ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

உறவுகளை முறிக்கின்றதா இன்டர்நெட்

இல்லவே இல்லை என்கிறது கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆய்வு
இன்டர்நெட்டில் உலவுபவர்களைப் பற்றி இரண்டு விதமான கருத்துகளைக்
கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒன்று, அவர்கள் தனிமையில் வாடுபவர்கள், நெட்டில்
துணை தேடுகிறார்கள் என்பது. இன்னொன்று, இன்டர்நெட்டுக்கு அடிமையாகி
அவர்கள் தங்கள் நிஜ வாழ்க்கை நண்பர்களையும் உறவினர்களையும்
உதறுகிறார்கள் என்பது. அரசியல் காரணங்களுக்காக இன்டர்நெட்டை
எதிர்த்துப் பிரச்சாரம் செய்பவர்களுக்கு இந்தக் கருத்துகள் வசதியாகிப்
போனது. லாஸ் ஏஞ்சலிஸில் இருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின்
(யூ.சி.எல்.ஏ.) தொடர்புக் கொள்கை மையம் சமீபத்தில் வெளியிட்ட
இன்டர்நெட் ஆய்வு அறிக்கை நேரெதிராக ஒரு கதை சொல்கிறது.
வலைவாசிகள் தங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களோடும் சகஜமாகப்
பழகுகிறார்கள் என்றும் இன்டர்நெட்டைப் பயன்படுத்தாதவர்களை விட அதிக
அளவில் சமூக நடவடிக்கைகளில் கலந்துகொள்கிறார்கள் என்றும் சொல்கிறது
இந்த அறிக்கை!

இணையத்தில் நேரத்தை செலவிடுவதால் மனித உறவு ஒன்றும்
பாதிக்கப்படுவதில்லை என்று சொல்லும் முதன்முதல் ஆய்வு இதுதான். இந்த
வருடம் பிப்ரவரியில் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஒரு ஆய்வு
அறிக்கை, இன்டர்நெட் பரவலான அளவில் குடும்பத்தினருக்கும்
நண்பர்களுக்கும் இடையில் பிளவை உருவாக்குகிறது என்று ஒரே போடாகப்
போட்டது.

அதே போல 1998ல் கார்னெகி மெலன் பல்கலைக்கழகம் தான் நடத்திய
ஹோம்நெட் என்ற ஆய்வின் முடிவை வெளியிட்டது. வாரம் சில மணி
நேரங்களே இணையத்தைப் பயன்படுத்தியவர்களிடம் மனச் சோர்வும்
தனிமையுணர்வும் மிக அதிக அளவில் இருப்பதாக அந்த ஆய்வு அறிவித்தது.

இந்த மாதிரி சிந்தனையில் கோளாறு இருக்கிறது என்கிறார் யூ.சி.எல்.ஏ.
ஆய்வின் இயக்குனர் ஜெஃப்ரே கோல். “இன்டர்நெட் பயன்பாடு மக்கள்
மற்றவர்களுடன் பழகுவதைக் குறைக்கிறது என்பதும் தவறு, இவர்கள்
தனிமையில் தவிப்பவர்கள், சமூகத்திலிருந்து விலகி இருப்பவர்கள் என்பதும்
தவறு” என்கிறார் கோல்.

இந்த இரண்டு ஆய்வுகள் ஒன்றுக்கொன்று பெரிதாக முரண்படவில்லை
என்கிறார் கார்னெகி மெலன் ஆய்வை நடத்திய ராபர்ட் க்ரவுட்.
இன்டர்நெட்டின் பரிணாம வளர்ச்சி அவ்வளவு வேகமாக நடக்கிறது
என்பதைத்தான் அது பிரதிபலிக்கிறது என்கிறார் அவர். க்ரவுட்
வலைவாசிகளிடம் 1995ல் தனது ஆய்வைத் தொடங்கினார். அந்த சமயத்தில்
இன்டர்நெட் பயனாளிகளின் எண்ணிக்கை இப்போது இருப்பதில் ஒரு சிறிய
சதவீதம்தான் இருந்தது. அதற்குப் பிறகு இணையம் அரட்டை, ஷாப்பிங், காதல்,
விளையாட்டு ஆகியவற்றுக்கு ஒரு உலகம் தழுவிய மீடியமாக வளர்ந்துவிட்டது.
“இன்டர்நெட் முன்பு இருந்தது போல் இல்லை. இன்டர்நெட் மாறிவிட்டது.
அதோடு சேர்ந்து சமூகச் சூழலும் மாறியிருக்கிறது” என்றார் க்ரவுட்.

அமெரிக்கக் குடும்பங்கள் மீது இன்டர்நெட்டின் தாக்கத்தை அடுத்த
பத்தாண்டுகள் வரை ஒவ்வொரு வருடத்திற்கும் கவனிப்பதுதான் யூ.சி.எல்.ஏ.வின்
மெகா ஆய்வு. இந்த 50 பக்க அறிக்கை, இந்த ஆய்வின் முதல் தவணை.
1940கள், 50களில் தொலைக்காட்சி பரவியபோது அந்த ஊடகத்தைப் பற்றி
போதுமான அளவு ஆராய்ச்சி நடத்தப்படவில்லை என்று சமூக
அறிவியலாளர்கள் ரொம்ப காலமாகவே சொல்லிக்கொண்டிருந்தார்கள்
மின்சக்தி, தொலைபேசி அல்லது தொலைக்காட்சி ஆகியவற்றை விட
அதிவேகமாகப் பரவி வரும் இன்டர்நெட் ஊடகத்திற்கும் அப்படி ஒரு குறை
வந்துவிடக் கூடாது என்பதுதான் யூ.சி.எல்.ஏ. இன்டர்நெட் ஆய்வைத்
தொடங்கியதன் நோக்கம் என்றார் ஜெஃப்ரே கோல்.

இந்த ஆய்வு 2,096 அமெரிக்கக் குடும்பங்களில் நடத்தப்பட்டது. எத்தனை
வீடுகளில் இன்டர்நெட் இணைப்பு இருக்கிறது, ஆன்லைன் அந்தரங்கம்
(privacy) பற்றி மக்கள் கருத்து என்ன, ஆன்லைன் பங்கு வியாபாரத்தில் மக்கள்
ஈடுபடும் விதம் – இதையெல்லாம் பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன.

பதில் சொன்னவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் இன்டர்நெட்டில் உலவும்
வசதி இருந்தது தெரிந்தது. அவர்களில் 47 சதவீதத்தினருக்கு வீட்டில்
இணைப்பு இருந்தது. இன்டர்நெட் பயனாளிகள் வாரம் சராசரியாக 9.42 மணி
நேரம் இணையத்தில் செலவிடுகிறார்கள்.

நன்றி: தமிழ்.கொம்

ToTop