ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

தகவல் நெடுஞ்சாலையில் தமிழ் டவுன்பஸ்

தமிழுக்கே நம்மூரில் நிலைமை சரியில்லாதபோது, கணித்தமிழ் பற்றிப் பேசிப் பயன் என்ன என்கிற எதிர்மறையான அணுகுமுறையுடன் இந்தக் கட்டுரையைத் தொடங்குவது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. ஆனாலும் சில நல்ல விஷயங்கள் நடந்துதான் இருக்கின்றன.

1994இல் ஒரு நிகழ்ச்சி. சென்னை அண்ணா பல்கலையில், முன்னாள் துணைவேந்தர் முனைவர் மு. ஆனந்த கிருஷ்ணன் தலைமையில், கணித்தமிழ் வல்லுநர்களில் முக்கியமானவர்களில் ஒருவரும் அன்றைய கணிப்பொறித் துறை இயக்குநருமான பேரா. கிருஷ்ணமூர்த்தியின் முன்முயற்சியில் ‘தமிழும் கணிப்பொறியும்’ என்ற கருத்தரங்கு ஒன்று நடந்தது. கணித்தமிழ் பற்றியெல்லாம் அதிகம் பேசாத காலம் அது. தமிழ்நாட்டிலும் சிங்கப்பூர், மலேசியாவிலும் தமிழ்க் குறியீட்டு முறையையும் விசைப்பலகை வடிவமைப்பையும் தரப்படுத்த வேண்டும் என்று முதன்முறையாகக் கல்வியாளர்கள் இடையிலிருந்து சில குரல்கள் எழுந்தன. அப்போது இந்தத் துறையில் முன்னோடியாக இருந்தவரும் கணித்தமிழின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான மறைந்த சிங்கப்பூர் பேராசிரியர் நா. கோவிந்த சாமி அதில் கலந்துகொண்டார். நான் இதழாளனாக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.

அந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடந்த கண்காட்சியில், கோவிந்தசாமி கணிப்பொறியில் தமிழை உள்ளிடுவது குறித்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் மிக உயரிய பொறுப்பில் இருந்த, பிரபலமான தமிழ் அறிஞராகவும் அறியப்பட்ட, ஒருவருக்கு விளக்கிக்கொண்டிருந்தார். அந்த தமிழறிஞர் அந்த விளக்கக்காட்சியில் கவனம் செலுத்தாமல் சம்பிரதாய ரீதியில் அதைப் பார்த்துக்கொண்டிருந்தார். கோவிந்தசாமியோ விடாமல் அவருக்குத் தமிழ் எப்படிக் கணிப்பொறியில் காட்சியளிக்கிறது என்று விளக்கிக்கொண்டிருந்தார். கடைசியில் நம் தமிழ் அறிஞர் ஒரே போடாகப்போட்டார்: “எங்க ஊர்ல இன்னும் டைப்ரைட்டர் எந்திரமே யாருக்கும் தெரியாதய்யா, இந்தக் கணினியால என்ன பிரயோசனம்?” கோவிந்தசாமி அதிர்ந்துபோனார். கோவிந்தசாமியின் முயற்சிக்கு ஒரு வாழ்த்துக்கூடத் தெரிவிக்காமல் அந்தத் தமிழறிஞர் நடையைக் கட்டினார்.

தொழில்நுட்பத்துக்கும் தமிழ் அன்பர்களுக்கும் இடையில் அப்போது அவ்வளவு இடைவெளி இருந்தது!

இப்போது நமக்குத் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் இருக்கிறது! தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பட்டத்தைக்கூட அதில் வாங்கலாம் என்கிறார்கள்.

அந்த ஆண்டுகளில், கணித்தமிழ் குறித்து பத்திரிகைகளில் நான் அவ்வப்போது எழுதி வந்தேன். நான் பணிபுரிந்த இந்தியா டுடே இதழில் சிறப்புக் கட்டுரை ஒன்றும் எழுதினேன். அதற்கு நான் வைத்த தலைப்பு: தகவல் நெடுஞ்சாலையில் தமிழ் மாட்டுவண்டி. பிறகு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கணித்தமிழ் தொடர்பான பல செயல்பாடுகளில் நான் கலந்துகொண்டுவந்தேன். கணித்தமிழ் செயல்பாட்டளார்களின் முயற்சிகளை அருகே இருந்து கவனிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. ஆர்வத்தோடு பங்காற்றினேன். கணித்தமிழ் என்னை மீடியாவிலிருந்து பிடுங்கி மொழிசார் கணித்துறையில் இறக்கிவிட்டுவிட்டது.

2006 இல், இன்று, திரும்பிப்பார்க்கும்போது, கணித்தமிழ் எப்படி இருக்கிறது? தகவல் நெடுஞ் சாலையில் தமிழ் இப்போது மாட்டு வண்டியாக இல்லை என்பது மட்டும் உறுதி. அதே சமயம் அது எக்ஸ்பிரஸாகவும் இல்லை. டவுன் பஸ் வேகத்துக்கு முன்னேறியிருக்கிறது என்று சொல்லலாம்.

கணித்தமிழ் செயல்பாடுகளின் நோக்கம் தமிழுக்குத் தரப்படுத்தப்பட்ட ஒரே குறியீட்டை உருவாக்குவதாக இருந்தது. இதற்காக ஐந்து தமிழ் இணைய மாநாடுகள் சர்வதேச அளவில் நடத்தப்பட்டன. ஆனால் அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. இப்போதைக்கு ஒன்றல்ல, மூன்று அல்லது நான்கு குறியீட்டுத் தரம் தமிழுக்கு வாய்த்திருக்கிறது. இது நிச்சயமாகத் தோல்விதான். ஆனால் தவிர்க்கவியலாத சமரசம் என்று இதைச் சொல்லலாம்.
இன்று நூற்றுக்கணக்கான எழுத்துருக்களும் ஒரு டஜன் மென்பொருள்களும் இலவசமாகக் கிடைக்கின்றன. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் நீங்கள் படிக்கலாம். இன்ஃபிட், கணித்தமிழ் சங்கம் போன்ற அமைப்புகள் இருக்கின்றன. நிறைய மாணவர்கள் கணித்தமிழ் புராஜெக்ட்டுகளைச் செய்கிறார்கள். மைக்ரோசாஃப்ட்டின் விண்டோ ஸ் எக்ஸ்பீயும் ரெட் ஹாட்டின் லீனக்ஸும் இயங்கு தளம் அளவிலேயே தமிழைச் சேர்த்திருக்கின்றன.

ஆனால் கணிப்பொறியில் தமிழைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மட்டும்தான் அதிகரித்தபாடில்லை. மீடியா, டி.டி.பி. துறையில் இருப்பவர்கள், வேறு வகையில் தமிழில் டைப் செய்வதைத் தொழிலாகக்கொண்டவர்கள் மற்றும் கணித்தமிழ் ஆர்வலர்களைத் தவிர்த்துப் பொதுவாகப் பார்த்தால், ஆண்டுக்கு நூறு, இருநூறு பேர் புதிதாகத் தமிழைக் கணிப்பொறியில் பயன்படுத்தத் தொடங்குவார்கள் என்றால், அது ஆச்சரியம்தான்.

என்னிடம் இதற்கு நேரடிச் சான்று இருக்கிறது. கணிப்பொறியைப் பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கும் பலரிடமும் சொல்லிச் சொல்லிப் பார்த்திருக்கிறேன். தமிழ் 99 விசைப்பலகை வடிவமைப்பு எப்படி மின்னல் வேகத்தில் தமிழை உள்ளிட உதவுகிறது என்பதைப் பலரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறேன். ஆர்வத்தோடு பார்த்தவர்கள் பார்த்ததோடு சரி. அதிகபட்சம் தங்கள் பெயர்களை உள்ளிடுவதற்கு மேல் அவர்கள் கற்றுக்கொண்டது வேறு எதுவுமில்லை. யாருக்கு வேண்டும் கணித்தமிழ்?

தகவல் தொழில்நுட்பம் ஒரு மேலைநாட்டு இறக்குமதி. அது அமெரிக்காவில் ஒரு மாதிரியாகவும் இந்தியாவில் வேறு மாதிரியாகவும் சமூகத்தைப் பாதிக்கிறது. தகவல் தொழில் நுட்ப யுகத்தை மேலைச் சமூகங்கள் வரவேற்ற விதமும் நாம் வரவேற்ற விதமும் முற்றிலும் வித்தியாசமானவை. காரணம் தேவைகள் வெவ்வேறு. மேலைச் சமூகங்களில் சமூகத்தின் ஒவ்வொரு செயல்பாட்டுத் தளத்திலும் தங்கள் உற்பத்தித் திறனை வளர்க்கக்கூடிய, வேலைப்பளுவைக் குறைக்கக்கூடிய, தானியங்குத் தன்மையை அதிகரிக்கக்கூடிய வழிகளாகக் கணிப்பொறியும் பிற டிஜிட்டல் நுட்பங்களும் பார்க்கப்பட்டன.

எனவே அந்தச் சமூகங்களில் ஒட்டுமொத்தப் பொருளாதார மற்றும் நிர்வாக அமைப்புகளுக்கு மென்பொருள் உருவாக்கத் தேவைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அவற்றை முழுவதும் தங்கள் நாட்டிலேயே செய்ய முடியாதபோது, அதை அயலாக்கம் (outsourcing) செய்யவும் அவர்கள் தயங்கவில்லை. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மன், ஜப்பான் உள்ளிட்ட எல்லா வளர்ந்த நாடுகளுமே கணிப்பொறியைத் தங்கள் உற்பத்திச் செயல்பாட்டின் மையத்துக்குக் கொண்டுவந்து, பின் அதற் கேற்றாற்போலத் தங்கள் வர்த்தக நிகழ்முறைகளையும் தகவல் மற்றும் அறிவுக் கட்டமைப்புகளையும் மறுசீரமைத்துக்கொள்ள முடிவுசெய்கிறார்கள். மின் வணிகம், மின்பதிப்பு, மின்கல்வி, தொலை மருத்துவம், டிஜிட்டல் வழி ஊடகங்கள் என அவர்களுடைய வாழ்வின் அனைத்து அம்சங்களையும் புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தகவமைக்கும் மாபெரும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

இப்படிப்பட்ட வளர்ந்த நாடுகளுக்கு அவர்களின் தகவல்நுட்பத் தேவைகளுக்குச் சேவை செய்யும் நோக்கத்திலேயே, இந்தியா, பிலிப்பைன்ஸ், ருஷ்யா, சீனா, வியத்நாம் போன்ற நாடுகள் சேவைகளை வெளியிலிருந்து அளிக்கின்றன.

எனவே, இந்தியா போன்ற நாடுகளில் தகவல் தொழில் நுட்பத்தின் வருகை மேலை நாடுகளின் தொழில் நிகழ்முறை அயலாக்க முயற்சிகளோடு தொடர்புடையது. ஒய்டுகே (Y2K) தொடங்கி இன்றைய கேபிஒ எனப்படும் அறிவுசார் தொழில் நிகழ்முறை அயலாக்கம் (Knowledge Processing Outsourcing) வரை, டேடா என்ட்ரி முதல் ஆராய்ச்சி -மேம்பாடு வரை, இந்தியா போன்ற அயலாக்க நாடுகளில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பிரதான உந்துசக்தியாக இருப்பது ஏற்றுமதி சார்ந்த தகவல்நுட்பச் செயல்பாடுகள்தான்.

இந்தியாவில் நாம் நமக்கான மென்பொருள்களையா உருவாக்குகிறோம்? தகவல் தொழில் நுட்பம் இங்கே ஏற்றுமதி சார்ந்த சேவைத்துறை. இதில் எங்கே இருக்கிறது இந்திய மொழிகளுக்கான இடம்?

கணித்தமிழின் சோகக் கதை தொடங்குவது இங்குதான். தமிழர்கள் தகவல்நுட்ப நிறுவனங்களில் வேலை செய்வதற்காகத் தங்கள் வாழ்க்கையைச் செலவிடுகிறார்கள். ‘விவரம் அறிந்த’ ஜனங்கள் தங்கள் பிள்ளைகளை நல்ல சாஃப்ட்வேர் எஞ்சினியராக ஆக்க விரும்புகிறார்கள். அதற்காகவே அவர்களைப் பணம் செலவழித்துப் பெரிய கல்லூரிகளில் சேர்க்கிறார்கள். ஆங்கில மீடியத்தில் படிக்க வைக்கிறார்கள். வீட்டில் கம்ப் யூட்டர்களையும் வாங்குகிறார்கள். எல்லாம் கல்விக்காகவும் வேலைக்காகவும்தான். கணிப்பொறியை வீடுகளில் வாங்குவது கல்விக்காக. கல்வி, இன்ஃபோசிஸ்களுக்காக.

இந்த வாய்ப்புகள் இல்லாதவர்களே வேறு வேலைகளுக்குச் செல்கிறார்கள். ஆனால் எந்த வேலைக்குச் சென்றாலும் கணிப்பொறி அவசியமாகிறபோது, விண்டோ ஸ், எம்எஸ் ஆபீஸ் அளவுக்காவது அதைப் பயில்கிறார்கள். நாட்டின் பிஸினஸ் மொழி ஆங்கிலம் என்பதால் இவற்றையெல்லாம் பயில்வதற்குத் தமிழும் தேவைப்படவில்லை. ஆங்கிலம் புரியாத நேரத்தில் உதவிக்குத் தமிழ் வழிக் கணிப்பொறிப் புத்தங்கள் உள்ளன. ஆனால் மென்பொருள் ஆங்கிலத்தில்தான் இருக்கும். அதை அப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிலை இப்போது உள்ளது.

மீடியா, டிடிபி போன்ற பதிப்புத்துறைகள் தவிர வேறு எங்கும் தமிழ் மென்பொருள்களை நீங்கள் பார்க்க முடியாது. அதிகபட்சம் கடிதம் எழுத, டைப் செய்வது தவிர அலுவலகங்களில் தமிழ் மென்பொருள் களுக்கு வேறு எந்தத் தேவையும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில், உற்பத்தி அல்லது அலுவலகத் துறைசார்ந்த தமிழ் மென்பொருள்களுக்கும் எந்தத் தேவையும் உணரப் படவில்லை.

அடுத்து, பள்ளிகளிலும் கல்லூரிகளிலும். ஆங்கில மீடியத்தில் உள்ள எந்தக் கல்வி நிறுவனத்திலும் தமிழ் மென்பொருள்கள் தேவையில்லை. ஒரு வேளை தமிழ்ப் பாடத்தைக் கணிப்பொறி கொண்டு விளக்க இவர்களுக்கு ஆர்வம் இருந்தால், ஒரு சில தமிழ்ப் பல்லூடகப் படைப்புகள் இருந்தால் போதும். தமிழ் வழிப் பள்ளிகள் பலவற்றில் கரும் பலகைகளே கிடையாது. கணிப்பொறி பற்றிப் பேசுவானேன்!

இதைவிட்டால் வேறு யார் ஊர்ப்புறத்தில் கணிப்பொறி வாங்குகிறார்கள் என்று தெரியவில்லை. நிச்சயமாக அதை வாங்கும் நிலையிலோ தேவையிலோ நமது விவசாயிகள் இல்லை. யோசித்துப் பாருங்கள், யாருக்காவது தமிழில் மென்பொருள் தேவைப்படுகிறதா என்ன?

தொழில்ரீதியாகத் தமிழ் எழுத்துருக்களைக் கொண்டு வணிகம் செய்யும் டிடிபி ஆபரேட்டர்களும் அவற்றின் தேவை உள்ள பதிப்புலகத்தினரும் தமிழ் ஊடகத் துறையினரும்கூட எப்போதும் எதிர்பார்ப்பது புதுப்புது எழுத்துருக்களை மட்டும்தான்.

மற்றபடி தமிழில் அக்கவுன்ட்டிங் சாஃப்ட்வேர்கள் படு ஃப்ளாப். மின்-ஆட்சி தொடர்பான அரசுத்துறை மென் பொருள்கள் விதிவிலக்கு. ஆனால், இதெல்லாம் இங்கிலீஸிலேயே இருந்து தொலைக்கலாம் என்று அரசு ஊழியர்கள் கருதுகிறார்கள் – தமிழ் டைப்பிங் தெரிந்தவர்கள் தவிர.

எப்படி, எப்போது கணித்தமிழ் வளரும்? தமிழ் கட்டாயமான ஆட்சி மொழியாகத் தமிழ்நாட்டில் இருந்தால் வளரும். எப்போது எல்லாத் துறைகளிலும் அறிவுப் பரவல் பிஸினஸின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறதோ, எப்போது மொழியறிவுக்கும் அறிவு பெறுதலுக்கும் இடையில் நந்தியாக நிற்கும் ஆங்கில மோகம் ஒழிகிறதோ அப்போதுதான் அது நடக்கும். ஆனால் இதெல்லாம் நடக்கப்போகிறதா? தமிழ்நாட்டுக் கடைகளில் தமிழில்பில் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கும் எனது மனித உரிமை வேட்கையைக் கடைக்காரர்கள் எள்ளி நகையாடுவார்கள்.

தமிழகத்தில் நூலகங்கள் அனைத்தும் கணிப் பொறிமயமாகி, அங்கே நூற்றுக்கணக்கான துறைகளில் டிஜிட்டல் வடிவத்தில் தகவல் அளிக்கும் சூழல் ஏற்பட்டால் ஓரளவுக்குக் கணித்தமிழ் வளரும். ஏனென்றால் அத்தகைய தேவை ஏற்படும்போது தமிழில் பயனுள்ள தகவல்களைத் தரும் தேவையும் அதிகரிக்கும். தமிழ்ப் பல்லூடக வெளியீடுகளைத் தயாரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதற்கான பல்லூடக உள்ளடக்க உருவாக்கத்தில் ஈடுபடுவோருக்கும் தமிழ் மென்பொருள்கள் நிறையத் தேவைப்படும். தமிழ் மென்பொருள்கள் நிறையத் தேவைப்படும் நிலை வந்தால் பெரிய மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் மென்பொருள்களைத் தமிழிலும் வெளியிடும். அப்படி நடந்தால் அது தமிழ் இடமயமாக்க (localization) பிஸினஸை வளர்க்கும். அப்போது தமிழ் மென் பொருள் நிபுணர்களும் உள்ளடக்க உருவாக்குநர்களும் பிற மென்பொருள் நிபுணர்களுக்கு நிகராக உயர்வார்கள், சம்பாதிப்பார்கள். இது தமிழை வளர்க்கும். அதாவது, தமிழ் மென்பொருள் சந்தை விரிவடைந்தால், கணித்தமிழ் வளரும். தமிழ் பிஸினஸ் மொழியானால், தமிழ் மென்பொருள் பிஸினஸும் வளரும்.

அத்துடன், தமிழில் நிறைய உள்ளடக்க உருவாக்கம் நிகழ்ந்தாக வேண்டும்.

தமிழில் உள்ளடக்கம் என்று சொன்ன உடனே, நமது கணித்தமிழர்கள் மேலும் ஒரு திருக்குறள் பதிப்பு, ஆத்திசூடி, மரியாதை ராமன் கதை என்று கிளம்பிவிடுவார்கள். தமிழில் உள்ளடக்கம் என்பது தமிழ் இலக்கிய உள்ளடக்கமாகவே நிறைய பேரால் புரிந்துகொள்ளப்படுகிறது. வாழ்வியல் தேவைகளுக்கான உள்ளடக்கம் தமிழில் தேவை என்பதை 99% தமிழ் மென்பொருள், பல்லூடக, இணையத்தள வெளியீட்டாளர்கள் புரிந்துகொள்வதாகத் தெரியவில்லை.

அதைவிட முக்கியம் தமிழ் மென்பொருள்களின் தரம். இது பெரிய பிரச்சினைதான். சர்வதேசச் சந்தைக்காகத் தயாரிக்கப்படும் ஒரு மென்பொருளின் தரமும் தமிழ்ச் சந்தைக்கு மட்டுமேயெனத் தயாரிக்கப்படும் ஒரு மென்பொருளின் தரமும் சமமாக இருக்க முடியாது. ஆனால் சில சமயம் இந்த நிஜத்தைச் சாக்காக வைத்துக்கொண்டு மென் பொருள் குப்பைகளை உருவாக்கித் தள்ளக் கூடாது. பல மென்பொருள் உருவாக்குநர்கள் அதைத்தான் செய்கிறார்கள். இன்னும் சிலர், விஷுவல் பேசிக்கில் நான்கு கன்ட்ரோல்களைக் கொண்டு ஒரு கட்டம் கட்டி, ஒரு சாதாரண டெக்ஸ்ட் பாக்ஸைப் போட்டு, கோப்பு, சேமி, மூடு, திற என்று இருபது மெனு அயிட்டங்களைச் சேர்த்து, சொல் செயலிகளைத் தயாரிக்கிறார்கள். ஆங்கிலத்தில் உள்ள மைக்ரோ சாஃப்ட்வேர்டுக்கு இணையான தமிழ் வேர்டு பிராசசர் இது என்று கதைவிடுகிறார்கள்.

ஒழுங்கான எழுத்துருக்கள் நாலைந்தை மூலதனமாக வைத்துக்கொண்டு, நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் எந்த இடத்திலும் எவராலும் பயன்படுத்த முடியாத அவலட்சணமான எழுத்துருக்களை அவற்றோடு சேர்த்து, ஐந்தாயிரம், பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கிறார்கள் கணித்தமிழ் கம்பெனியார். அதில் அழகியலும் இல்லை, யோக்கியதையும் இல்லை, பிஸினஸும் இல்லை. சிலர் இரண்டாயிரம் வார்த்தைகளைப் போட்டு இது தமிழ் அகராதி என்கிறார்கள்.

எண்ணிப் பார்த்தால் நூறு தமிழ் வெப்சைட்கள்கூட தேற மாட்டா. ஆனால் ஆங்கிலத்துக்கு அடுத்தபடி உலகிலேயே அதிகமாக இணையத்தில் இடம்பெற்றிருக்கும் மொழி தமிழ்தான் என்று வாய் கூசாமல் பொய் சொல்கிறார்கள்.

தமிழ் மென்பொருள் உருவாக்குநர்கள் நெடுந்தொலைவு போக வேண்டும். தங்களுக்கான சந்தையைத் தாங்களேதான் உருவாக்கத்தான் வேண்டும். அரசாங்க நிதிவுதவிகளை மட்டும் நம்பும் ஒரு துறை, மக்களுக்குத் தேவையானதைச் செய்யாது. தங்களுக்குத் தேவையானதை மட்டுமே செய்யும். கணித்தமிழ் நிறுவனங்களின் நிலை இன்று இதுதான்.

உண்மையிலேயே கவனம் செலுத்த வேண்டிய துறை என்றால் அது இன்ட்ராக்டிவ் என்டர்டெயின்மென்ட், இன்ஃபோடெயின்மென்ட் தொடர்புடையவை. தமிழ் கேம்ஸ் நிறைய வேண்டும். உடனே மின்-பல்லாங்குழி என்று முடிவு செய்துவிடக் கூடாது. தமிழில் நிறைய அனிமேஷன் ஆட்டங்கள் வேண்டும். செம்மொழித் தமிழிலும் சென்னைத் தமிழிலும் பேசும் ஆட்ட நாயகர்கள் வேண்டும். உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஆட்ட வடிவங்கள் தமிழ் வடிவில் வர வேண்டும். குழந்தைகளும் பெரியவர்களும் இணைந்து செயல்படக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் குழந்தைகளுக்குத் தமிழையும் பெரியவர்களுக்குக் கணிப்பொறியையும் அறிமுகப்படுத்தும்.

குறிப்பாக பொடா, தடா எல்லாம் போட்டுத்தடுத்தேயாக வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது: அது திருவள்ளுவரைக் கணித்தமிழின் பிராண்ட் அம்பாசிடராக ஆக்குவது. தமிழ் என்று சொன்னாலே கணித்தமிழ் ஆர்வலர்களின் கற்பனைக் குதிரை இரண்டாயிரம் ஆண்டு பின்னோக்கிச் சென்றுவிடுகிறது. தமிழ் என்பது புராதனமாக முப்பாட்டன் சொத்து, அதைப் பத்திரமாக மியூசியத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்கிற மாதிரியான எண்ணம் தமிழ்க் குழந்தைகளுக்கு வரும்படி அவர்கள் நடந்துகொள்கிறார்கள். தமிழ்நாட்டில் கணித்தமிழ்ச் சங்கத்தினரின் விளம்பரங்களில் திருவள்ளுவரை அடிக்கடி வெளியிடுவது குறித்து இவ்வாறு நான் கூறியது உண்டு: பாவம், அவரை விட்டுவிடுங்கள். கணித்தமிழைப் பிரபலப்படுத்த விஜய் அல்லது ஜோதிகாவைப் பயன்படுத்துங்கள். இதைச் சாதாரண விஷயமாக, நவீன விஷயமாகத் தமிழ்க் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று சில கணித்தமிழ் நண்பர்களிடம் சொல்லிப் பார்த்தேன். அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

தமிழில் கணிப்பொறித் துறைக் கலைச்சொல்லாக்கம் குறித்தும் இப்படித்தான் ஆனது. அது குறித்த தமிழக அரசின் கலைச் சொல்லாக்கக் குழுவில் தொடக்கத்தில் நானும் பங்கெடுத்தேன். அப்போது, கணிப்பொறி அறிவியலில் பயன்படுத்தும் Object Oriented Programming அல்லது debugging போன்ற கலைச்சொற்கள் வேறு என்றும் விண்டோஸ் போன்ற GUI மென்பொருள்களில் பயன்படுத்தப்படும் File, Edit, Options போன்ற சொற்கள் வேறு என்றும் GUI சொற்கள் கலைச் சொற்கள் அல்ல, அவற்றுக்கு இணையான சொற்களை நாம் புதுமையாக ஆக்குவதே சரி என்றும் வாதிட்டிருக்கிறேன். மிகவும் சாதாரணமான GUI சொற்களைத் தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடிக் கடுமையான கலைச் சொற்களாக அப்போது மாற்றிக்கொண்டிருந்தார்கள். நம்ம பருப்பு வேகாது என்று தெரிந்துகொண்ட பிறகு அந்தக் கலைச்சொல் கமிட்டிப் பக்கமே நான் தலைகாட்டவில்லை.

தமிழ் ஆர்வம், தமிழ்ப் பற்று போன்றவை கணித் தமிழை நோக்கிய பயணத்தில் முதல் படி மட்டுமே. இன்று நாம் பார்க்கும் கணித்தமிழ் வளர்ச்சியில் பங்கேற்றவர்களைப் பின்னிப் பிணைக்கும் ஓர் இழையாக இருப்பது தமிழ்ப் பற்றுதான். ஆனால், அதைத் தாண்டிச் சென்று, மொழியின் அனைத்து அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, மக்களின் தகவல் மற்றும் தகவல் தொடர்பாட்டுத் தேவைகளின் அடிப்படையில் மென்பொருள் இயற்றுவது மிக முக்கியம். அதற்கான சந்தையை மேம்படுத்துவது அல்லது உருவாக்குவது, நவீனத் தமிழ் பிராண்ட்களை உருவாக்குவது போன்றவை முக்கியம்.

இப்போது இணைய மாநாடுகள் நடைபெறுவதில்லை. கணிப்பொறித் திருவிழாக்கள் நடை பெறுவதில்லை. வர்த்தகச் சுயநலன்களும் வேறு காரணங்களும் சேர்ந்து கணித்தமிழ் இயக்கத்தை முடக்கியிருப்பதாகத் தோன்றுகிறது.

கணித்தமிழின் எதிர்காலம் சிறப்பாக அமையக் கவனம் செலுத்த வேண்டிய துறைகள் இவை: பொறிவழி மொழிபெயர்ப்பு, பேச்சிலிருந்து எழுத்து, எழுத்திலிருந்து பேச்சு உருவாக்கம், நவீன இலக்கணத்தின் அடிப்படையில் எழுதுவதற்கு உதவும் மென்பொருள், பல்துறை அகராதிகள் மற்றும் தமிழ் தேடுதல் கருவி. அத்துடன், பல்வேறு துறை சார்ந்த மென்பொருள்கள் தமிழில் வர வழி செய்ய வேண்டும்.

கணித்தமிழ் நிபுணர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து இவற்றைத் தமிழுக்கென்று தனியே உருவாக்காதீர்கள். அது தவறில்லைதான். ஆனால் இந்தந்தத் துறைகளில் உலகப்புகழ் பெற்ற நிறுவனங்களோடு இணைந்து செயல்படுங்கள். அப்போதுதான் லட்சக்கணக்கான மணிநேரங்கள் செலவழித்து அவர்கள் உலகச் சந்தைக்கென உருவாக்கிய மென் பொருள் பயன்பாடுகளைத் தமிழுக்கும் சுலபமாக இணைத்துக்கொள்ளலாம். பொறிவழி மொழி பெயர்ப்புக் கருவியைத் தனியாக உருவாக்குவது என்பது சுலபமான காரியமல்ல. விருப்பத்துக்காக வேண்டுமானால், நாம் தனியே செய்து பார்க்கலாம். அதில் பொம்மை சாஃப்ட்வேர்தான் கிடைக்கும். அந்தந்தத் துறைகளில் ஏற்கனவே பேரளவுக்கு வெற்றி பெற்றிருக்கும் பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிறுவனங்கள் அல்லது தொழில் நிறுவனங்களோடு சேர்ந்து செயல்பட்டால், நமக்கு முடிந்தவரை நன்மை கிடைக்கும்.

சொல்லப்போனால், தமிழக அரசு இது குறித்துப் பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களிடம் பேச வேண்டும். கணித்தமிழ் அமைப்புகள் இது நடக்க வழிவகை காண வேண்டும். நல்ல தமிழ் மென் பொருள்களைச் செய்து தாருங்கள், அதைக் காசு கொடுத்து வாங்கிக்கொள்கிறோம் என்று உத்தரவாதம் தர வேண்டும். அப்போது பல முக்கிய மென்பொருள்கள் தமிழில் கிடைக்கும்.

இன்னொரு முக்கியமான மாற்றம் மொபைல் கம்ப்யூட்டிங். இன்று கம்ப்யூட்டர் நுழையாத குக்கிராமங்களிலும் உழைக்கும் கரங்களிலும்கூடச் செல்பேசி நுழைந்துவிட்டது. நேற்றுவரை செல்பேசி சர்வ சாதாரணமான ஒரு தொலைபேசிக் கருவி. ஆனால், இன்றைய செல்பேசிகள் கிட்டத்தட்டக் குட்டிக் கணிப்பொறிகளாக மாறிவருகின்றன. அதைப் பற்றி விலாவரியாகப் பேச இப்போது வாய்ப்பு இல்லை என்றாலும், இந்தியாவில் இந்திய மக்களுக்கான தகவல்நுட்ப வசதி என்று பார்க்கும் போது, கணிப்பொறியை அடிப்படையாக வைத்துப் பார்ப்பதைவிடச் செல்பேசிகளைச் சார்ந்து பார்ப்பது கூடுதலான நம்பிக்கையை அளிக்கிறது.

நோக்கியா, சாம்சங் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே தங்கள் செல்பேசிகளைத் தமிழ் உள்பட முக்கிய இந்திய மொழிகளில் இடமயமாக்கியுள்ளன. செல்பேசி உள்ளடக்க மென்பொருள்களையும் எல்லா மொழிகளிலும் உருவாக்க முடியும்.

எனவே கணித்தமிழ் ஆர்வலர்களும் தொழிலதிபர்களும் இப்போது செல்பேசிக்கான மென்கருவிகளின் உள்ளடக்கத்திலும் கவனம் செலுத்தலாம்.

தமிழ் நிச்சயமாகச் சீர் இளமைத் திறன் வாய்ந்த செம்மொழி என்பதும் தமிழர்கள் செயல்மறந்து வாழ்த்துவதில் மட்டும் சிறந்தவர்கள் என்பதும் தெரிந்த கதைதான். ஆனால் மாட்டுவண்டியை டவுன்பஸ்ஸாக்கிய நாம் விரைவில் அதை ஏர் பஸ்ஸாக ஆக்குவது ஒன்றும் அசாத்தியம் அல்ல.

செ. ச. செந்தில்நாதன்

நன்றி: காலச்சுவடு

ToTop