ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

நாளை நான் போகாமல் இருப்பேனா?

“புகழ் பெற்ற நந்தன் பாடல்.”

நந்தனோ நாளை என்றான்;
நாமோ இன்றே அவசியம் சென்று பார்க்க வேண்டிய திருத்தலம் தில்லை.
ஆடலரசன் நடராஜன் கனகசபையினில் அம்மை சிவகாமியுடன்
ஆனந்த நடம் புரிந்த ஆலயம்.மற்ற சிவாலயங்களுக்கு இல்லாத பல சிறப்புகள் நடராஜர் குடிகொண்ட இக்கோயிலுக்கென்று உண்டு.

இங்கு உறையும் ஆண்டவன் கனகசபை, பொன்னம்பலம், சபாபதி என்ற பல
பெயர்களைத் தாங்கியவன்.

இக் கோயிலில் மூலவரை விடவும் உற்சவமூர்த்தியான நடராஜருக்கே புகழும்,
பெருமையும் அதிகம். நடராஜரின் கூத்தாடும் வடிவம் யாரால் எப்போது
வடிக்கப்பட்டது என்பதற்கு வரலாறு ஏதுமில்லை. இறைவனின் ஆனந்த
நடனநிலையைக் கற்பனை செய்தவர் யாரோ?
அந்த அழகிய கற்பனையும், அதற்கு வடிவம் கொடுத்த சிற்பியின் திறனும் அற்புதமானது.

நடராசரின் கையில் உள்ள உடுக்கை (துடி) படைத்தலையும், அபயக்கரம் காத்தலையும்,
அக்கினி ஏந்திய கை அழித்தலையும், ஊன்றிய கால் ஆன்மாக்களைப் பாசத்திலிருந்து மறைத்தலையும், தூக்கிய கால் அருளையும் காட்டுகிறது.

தில்லைப் பொன்னம்பலத்தில் ஆடும் ஆனந்த நடனமே நித்தியமானது; நிரந்தரமானது;
உலக இயக்கத்துக்கு இதுவே மூலம் என்பதும் மரபு.

அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைச் சொல்லும் ‘பெரியபுராணம்’, சிதம்பரத்தில் கிழக்கு கோபுர வாசல் அருகில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில்தான் அரங்கேற்றப்பட்டது. பெரிய புராணத்தைத் தொடங்க இறைவனே முதலடி எடுத்துக் கொடுத்ததாகவும் புராணம் உண்டு.

‘பன்னிரு திருமுறைகள்’ என்று போற்றப்படும் தேவாரப் பாடல் ஏடுகள் பல
நூற்றாண்டுகளாகச் சிதம்பரம் கோயிலிலேயே பாதுகாக்கப்பட்டு 12 ம் நூற்றாண்டுக்குப்
பின் ராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் நம்பியாண்டார் நம்பி என்னும் அடியாரால் கண்டெடுக்கப்பட்டு பின்னரே தொகுத்து வழங்கப்பட்டது.

அனைத்துக் கோயில்களிலும் இறைவன் எழுந்தருளியிருக்கும் கர்ப்பக்கிரகத்தை
மூலஸ்தானம் என்றழைப்பர். ஆனால், இங்கோ லிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்ட
தனிக் கோயிலைத் திருமூலட்டானம் என்ற சிறப்புப் பெயரால் அழைப்பர்.

திருமூலட்டானத்தின் அருகேயே அமைந்துள்ளது அம்மை சிவகாம சுந்தரியின் சந்நிதி.
கலையம்சம் பொருந்தி மிளிர்கிறது சிவகாமி சிற்பம். முழுவதும் வெள்ளியங்கி
சார்த்தப்பட்டு அற்புத அலங்காரியாகக் காட்சி அருள்கிறாள் அன்னை.

இவ்வாலயத்தில் மற்றோர் சிறப்பு பொன்னம்பலம் அல்லது கனகசபை. பொன்னால்
வேயப்பட்ட ஓடுகளுக்குக் கீழே உறைகிறான் அம்பலக்கூத்தன்.
இதில் 21,600 தங்க ஓடுகள் வேயப் பெற்றிருக்கின்றன. அது என்ன கணக்கு?
அதற்கும் ஒரு தத்துவம் உண்டு.

நாம், ஒரு நிமிடத்துக்குப் பதினைந்து முறை சுவாசிக்கிறோம்.

ஒரு நிமிடத்துக்கு 15 முறை
ஒரு மணிக்கு 900 முறை
ஒரு நாளைக்கு 21,600 முறை

இதனைக் கருத்தில் கொண்டே 21600 ஓடுகள் வேயப்பட்டுள்ளன.
இந்தக் கனகசபைக்கு அருகிலேயே சிவாலயம் எங்கனும் காணக் கிடைக்காத மற்றோர்
சிறப்பம்சமும் உண்டு. நடராஜர் சந்நிதியின் அருகிலேயே அனந்த சயனக் கோலத்தில்
கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி உள்ளது. இதுவும் ஓர் பூர்வமான ஏற்பாடு.

இந்த கோவிந்தராஜப் பெருமாள், எட்டாம் நூற்றாண்டில் நந்தி வர்ம பல்லவனால்
பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு. இந்த கோவிந்தராஜனை குலசேகர ஆழ்வாரும்,
திருமங்கையாழ்வாரும் தரிசித்து பாசுரங்கள் பாடிப் பரவசமடைந்துள்ளனர்.

கோவிந்தராஜப் பெருமாள் அனேக தொல்லைகளுக்கு ஆளாகி இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருப்பதாகவும் கதைகள் பல உண்டு. பொன்னம்பலத்தானின் முன்னிலையில்
பெருமாள் இருப்பதை விரும்பாத இரண்டாம் குலோத்துங்கன் பெருமாளைக் கடலில் எறிந்து
விட்டதாகவும், பல தொல்லைகளுக்குப் பின்னர், 1539 இல் விஜயநகர மன்னன் அச்சுதராயர் பெருமாளை மீட்டு மீண்டும் கோயிலில் பிரதிஷ்டை செய்து, பெருமாள் சந்நிதிக்கு எதிரே கொடிக்கம்பமும் நட்டு, நடராசனுக்கும், பெருமாளுக்கும் ஏக காலத்தில் பூஜைகள்
நடைபெற வழி செய்ததாகவும் கதைகள் சொல்லப்படுகின்றன.

கொடிக்கம்பத்தின் அருகே நின்று பார்த்தால் ஒரு சேர பெருமாளையும், நடராஜரையும் வணங்கலாம். சைவர்களால் தில்லையென்றும், சிதம்பரம் என்றும் அழைக்கப்படும் இவ்வூர், வைணவர்களால் திருச்சித்திரக்கூடம் என்று அழைக்கப்படுகிறது.

தாழ்ந்த குலத்தில் பிறந்த நந்தன், இறைவனை வணங்கி வழிபட இடையூறு இல்லாமல் நந்தி விலகி வழி விட்ட கதையும் கூட உண்டு.

சிதம்பரம் கோயிலின் உரிமையும், பரிபாலனமும் தில்லை வாழ் அந்தணர்கள்
என்ற தீட்சிதர்களிடம்தான் உள்ளது.

நாயன்மார்களான சுந்தரமூர்த்தி நாயன மாணிக்க வாசகர், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் நான்கு இராஜகோபுர வாசல்களின் வழியாக வந்து வழிபட்டதாக வரலாறு உண்டு. நான்கு கோபுர வாயில்களிலும் அவர்களை தீட்சிதர்கள் வரவேற்ப போன்ற சிற்பங்கள் உள்ளன.
கூத்தரசனின் கோயில் என்பதால் கோபுரவாயில்கள், மற்றுமுள்ள சிற்ப வேலைப்பாடுகளெல்லாம் ஆடற்கலையின் வடிவங்களே. பரத சாத்திரத்தில் சொல்லப்பட்டுள்ள 108 வகைக் கரண பேதங்களையும் புடைச் சிற்பங்களாக வடித்திருக்கிறார்கள்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பலதரப்பட்ட நாட்டியக் கலைஞர்களால் நடராசப்
பெருமானுக்கு செய்யப்படும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் ஒரு சிறப்பம்சம்தான்.

முக்தி தரும் தலமென்று கூறப்படும் தில்லைக்கு அவசியம் ஒரு முறை அனைவரும்
சென்று வர வேண்டும்.

ToTop