ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

இன்ரநெற் பெருந்தெருவில் பேய்பிசாசு உலாவுதென்று பெற்றோர் அறிவாரோ!

பிரபஞ்சம் பற்றிய நீண்டகாலக் கற்பனைகள் பல, இப்போது உண்மைகளென நிரூபணமாகி வருகின்றன. சூரியத் தொகுதியில் மனித சஞ்சார முயற்சிகள் இப்போதெல்லாம் சர்வ சாதாரண செய்திகளாகிவிட்டன. மனிதனது மூளைக்குள் ஒருகால் அகப்பட மறுத்த பூமிப்பந்து இன்று அவனது உள்ளங்கையில் உட்கார்ந்திருக்கின்றது. புரியாதிருந்த ஏராளம் புதிர்களின் முடிச்சுக்களை விஞ்ஞானம் ஒவ்வொன்றாக அவிழ்த்து வருகின்றது. மனித வாழ்வின் சகல பரிமாணங்களையும் விஞ்ஞானம் படிப்படியாக மாற்றி வருகின்றது. ‘மாற்றங்கள் நிகழும் என்பது மட்டுமே மாறாது’  என்ற உண்மையை நவீன விஞ்ஞானம் மென்மேலும் நிரூபித்து வருகின்றது. ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில’ என்பதற்கமைய தினம் தினம் வாழ்வில் புதுமைகளை விஞ்ஞானம் புகுத்தி வருகின்றது.
இந்த விஞ்ஞானத்தின் வல்லமையினால் அளப்பரிய நன்மைகளை நாம் அனுபவித்து வருகின்றோம். அடுத்த தலைமுறையினைச் சேர்ந்த எங்கள் குழந்தைகளோ,  நவீன விஞ்ஞானத்தின் பலாபலன்களை மேலும் பன்மடங்கு அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர். அவர்களது வாழ்வை விஞ்ஞானம் முற்றிலும் மாறுபட்ட தளத்துக்கு இட்டுச் செல்ல இருக்கின்றது. இருப்பினும்,  ‘நவீன தொழில் நுட்ப வெற்றிகள் நாம் நினைத்தது போன்று சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கத் தவறிவிட்டன. புதிலாக நாம் சற்றேனும் எதிர்பாராத பல புதிய பிரச்சினைகளை அவை கொண்டுவந்து சேர்த்திருக்கின்றன’ என்று ஹென்றி ஃபோர்ட் ஒருமுறை கூறியிருந்தமையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூரத்தக்கது.

நவீன விஞ்ஞான உலகில் இன்ரநெற் எனப்படும் இந்த இணையம் ஓர் அற்புதமான கண்டுபிடிப்பு. தொடர்பு ஊடகங்களில் இன்ரநெற் ஈடு இணையற்ற ஒரு சாதனை! மனித இனத்தின் வளர்ச்சிப் பாதையில் ஒரு முன்னோக்கிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ள இத்துறையானது தொடர்ந்து இன்னமும் வளர்ந்து வருகின்றது. உலகின் மூலை முடுக்கெங்கும் கண்மூடித் திறக்கமுன் தொடர்புகொள்ள உதவக்கூடியது. உலகின் எல்லாப் பக்க வாசல்களையும் எங்களுக்காகத் திறந்து வைத்துள்ள தகவற் களஞ்சியம், இது. மனித நாகரிக வரலாற்றின் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கும் இன்ரநெற் தொழில் நுட்பம், முழு உலகையும் எமது கைவீச்சுக்குக்கள் கொண்டுவந்துள்ளது. கைக்கெட்டாத் தூரங்களில் இருக்கும் வாய்ப்புக்களை அருகே கொண்டுவந்து சேர்த்துள்ளது. விஞ்ஞானம்,  தொழில்நுட்பம் என்பவற்றடன் புதிய கலை கலாசாரங்கள்,  வாழ்க்கைமுறைகள்,  அரசியல், சமூக,  பொருளாதாரம் போன்ற பல துறைகள் சார்ந்த அறிவுகளின் தோற்றுவாயாக இன்ரநெற் எம்மை வந்தடைந்துள்ளது. ‘எட்டுத் திக்கும் சென்று கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்த்திடுவீர்’ என்று கூறிய கவிஞனின் கனவை நனவாக்கும் கருவிகளில் ஒன்றாக இன்ரநெற் எமது கைகளை வந்தடைந்துள்ளது.

அளப்பரிய நன்மைகளை எமக்குத் தேடித்தந்துள்ள இந்த விஞ்ஞான விந்தை, சில தீமைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கத் தவறவில்லை. குறிப்பாக குழந்தைகளுக்குப் பயன் மிக்க ஒரு கல்விச் சாதனமாக இருப்பதுடன், சமயங்களில் சில குழந்தைகளைப் படுகுழியில் வீழ்த்துவதற்கும் இது காரணமாக இருந்து வருகின்றது. இதே இன்ரநெற் வழியாகத்தான் குழந்தைகளின் மனங்களில் நஞ்சை விதைக்கக்கூடிய படங்களும் காட்சிகளும் காண்பிக்கப்படுகின்றன என்பதை மட்டும் பெரும்பாலான பெற்றார் வெறுமனே தெரிந்து வைத்திருக்கின்றார்கள். ஆனாலும் எமது குழந்தைகள் முகம் தெரியாதோருடன் தொடர்புகொள்ளும் வாய்ப்புக்களும் இதன் வழியாகவே கிடைக்கப்பெறகின்றன என்பதையும் குழந்தைகளுடன் தகாத முறையில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்புக்களைத் தேடி இன்ரநெற் பெருந் தெருக்களில் பலர் பேயாக அலைந்து திரிகின்றார்கள் என்பதையும் பெற்றோரில் பெரும்பாலானோர் உணர்ந்துகொள்ளத் தவறிவிடுகின்றனர்.

எங்கள் குடும்பம் எனும் பூங்காவில் வீசும் புதுத் தென்றல், குழந்தைகள். பலரது வரண்டுபோன வாழ்க்கையில் வசந்தத்தைத் தோற்றவிப்பவர்கள், குழந்தைகள். இவர்கள் எமது எதிர்கால சமூகத்தின் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் காரணமாக விளங்கும் விலை மதிப்பற்ற சொத்துக்கள். இத்தகைய குழந்தைச் செல்வங்களை விஞ்ஞானத்தின் புதுவரவான இன்ரநெற், சேதப்படுத்திச் செயலிழக்கச் செய்யவும்கூடும் என்ற செய்தியைப் பெற்றோரும் அறிந்திருப்பது இன்றைய காலத்தின் கட்டாய தேவையாகும்.
இத்தகைய ஈனச் செயல்கள் என்ன எண்ணிக்கையில் இடம்பெற்று வருகின்றன என்பதைத் தெரிந்துகொள்வது இவற்றினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களின் ஆழ நீள அகலங்களைத் தெரிந்து கொள்ள உதவும்.
அமெரிக்காவில் அண்மையில்; மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபரக் கணக்கெடுப்பு ஒன்றின்படி 6-17 வயதுகளுக்கு இடைப்பட்ட பிள்ளைகள் உள்ள 70 சதவீதமான வீடுகளில் கொம்பியூட்டரும் இன்ரநெற்றும் உபயோகிக்கப்பட்டு வருகின்றன. 2000ஆம் ஆண்டு சுமார் 25 மில்லியன் சிறுவர்கள் இன்ரநெற்றை உபயோகித்துள்ளனர். இத்தொகை 2005ல் 42.5 மில்லியனாக அதிகரிக்கும் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இன்ரநெற்றை உபயோகிக்கும் சிறுவர்களுள் 20 சதவீதமானோர் பாலியல் ரீதியான நோக்கங்களுடன் அணுகப்பட்டுள்ளனர். இவர்களுள் 22 சதவீதமான சிறுவர்கள் தமது நண்பர்கள், உறவினர்கள் உட்பட, பிறரது வீடுகளில் இன்ரநெற்றை உபயோகிக்கும்போதே இவ்வாறு அணுகப்பட்டுள்ளார்கள். 25 சதவீதமான சிறுவர்களுக்கு நிர்வாணப் படங்களும் உடலுறவு கொள்ளும் காட்சிகளும் இன்ரநெற் வழியாகக் காண்பிக்கப்பட்டுள்ளன. 17 குழந்தைகளுக்கு ஒரு குழந்தை என்ற விகிதாசாரத்தில் இன்ரநெற் மூலமாக அச்சுறுத்தல்கள், தெந்தரவுசெய்தல் போன்றன இடம்பெற்றுள்ளன. இன்ரநெற்றில் பாலியல் ரீதியான படங்களையும் காட்சிகளையும் கண்ட சிறுவர்களுள் சுமார் 23 சதவீதமானோர் தாம் மிக மோசமாக மனம் குழம்பிக் கலக்கம் அடைந்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். பாலியல் துஷ்பிரயோகத்துக்கான 89 சதவீத முயற்சிகள் Chat Room களிலும்,Instant Message மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தகாத இணையத்தளங்களைப் பார்வையிட்ட சிறுவர்களுள் சுமார் 40 சதவீதமானோர் இத் தகவலை இரகசியமாகவே தமக்குள் மூடி மறைத்து வைத்திருந்துள்ளார்கள். இவ்வாறான இணையத் தளங்களைப் பார்வையிட்ட பின்னர் இச்சிறுவர்களுள் 19 சதவீதமானோர் மன உளைச்சலுக்கான ஆக்க குறைந்தது ஒரு அறிகுறியையாவது கொண்டிருந்ததாக ஒப்புக் கொண்டிருக்கின்றார்கள். இன்ரநெற் வழியாக இடம்பெற்றவரும் குற்றச் செயல்களை எங்கே முறைப்பாடு செய்யலாம் என்ற விபரங்களை முறையே 17, 11 சதவீதமான சிறுவர்களும் பெற்றோரும் மட்டுமே தெரிந்து வைத்துள்ளனர். பெற்றோரை விட பிள்ளைகளுக்கே இன்ரநெற் பற்றிய அறிவு கூடுதலாக உண்டு என்ற உண்மையை 66 சதவீதமான இளைஞர்களும் பெற்றோரும் ஒப்புக் கொள்கின்றனர். இன்ரநெற் ஊடாகச் சிறுவர்களுக்கு பொருத்தமற்ற பாலியல் தொடர்பான பொருட்கள், காட்சிகள், படங்கள் என்பன காண்பிக்கப்படுதல் பற்றி 80 சதவீதமான பெற்றார் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். இத்தகவல்களை ஆழமாக நோக்கும்போது இன்ரநெற் பாவனை மூலமாக ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகளின் தீவிரம், அச்சம் தரக்கூடியதாக இருக்கக் காண்கின்றோம்.

உங்கள் குழந்தைகள் இவ்வாறான இன்ரநெற் அபாயங்களுக்குள் அகப்பட்டிருக்கின்றார்களா எனக் கண்காணிப்பது பொறுப்புமிக்க பெற்றோரது கடைமையாகும். இதன் பொருட்டு குழந்தைகள் இவ்வாறான அபாயங்களுக்குள் அகப்பட்டிருப்பதற்கான சில அறிகுறிகளைத் தெரிந்துகொள்வது அவசியம்.

உதாரணங்களாக ஒரு சில-
1) உங்கள் குழந்தைகள் மாலை அல்லது இரவு வேளைகளில் இன்ரநெற்றில் அதிலும் குறிப்பாக Chat Room ல் அதிக நேரத்தைச் செலவு செய்தல்
2) பாலியல் தொடர்பான படங்கள் அவர்களது கொம்பியூட்டரில் இருத்தல்
3) உங்கள் குழந்தைகளருகே நீங்கள் போகும்போது அவர்கள் கொம்பியூட்டரை மூடுதல் அல்லது கொம்பியூட்டர் திரையை மாற்றுதல்
4) முன்பின் தெரியாதவர்களுக்கு உங்கள் பிள்ளைகள் தெலைபேசி அழைப்புக்களை விடுத்தல் அல்லது அவர்கள் உங்கள் பிள்ளைகளுக்கு அழைப்பு விடுத்தல்
5) முன்பின் தெரியாதவர்களிடமிருந்து கடிதங்கள், பரிசுப் பொருட்கள், பார்சல்கள் போன்றவை உங்கள் பிள்ளைகளுக்கு வருதல்
6) குடும்பத்தவர்களிடமிருந்து பிள்ளைகள் விலகிப் போதல்
7) பிறருடைய Online A/C  உங்கள் பிள்ளைகளிடம் இருத்தல்

நோயறிகுறிகள் போன்ற இவ்வாறான நடத்தைகள் உங்கள் குழந்தைகளிடம் காணப்படுமாயின் அவர்களது கொம்பியூட்டர் மற்றும் இன்ரநெற் உபயோகம் பற்றி நீங்கள் விழிப்பாக இருப்பது நல்லது.

சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் தாக்குபவர்கள் ஒரு முதியவராகவோ அல்லது ஒழுங்கற்ற முறையில் அழுக்கான உடையுடன் ஒரு ‘மழைக்கோட்டு’ அணிந்தவராக மட்டுமோ இருக்கவேண்டுமென்றில்லை. பதிலாக அவர் போலிப் பெயர் கொண்ட ஓர் ஆணாகவோ அல்லது ஒரு பெண்ணாகவோ இருக்கலாம். அத்துடன் எந்த அந்தஸ்த்தினைக் கொண்ட எந்த வயதினராகவோ, எந்தத் தொழிலைச் செய்பவராகவோ இருக்கலாம். மணம் முடித்தவராகவும் இருக்கலாம். இவர்கள் சிறுவர்களைத் தமது ஆசைகளுக்கு அடிபணிய வைப்பதற்கு வேண்டிய தந்திரங்கள் அனைத்திலும் கைதேர்ந்தவர்களாக இருப்பர். இவர்களுள் பெரும்பாலானோர் புத்திசாலித்தனமான வழிமுறைகளைக் கையாண்டு சிறுவர்களைத் தமது வலைக்குள் வீழ்த்திக் கொள்வர். நன்கு பழக்கப்பட்டவர்களது பாலியல் இச்சைகளுக்கே சிறுவர்கள் அனுமதிக்கின்றார்கள் என்பதை இவர்கள் அனுபவ ரீதியாகவும் புள்ளிவிபரக் கணிப்பீடுகள் வழியாகவும் தெரிந்து வைத்துக்கொண்டுள்ளார்கள். இதனால் பல நாட்கள், பல வாரங்கள், பல மாதங்கள் – ஏன் பல வருடங்கள்கூடக் காத்திருந்து சிறுவர்களின் நட்பைப் பெற்று தமது காரியத்தைச் சாதித்துக் கொள்கின்றனர்.

குடும்பங்களில் அன்பு, அரவணைப்பு, கவனிப்பு என்பன கிடைக்கப் பெறாத பிள்ளைகள்தான் பெரும்பாலும் பாலியல் குற்றவாளிகளின் ‘மென் இலக்குகள்’ ஆகிவிடுகின்றனர். காணாமற்போன, கற்பழிக்கப்பட்ட, கொலை செய்யப்பட்ட சிறுவர்களுள் பெரும்பாலானோர் இந்த வகையைச் சார்ந்தவர்களே எனச் சான்றுகள் கூறுகின்றன. இவ்வாறான குழந்தைகளின் அன்பையும் அனுதாபத்தையும் பெறும்பொருட்டு பெருமளவிலான நேரத்தையும் பணத்தையும் சக்தியையும் இவர்கள் செலவு செய்கின்றனர்;. நவீன இசை, திரைப் படங்கள், விளையாட்டுக்கள் போன்ற பொழுது போக்குக்களுடன் கொம்பியூட்டர் தொடர்பான தொழில் நுட்பம் என்பன பற்றியும் இவர்கள் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றார்கள். சிலர் எடுத்த எடுப்பில் உடனடியாக நேருக்குநேர் சிறுவர்களைச் சந்திக்க முயற்சி எடுப்பர். அநேகமானோர் மிக நீண்ட நேரம் – மிக நீண்ட காலம் சிறுவர்களுடன் மின் சம்பாஷணைகளில் (Chat)  ஈடுபடுவர். சிறுவர்களின் பிரச்சினைகளுக்கு பொறுமையோடு செவி மடுப்பர். அவர்களுக்காக இரக்கப்படுவதாகப் பாவனை செய்வர். பின்னர் ஆலோசனை கூறுவர்;. அன்பளிப்புப் பொருட்களை அனுப்பி வைப்பர். தேவைப்படுமிடத்து பண உதவியையும் செய்யத் தயங்கமாட்டார்கள். இவ்வாறாக உறவினைக் கட்டியெழுப்பிய பின்னர், தமது பேச்சுக்களை மிகவும் சாதுரியமாகப் பாலியல் விடயங்களை நோக்கித் திசைதிருப்புவர். பாலியல் தொடர்பான அந்தரங்கங்களை அறிவதில் சிறுவர்களுக்கு இருக்கும் ஆவலைத் தூண்டி, மென்மேலும் அவை தொடர்பான படங்களையும் காட்சிகளையும் பொருட்களையும் பார்ப்பதற்கும் உற்சாகப் படுத்திவிடுகின்றனர். பாலியல் முறைகேட்டாளர்கள் விரசமான படங்களைப் பிள்ளைகளோடு பகிர்ந்து கொள்வதை கொம்பியூட்டரும் இன்ரநெற்றும் சுலபமாக்கிவிடுகின்றன. இவர்களிடம் ஸ்கானர்கள், டிஜிற்றரல் கமராக்கள் போன்ற நவீன கருவிகள் உண்டு. இவற்றை உபயோகித்து தமது படங்களையும் ஆபாசமான வேறு படங்களையும் தயாரித்து மின்னஞ்சல் வழியாகச் சிறுவர்களுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார்கள். முடிவாக, தவறு என்பதை உணர்ந்துகொள்ள முடிந்தும் அதிலிருந்து விடுபட முடியாமல் ஏராளமான சிறுவர்கள் பாலியல் விலங்குகளின் வஞ்சக வலையில் வீழ்ந்துவிடுகின்றனர்.

‘கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும் – வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்’ என்ற உண்மையை உணராத குழந்தைச் செல்வங்கள் இவ்வாறு கெட்டழிந்து போவதைப் பெற்றோர் எவ்வாறு கண்காணித்துக் கட்டுப்படுத்தலாம்?

ஆலோசனைகளாக ஒரு சில:
1) உங்கள் குழந்தைகளுடன் மனம் திறந்து பேசுங்கள். கொம்பியூட்டர் வழியாகப் பாலியற் கெடுதிகள் விளைவிப்போரைப் பற்றியும் அவர்களால் விளைவிக்கப்படும் ஆபத்துக்கள் பற்றியும் கலந்துரையாடுங்கள். பின்வருவன போன்ற அறிவுரைகளைச் சொல்லிக் கொடுங்கள்.
– இன்ரநெற் மூலம் அறிமுகமானவர்களை ஒருபோதும் நேரில் சந்திக்கக்கூடாது
– இன்ரநெற் மூலம் அறிமுகமானவர்களுக்குத் தமது படங்களை அனுப்பக்கூடாது
– முன்பின் தெரியாதவர்களுக்கு பெயர், முகவரி, பாடசாலைப் பெயர், தொலைபேசி இலக்கம் என்பவற்றைக் கொடுக்கக் கூடாது
– முன்பின் தெரியாதவர்கள் அனுப்பும் படங்களை download பண்ணக் கூடாது
– இன்ரநெற் மூலமாக வற்புறுத்தும் அல்லது தொந்தரவுபடுத்தும் அறிவுறுத்தல்களுக்குப் பதிலளிக்கக்கூடாது
– இன்ரநெற்றில்; சொல்லப்பட்டவை எல்லாம் உண்மை என நம்பத்தேவையில்லை என்று கூறிவையுங்கள்.
2) உங்கள் பிள்ளைகளின் கொம்பியூட்டரை அடிக்கடி கண்காணித்துக் கொள்ளுங்கள். மின் சம்பாஷணை, இன்ரநெற், மின்னஞ்சல் என்பவற்றைக் கவனித்துக்கொள்ளுங்கள். இவை பற்றிய போதிய அறிவு உங்களுக்கு இல்லையாயின் நம்பிக்கைக்குரிய நண்பர்கள், உறவினர்கள், சகவேலையாட்களிடம் கேட்டறிந்துகொள்ளுங்கள்
3) வீட்டிற்கு வரும் தொலைபேசி அழைப்புக்களின் இலக்கங்களையும் ஏற்கனவே வந்த அழைப்புக்களின் இலக்கங்களையும் கடைசியாக வந்த இலக்கத்தையும் காண்பிக்கக்கூடிய தொலைபேசிச் சேவைகளை உபயோகியுங்கள்
4) உங்கள் பிள்ளைகளோடு இணைந்து இன்ரநெற்றில் நேரத்தைச் செலவிடுங்கள்
5) வீட்டில் ஒரு பொது இடத்தில் கொம்பியூட்டரை வையுங்கள்
6)தேவையற்ற புரோகிராம்களைத் தடை செய்யக்கூடிய சேவைகளை கொம்பியூட்டரில் இணைத்துக்கொள்ளுங்கள்
7) பாடசாலையில், நூலகத்தில், நண்பர்கள்-உறவினர்களது வீடுகளில் என்ன வகையான ‘இன்ரநெற் பாதுகாப்ப’ உண்டு எனத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்
8) உங்கள் பிள்ளைகளின் இன்ரநெற் நண்பர்கள் யார் என்பதைக் கேட்டு வைத்துக்கொள்ளுங்கள்
9) இன்ரநெற் வழியாக யாராவது உங்கள் குழந்தை மீது பாலியற் குற்றச் செயல்களைச் செய்வதாக அல்லது செய்ய முயற்சிப்பதாக நீங்கள் கண்டுபிடித்தால் அவற்றிற்கான ஆதாரங்களை அழிய விடாமல் பாதுகாத்து வைத்து, பின்னர் பொலீசாரிடம் அறிவியுங்கள்

சிறுவர்களுக்குப் பாலியல் உணர்வைத் தூண்டக்கூடிய படங்களை இன்ரநெற்றில் அனுப்பித் தீங்கிழைக்க முற்படுவோர் தொடர்பாக முறைப்பாடுகள் செய்வதற்கென ரொறன்ரோ பெரும்பாகப் பொலீஸ் இலாகாவில்
The Child Pornography Section  எனப்படும் விசேட பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இது இன்ரநெற் பாவனையாளர்களுள் சந்தேகத்துக்கு உரியவர்களை இரகசியமாக அவதானித்து வருகின்றது. இன்ரநெற் வாயிலாக இடம்பெறும் பாலியல் சுரண்டல்கள் பற்றிக் கிடைக்கப் பெறும் தகவல்கள், துப்புக்களின் அடிப்படையில் இப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. விசாரணைகளின் போது சட்டங்களை அமுல் படுத்தும் ஏனைய துறையினருடனும் இன்ரநெற் சேவை வழங்குவோருடனும் இணைந்து இப்பாலியல் குற்றத் தடுப்புப் பிரிவு செயற்பட்டு வருகின்றது. பல மில்லியன் கணக்கான இன்ரநெற் பாவனையாளர்களுள் குற்றவாளிகளைக் கண்டுபிடித்தல் இலகுவான காரியமல்ல. பொது மக்களிடமிருந்து தகவல்களும் முறைப்பாடுகளும் இப்பிரிவினர்க்கு வந்துசேர்வது இப்பணியைச் சுலபமாக்கும்.
இன்ரநெற் வழியான மின்சம்பாஷணைகளின் போது பாலியல் நோயாளிகளினால் கௌவிக் கொள்ளப்படும் பல சிறுவர்கள், தமது பெற்றோருக்குத் தெரியாதவாறு இவர்களுடன் நேரடியாகச் சந்திப்பதற்கும் துணிந்துவிடுகிறார்கள் எனக் கூறும் இப் பொலீஸ் பிரிவினர்,
பிள்ளைகள் இன்ரநெற்றில் எவற்றைப் பார்க்கின்றார்கள் என்பதைப் பெற்றோர் அவதானிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுகின்றனர்.

2003 ஜூன் மாதம் 25ஆம் திகதி இரகசிய அதிரடி நடவடிக்கை ஒன்றின் மூலம், இன்ரநெற்றில் சிறுவர்களைத் தன் பாலியல் இச்சைக்குப் பலியாக்குவதற்கு வலைவிரித்து வந்த நபர் ஒருவரை முதன்முறையாக இப்பிரிவினர் கைது செய்திருந்தனர். றிச்மன்ட் ஹில்லைச் சேர்ந்த இவரிடம் இரகசிய பொலிசார் ஒருவர் தன்னை 12 வயதுச் சிறுமியாகப் பாவனை செய்து, இன்ரநெற்றில் நட்புறவை ஏற்படுத்தியிருந்தார். தனது பாலியல் இச்சையைத் தீர்த்துக் கொள்ளும் நோக்குடன், ரொறொன்ரோ நகரில் இரகசியமாகத் தன் ‘இன்ரநெற் சிநேகிதியை’ சந்திப்பதற்கு அவர் சென்ற சமயம் பொலீசாரிடம் வகையாக மாட்டிக்கொண்டார். இவ்வாறான சம்பவங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும் நடக்கக்கூடும் என்று பெற்றோர் எப்போதும் விழிப்பாக இருத்தல் வேண்டும். ஹோலி ஜோன்ஸ் என்ற குழந்தைக்கு நடந்த சோகத்தை இந்த நாடறியும். ஷாமினி அனந்தவேல் என்ற எங்கள் இனத்துப் பெண்பிள்ளைக்கு என்ன நேர்ந்தது என்ற வினாவுக்கு இதுவரை விடை கிடையாது. சிஸீலியா ஸாங் என்ற சீன இனத்துச் சிறுமி எங்கே என்று எவருக்கும் இற்றைவரை தெரியாது. எங்கள் குழந்தைச் செல்வங்களைக் காமுகர்களிடம் காவு கொடுத்தலை விட மோசமான சோகம் வேறு என்ன இருக்க முடியும்? எனவே ரொறொன்ரோவில் உள்ள பெற்றோரும், பிள்ளைகளில் கரிசனை உடையோரும் தேவை ஏற்படும்போது இன்ரநெற்றில் சிறுவர்கள் மீதான பாலயற் குற்றத் தடுப்புப் பிரிவினரின் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளத் தயங்கக் கூடாது.

தொடர்புகளுக்கு:
தொலைபேசி இலக்கம் 416-808 8500
மின் அஞ்சல் childpornography@torontopolice.on.ca

குழந்தைகள் எமது குடும்பங்களின் புத்தம் புதுத் தளிர்கள். பெற்றோராகிய எங்கள் அறியாமையாலும் அசிரத்தையாலும் அவற்றைக் காமக் கால்நடைகள் கடித்துக் குதறிவிட நாம் அனுமதித்தல் ஆகாது. குழந்தைகளை இழப்பதென்பது எமது வாழ்வின் வேர்களை இழப்பதற்குச் சமானமல்லவா? நவீன விஞ்ஞான தொழில் நுட்பத் துறைகளின் வேகமான வளர்ச்சி காரணமாக எம்மைவிட எமது பிள்ளைகளுக்கு வாய்ப்பும் வசதிகளும் இந்நாட்களில் மலிந்து கிடக்கின்றன. இன்ரநெற் என்பது இப்புதிய தலைமுறைகளுக்குக் கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதம். இன்ரநெற் பெருந்தெருக்களில் பேய் பிசாசுகள் நடமாடுகின்றன என்பது உண்மைதான். பாலியல் குற்றவாளிகளால் விளையக்கூடிய ஆபத்துக்களைக் கருத்தில் கொண்டு இந்த உன்னதமான தகவற் தொடர்புச் சாதனத்தினால் எமது பிள்ளைகள் பயன் பெறும் வாய்ப்பினைத் தடுத்துவிட நினைப்பது புத்திசாலித்தனமல்ல. சமூகத் தெருக்களிலும் ஆங்காங்கே ஆபத்துக்கள் பல்வேறு உருவங்களில் பொறிவைத்துக் காத்துக் கிடக்கத்தான் செய்கின்றன. அவற்றுள் அகப்பட்டுழலாமல் அவதானமாக எமது பயணங்களை நாம் மேற்கொள்வதில்லையா? அவ்வாறாகவே இணையத் தொடர்புச் சாதனங்களின் நன்மை, தீமை பற்றி பெற்றோர் தமது குழந்தைகளுக்கு ஆழமான கல்வியைப் புகட்ட வேண்டும். இன்ரநெற் பாவனை தொடர்பாகப் பெற்றோர் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும். வேண்டப்படாதவற்றை தடைசெய்யும் புரோகிராம்களை பயன்படுத்த வேண்டும். பெற்றோரின் கண்காணிப்பு இல்லாத சமயங்களிலும் அவை பிள்ளைகளுக்கு பாதுகாப்பை வழங்கக்கூடியன. தவிர்க்கக்கூடிய தீமைகளிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான வழிவகைகளைப் பெற்றோர் மேற்கொள்வதே பொருத்தமான தீர்வாகும்.

அறியாப் பருவத்துக் குழந்தைகள் பாலியல் வக்கிர புத்தியாளர்களின் வலைக்குள் வீழ்தல் ஆபத்து விளைவிக்கக்கூடியது என்று பொறுமையோடு சொல்லிக் கொடுங்கள். அவ்வாறு தவறி வீழ்ந்த குழந்தைகளைக் குற்றவாளிகள் ஆக்காதீர்கள். உண்மைக் குற்றவாளிகள் யார் என்று குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் காவலர்களிடம் கையளித்துவிடுங்கள். எங்கள் புதிய வாழிடத்தில் ஒரேயொரு போல் பேர்னாடோவும் ஒரேயொரு காலா ஹமோக்காவும்தான் உண்டு என நம்பி ஏமாந்து போய்விடாதீர்கள். கொம்பியூட்டர் கருவிக்குள்ளேயும் கொலைகாரர்களும் காமப்பேய்களும் உண்டு என்பதை உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.

பிள்ளைகள் மழலைகளாகவும் சிறுவர்களாகவும் இருக்கும்போது அவர்களை உங்கள் மடியிலும் மார்பிலும் தோளிலும் சுமந்து கொள்வீர்கள். அவர்கள் சற்றே வளர்ந்துவிட்டால் அது சாத்தியமில்லை. உங்கள் இதயத்தில் மட்டுமே அவர்களை உங்களால் சுமந்துகொள்ள முடியும்! அத்தகைய உங்கள் பிள்ளைகளோடு கொம்பியூட்டரின் நன்மைகள் தீமைகள் பற்றிக் கலந்துரையாடுங்கள். மனந்திறந்து அளவளாவுங்கள். அன்பாக இருங்கள். அது ஏராளம் பிரச்சினைகளுக்கு ஏற்ற தீர்வாகும். அதுவே எப்போதும் சாத்தியப்படக்கூடிய, பயன்மிக்க தீர்வுமாகும்!

-க. நவம்-

knavam@sympatico.ca

நன்றி: ஆசீர்வாதம் ஏப்ரல் 2004

ToTop