ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

கூகிளும் ஜிமெயிலும் யுனிகோடும்

இன்றும் திஸ்கி, குழுமங்களில் மட்டுமே கூடுகட்டிக்கொண்டு குஞ்சு பொறிக்க
முடியாத முட்டைகளை இட்டுக்கொண்டிருக்கிறது. வலைப்பூ, வலைத் தளங்களெல்லாம் யுனிகோடு சிறகுகளை தனிவானில் உயர்த்தி வெற்றிச் சிறகுகளுடன் பறக்கின்றன.ஏன்? அது மட்டும் எப்படி முடிந்தது. இது ஏன் முடியவில்லை. ஏனெனில் இரண்டு
பேர் சேர்ந்து ஒரு முடிவெடுக்க வேண்டும் என்றாலே தமிழர்கள் முடிவெடுக்க
மாதக்கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். எல்லோரையும் கேட்டு என்றால்
நடக்கும் காரியமா? தனித் தனியே நின்று தமிழன் வளர்வதும், குழுவானபின்
அடித்துக்கொள்வதும் வாடிக்கைதானே?

எத்தனை எத்தனை எழுத்துத்தரங்கள் இப்போது? அஞ்சல், திஸ்கி, டாப்பு,
டாம்மு, கீப்பு, டூப்பு, சோப்பு, வழவழா, கொழகொழா. போதுமடா சாமி.
ஆளாளுக்கு ஒன்றை வைத்துக்கொண்டு அடித்துக்கொள்வது மலிந்துவிட்டது.
எல்லோரும் ஒன்றாய் இணைய இன்று யுனிதான் ஒரே வழி. இதில் மாற்றுக் கருத்து
எவருக்கும் இருக்க முடியாது. ஆனால் மாறுவதில் காலதாமப் படித்துவோம் என்று
சிலர் கூறுவதில் எனக்கு மாற்றுக்கருத்து.

யுனித்தமிழ் நாம் கண்ட அருஞ்சாதனை – அதை
குழுமங்களிலும் செய்வோம் பெருஞ்சோதனை

மாற்றுக்கருத்துக்களை மாற்றியெடுக்கும் பணியில் நான் முனைந்து செயல்பட்டு
வெற்றியும் கண்டிருக்கிறேன். எனவே மிக விரையில் யுனிகோடு குழுமங்கள்
தீபங்கள் ஏற்றி தீபாவளியே கொண்டாடும் என்ற நம்பிக்கை எனக்குப் பூரணமாய்
உண்டு. திஸ்கிதான் நரகாசுரன் என்று சொல்லும்போது மனம் கஷ்டமாகத்தான்
இருக்கிறது. ஆனால், மேலே ஏறுவதென்பது படிகளை மிதித்துத்தான். அஞ்சல்,
திஸ்கி 1.6, திஸ்கி 1.7 என்பதெல்லாம் படிகள் படிகள் படிகள். யுனிகோடு
என்ற நாற்காலியை எட்டிவிட்டால், பிறகெல்லாம் செங்கோல்தான் தமிழுக்கு.

அழைப்பும் தொடுப்போ மின்று
அன்புடன் ஒன்றுதல் நன்று
தழைப்பது தமிழ்தான் என்போம்
தரமென ஒன்றே கொள்வோம்

இனி நாம் மாறவேண்டிய மூன்று விசயங்களை ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.

அ. ஜிமெயில்

அட…. தேவையா ஜிமெயில் (திருமடல்)? ஏற்கனவே நான் ஹாட்மெயில்
வெச்சிருக்கேன், யாகூ வெச்சிருக்கேன், சிம்பாடிகோ, ராஜர்ஸ், ஏஓஎல்,
அப்படி இப்படீன்னு சும்மா பத்துப் பதினைஞ்சு மின்னஞ்சல் சேவை
வெச்சிருக்கேணுங்களே. அதையெல்லாம் உட்டுப்போட்டு, இப்போ புதுசா என்னமோ
ஜிமெயிலு கீமெயிலுன்னா உங்களுக்கே ஞாயமா இருக்கா? கொஞ்சம் நிம்மதியா
தமிழில் தட்டெழுத விடமாட்டீங்களா? என்று புலம்புபவர்கள் கவனத்திற்கு:

ஜிமெயில் யாருக்கு எதைத் தருகிறதோ இல்லையோ, தமிழனுக்குத்
தங்குதடையில்லாமல் யுனிகோடு தமிழைத் தருகிறது. சரி இனி அதன் பலன்
பட்டியலைப் பார்ப்போம். ஜிமெயிலின் குளுகுளு சேவைகள் ஏராளம் என்றாலும்,
மிக முக்கியமான சிலவற்றை மட்டும் இங்கே இடுகிறேன்.

குளுகுளு ஜிமெயில் சேவைகள்

1. யுனித்தமிழ் – Unicode Tamil

எந்த மாற்றமும் செய்யாமல், தரம்-encoding-ல் Unicode UTF(8)-டினை தேர்வு
செய்தவுடன், மடைதிறந்த வெள்ளமாய் யுனிகோடு தமிழினைத் தட்டச்ச முடியும்.

2. துரித அஞ்சல் தேடல் – Find any message instantly

சொடுக்கும் பொழுதில் ஒரு சொல்லைத் தந்து, எந்த மடலையும் தேடி
எடுத்துவிடலாம். இந்தச் சேவை வேறு எந்த அஞ்சல் சேவையிலும் கிடையாது

3. ஒரு கிகாபைட்டு சேமிப்பு – 1 GB storage

எந்த மடலையும் நாம் நீக்கத் தேவையில்லை. அப்படியே சேமிப்பில்
தள்ளிவிடலாம். அத்தனை பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய சேமிப்புக் கிடங்கு. வேறு
எந்த சேவையும் இத்தனை தருவதில்லை. நான் பல காலம், வருடம் 25 டாலர்கள்
கட்டி ஹாட்மெயிலிடம் இதில் ஐந்தில் ஒரு பங்கைப் பெற்றிருக்கிறென்

4. உரையாடல்கள் – conversations

இது மிகவும் அற்புதமான சேவை. வேறு எந்த அஞ்சல் சேவையும் இந்தச் சேவையைத் தருவதில்லை. ஒரு subject-பொருளில் ஒரு மடல் இட்டால், பின் அதனைத் தொடர்ந்து அதற்கு வரும் மறுமொழிகள் எல்லாம் ஒன்றாய் ஒரு கோப்பாய் இணைக்கப்பட்டு நம்முன் நிற்கும். அதாவது இலவசமாய் ஓர் உதவியாளர் நமக்குத்தயார். நாம் மேலாளர் போலவும். நமக்கு ஒரு உதவியாளர் இருப்பதுபோலவும் வசதி. எப்படி?

5. மடல் வந்ததும் அறிவிப்பு – gmail Notifier

இந்தச் சேவையும் வேறு எந்த அஞ்சல் சேவையிலும் இல்லை. இதை நிறுவிவிட்டால், எப்போது மடல் வந்தாலும் விண்டோசின் வலப்பறம் தெரியும் ஜிமெயில் ஐகான் நீல நிறமாய் மாறி நமக்கு மடல் வந்திருக்கிறது என்ற செய்தியைச் சொல்லும்.
ஆகவே, ஜிமெயில் எப்போதும் திறந்திறக்க வேண்டியதும் இல்லை நாம் அடிக்கடி
சென்று பார்க்கவும் தேவையில்லை. இது அவுட்லுக் போன்ற சேவைகளில் மட்டுமே
காணப்படும் ஒன்று. அதாவது ஜிமெயில் அவுட்லுக்கின் பல சேவைகளை
உள்ளடக்கியது

6. வேண்டாத மடல் கழிப்பு – Spam control

இது மிக முக்கியம். இந்தச் சேவையும் இத்தனைத் தரத்தோடு வேறு எந்த அஞ்சல்
சேவையிலும் இல்லை. வேண்டாத மடல்கள் வருவதே இல்லை. அப்படி வருபவை தனியே ஒரு கோப்பில் கிடக்கும். அதை நாம் பார்க்கக்கூடத் தேவையில்லை.

7. கோப்புகளும் வடிகட்டிகளும் – labels and Filters

Inbox தவிர, Folders என்று அவுட்லுக்கில் அழைக்கப்படும் labels இங்கே மிக
எளிதாய் உருவாக்கலாம். நன் தேவைக்கேற்ப மடல்களை வேறு வேறு கோப்புகளில்
சேமிக்கலாம். வரும் மடல்களை நேரடியாய் அங்கு செல்வதற்கான திட்டங்களை
Filters அமைக்கலாம். இந்த லேபல்கள் எல்லாம் தமிழில் வைத்திருக்கிறேன்
நான். தமிழில் பார்க்க எத்தனை அழகாய் இருக்கிறது தெரியுமா?

8. தமிழ்த்திரை – Tamil Interface

கூகுள், தமிலேயை அனைத்தையும் தரவல்லது. இது இன்னும் முற்றுப் பெறவில்லை. எனவே நான் அதிகம் பேசவிரும்பவில்லை

9. குறுக்குவழி பொத்தான்கள் – keyboard shortcuts

ஒரு பொத்தானை அழுத்தி பல காரியங்களைச் சாதிக்க வழியுண்டு இதில். இதுவும்
வேறு அஞ்சல் சேவைகளில் கிடையாது

10. ‘பாப்’ எடுத்தல் மற்றும் திசைமாற்றல் – POP access and Forwarding

ஜிமெயிலுக்குள் வரும் மடல்களை, வேறு மின்னஞ்சல்களுக்கு எளிதாக அனுப்பி
வைக்கலாம். இது வேறு அஞ்சல் சேவைகளில் காசு கொடுத்தாத்தான் நடக்கும், பல
அஞ்சல் சேவைகளில் காசு கொடுத்தாலும் நடக்காது. POP Access என்பது
அவுட்லுக் போன்ற அஞ்சல் செயலிகளுக்கு ஜிமெயில் வரும்படியாகச் செய்வது.
இதனால் ஜிமெயிலைத் திறக்கவே வேண்டாம். ஆனால் எனக்கு ஜிமெயில் திறந்து
விளையாடுவதே விருப்பம். அதன் சேவைக்குப் பழகிய எவரும் அதை விடமாடார்கள் என்னைப் போலவே என்பது உறுதி.

11. தொடர்புகள் ஓரிடத்தில் – contacts in one place

அனைத்துத் தொடர்புகளையும் நாம் ஓரிடத்திலேயே அருமையாய் வைத்துக்
கொள்ளலாம். அதுவும் தமிழில் வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்துவதும், மிக
எளிமையானது.

12. Import contacts from Yahool, Outlook, Hotmail & other programs

இது மிகவும் வரவேற்கக் கூடியது. வேறு எங்கெல்லாமோ உள்ள தொடர்புகளை
எல்லாம் மிக எளிதாக ஜிமெயிலுக்குள் கொண்டுவந்து குவித்துவிடலாம்.

http://gmail.google.com – இங்கே சென்றுதான் ஜிமெயில் வாசிக்க வேண்டும்.
Gmail Notifier நிறுவிவிட்டால், அந்தச் சங்கடமும் இல்லை.

பிறகென்ன தோழர்களே தோழியரே, இவற்றைவிட வேறு என்ன வேண்டும் ஜிமெயில் அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு. அழைப்பு இல்லாமல் யாரும் ஜிமெயில்
பெற்றுவிடமுடியாது என்பதால், அழைப்பு வேண்டுவோர் என் buhari@gmail.com
முகவரிக்கு எழுதினால், நான் அழைப்புக்கு உடனே ஏற்பாடு செய்வேன்.

எகலப்பை 2.0: http://anbudanbuhari.com/xunicodetamil.html

ஜிமெயில் உதவி:
http://gmail.google.com/gmail/help/tour/start.html
http://gmail.google.com/gmail/help/start.html
http://gmail.google.com/support/
http://gmail.google.com

ஆ. கூகுள் குழுமம்

அட இதற்கு ஏன் ‘ஆ’ என்று கொடுத்தேன். தமிழர்களையெல்லாம் அப்படி
ஆச்சரியப்படுத்தும் இந்தச் சேவை. தமிழுக்காகவே கூகுள் இதனைத் தொடங்கி
இருக்கிறதோ என்ற சந்தேகம் நமக்கெல்லாம் நிச்சயம் வரும். அப்படி என்ன
இருக்கிறது இதில். ஏன் நாம் யாகூவை விட்டுவிட்டு இங்கே செல்லவேண்டும்?

1. பலரும், யுனிகோடில் எழுதி தங்கள் வலைப்பூவில் இட்டுவிட்டு பின் அதன்
தகுதரத்தை மாற்றி திஸ்கியாக்கி யாகூ குழுமத்தில் இடுகிறார்கள். இது
அபத்தமில்லையா? இரண்டு இடத்திற்கும் செல்வது தமிழ்தான். ஆனால் தரம்தான்
வேறு. கொக்குக்கு கூஜா, நரிக்கு தட்டு என்பதுபோல இருக்கிறதல்லவா? நாம்
கொக்கும் இல்லை நரியும் இல்லை, தமிழர்கள்.

நமக்கு வேண்டுவது அமுதம் – அதற்கான
அட்சய பாத்திரமே கூகுள் குழுமம்.

(இக்கட்டுரையை எழுதி, வலையேற்றுவதற்குள் யாகூ யுனிகோடு சேவையைத்
தொடங்கிட்டது மகிழ்வினைத் தருகிறது. ஆயினும் யாகூவைவிட பல சிறப்பான
சேவைகள் கூகுளில் உண்டு. அதோடு இன்னும் வர இருப்பவை ஏராளம்.)

2. மகேனின் எழில் நிலா – https://ezilnila.ca/
மாலனின் திசைகள் – http://thisaigal.com/
எனது அன்புடன்புகாரி – http://anbudanbuhari.com/
இப்படி ஏராளமான வலைத்தளங்கள் தொடங்குவதெல்லாம் யுனிகோடில்தானே? ஏன் திஸ்கியிலேயே தொடங்குவதில்லை. நானும் முதலில் திஸ்கியில்தான் என்
வலைத்தளம் வைத்திருந்தேன். அதை யுனிகோடாய் மாற்றி வருடம் ஒன்றாகப்
போகிறது. காலம் மாறிப்போச்சுங்க! யுனிகோடு முதலிடம் வகிச்சாச்சுங்க.
வலைப்பூக்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். மிக எளிதாக உருவாகக்கூடிய ஈசல் அது. அந்த ஈசலின் சிறகுகள் எல்லாம் யுனிகோடு தமிழ்தானே?

3. எகலப்பை முன்பு திஸ்கி மட்டுமே எழுதும் நிரலியாக வந்தது. அது பின்
எகலப்பை 2.0 ஐ வெளியிட்டு வருடம் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால்
யுனிகோடும் திஸ்கியும் ஒரு பொத்தானைக் குத்தி தரம் மாற்றித்தட்டச்சி
சாதனைபுரியலாம், சமாய்த்து மகிழலாம்.

4. யுனிகோடுக்கு எழுத்துரு-font தேவையில்லை. ஏனெனில் விண்டோ சின்
பெரும்பாலான எழுத்துருக்களில் தமிழும் உண்டு. ஆனால் அது யுனிகோடாக
இருக்குமே தவிர, திஸ்கியாக இருக்காது. உதாரணமாக MS Sans Serif என்ற
விண்டோஸ் எழுத்துருவுக்குள் தமிழ் உண்டு. நம்ப முடிகிறதா? அதுதாங்க
யுனிகோடு. மைக்ரோசாப்டே தமிழ் தருகிறது. நாம் வேண்டாம் என்பதா? ஏனய்யா?

5. திஸ்கியில் பயன்படுத்தியதுபோல, தகுதரத்தை -encoding, user defined
ஆக்கத் தேவையில்லை. விண்டோசின் இயல்பிலேயே உள்ள UTF(8) போதும். ஆக நாம் ஒன்றும் செய்யத் தேவையில்லை. தானே தமிழ் தட்டச்சு செய்யலாம்.

6. அடுத்து, யாகூவைப்போல் கூகுள் குறைவான இடம் தருவதில்லை. GB கணக்கில்
தருகிறது. எனவே மடல்களை வெட்டி ஒட்டி என்ற கதையெல்லாம் வேண்டாம். சும்மா பூந்து விளையாடலாம். இணையத்தில் அரண்மனை வாசம்தான் நம் தமிழுக்கு.

7. இன்றைய உலகமே யுனிகோடு உலகம்தான். இனி நாளைய உலகைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. கூகுளின் முகப்பிலிருந்து அனைத்தும் தமிழிலேயே வரும். பாதிக்குமேல் இப்போதே வருகிறது.

8. தமிழில் தகவல் தேடும் தொழில் நுட்பம் யுனிகோடில்தான் உள்ளது. அதாவது
மாங்குமாங்கென்று நாம் இணைய குழுமங்களில் எழுதித் தள்ளுகிறோம். ஆனால்
எதுவும் தேடினால் கிடைப்பதில்லை. யுனிகோடாக இருந்தால், எந்தத் தமிழ்ச்
சொல்லை இட்டுத் தேடினாலும், அந்தத் தமிழ்ச்சொல் நம் குழும மடல் ஏதோ
ஒன்றில் இருந்தால், நச்சென்று வந்து விழுந்துவிடும். அதாவது உலகலாவ
விசயம் பரவும். தமிழும் ஆங்கிலத்தப்போல தேடியதும் தட்டுப்பட்டுவிடும்.
இது தமிழுக்கும் தமிழ் எழுதும் எழுத்தாளர்களுக்கும் மிக மிக அவசியம்.
உதாரணமாக, “புகாரி” என்றோ “அன்புடன் புகாரி” என்றோ “வெளிச்ச அழைப்புகள்”
என்றோ யுனிகோடில் கூகுளில் தட்டி தேடு பொத்தானைச் சொடுக்கிப் பாருங்கள்,
நிறைய வாசிக்கக் கிடைக்கும். அட என் பெயரிலேயே இப்படி என்றால்,  உங்கள்
பெயரைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

9. இவற்றோடு, கூகுளில் உள்ள மடல்களை, ஒரு வார்த்தை தந்து தேடச்செய்யலாம்.
எப்போது என்ன மடல் என்றெல்லாம் கண்வலிக்கத் தேடவேண்டாம். கூகுளே
தேடித்தரும். போன வருடம் நண்பர் தன் தொலைபேசி எண்ணை, நம் குழுமத்தில்
இட்டாரே என்ற நினைவு வந்த அடுத்த கணம், அவர் தொலைபேசி என்னைப்
பிடித்துவிடலாம். Mail search not by subject line but content.

கூகுளு கூகுளு கூகுளு – அட
குளுகுளு குளுகுளு கூகுளு
திஸ்கியும் பஸ்கிகள் எடுக்குது – மூச்சுத்
திணறியும் முனகியும் சாகுது

10. http://groups-beta.google.com/group/anbudan

இதயம் மீறும் எண்ணங்களால் நாம்
எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே

இங்கே சென்று பாருங்கள். மடல்கள் குவிந்துவிட்டன. ஏராளமான சோதனைகள்
செய்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இன்று இன்னொரு சோதனை
செய்தேன்.  இணைப்புகள் அனுப்பினேன். அப்படியே வருகிறது. ஆக தற்போதைக்கு
பழைய மடல்களைச் சீர் செய்து கோப்புகளாக்கி கூகுள் குழுமங்களுக்குள்
இறக்கிவிடலாம். இதனை விரைவில் உயிரெழுத்தில் செய்வேன்.

http://groups-beta.google.com/group/uyirezuththu

11. புதிதாக ஒருவர் ‘அன்புடன்’ குழுமத்திற்கு வந்தார். நீங்கள்
இதையெல்லாம் செய்யவேண்டும் என்று ஒரு மடலிட்டேன். இப்போது யுனிகோடு எழுதி சமாய்க்கிறார். அவர் நேற்று ஒரு விசயம் என்னிடம் கேட்டார். என் சிரிப்பை
என்னால் அடக்கவே முடியவில்லை ‘புகாரி, திஸ்கியில் எப்படி எழுதுவது?’

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
http://www.higopi.com/ucedit/Tamil.html

இங்கே சென்றால் விண்டோஸ் 98 பயன்படுத்துபவர்களும் மிக எளிதாக யுனிகோடு
தமிழ் தட்டச்சு செய்யலாம்.

12. இணையத்தோரே குழுமத்தோரே பெட்டியைக் கட்டிக்கொண்டு புறப்படுங்கள்.
நான் புறப்பட்டு நாளாச்சு, என்னோடு அங்கே வந்து சேர்ந்த உறுப்பினர்களின்
எண்ணிக்கையும் அதிகமாச்சு. பரிட்சார்த்தமாக ஓர் இணைகுழுமம்-parallel
group தொடங்குங்கள். அது போதும். மிகவிரைவில் அங்கேயே தங்கிவிடுவீர்கள்
என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாய் உண்டு.

என் ‘அன்புடன்’ உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது. பிரியம்போல்
அங்கே உங்கள் சோதனை மடல்களை இட்டுக்கொள்ளலாம். அது உங்கள் குழுமம்.
அன்புடன் குழுமம்.

http://groups-beta.google.com/group/anbudan

தமிழினி மெல்லச் சாவதோ
தீப்பொறி தீர்ந்தே போவதோ
விழிகளை விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே

அன்புடன் புகாரி

ToTop