களை அவன் நன்கு அறிவான். அம்மாவின் உருவம் மிகத்தூரே மங்கலாகத் தெரியும் போதே ரோட்டை விட்டிறங்கி அம்மாவை நோக்கி விரைந்து போவான். பாரத்தை மாற்றிக்கொண்டு அம்மாவுக்கு முன்னே வீட்டுக்கு சைக்கிளில் பறப்பான். அம்மா வழியிலேயே துரவில் உடம்பைக் கழுவிக்கொள்ள முருகன் கோயில் மணி சிணுங்கி அழைக்கும். அம்மா உருகியவாறு கோயிலுக்குப் போவாள். பூசை முடிய நன்றாக இருள் சூழ்ந்து விடும். உள்ளங்கையில் பொத்தியபடி விபூதியும், சந்தனமுமாக திரும்பி வரும்போது, சீலன் வீட்டில் 'பளிச்'சென விளக்கேற்றியிருப்பான். மேசைக்கு முன்னால் விளக்கொளியில் முகம் விகசித்துத் தெரியும்படிக்கு அவன் உட்கார்ந்திருப்பான். ஏதாவது படித்துக் கொண்டோ, எழுதிக்கொண்டோ இருப்பான். முன்னால் மென்குரலில் இசைத்தபடி ரேடியோ அவனை ரசிக்கும் பக்கத்திலே சைக்கிள் முன்சில்லை ஒயிலாக ஒடித்துச் சாய்த்தபடி அவனைப் பார்த்து பளீரென ஒளிவீசிச் சிரிக்கும்.

மகள் அழகிய மொட்டு. மிகவும் சின்னவள்தான். ஆயினும் குசினியில் தேநீர் தயாரிக்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பாள். குலத்தை மட்டும் காணக் கிடைக்காது. அவன் வீட்டில் இருக்கும் நேரங்களை அம்மாவுக்கு அறுதியிட்டுக் கூறமுடியாது. அவன் தொழில் அப்படி! மாடுகள் கழுத்துமணிகள் கிணுகிணுக்க புல்லை அரைக்கின்ற சத்தம் கேட்கும். கூடவே மாடுகள் பலத்து மூசி மூச்சுவிடுவதும் வாலைத் தூக்கி ஈக்களை விளாசி விரட்டுவதும், கேட்கும் சாணியின் மணத்துடன் பசும்புல்லின் வாசனை நாசியில் உறைக்கும், கோழிகள் எல்லாம் ஏற்கனவே கூடுகளில் அடைக்கப்பட்டிருக்கும். குறுகுறு வெனக் கொக்கரிக்கும். 'படபட' வெனச் சிறகுகளை உல்லாசமாக அடிப்பது கேட்கும். சுடச்சுட ஒரு கோப்பை தேநீர்…கடுமையான உழைப்புக்குப் பின், தொழுகையின் பின், மோகனமான இரவின் பிறப்பு நேரத்தில்…..அருமையான தனது பிள்ளைகளுடன் அம்மா அருந்துவாள். அதுவல்லவோ வாழ்க்கை! எல்லாமே சீலனுடன் கூடவே சேர்ந்து அம்மாவிடம் பிரிவு சொல்லாமலே போயினவோ? அம்மா அலுத்தபடியே வைக்கோல் போரை நோக்கிப் போனாள்.

ஓரே வயிற்றில் உதித்த பிள்ளைகள் ஏனோ இவ்வாறு வேறு வேறு குணம் கொண்டவர்களாய் ஆகிப் போனார்கள்? இரண்டு பேரையும் அம்மா ஒரே மாதிரித்தான் சீராட்டினாள். ஒரே மாதிரித்தான் உணவூட்டினாள். ஒரே பள்ளிக்கூடத்திலேதான், கொண்டுபோய்ச் சேர்த்து விட்டாள். புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு, எண்ணெய் பூசிபடியச் சீவிய தலைகளுடன் அவர்கள் பள்ளிக்கூடம் போவதை வாசலில் நின்று பார்த்து ரசித்தாள். குலம் மட்டும் படிப்பை ஒரேயடியாகக் குழம்பினான். அண்ணனுடன் நெடுகலும் சண்டை போட்டான். அம்மாவுடன் கோபித்துக்கொண்டு சிலவேளை சாப்பிடாமலே போனான்.

ஆறாம் வகுப்புக்குமேல் அவனால் ஏறவே முடியவில்லை. அம்மா அறிவாள், அவனது இளையமகன் மிகவும் புத்திசாலி. ஆனாலும் ஏன் அவனால் படிக்க முடியவில்லை என அம்மாவுக்குப் புரியவில்லை. சீலன் அமைதியாகப் படித்தான். அவன் மிகவும் அமைதியான மகன். இரைந்து கதைக்கத் தெரியாதவனாக இருந்தான். நடப்பது கூட மிகவும் மென்மை. ஒரு கம்பீரம் இருக்கத்தான் செய்தது. ஆயினும் புல்லுக்குக் கூட நோகாத நடை. கண்கள் பெரிதாக இருந்தன. உள்ளங்கைகள் மென்மையாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தன. நகங்கள் ரோஸ் நிறமாகவும், நீளமாகவும்….விரல்கள் கூட மெலிந்து நீளமாக நளினமாக இருந்தன, பெண்களைப் போல. சீலன் ஒரு மோகனமான மாலை நேரம் பிறந்தான்.

பறவைகளின் கீச்சொலிகள் அடங்கிய பிறகு, மாடுகள் எல்லாம் மேச்சல் நிலங்களிலிருந்து திரும்பி வந்துவிட்ட பிறகு, மென்மஞ்சட் கதிர்களை மண்ணெண்ணெய் விளக்குகள் உமிழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில்….அம்மாவின் இடது தொடையை சற்றே உரசியபடி ஒரு வளர்பிறை நாளில் சீலன் பிறந்தான். புணர்பூச நட்சத்திரம். 'இவன் பெரிய காரியங்களைச் சாதிக்கப் பிறந்தவன்' என அவனது சாதகம் சொல்லிற்று. குலம் அத்த நட்சத்திரம். அது தான் அவனிடம் முரட்டுச் சுபாவங்கள் சேர்ந்து விட்டனவோ? அத்தம், அதமம் என்றார்கள் சாத்திரிமார். மத்தியான நேரம் கொடுமையானது. மெளனமானது. காற்றை வெயில் விரட்டிவிடும். ஒழுங்கைகளில் படிந்திருக்கிற புழுதியில் கச்சான் வறுக்கலாம் எனத் தோன்றும். பூவரச மரங்கள் கொடுவெயிலில் வாடித் துவளும். சனங்கள் வெளியில் தலை காட்டவே மாட்டார்கள். சொறி பிடித்த நாய்கள் மட்டும் நாவைத் தொங்கப் போட்டபடி இளைத்தவாறு நிழல் தேடி ஓடித்திரியும் 'கர்ர்ர்' எனக் கடூரமாகக் கத்துகின்ற காக்க்கைகள் நீர் தேடிப் பறக்கும்.

குலம் ஒரு மத்தியான நேரம் பிறந்தான். பிறந்தவுடன் எட்டு இறாத்தல் நிறை காட்டினான். அம்மா இராஜவலியில் துவண்டாள். மயக்கம் தீர நெடு நேரமாயிற்று. காய்ச்சல் ஓய சில நாளாயிற்று. என்னவோ அம்மாவுக்கு குலத்தைவிட சீலனை மிகவும் பிடித்தது. அவன் அவளை விட வளர்ந்து விட்ட பிறகும், மேலுதடு அரும்பிய பிறகும்…அவனது கேசங்களை வருடுவதில் அம்மா இன்புற்றாள். ஒரு குழந்தையினது போல மிகவும் மிருதுவான தலைமயிர். குலத்துக்கு மிகவும் முரட்டுத் தலைமயிர். சுருண்டு சுருண்டு இருக்கும். கண்கள் சிறுத்து உள்வாங்கி இருந்தன. மேனியில் மண்ணெண்ணெய் நாற்றமும், ஒயில் நாற்றமும், வியர்வை வாடையும் சதாகாலமும் வீசிற்று. அவன் தொழில் அப்படி. குலம் ஒரு மெக்கானிக் ஆகவேண்டி ஆயிற்று. அவனது மாமனைப் போல, நேரங்காலமற்ற வேலை. சில நாட்கள் சேர்ந்தாற் போல வராமல் இருக்க நேர்ந்தது. நேரத்துக்கு உண்ண முடியாமல் போயிற்று. தன்னைக் கவனிக்க நேரமில்லாமல் போயிற்று. அண்ணன் நிறையப் படிக்க வேண்டுமென நினைத்தானோ, என்னவோ? ஓய்வொழிச்சல் இல்லாமல் வேலை வேலை எனப் பறந்தான். நினைக்க நினைக்க அம்மாவுக்கு நெஞ்சைப் பிழக்கும்படி நெடுமூச்சு எறிந்தது. சீலன் ஏன் அப்படிப் போனான்.

அம்மா மெல்ல மெல்ல போரிலிருந்து வைக்கோலைப் பிடிங்கி இழுத்தாள். நாய் அம்மாவிடம் ஓடி வந்தது. கால்களில், 'சில்லென' இருந்த ஈரமூக்கைத் தேய்த்தது. வாலைத்தூக்கி சுழற்றிச் சுழற்றி ஆட்டியது. அம்மா காலால் எட்டி உதைக்க நினைத்தாள். நாயின் கண்களில் நன்றி வழிந்தது. அது சீலன் கொண்டு வந்த நாய். அம்மா அதை உதைப்பாளா? கால்களை மடக்கிக் கொண்டாள். 'சொதசொத' வென்ற மாரி காலத்தின் சோம்பலான ஒரு நாளில் சீலன் அதைத் தூக்கிக்கொண்டு வந்தான். வந்தபோது வெள்ளைநிறமாக இருந்தது. இப்போ பழுப்பு நிறமாக வளர்ந்துவிட்டது. மழைநீர் ஓடிக்கொண்டிருந்த தெருக்களில் மிகவும் நனைந்துபோய் அனுங்கிய குரலில் கத்தியபடி நடுங்கிக் கொண்டிருந்தது. யாருக்கும் தோன்றாத இரக்கம் அவனுக்குள் சுரந்தது. தூக்கிக்கொண்டு வந்தான். ஓலைப் பெட்டியால் கவிழ்த்து மூடினான். பெரிய காரியவாதி போன்ற பாவனையுடன் அம்மாவுக்குச் சொன்னான். "வளர்ந்தாப் பிறகு நல்லது…மரநாய் வராதம்மா….கோழிகளுக்குக் காவலாயிருக்கும்." தினமும் செங்காரிப் பசுவில் பால் கறந்து ஊட்டினான். அவனுக்குத் தெரியும், எந்தப் பசுவின் பால் ருசியும், கொழுப்பும் மிக்கதென்று.

அம்மா மாடுகளை நோக்கிப் போனாள். நாய் அம்மாவின் கால்களைத் தடுக்கப் பண்ணி விளையாடியபடி பின்னே ஓடியது. வாலிபத்தில் துள்ளுகிறது நாய். கொழுப்பேறி உடல் பளபளக்கிறது. நன்றாகத் தான் கொழுத்துவிட்டது. சீலன் கூட கொழுகொழு என்றுதான் இருந்தான். திரட்சியான கன்னங்களும், காந்தக் கண்களுமாக…எவ்வளவு அழகனாக இருந்தான் இந்த அம்மாவின் மகன்! அமைதியாக இருந்தான். ரேடியோவைக் கூட சத்தமாக முடுக்கி விட மாட்டான். அவனைச் சுற்றி மட்டுமே இசை இருக்கும். அவன் படிக்கும்போது கூட ரேடியோ முன்னாலிருந்து எதாவது முணுமுணுத்துக் கொண்டிருக்கும். சைக்கிளைத் துடைக்கும் போதும் பாடியவாறு பார்த்துக் கொண்டிருக்கும், ஒவ்வொரு நாளும் உதயகாலத்தில் 'பளபள' வென மின்னுமாறு சைக்கிளைத் துடைப்பான். காற்று இருக்கிறதா எனக் கவனித்து திருப்தியுடன் தலையைக் குலுக்குவான். எதிலும் ஒரு ஒழுங்கு அவனிடம் இருந்தது. அவன் போன பிறகு எல்லாமே ஒழுங்கற்றுப் போயிற்று. ரேடியோ அநேகமாக மெளனித்து விட்டது. அந்த வீடே ஜீவனற்றுப் போயிற்று. சைக்கிள் சீந்துவாரற்று தூசி படிந்துபோய், ரயர்கள் காற்று இறங்கி மெலிந்துவிட சுவரோடு சாய்ந்து வைக்கப்பட்டு விட்டது. குலத்துக்கு சைக்கில் அவசியமென்றில்லை. அவனுக்கு நேரத்துக்கு ஒரு வாகனம், காரோ, வானோ, மோட்டார் பைக்கோ….காற்றைக் கிழித்துக்கொண்டு வருபவனென வந்து நிற்பான்.

சீலன் போன பிறகு இந்த வீட்டில் முரட்டுத்தனமும், மெளனமும், அம்மாவின் ஏக்கப்பெரு மூச்சுகளும் மட்டுமே மிஞ்சிநிற்கின்றன. மகளோவெனில் மிகவும் சின்னவள். புரியாத பேதை. அழகிய சிறு மொட்டு. சீலன் ஏன் வீட்டை விட்டுப் போனான்? அம்மா நன்றாகவே கவனித்தாள். சில நாட்களாக சீலன் சரியாகவே இல்லை. பரீட்சை வேறு நெருங்கிக் கொண்டிருந்தது. எதையோ குறித்து தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது; எதையோ குறித்து மிகவும் கவலை கொள்பவனாகவும் தெரிந்தது. பரீட்சையை நினைத்துக் கலவரப் படுகிறானே? ஏன், நன்றாகத்தானே படித்தான்! பிடிப்பில்லாதவன் போலக் காணப்பட்டான். அம்மாவை நிமிர்ந்து பார்ப்பதைத் தவிர்த்தான். வாய்க்குள் ஏதோ முனகிக்கொள்பவனாய் தலையை அடிக்கடிகுலுக்கினான். இரவு நேரங்களில் நித்திரையைத் தொலைத்து விட்டான். புரண்டு புரண்டு படுக்கின்ற அரவங்கள் கேட்டன. காலை நேரங்களில் அவன் சைக்கிளைத் துடைப்பதில்லை. ரேடியோவை மீட்டுவதில்லை. ஆம்! ரேடியோவை அவன் மீட்டுவதாகத் தான் அம்மா இவ்வளவு காலமும் எண்ணினாள். ரேடியோவில் இருந்து அவனது இனிய சாரமே மிதந்து வருகிறது போல…உலகின் இனிய வஸ்துகள் யாவும் அவனுக்காகவே படைக்கப்பட்டிருப்பதென….அவன் தொட்டதெல்லாம் துலங்கும் என….அவனுக்காக எங்கோ ஒரு அரிய நங்கை வளர்ந்து வருகிறாள் என…அவர்கள் அம்மாவுக்கு அழகிய, மதலை குதம்பும் பேரக் குழந்தைகளைப் பெற்றுத் தருவார்கள் என…. சீலனோ எனில், சில நாட்களாக ஏனோ தானோ என மாறிவிட்டான். பரீட்சை எழுதப் போனான். மற்றப் பையன்களிடம் காணப்பட்ட ஆர்வமோ பரபரப்போ அவனிடம் காணப்படவில்லை. அம்மா அவனை ஏதும் கேட்கவில்லை. அவளது இனிய குழந்தையைத் தொந்தரவு செய்ய அவள் விரும்பவில்லை. எங்காவது காதல், கீதல்…என்று ஏதாவது?….அவனாகவே சொல்லட்டும் என விட்டு விட்டாள்.

"நேரமாகுதெல்லே மேனே…." சரியாக சாப்பிடத்தானும் இல்லை. சைக்கிளில் ஏறி உட்கார்ந்தான், வழமை போல் ஒரே தாவலில் ஏறிப் பறந்து விடவில்லை. மிக நிதானமாக ஏறி உட்கார்ந்தான். காற்றை அளப்பவனைப்போல் சுற்றிலும் பார்வை ஓட்டினான். "போயிட்டு வாறன் அம்மா….." "வடிவாக் கடவுளை நேர்ந்து கொண்டு போ…." பிறகும் ஏன் நிற்கிறான்…… "நேரமாகுதெல்லே…." "நான் போறன்….." மொட்டையாக முணுமுணுத்தான். மெல்ல மெல்ல ஒரு கிழவனைப் போல உழக்கிக்கொண்டு போனான். அம்மா அவன் பின்னாலேயே போனாள். தெருவில் இறங்கி நின்றுகொண்டு அவன் போவதைப் பார்த்தாள் முடுக்கால் திரும்பி மறையுமுன் 'சட்' என ஒருதரம் திரும்பிப் பார்த்தான். அம்மா உள்ளே வந்தாள். சற்று நேரம் திண்ணையில் உட்கார்ந்தாள். பிறகு, தலைக்கு எண்ணெய் பூசி சீவி முடிந்துகொள்ள நினைத்து எண்ணெய்ப் போத்தலைத் தேடினாள்.

வாசலில் யாரோ சைக்கிளில் வந்து நிற்பதைப் போல உணர்ந்தாள். எட்டிப்பார்த்தாள். சீலன்! என்னவாயிற்று இன்று இவனுக்கு? மீண்டும் சீலன் உள்ளே வந்தான். எதையாவது மறந்து போய் விட்டுவிட்டுப் போனானோ? திண்ணையில் ஏறி அமர்ந்தான். முகம் செத்துப்போய் இருந்தது. "ஏன் மேனே தலையிடிக்குதோ….." "சாச் சாய்….." குனிந்துநிலத்தை கீறவாரம்பித்தான். "இரு கோப்பி போட்டுத் தாறன்…." "…….." "இண்டைக்குப் பாடம் உனக்கு ஓடாதோ?" அசிரத்தையாகத் தலையைக் குலுக்கினான். "அப்ப ஏன் ஒரு மாதிரியாய் இருக்கிறாய்?" "……." "காசு….கீசு….ஏதாவது வேணுமோ?" சிரித்தான் அவசரமாகக் கோப்பி கொண்டு வந்து கொடுத்தாள். வாங்கினான். இல்லை, பறித்தான்! அவனது ஆவலும் பரபரப்பும் அம்மாவை வியப்பிலாழ்த்தின. வாங்கும் போது அம்மாவின் கைகளை அவன் விரல்கள் தீண்டின. என்றுமில்லாத அழுத்தம் அவ்விரல்களில் இருந்தது. உள்ளங்கைகள் பிசுபிசுத்து வியர்த்திருந்தன. "தங்கச்சி எங்கை அம்மா……?" "ப்ச்…உங்கை தான் எங்கையாவது போயிருப்பாள்" "……" "ஏன்" "சும்மா தான்" "அவளைப் பார்த்துக் கொண்டு நில்லாமல் வெளிக்கிடு….நேரம் போகுது….."

ஏதோ ஒரு உறுதியுடன் விருட்டென எழுந்தான். விறைந்து நின்று கொண்டான். சிறு நேரம். ஒரு நொடி அம்மாவின் கண்களைக் கூர்ந்து பார்த்தான். அவளது கண்களுக்குள் எதையோ தேடினான் போலும்! "நான்……போ-ற-ன்….அம்மா!" வெடுக்கெனத் திரும்பிச் சைக்களில் பாய்ந்து ஏறினான். வெகுவேகமாகப் போனான். ஏதோ ஒரு இனம்புரியாத சக்தி அவனை அம்மாவிடமிருந்து பிரித்து இழுத்துச் செல்கிறதென…. அம்மா கலவரத்துடன் தெருவுக்கு விரைந்தாள். சீலன் முடுக்கால் திரும்பி மறைந்து கொண்டிருந்தான். ஒரு தரம் திரும்பிப் பார்ப்பான் என எதிர்பார்த்தாள். அவன் பார்க்கவில்லை. ஆனால் ஹாண்டிலில் ஒரு சிறு பொலித்தீன் பை தொங்கிக் கொண்டிருப்பதை அம்மா அப்போதுதான் கவனித்தாள். சைக்கிள் சில்லு தெரு நீளத்துக்கு பாம்பு ஊர்ந்து போன சுவடாகத் தடம் பதித்துத் தெரிந்தது. அம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. புருவங்களைச் சுருக்கினாள்.

மாலையில் யாவும் புரிந்தன. தயங்கித் தயங்கி ஒரு பையன் சீலனின் கைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தான். தலையைக் குனிந்து கொண்டே போய்ச் சுவருடன் சைக்கிளைச் சாத்தினான். அவனை எங்கோ பார்த்த ஞாபகம் காட்டிற்று அம்மாவுக்கு. அம்மாவின் முகத்தைப் பாராமல் எங்கோ வேண்டுமென்றே பார்வையைத் திருப்பினான். வெகு ஆயத்தமாக தொண்டையைச் செருமிச் சரிபண்ணிக் கொண்டான். "சீலன்….இதை…இஞ்சை கொண்டு வந்து விடச் சொன்னவர்…." "ஆங்!. சீலன் எங்கையப்பு…" "……" "ஐயோ! என்ரை பிள்ளை…." அந்தக் குரலின் அவலம் பையனைத் துரத்தியது. தலையைத் குனிந்தவனாய் விடுவிடென விரைந்து போனான். அம்மா பதைத்தாள் கிரீச்சிட்டாள். "சீலன் எங்கையப்பு…." பையன் பின்னே தட்டுத்தடுமாறி ஓடியபடி அம்மா கேட்டாள். அவன் பதில் சொல்ல முடியாமல் ஓடத் தொடங்கினான். "சீலன் எங்கையப்பு…." இலேசாக குளிர்ந்துபோய் தன்னைக் கடந்துபோன காற்றை, அம்மா கேட்டாள், அது மெளனமாகப் போனது. இவ்வாறான எத்தனை அன்னையரின் சோகங்களை அது பார்த்திருக்கிறது! அது பேசாமல் போனது. "ஐயோ, என்ரை சீலன் எங்கே…." சிவந்து மின்னிக் கொண்டிருந்த அந்திவானை அம்மா கேட்டாள். இவ்வாறான எத்தனை சீலன்கள் அதன் கீழ் உள்ளனர். அது பேசாமல் கண்ணை மூடிற்று. "சீலன் எங்கை?" அவளுக்குத் திருப்பிதயான பதிலைத் தர ஒருவரும் இல்லை. "சீலன் எங்கை?" அம்மாவின் பரிதாபமான அக்கேள்வி ஊர் மேல் ஓங்கி அடித்தது. அம்மாவைச் சுற்றி ஊர்ப்பெண்கள் ஒவ்வொருவராகக் கூடத் தொடங்கினார்கள்.

அவளுக்குப் புரிந்தது சீலன் எங்கே போனான் என்று! இவ்வாறான எத்தனை கதைகளை அவர்கள் அறிந்திருக்கின்றனர். அம்மாவை ஆதரவாக உள்ளே கூட்டிப்போயினர். பிறகு, அந்த எளிமையான சிறிய வீட்டின் ஆனந்தவாழ்வும் அவனுடன் கூடப் போய்விட்டதாய்…. வெறுமை, மாலை நேரங்களில் அம்மா ஊரை நீங்கித் தூரே இருக்கின்ற வயல்வெளிகளிலும், பனங்கூடல்களுக்குள் தனித்துக் கிடக்கின்ற திடல்களிலும் புல் செதுக்கிக் கொண்டு வரப் போவாள். முழுத் தூரமும் இளைத்து, இளைத்து முதுகொடியச் சுமந்து வந்தாள். அவள் பாரத்தை மாற்றிக்கொள்ள யாருமில்லை. அவள் பாதி வழியில் வரும்போதே முருகன் கோயில் மணி சிணுங்கிக் கேட்கும். அவளால் வேளா வேளைக்கு பூசை காணப்போக முடியவில்லை. அவள் போகும்போது கோயில் நிசப்தமாக இருளில் மூழ்கி இருக்கும். பூசை முடிந்து போனதின் தடங்களாக. சிந்திக் கிடக்கின்ற சில மலர்களும்…மெல்லமெல்லக் காற்றில் கரைந்து கொண்டிருக்கிற கற்பூர வாசனையும்…. முணுக்கென எரிகின்ற ஒரு சிறு தூண்டாமணி விளக்கும்…இழுத்துப் பூட்டப்பட்டிருக்கிற சித்திர வேலைப் பாட்டுடன் கூடிய கனத்த கதவும்…

தொடர்ச்சி

ToTop