தமிழ் இலக்கியத்தில் தனிப்பாடல்களுக்குத் தனி இடம் உண்டு. அவை வேறுபட்ட காலங்களில் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்றவை. இப்பாடல்கள் சொல் நயமும் சுவை நலமும் தோன்ற எளிமையக எழுதப்பட்டவை. இவற்றை எழுதிய புலவர்களில் காளமேகம், கம்பர், கடிகைமுத்துப் புலவர், ஒளவையார், ஒட்டக்கூத்தர், பலபட்டை சொக்க நாதப்புலவர், ஆண்டாள் கவிராயர் போன்றோர் புகழ் பெற்றவர்கள்.இவர்களில் காளமேகப்புலவரைப்பற்றி இன்று பார்ப்போம் .
இவர் இயற்பெயர் வரதன். இவர் ஆசு கவி பாடுவதிலும் சிலேடைப்படல்கள் பாடுவதிலும் வல்லவர். இவர் காலம் 15ம் நூற்ராண்டின் இடைப்பகுதி.
பாடுக! என்றதும் மழை பொழிவதைப்போல் பாடும் திறமை பெற்றதால் இவர் ‘காளமேகம்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றார்.
” இத்திரன் கலையா யென்மருங் கிருந்தான்” எனும் இவரது பாடல் தொடரின் மூலம் இவர் கால மன்னன் கல்பாணிச் சாளுவ திருமலைராயன் என்று கொண்டு இவருடைய காலம் பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதி எனத் தமிழ் வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.
இவர் ஆசு கவி பாடுவதிலும், வசை பாடுவதிலும் வல்லவர் என்பதை ஆசு கவியால் அகில உலகெங்கும் வீசுபுகழ்க் காளமேகம்’, ‘வசைபாடக் காளமேகம்’ எனும் தொடர்களால் அறியலாம்.
இவர் கும்பகோணத்திற்குத் தெற்கே இரண்டு கல்தொலைவிலுள்ள நந்திபுரத்தில், தற்போது நாதன்கோயில் என வழங்கப்படும், ஊரில் பிறந்தார்.
‘திருவானைக்காவுலா’ என்பது இவர் இயற்றிய நூலாகும். இவரது தனிப்பாடல்களைத் தனிப்பாடற்றிரட்டு, பெருந்தொகை முதலிய நூல்களில் படித்து மகிழலாம்.
கார் என்று பேர் படைத்தாய் ககனத்துரும்போது!
நீர் என்று பேர் படைத்தாய் நெடுந்தரையில் வீழ்ந்ததன் பின்!!
வார் சடை மென்கூந்தல் பால் ஆய்சியர்கை வந்ததன் பின்
மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே!!!
பொருள்: நீ£ரே! நீ காயத்தில் இருந்த போது மேகம் என்ற பெயரைப்பெற்றாய். தரையை அடைந்த பிறகு நீர் என்ற பெயர் பெற்றாய். ஆனால், நீண்ட நெடுங் கூந்தலை உடய பால் விற்கும் மாதரின் கையில் வந்ததும் மோர் என்று பேர் பெற்று முப்பேர் பெற்று விட்டாயே என்று கூறுகிறார்.
மேற்கூறிய பாடலில் புலவர் ஆயர் குலப்பெண்ணை நையாண்டி செய்கிறார். அவள் விற்ற மோர் தண்ணீரைப்போல் இருந்தது. அதை நேரடியாகச் சொல்லாமல் அப்பெண்ணைப் புகழ்வதுபோல், அவள் கைவண்ணத்தால் தண்ணீரே மோரானதாகப் பாடுகிறார்.