ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

இணையம்

எதிர்பாராமல் பிறந்த இணையம் என்கிற மகத்தான தகவல் புரட்சியின் விளைவுகள் கூட யாரும் எதிர்பாராததாகவே இருக்கிறது.
இணையம் ஒரு வல்லரசின் இராணுவத் தேவைக்காகப் பிறந்தது. அது உலக மயமாகும் சந்தையைப் பின்தொடர்ந்து உலகத்தில் பரவியது. அது தகவல் தொழில்நுட்பம் தொலைத்தொடர்பு என்கிற இரு ராட்சசத் தொழில்நுட்பத் தொழில்துறைகளும் கைகோர்த்துக் கொண்டதால் எழுந்தது. அது பெரும்பாலும் அமெரிக்க மூலதனம், அமெரிக்கச் சந்தை,அமெரிக்கக் கலாச்சாரம் செல்லும் வழியில் சென்று கொண்டிருப்பது. அது தொடக்கத்திலிருந்தே ஆங்கில மொழியையே அடிப்படைத் தொடர்பு ஊடகமாகக் கொண்டிருக்கிறது. தமிழோ, சீனமோ ஒரு வலையகத்தில் உள்ள மொழி எதுவாயினும் அதன் முகவரி ஆங்கிலத்தில்தான் இருக்கிறது. உலகத்தையே ஒரு தகவல் குடையின் கீழ் கொண்டு வந்து அதன் மூலம் தன் ஏகாதிபத்தியத்தை என்றென்றைக்குமாகத் தொடர உலகின் ஒரு தரப்பு மக்கள் பிரிவினர் (அமெரிக்கர்-வெள்ளையர்-ஆங்கில மொழியினர்) செய்த சதி என்று இதை விமர்சித்ததுமுண்டு.

இவை அனைத்தும் பொய்யல்ல. ஆனால், வேறு உண்மைகளும் இருக்கின்றன. இணையம் பல புதுமைகளைப் பெற்றிருக்கிறது. எடுத்துக்காட்டாக, மனித இனத்தின் முதல் பன்மொழி ஊடகம் என்று அது அழைக்கப்படுகிறது. அது சந்தை முதன்மைப்படுத்தும் கலாச்சாரங்களுக்கு மாற்றாக, எண்ணற்ற பிற கலாச்சாரங்களுக்கான பாலமாகவும் இருக்கிறது. அது எதிர்பாராதவர்கள் மத்தியில் புதிய உறவுகளை உருவாக்குகிறது. உலகம் முழுவதிலும் உள்ள ஒரு குறிப்பிட்ட இனத்தவரை அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயங்களில் ஒற்றுமை உடையவர்களை இணைக்க இணையம் போல ஒரு ஊடகம் இதுவரை வாய்த்ததில்லை. நாம் ஒரு பன்னாட்டுத் தமிழ் உறவை வேறு ஊடகங்கள் மூலம் சாத்தியப்படுத்த முடிந்ததில்லை.

மகத்தான வியூகங்களை அமைக்காமலேயே இணையம் அதைச் சாதிக்கிறது. அது ஒரு வித்தியாசமான ஊடகம். புத்தகங்கள் ஒரே சமயத்தில் பன்மொழித் தன்மையுடையனவாக இருப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட அலைவரிசை ஒரே சமயத்தில் பல மொழிகள் பேசுவதில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட வலையகம் ஒரே சமயத்தில் பல மொழிகளைப் பேச முடியும். மொழித் தேர்வை வேறு எங்கும் போல் அல்லாமல் இங்கே படிப்பவர்களிடம் விட்டு விடலாம்.

இணையம் ஒரு பன்மொழி ஊடகம் என்று சொல்கிறபோது அதில் வேறு பல உண்மைகளும் அடங்கியிருக்கின்றன. கூட்டன்பர்கின் அச்சுப்பொறி புரட்சிக்குப் பிறகு எல்லா மொழிகளுக்கும் கிடைத்திருக்கும் ஓர் பதிவு சாதனமாக இணையம் விளங்கியிருக்கிறது. நூறே பேர் பேசும் ஒரு பழங்குடியினர் மொழியில் ஒரு புத்தகம் போட சாத்தியமாவ தில்லை. அல்லது பேசுவோர் எண்ணிக்கை கோடிகளில் இல்லாத பட்சத்தில் அதன் அலைவரிசையில் விண்மீன்களும், சூரியனும் முளைப்பதில்லை. ஆனால், எனக்கும் உங்களுக்கும் மட்டுமே தெரிந்த ஒரு மொழியில் நம்மிருவருக்குமான ஒரு பதிவை இணையத்தில் செய்ய முடியும்.
இணையத்தின் வளர்ச்சி அப்படி இருக்கிறது. அதனால் இதுவரை அச்சேறாத மொழிகள் கூட பேச்சுமொழியாக ஒலித்தொடராக இணையம் என்னும் பல்லூடகத்தில் இடம் பெற முடியும்.

நூற்றுக் கணக்கான செயற்கை மொழிகளுக்குக் கூட இணையத்தில் பக்கங்கள் இருக்கின்றன. தமிழ் : இன்னொரு ஆயிரத்தாண்டுக்கும் அணியமாக… இனம் சார்ந்து மட்டுமே பேசப்படும் ஆயிரக்கணக்கான மொழிகளில் ஒன்று தமிழ். அது பல நாடுகளில் பேசப்பட்டாலும் தமிழர்களால் மட்டுமே பேசப்படும் மொழி. அது ஆங்கிலம் போல ஸ்பானிஷ் போல பன்னாட்டுத் தகவல் ஊடகமல்ல. எனவே, தமிழை ஒத்த மொழிகள் – இந்தியோ, திபெத்தியனோ – சீக்கிரம் பட்டுப்போய்விடும் என்று சிலர் கட்டியம் கூறினார்கள். ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்’ என்ற அவநம்பிக்கை பரப்பப்பட்டது. தமிழ் புதிய தலைமுறைகளால் கைவிடப்பட்டு பொருண்மிய வாழ்க்கைக்கு ஆங்கிலம், கலாச்சாரத்துக்குத் தமிங்கிலம் என சூழல் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டது. இப்போதெல்லாம், தமிழால் அல்லது இதைப் போன்ற வேறு இன மொழிகளால் இனி உயிர்ப்புடன் இயங்க முடியாது என்பதைச் சொல்ல அந்தந்த மொழியினரே தயங்குவதில்லை. ஆனால், திடீரென்று இணையம் அந்த அவநம்பிக்கைவாதிகளுக்கு முகத்தில் அறைந்தது போல் பதில் சொல்ல ஆரம்பித்திருக்கிறது. நூற்றுக்கணக்கான தமிழ் வலையகங்களுக்கு லட்சக்கணக்கான வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் புதிய ஆயிரத்தாண்டு பிறக்கும் தருவாயில் நம்மை மகிழ்ச்சி கொள்ள வைக்கும் சேதி.

தமிழர்கள் மறுபடியும் ஒரு புதிய ஊடகத்தின் பின் ஓடுகிறார்கள் என்பதல்ல அந்த சேதிக்கு உள்ளர்த்தம். இணையம் என்பது அடிப்படையில் டிஜிட்டல் வடிவத்திலுள்ள தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஊடகம். டிஜிட்டல் வடிவத்தில் தமிழ் என்பதுதான் இங்கே அழுத்திச் சொல்ல வேண்டிய விஷயம். ஏனெனில், எல்லாவற்றுக்கும் மேலாக, எதிர்காலத் தகவல் தொடர்பின் அடிப்படையே டிஜிட்டல் வடிவம் தான் என்பது இன்று உலகமறிந்த உண்மை. அதனாலேயே இது ‘டிஜிட்டல் யுகம்’ என்றழைக்கப்படுகிறது.
அது மட்டுமல்ல. வேறொரு கோணத்திலும் இணையத்தில் தமிழ், கணித்தமிழ் போன்ற வளர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் உள்ளது. மூன்று விதமான தகவல் தொடர்பு முறைகளை ஒருங்கே கொண்டிருக்கிறது. முதலாவது, இரு தனி நபர்களுக்கிடையே மட்டும் நடக்கும் தனி நபர் நிலைப்பட்ட தொடர்புகள் (உதாரணம் – மின் அஞ்சல், அரட்டை) இரண்டாவது ஏதோ ஒரு சரடால் ஒன்றுபட்டவர்களுக்குள் நடக்கும் குழு நிலைப்பட்ட தொடர்புகள் (உதாரணம் – மின்னஞ்சல் அட்டவணைகள், செய்திக் குழுக்கள்). மூன்றாவது ஒரு தனி நபர் அல்லது நிறுவனம் பரவலாகத் தகவல் பெறுநர்களுக்காக நடத்தும் வெகு சன ஊடகங்கள் (உதாரணம் – வலையகங்கள், மின் அஞ்சல், மின் இதழ்கள்)

எந்த மொழி மேற்கண்ட மூன்று அடிப்படைத் தகவல் தொடர்பிலும் வளமாகக் கையாளப்படுகிறதோ அந்த மொழியை நிகழ் கால மொழி, உயிருள்ள மொழி, வளரும் மொழி என்கிறோம். தமிழ் இன்று நிகழ்மொழியாக இருப்பதற்குக் காரணம் அது இந்த மூன்று தளங்களிலும் பயன்பாட்டில் இருப்பதுதான். அதே சமயம், அதன் எதிர்காலம் குறித்துக் கவலைப்படக் காரணம் அது எல்லா புலங்களிலும் (தொழில், வணிகம், சட்டம், ஆன்மிகம், நிர்வாகம்) தகவல் தொடர்பு மொழியாக இல்லாமலிருப்பதுதான். இணையம் இந்தக் கவலையைத் தீர்க்க வந்த அருமருந்து என்று சொல்ல முடியாவிட்டாலும் அது அடிப்படையான மூன்று தகவல் தொடர்பு முறைகளிலும் தமிழ்ப் பயன்பாட்டுக்கு வழிவகை செய்துள்ளது. இன்று நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பக்கங்கள் உள்ளன. தமிழிலேயே மின் அஞ்சல் செய்ய வசதி இருக்கிறது. தமிழ் எழுத்துகளில் இல்லையென்றாலும் ரோமன்
வரிவடிவத்தில் தமிழில் அரட்டை அடிக்கிறார்கள். தமிழ் இனம், மொழி, அரசியல் பற்றி வம்பளக்கும் மின்னஞ்சல் அட்டவணைகள் உள்ளன. தமிழர்களை இணைக்கும் செய்திக் குழுக்களில் நாள்தோறும் பல தரப்பட்ட தகவல்கள் இடம் பெறுகின்றன.

வருங்காலத்தில் அடிப்படையான தகவல் தொடர்புகள் அனைத்தும் டிஜிட்டல் வடிவத்தில், இணையம் போன்ற ஏதோ ஒரு வலைப்பின்னலில் தான் நிகழப் போகிறது என்பதால் அந்தத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் தன்னை வளர்த்துக் கொள்ளத் தமிழ் தயாராக வேண்டிய
நிர்ப்பந்தம் இருக்கிறது. மகிழ்ச்சியான மாற்றம் என்னவென்றால் தமிழ் அந்த நிர்ப்பந்தத்தை ஒரு சவாலாகவும், சந்தர்ப்பமாகவும் எடுத்துக் கொண்டிருப்பதுதான். இந்த முன்னேற்றத்தைத்தான் ஒரு காலத்தின் அளவுகோலாக – திருப்புமுனையாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதை வெறுமனே ஒரு தொழில்நுட்ப அல்லது மீடியா மாற்றமாகக் கொள்ள முடியாது. ஏனெனில், இந்த மாற்றங்களுக்குப் பின்னுள்ள டிஜிட்டல் தொழில் நுட்பமும், தொலைத்தொடர்பு தொழில்நுட்பமும் ஒரு புதிய நாகரிகத்தின் தோற்றத்தைக் குறிப்பதால், உலகின் அத்தகைய போக்கோடு இசைந்து தமிழர்கள் மேற்கொண்ட ஒரு புதுப்பிப்பாகவே கணித்தமிழ்/தமிழ் இணைய வளர்ச்சியைப் பற்றிக் கூற முடியும். இந்த அர்த்தத்தில்தான் தமிழ் இன்னொரு மீடியா தலைமுறைக்கும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டதைப் பார்க்க முடியும். ஆனால், இந்த மாற்றங்களும் புதுப்பிப்பும் ஓரிரு நாளிலோ ஓரிரு நபராலோ நடந்ததல்ல. கணித்தமிழ் : காலத்தின் கட்டாயம் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் வளர்ச்சி குறித்துப் பிற்காலத்தில் திரும்பிப் பார்க்கும் ஓர் ஆராய்ச்சியாளர் நூற்றாண்டின் இறுதியில் நடைபெற்ற ஒரு திடீர் திருப்பத்தைக் கண்டுகொள்ளாமல் போக மாட்டார். அந்தத் திருப்பம் தமிழும், கணிப்பொறி நுட்பமும் கைகோர்த்துக் கொண்ட ஒரு அற்புத நிகழ்வாகும். மொழி, ஊடகங்களின் மூலமாகவே நிலைத்து நிற்கிறது. தொடர்ந்து நிலவுகிறது. பேச்சும் எழுத்தும் அவற்றுக்கே உரிய ஊடகங்களின் மூலமாகப் பயணித்து மொழி வழி சமூகங்களை நிலவச் செய்கின்றன திரைப்பாடலாக, வானொலிச் செய்தியாக, வார இதழாக, தொலைக்காட்சித் தொடராக. இதில் ஆரம்பத்தில் கல்வெட்டிலும், ஓலையிலும் இருந்த தமிழை அச்சுக்குக் கொண்டு வந்தது அச்சுப் பொறி. கூட்டன்பர்க்கின் அந்தக் கண்டுபிடிப்பு மொழியின் வரலாற்றோடு மொழித் தொழில்நுட்பம் என்ற ஒன்றைக் கொண்டு வந்தது. இந்த நூற்றாண்டில் கணனி நடைமுறைக்கு வந்ததும் அதுவும் அடிப்படையில் ஒரு மொழித் தொழில்நுட்பத்தையும் தன்னுடன் கொண்டு வந்தது. கணனி பதிப்புத் துறையில் நுழைந்தபோது அழகான எழுத்துருக்களை உருவாக்குவது என்கிற தேவை வளர்ந்தபோது அந்த மொழித் தொழில்நுட்பத்துக்கான தகவல் யுகத்துக்கான கடைக்கால் போடப்பட்டது.

தொழில்நுட்பத்தின் தேவை முதலில் பதிப்புத்துறையில் உணரப்பட்டது. பிறகு பல்வேறு மொழிகளில் சொல் செயலிகள். தரவுத் தளங்கள் போன்ற பயன்பாட்டு மென்பொருள்களை உருவாக்கக் கணனியின் இயங்கு தளத்துக்கேற்ற (operating systems) எழுத்துகளைப் படைக்க வேண்டியதாயிற்று. பிறகு இந்தப் பத்தாண்டின் தொடக்கத்தில் இணையம், மின் அஞ்சல் ஆகியவை பரவலான பிறகு தகவல் பரிமாற்றத்துக்கேற்ப எழுத்துகள் அமைய வேண்டியது குறித்த ஆய்வுகளில் மொழி நுட்பவியலாளர்கள் இறங்க வேண்டியதாயிற்று. அதாவது, ஒரு பனையோலையைப் பதனம் செய்து எழுதுவதற்குத் தயாராக்க வேண்டிய காலத்தில் நினைத்துக் கூடப் பார்த்திராத அளவில், காரீய எழுத்துகளில் அச்சிட்ட காலத்தில் கனவு கண்டிராத அளவுக்கு இன்று தகவல் தொடர்பு பேரளவுக்குத் தொழில்நுட்ப மயமாகி விட்டதால் மொழியின் வளர்ச்சியும் இருப்பும் கூட தொழில்நுட்பத்தின் கரங்களில் சிக்கிக் கொண்டது. இது நல்லதா கெட்டதா என்பதல்ல கேள்வி. இதை அனுமதிப்பதா இல்லையா என்பதும் கூட வீண் கேள்வியே. கேள்வி, இந்தத் தகவல் நுட்பத் தேவையை நாம் நம் மொழிக்காக நிறைவேற்ற முடியுமா என்பதே.முடியும் என்றல்ல. முடிந்திருக்கிறது என்கிற சாதகமான வரலாற்றைத்தான் நாம் பார்க்கிறோம். அது தான் கணித்தமிழின் வளர்ச்சி.

கணித்தமிழின் வரலாற்றை நாம் இப்போது பேசப் போவதில்லை. அதன் வரலாற்றில் நடந்த முக்கிய மாற்றங்களை மட்டுமே நாம் பேசப் போகிறோம். பதிப்புத்துறை, அலுவலகச் செயல்பாடு, பிறகு இணையம் என்று பல தளங்களில். தமிழ் மென்பொருள்கள் புழக்கத்துக்கு வந்த இந்தத் தொண்ணூறுகளில் கணனி மட்டும் இணையத்தில் தமிழைப் பயன்படுத்த ஆரம்பித்த போது தீர்க்க முடியாததாகத் தோன்றிய பிரச்சினை ஒன்று முளைத்தது. ஆங்கிலத்தில் உள்ள மென்பொருள்கள் அனைத்தும் தங்களுக்குள் எழுத்து வடிவத் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வசதியாக ASCII என்கிற எழுத்துக் குறியீட்டு முறை ஒன்றைப் பயன்படுத்துகின்றன. எழுத்துகளைக் கணிப்பொறிக்குப் புரியும் வகையில் குறியீடாக்கும் இந்தச் செயல் encoding எனப்படுகிறது. இந்தக் குறியீட்டாக்கம் என்பது அனைத்து மென்பொருள்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்படி செய்யப்படுகிறது. அதாவது ஆங்கிலத்துக்கான குறியீடு என்பது எல்லா இடங்களிலும் எல்லா மென்பொருள்களிலும் ஒன்றாகவே ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தகவல் தொழில் நுட்பத் துறையில் தரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அதைப் போலவே எழுத்துகளை உள்ளிடுவதற்கான விசைப்பலகையையும் , விசைப்பலகை அமைப்பு வடிவம் என்ற ஒரே அமைப்பாகத் தரப்படுத்தியிருக்கிறார்கள். இதே மாதிரியான தரப்படுத்தப்பட்ட சீர்மையான குறியீட்டு முறை தமிழுக்கும் வேண்டும் என்பதற்காகத் தமிழர்கள் முனைந்ததுதான் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு அற்புதம். இதைத் சாதித்ததன் மூலம் அவர்கள் டிஜிட்டல் யுகத்துக்கேற்பத் தமிழைத் தயார் செய்து விட்டார்கள். நீண்ட எதிர்காலத்துக்குத் தமிழைத் தொடரச் செய்வதற்காக, வருங்காலத்
தலைமுறையினருக்கு ஒரு பாரம்பரியச் சொத்தாகத் தமிழை மாற்றி விட்டார்கள். ஊர் கூடித் தேரிழுத்த கதை
கணித்தமிழ் வளர்ச்சி குறித்து நிகழ்ந்த மூன்று ஆய்வரங்குகளினூடே இந்த வரலாற்றைப் பதியலாம்.

1994 இல் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த ‘தமிழும் கணிப்பொறியும்’ என்கிற இருநாள் கருத்தரங்கிலேயே விசைப்பலகை தரப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. எனினும், அந்த முதல் முயற்சிக்கு அரசின் ஆதரவும் தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களின் ஆதரவும் அன்று கிடைக்கவில்லை. பின்னாளில் நடந்த இரு தமிழ் இணைய மாநாடுகளுக்கு முன்னோடியாக இந்தக் கருத்தரங்கைக் கூறலாம். பல்கலைக் கழக கணிப்பொறித் துறைப் பேராசிரியர் வி. கிருஷ்ணமூர்த்தியின் முன் முயற்சியில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கு கணித்தமிழ் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைக்க முயற்சித்தது. ஆனால், அந்த சகாப்தம் மூன்றாண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் தொடங்கியது. 1997 மே மாதம் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் கூட்டப்பட்ட முதல் பன்னாட்டுத் தமிழ்க் கணனி மற்றும் இணைய மாநாடுதான். கணித்தமிழ் வளர்ச்சியில் மட்டுமல்ல, தமிழ் வரலாற்றிலும் ஒரு புதிய திருப்புமுனையை உருவாக்கியது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் தமிழ்க் குறியீட்டு முறையைச் சரி வர உருவாக்குவதும் அதைத் தரப்படுத்துவது பற்றியும் வேகமாக உள்ளீடு செய்ய உதவும் ஒரு விசைப்பலகையை உருவாக்கித் தரப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தமிழகம், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பாவிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களும், பிற கணித்தமிழ் அறிஞர்களும் வந்து கலந்து கொண்டனர். Tamil Net 97 – International Symphosium for Tamil Information Processing and Resources on the Internet என்ற தலைப்பிலான அந்த மாநாடு உலகம் முழுதுமுள்ள மொழிநுட்பவியலாளர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்தது.

தமிழ் நெட் ’97, சிங்கப்பூரின் பிரபல தமிழ் எழுத்தாளரும், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் தமிழ் கல்வித்துறையில் பேராசிரியராகவும் பணிபுரிந்து ‘கணியன்’ மென்பொருள் மற்றும் வலையகத்தின் மூலம் உலகத் தமிழர் மத்தியில் புகழ் பெற்று மறைந்த நா. கோவிந்தசாமி எடுத்த முயற்சியில் நடத்தப்பட்டது. தமிழையும் ஆட்சிமொழியாகக் கொண்ட சிங்கையில், தேசியப் பல்கலைக்கழகத்தின் ‘இன்டர்நெட் ரிசர்ச் அண்டு டெவலப்மெண்ட் யூனிட்’ உடன் (Internet Research and Development Unit-IRDU) – இன்று Center for Internet
Research இணைந்து தமிழ் இணையத்துக்காக அடிப்படை ஆராய்ச்சிகளைத் தொடங்கிய நா.கோவிந்தசாமிதான் முதல் தமிழ் வலைப்பக்கத்தை வடிவமைத்தவர். அக்டோ பர் 1995 இல் சிங்கப்பூர் அதிபர் திரு. ஓங் டாங் சாங் தொடக்கி வைத்த Journey: Words, Home and Nation – Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன் முதலில் தமிழ் இணையம் பிரவேசம் செய்தது. அதை சாதித்த IRDU வின் குழுவில் கோவிந்தசாமியும், அவரோடு இணைந்து பணியாற்றிய வல்லுநர்கள் டாக்டர் டான் டின் வீ, லியோங் கோக் யாங் ஆகிய இரு சீனர்களும் முதல் தமிழ்ப் பக்கத்தை வலையேற்றிய பெருமைக்கு உரித்தானவர்கள். தமிழ்நெட் ’97 மாநாட்டின் தொடர்ச்சியாகக் கணித்தமிழ் தொழில் நுட்பப் பிரச்சினைகள் குறித்து ஒரு இணையத்தில் மெயிலிங் லிஸ்ட்கள் தொடங்கப்பட்டு விவாதங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட்டன. முரசு மென்பொருள் தயாரிப்பாளர் முத்தெழிலன், ஸ்விட்ஸர்லாந்திலிருந்து
‘புராஜெக்ட் மதுரை’ என்கிற தமிழ் மின்னுரைகளைத் தொகுத்து வரும் கல்யாணசுந்தரம், பெங்களூர் ‘ஆப்பிள்சாஃப்ட்’ நிறுவனத்தின் அன்பரசன் உள்பட பலர் இந்த விவாதங்களில் கலந்து கொண்டார்கள். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த மின்னஞ்சல் பட்டியலில் அலசப்பட்ட விஷயங்களைத் தொகுத்து வெளியிட்டால் அதை அதி முக்கிய ஆவணமாகப் பாதுகாத்து வைக்க வேண்டியிருக்கும். கண் முன் நடந்த வரலாற்றின் பதிவாக அது இருக்கும்.

அடுத்த மாநாடு 1999 இல் பிப்ரவரி 7-8 தேதிகளில் சென்னையில் நடந்தபோது காலம் வேகமாக உருண்டோடி விட்டிருந்தது. பொதுவாகவே தகவல் தொழில் நுட்பத் துறையில் அதிக கவனம் காட்டிய தமிழக முதல்வர் மு. கருணாநிதியும் தமிழக தகவல் தொழில்நுட்பப் பணிக்குழுவின் துணைத் தலைவரான இன்றைய மத்திய அமைச்சர் முரசொலி மாறனும் காட்டிய ஆர்வத்தின் விளைவாக ஒரு கல்வியாளர் கருத்தரங்காக மட்டுமே முடிந்து போயிருக்கக் கூடிய தமிழ் இணையம் ’99 ஒரு பெரிய மாநாடாக மாறியது மட்டுமல்ல, அது தீர்மானகரமான ஆய்வரங்காகவும் மாறியது.
முதல் மாநாட்டில் கலந்து கொள்ளாத தமிழகத்தைச் சேர்ந்த பல கல்வியாளர்களும், தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களும் அதிக அளவில் கலந்து கொண்டதன் மூலம் மாநாடு வெற்றிகரமானது. கடுமையான விவாதங்களுக்குப் பிறகு வடிவெழுத்து சார்ந்த (glyph) தனிமொழி, இரு மொழிக் குறியீட்டு முறைகளும் ஒரு புதிய விசைப்பலகையும் நகல் திட்டங்களாக அறிவிக்கப்பட்டு பிறகு 100 நாள் சர்வதேச விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டது.
இறுதியில் அன்று தமிழக அரசு தரப்படுத்தப்பட்ட விசைப் பலகையையும், குறியீட்டு முறைகளையும் அறிவித்தது. கணித்தமிழ் வளர்ச்சியில் முதல் மாநாடு ஒரு கவிதையை எழுதத் தொடங்கியதென்றால்
இரண்டாம் மாநாடு அதை ஒரு காவியமாக்கியது. இந்த மாநாட்டுக்குப் பின், கணித்தமிழ் என்கிற சொல் பிரபலமானது. இணையம் என்கிற வார்த்தை தமிழ் அகராதியில் நுழைந்தது. இந்த இரு மாநாடுகளுமே தமிழ் வளர்ச்சி தொடர்பான பல மாயைகளைத் தகர்த்தன. முதலில் தமிழர்கள் ஒன்றுபட்டு ஒரு முடிவை எடுக்க மாட்டார்கள் என்று தமிழ் ஆர்வலர்களே தங்கள் இயலாமையைப் புலம்பித் தீர்ப்பார்கள். ஆனால், இந்த மாநாட்டுக்குப் பிறகுதான் தமிழகத்தின் தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்கள் தங்களின் நலன்களையும், தமிழ் மென்பொருள் பயனாளிகளின் நலன்களைக் கருதியும் கணித்தமிழ் சங்கம் என்கிற அமைப்பை உருவாக்கினார்கள்.
தரப்படுத்துதல் சம்பந்தமாகவும் கணித்தமிழ் வளர்ச்சி தொடர்பாகவும் எவ்வளவோ விஷயங்கள் செய்யப்படாமல் இன்னும் இருக்கின்றன. உதாரணமாக, உலகப் பொதுக் குறியீட்டு முறையாக உருவாகி வரும் யூனிகோட் (UNICODE) முறையில் தமிழுக்கு முறையான இடத்தைப் பெற்றுத் தருவதற்கான ஆராய்ச்சியில் கணித்தமிழ் சங்கம் கூட்டாக இறங்கியிருக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறைக்கான தமிழ்க் கலைச்சொற்களை ஆக்கும் பணி தொடங்கியிருக்கிறது. தமிழ் இணையப் பல்கலைக்கழகம், தமிழ் மென்பொருள் படைப்பாளர்களுக்கான அரசு நிதி எனப் பல திட்டங்கள் மூலமாகத் தமிழக அரசும் கணித்தமிழ் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறது.
இதற்கிடையில், அடுத்த ஆண்டில் 2000 இல் கொழும்பில் தமிழ் இணைய மாநாட்டை நடத்துவதென்று இலங்கை அரசு தீர்மானித்திருக்கிறது.
கணித்தமிழ் என்பது பத்தாண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் பல தனித்தனி நிகழ்வுகளின் தொடர்ச்சிதான் என்றாலும், தமிழ் இணையம் ’99 க்குப் பிறகு இது இயக்கமாக மாறி விட்டதைப் பார்க்க முடிகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்களும், வல்லுநர்களும் அதிசயமாக ஒன்றிணைந்தார்கள். கல்வித்துறையிலிருந்து முனைவர் வா.செ. குழந்தைசாமி, முனைவர் மு. ஆனந்தகிருஷ்ணன், பேராசிரியர்கள் நா. கோவிந்தசாமி, வி. கிருஷ்ணமூர்த்தி, பொன்னவைக்கோ, நா. தெய்வசுந்தரம், குப்புசாமி, மொழியியலாளர் எம். கணேசன் போன்றவர்களும் மென் பொருள் தயாரிப்பாளர்களான முத்தெழிலன்,
கல்யாணசுந்தரம், அன்பரசன், இளங்கோவன், செல்லப்பன், மனோஜ் அண்ணாத்துரை, ஆண்டோ பீட்டர் போன்றவர்களும் இணைந்து செயல்பட்டனர். தமிழ்நெட்’ 97 இல் கலந்து கொண்ட அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹெரால்ட் ஷிப்மேன், irdu வின் நிபுணர்கள் டான் டின் வீ, லியோங் கோக் யாங் இன்னொரு சீன கணிப்பொறியாளர் ஜேம்ஸ் செங் போன்ற தமிழரல்லாதவர்களின் பங்களிப்பும் இந்தத் தமிழியக்கத்துக்குப் பெருமை சேர்ப்பது. எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ் இணையம் ’99 இன் போது தமிழக அரசு வழக்கத்துக்கு மாறாக அதீத வேகத்துடனும், உத்வேகத்துடனும் செயல்பட்டது தான் கணித்தமிழ் இயக்கத்துக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி. மீண்டும் அடிப்படைக்கு…..
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற தனித்தமிழ் இயக்கம், கடந்த தலைமுறையில் நடந்த இந்தி ஆதிக்க எதிர்ப்பு இயக்கம் ஆகியவற்றுக்கு சமமான ஒரு மொழி இயக்கமாக இந்தக் கணித்தமிழ் இயக்கத்தை நான் ஒப்பிட விரும்புகிறேன். இது சற்று மிகையாகவும் தோன்றலாம். ஏனெனில், கணித்தமிழ் இயக்கம் என்ற ஒன்று நடப்பதாக யாரும் அறிவிக்கவோ தலைமை தாங்கவோ இல்லைதான். ஆனால், முன்பே கூறியது போல பல தமிழ் ஆர்வலர்கள் – பல்வேறு துறையினர், பல்வேறு நாட்டினர் – தமிழைக் கணனியிலும், இணையத்திலும் காண ஆர்வம் கொண்டிருந்தனர். சொந்தக் காசு செலவு செய்து கொண்டு அமெரிக்காவிலிருந்து ஒரு தமிழ் ஆர்வலர் சென்னை மாநாட்டில் கலந்து கொள்ள வருகிறார் என்றால், அவர் அவரை அறியாமலேயே கூட ஒரு ஆக்கபூர்வமான இயக்கத்துக்குள் இழுக்கப்பட்டிருக்கிறார் என்று தான் அர்த்தம். டிஜிட்டல் யுகம் மெல்ல மெல்லத் தமிழ்நாடு போன்ற வளரும் சமூகங்களையும் அரவணைத்து வருகிற வேளையில், மற்ற மொழியினருக்கெல்லாம் இது குறித்த விழிப்புணர்வு வருவதற்குள் தமிழர்கள் தங்கள் தாய்மொழிக்காக எடுத்திருக்கும் தொழில் நுட்ப இயக்கம் பற்றி வரலாறு குறித்து வைத்துக் கொள்ளும். வருங்கால சமூகம் அதை மெச்சும் என்ற எதிர்பார்ப்புடன் மட்டுமே நம் கடமையைச் செய்வோம்.

எழுத உதவியவை :
1. www.cir.nus.edu.sg/tamilweb (தமிழ் இணையம் 97 மாநாடு குறித்த தகவல்களுக்கு)
2. www.thamizh.com (தமிழ் இணையம் 99 மாநாடு குறித்த தகவல்களுக்கு)
3. www.tamilinaiyam2000.org (தமிழ் இணையம் 2000 மாநாடு குறித்த தகவல்களுக்கு)
4. www.kanithamizh.org (கணித்தமிழ் சங்கம் குறித்து)

செ.ச. செந்தில்நாதன்

இக் கட்டுரை ஆறாம்திணைத் தொகுப்பான ‘இணையத்தமிழ்’ நூலில் இடம்பெற்றுள்ளது.
‘இந்தியா டுடே’ பத்திரிகையில் பணியாற்றிய இதழாளரான இவர் தற்போது www.thamizh.com என்கிற வலையகத்தையும் நடத்தி வருகிறார்.

ToTop