ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

சிங்கப்பூரிலிருந்து சிலிக்கன்வேலி வரை: தகவல் நெடுஞ்சாலையில் தமிழின் காலப்பயணம்…

(தமிழ் இணையம் 1997, 1999, 2000 மற்றும் 2001 ஆகிய நான்கு மாநாடுகளிலும் கலந்து கொண்டிருக்கும் இந்த கட்டுரையாளர் தற்போது மொழி தீர்வுகள் அளிக்கும் குளோபலிங்கோ நிறுவனத்தின் சி.இ.ஒ.-ஆக இருக்கிறார். சென்னையைச் சேர்ந்த இவரை senthil@globalingo.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.)

அந்த உருவகத்தில் பெரிதும் மாற்றம் இருப்பதாக தெரியவில்லை. 1997 ஆம் ஆண்டு. அது இணையத்தின் இளம்பருவம். கணித்தமிழ் வளர்ச்சியில் அது வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம். எந்த டாட்காம்களும் தமிழில் தடம்பதிக்காத காலம். டாம், டாப், டிஸ்கி போன்ற் செந்தரப்பட்ட மென்பொருள்கள் தமிழில் உலவாத காலம்.

தமிழ்கூறு நல்லுலகம் முழுவதும் தனிப்பட்ட தமிழ் ஆர்வலர்கள் சில்லுக்குள் செந்தமிழை செயலாற்ற தங்கள் பொன்னான நேரங்களை செலவிட்டுக்கொண்டிருந்தார்கள். அப்போது என்கோடிங் அரசியல்கூட அதிகமில்லை. எருமை மாடு காபி போடுகிறது என்பதைப் போன்ற ஆச்சரியபாவத்துடன் கம்ப்யூட்டரில் தமிழ் என்று, தமிழ், ஆங்கில, தமிழாங்கில பத்திரிக்கைகள் அதிசய செய்திகளை வெளியிட்டன.

அந்த தருணத்தில் பத்திரிக்கையாளனாக இருந்த நான், அன்று பணியாற்றிக்கொண்டிருந்த இந்தியா டுடே இதழுக்காக கணித்தமிழ் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். தமிழ் மென்பொருள்களின் குறியீட்டு முறையும் விசைப்பலகை முறையும் தரப்படுத்தப்படாமல், ஆளுக்கொரு முறையை பயன்படுத்திவந்த அந்த காலத்தில் இன்னொரு புறம் தகவல் தொழில்நுட்பமும் இணையமும் மின்னல்வேகத்தில் பரவிக்கொண்டிருந்தன. சென்னையின் முதல் இணைய உலவகத்தில் அப்போது ஒரு மணி நேரத்துக்கான கட்டணம் ரூ. 180 ஆக இருந்தது (டவுன்லோடு செய்ய தனிக்கட்டணமும் கேட்டார்கள்) ஆனால் அதே ஆண்டில் அசுரவேகத்தில் இணைய மையங்கள் வேகமாக வளர்ந்து ரூ. 50, ரூ. 30 என கட்டணம் குறைந்து, அதே வேகத்தில் இணைய பயனாளர்கள் எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருந்த காலம்.

தகவல் நெடுஞ்சாலையில் ஆங்கிலம் அதிவேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்க, தமிழ் தடுமாறிக்கொண்டிருந்ததைப் பார்க்க மனம் சகிக்கவில்லை. ஆதங்கமும் எரிச்சலும் பொங்க அப்போது எழுதிய அந்த கட்டுரைக்கு ‘தகவல் நெடுஞ்சாலையின் தமிழ் மாட்டுவண்டி’ என்று தலைப்பிட்டேன். சிலர் திட்டினார்கள். பலர் ரசித்தார்கள்… தமிழ் இணையத்தின் தந்தை என போற்றப்படும் மறைந்த சிங்கை பேராசிரியர் நா. கோவிந்தசாமி அதை ஒரு சாவலாக எடுத்துக் கொள்வதாகச் சொன்னார்.

2002 நான்கு தமிழ் இணைய மாநாடுகள் ஒடிவிட்டன. இப்போது நமக்கென்றொரு பன்னாட்டு அமைப்பாக உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (International Forum for Information Technology in Tamil – INFITT) இருக்கிறது. உத்தமம், அது ஆண்டு முழுக்க கணித்தமிழ் வளர்ச்சி குறித்த பணிக்குழுக்களின் செயல்பாடுகளோடு சர்வதேச அளவில் தமிழை முன்னுக்கு எடுத்துச்சென்றிருக்கிறது.

அதன் நடப்பு ஆண்டு மாநாடு இந்த மாதம் கலிபோர்னியாவில் நடக்கிறது. 1997 இல் ஒரு சாதாரண பல்கலைக்கழக ஆய்வரங்கமாகத் தொடங்கிய இந்த மாநாடு 1999 இல் சென்னையில் நடந்தபோது அன்றைய கலைஞர் அரசின் தலைமையில் பெரிய அளவில் மக்களைக் கவர்ந்த மாநாடாக பரிணமித்து, கணித்தமிழ் வளர்ச்சியில் தமிழ் நாட்டரசின் தலையீட்டை கொண்டு வந்தது. இதன் விளைவாக பல தமிழ் மென்பொருள் உருவாக்குநர்கள் சேர்ந்து செயல்படவும், தமிழ் மென்பொருள்களுக்கான குறியீட்டையும் விசைப்பலகை வடிவமைப்பையும் தரப்படுத்துதலை நோக்கி அந்த மாநாடு நம்மை அழைத்துச் சென்றது.

தொடர்ந்து 2000 இல் சிங்கப்பூரிலும் 2001 இல் கோலாலம்பூரிலும் நடந்த தமிழ் இணைய மாநாடுகள் புதுப்புது தமிழ் தகவல் தொழில்நுட்ப கருவிகளும் மென்பொருள்களும் பிறக்க வழிவகுத்தன. ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்கள் பங்கேற்போடு தமிழ் இணைய மாநாடுகள் தமிழர் விழாக்களாக மாறின. இதே காலகட்டத்தில், தமிழ்நாட்டில், குறிப்பாக கணித்தமிழ் சங்கத்தின் முயற்சியால் ஒரு விரிவான தமிழ் மென்பொருள் சந்தையும் செயல்களமும் உருவாயின. இந்த பின்புலத்தில் வைத்துப்பார்க்கும்போது, தற்போதைய சிலிக்கன்வேலி தமிழ் மாநாடு ஒரு சாதாரண விஷயமே அல்ல. தற்கால தமிழ் சமூகத்தின் மாபெரும் சாதனை அது.

தகவல் தொழில்நுட்பத்தில் பின்தங்கிவிடக்கூடாது என்ற ஆதங்கத்தில் தொடங்கிய கணித்தமிழ் இயக்கத்தின், இணையத்தமிழ் இயக்கத்தின் ஐந்தாவது மாநாட்டில் மைக்ரோசா·ப்ட், சன் உள்பட பல அடிப்படை தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தமிழ் மொழி தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னேற தங்கள் தீர்வுகளை சொல்வார்கள் என்பதான வளர்ச்சி இந்த இயக்கத்தின் போக்கு சரியான திசையில்தான் இருக்கிறது என்பதற்கான அடையாளமாகும்.

ஆனால், இந்த மாற்றங்கள் அல்லது நிலைமை சட்டென்று உருவாகிவிடவில்லை. இவை உருவான வரலாற்றுப்பாதை நெடுக எல்லாமும் சரியாக நடந்துவிடவுமில்லை. அடிப்படை பிரச்னைகள இன்னமும் தீர்க்கப்பட்டவிடவுமில்லை. மகிழ்ச்சியான மாநாட்டு வேளையில் இதுகுறித்து பேசுவது அமங்களகரமாக இருக்கலாம். ஆனால் இது தமிழ் வளர்ச்சி தொடர்பானது அதுவும் தொழில்நுட்பம் தொடர்பானது என்பதால் இதில் உணர்ச்சிவசப்படுவதற்கு அவசியமில்லை.

நடந்து முடிந்த நான்கு தமிழ் இணைய மாநாடுகளின் அடிப்படை இலக்கு என்ன? இந்த மாநாடுகள் குறித்து தமிழ் மென்பொருள் உருவாக்குநர்கள் தவிர வேறு பலரும் – தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழ் மென்பொருள் பயனாளர்கள், அரசு தலைவர்கள் ஆகியோர் காட்டிய அக்கறைக்கு பின்னால் நின்றது எது?

ஒன்றுபட்ட தமிழ் குறியீட்டு முறைமை வரும் என்கிற எதிர்பார்ப்பு. எந்த மென்பொருளிலும் தமிழுக்கான என்கோடிங் ஒன்றாகவே இருக்கவேண்டும் என்பதற்கான வேட்கை.

இந்த இலட்சியம் அடையப்பட்டுவிட்டதா? துரதிருஷ்டவசமாக இல்லை. இப்போது டாம்/டாப் என்றொரு இரட்டை குறியீட்டு முறையையும் டிஸ்கி என்றொரு இன்னொரு குறியீட்டு முறையும் அதிகாரப்பூர்வமாக தமிழின் குறியீட்டு முறைகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

அடிப்படையே ஆட்டம் கண்டுவிட்டது. ஆனால் இதற்கு யாரையும் நோகமுடியவில்லை. ஆரம்பத்திலிருந்தே தனித்தனியே செயல்பட்டு பழகிப்போன தமிழன மக்களுக்கு ஒருமை என்பது மரபணுக்களில் இல்லைதான் போலிருக்கிறது. 1999 மாநாட்டில் கலைஞர் கற்பனை செய்த அந்த எட்டாவது அதிசயம் – உலகத்தமிழரெல்லாம் ஒன்றுகூடி ஒரு முடிவை எடுத்தேவிட்டார்கள் என்கிற அதிசயம் – கடைசியில் நடக்கவேயில்லை. அன்று தமிழ் அன்பர்கள் உகுத்த ஆனந்த கண்ணீர் விரவிய கன்னங்களில் பின்பு விழுந்தது தோல்வியின் வலுத்த அறை.

தமிழ் மென்பொருள் உருவாக்குநர்களும் அதன் தீவிர பயன்பாட்டாளர்களும் மேற்கொண்ட அதிதீவிர சார்பு நிலைகளால் ஒருமைப்பாடு எட்டப்படமுடியாமல் போயிற்று. தமிழ்நாட்டு மென்பொருளாளர்கள், தமிழ் நாட்டுக்கு வெளியேயுள்ள மென்பொருளார்கள் என்பதான ஒரு புதிய ஜாதியம் நுழைந்தது. இரு தரப்பினரும் தங்களுக்கேயுரிய பிரச்னைகளை வைத்திருக்கிறார்கள். தங்களது நலன்களின் (அது என்னவென்பது தமிழன்னைக்கே வெளிச்சம்) சார்பாக அவரவர்கள் செயல்பட்டார்கள். நடுநிலையாளர்கள் செயலிழந்து நின்றார்கள். பின்பு – கடந்த மாநாட்டில் எந்த தரப்புக்குமே முழுமையான மகிழ்ச்சி தராத நிலையில் – தமிழர்களின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான நிலைமை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதில் வேடிக்கையென்றால், உலகம் முழுவதும் யூனிகோட் என்கிற அனைத்து மொழிக்களுக்குமான பொது குறியீட்டு முறையை நோக்கி செல்லும் தருணத்தில் இந்த வேற்றுமை வேடிக்கை நிகழ்த்தப்பட்டதுதான். டாபுக்கும் டிஸ்கிக்கும் அற்பாயுசுதான் என்று தெரிந்தும் இந்த அரசியல் நிகழ்ச்சி நடந்தேறியதுதான்.

மற்றபடி, உத்தமம், கணித்தமிழ் சங்கம் போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளில் பெரிதும் குறைகாணுவதில் அர்த்தமில்லை. அடிப்படையும் இல்லை. தேவையும் இல்லை. எல்லோருமாக சேர்ந்து, கணிப்பொறியை நோக்கி வரும் சாதாரணத் தமிழர்களின் தேவையை அலட்சியப்படுத்திவிட்டார்கள் என்கிற ஆதங்கம் பழையனூர் நீலியின் ஆவியாக தொடர்ந்து சுற்றிக்கொண்டுதான் இருக்கும் கொஞ்சகாலம் வரை. அதாவது மைக்ரோசா·ப்ட்டும் பிற நிறுவனங்களும் தங்கள் தரப்படுத்தப்படுத்தத்தை நமது முகத்தில் அறைந்தாற் போல திணிக்கத்தொடங்கியிருக்கிறார்களே, அது வெற்றிகரமாக தமிழ் சமூகத்தால் உள்வாங்கப்பட்டு முடியும் காலம் வரை.

நமது தமிழ் மென்பொருள் அன்பர்களின் அனைத்து உழைப்பும் முதலீடும் வீணாகப் போய்விடாமலிருக்க உத்தமம், க.த.சங்கம் ஆகியவை எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பல இருக்கின்றன. தமிழ் இணைய மாநாடுகள் – முந்தைய தலைமுறையில் பிரபலமாக இருந்த உலகத் தமிழ் மாநாடுகளைப் போல – பொலிவிழந்து போகாமலிருக்க அது அவசியம்.

அதற்கு அவர்கள் தமிழ்நாட்டின் அரசு, தனியார் துறை, கல்வி, மருத்துவம் போன்ற எல்லா அதிமுக்கியத்துறைகளிலும் தமிழைப் பயன்படுத்துவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள டிஜிட்டல் டிவைடை நீக்குவதற்கான முயற்சியில் என்ஜீஓ-களோடு இணைந்து செயலாற்ற வேண்டும். தமிழ் உள்ளடக்க உருவாக்குநர்களோடு இணைந்து செயல்பட வேண்டும். வணிகத்தமிழும் தொழில்நுட்பத் தமிழும் வளராமல் கணித்தமிழ் மட்டும் தனித்தமிழாக வளர்வதற்கு வாய்ப்பில்லை.

எனவே தமிழ் இணைய மாநாடுகள் சற்றே விரிவடைந்து தமிழர் இணைய மாநாடுகளாக பரிணமிக்க வேண்டும். அது தமிழர் அரசு, நிர்வாக, பொருளாதார மேம்பாட்டு ஆய்வரங்கங்களாக மாறவேண்டும். தனது கருப்பொருளான கணித்தமிழை விட்டுவிடாமல் அதைச் சுற்றி தமிழர் வளர்ச்சி மாநாடக அது மாறவேண்டும். தனிப்பட்ட நிலையில் அதற்கான முன்முயற்சிகளை எடுக்க தற்போது ஆளில்லை என்பது உண்மைதான். ஆனால் அந்த தேவை வேறு யாருக்கும் விட தமிழ் மென்பொருள் சந்தையாளர்களுக்கு இருக்கிறதே! அது ஒரு இன அரசியல் நடவடிக்கை அல்ல. சந்தை உருவாக்க நடவடிக்கை. உலக சந்தையில், உலக நாகரிக முகிழ்ச்சியில் நமக்கான இடத்தை தயார்ப்படுத்திக்கொள்வதற்கான நடவடிக்கை.

அந்த நிலைமையை நாம் இன்று பெற்றில்லாத காரணத்தால்தான் இன்றும் தமிழ் மொழி கணிப்பொறி யுகத்திற்கான செயல்பாட்டு தளங்களில் ஆட்சி புரியவில்லை. நமது நான்கைந்து ஆண்டு கால நடவடிக்கைகள் அனைத்தும் உருவாக்கிய மாட்சிமை தமிழ் மாட்டுவண்டிக்கு புதுவிசையை கொடுத்திருக்கிறது. அவ்வளவேதான். இப்போது தகவல் நெடுஞ்சாலையில் தமிழ் மாட்டுவண்டி வேகமாக போகிறது. ஏனெனில் காளைகளுக்கு பதில் ஒரு எஞ்சினை பொருத்தியிருக்கிறோம் – 1997 க்குப் பிந்தைய செயல்பாடுகளால். மாறியிருப்பது எஞ்சின்தான்.

ஆனால் காலத்தால் பின்தங்கிய வாகனத்தை மாற்றவில்லை. தமிழ் மாட்டுவண்டி மாட்டுவண்டியாகத்தான் இருக்கிறது.

புதிய வாகனத்தை செய்வதற்கான தொழில்நுட்பமும், செய்விக்கும் தொழிலகமும் கச்சாப் பொருள்களும் மனித வளமும் இல்லாமலில்லை. முதலீடு கிடைக்காமலில்லை. இல்லாத ஒரே விஷயம் சந்தை. அதை உருவாக்குவதுதான் இப்போதைய வேலை. அது நடக்க வேண்டும் என்றால் அடுத்த தமிழ் இணைய மாநாட்டை சின்னாளப்பட்டியில் கூட்ட வேண்டும், நடக்கிற காரியமா இது?

செ. ச. செந்தில்நாதன்

நன்றி: ஆறாம்திணை

ToTop