ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

மார்கழி நோன்பு

உலகின் வட முனையில் இருப்பவர்கள் நம்மைப் போல பகலெல்லாம் வெயிலிலும் , இரவெல்லாம் இருட்டிலும் வாழ்வதில்லை. அவர்களுக்குப் பகலென்பது ஆறு மாதமாகவும், இரவென்பது ஆறு மாதமாகவும் நீண்டுடிருக்கும்.சூரியன் வடக்கிருந்து தெற்கே போவது போலவும் , பின் ஆறு திங்கள்
ஆனதும் தெற்கே இருந்து வடக்கே திரும்பிப் போவது போலவும்
நமக்குத் தோன்றும்

வடக்கு நோக்கிப்போகும் ஆறு திங்களைத் தட்சணாயனம்
எனவும் வழங்குகிறது.

வட முனையில் தட்சணாயனமே இரவுக் காலம் ;
உத்தராயணமே பகற்காலம்.
தை மாதத்திலிருந்து ஆறு திங்களை உத்தாரயணம் என்றும் ,
ஆடியிலிருந்து ஆறு திங்களைத் தட்சணாயனம் என்றும் கூறுகிறோம்.

புராணங்கள் தேவர்களுக்கு ஓராண்டு ஒருநாள் என்றும் ,
உத்தராயணமே பகல் என்றும் , தட்சணாயனமே இரவென்றும் கூறும்.
இந்த நிலையில் தைமாதத்திற்கு முந்திய மாதம் செவ்வானக் காலமாகும்.
அந்த நிலையில் மார்கழி மாதம் , இருளில் நீண்ட காலம் புழுங்கியவர்களுக்குத்
துன்பமெல்லாம் நீங்கிப் பொழுது விடியும் காலமாக இன்பமூட்டுவது இயல்பே.
வட முனையில் வாழ்ந்த வாழ்வின் நினைவே அந்த இனத்தின் நினைவில் தங்கிவிட
அதனையே தேவ ஆண்டாகப் புராணம் பேசியிருக்கலாம் எனக் கருதுவாரும் உண்டு.
நாள் விடிவதென்றால் நம் கணக்கில் ஆண்டு பிறப்பதேயாகும்.

திருவாதிரை ஒரு காலத்தில் சூரியராசியின் தொடக்கமாக இருந்ததாம்.
பூமியின் சுழற்சியின் பயனாக இவ்வாறு தொடங்குமிடம் பல நூற்றாண்டுகளில் மெல்ல
மெல்ல மாறி வருமாம். திருவாதிரையிலிருந்து கார்த்திகை முதலாக மாறியிருந்த காலமும்
அசுவினி முதலாக மாறி இருந்த காலமும் உண்டு.

இப்போது பூரட்டாதி முதலாக உளது என்பர். திருவாதிரை முதலாக
இருந்த காலத்தில் வேதம் எழுதப்பட்டது என்பது திலகரது கொள்கை. கார்த்திகை
மாதமே ஆண்டின் முதல் மாதமாக இருந்ததும் உண்டு.
அது மாறிப்போன பின்னும் கூட மக்கள் அதனையே முதலாக
வைத்து எண்ணி வந்தனர்.

ஞான சம்பந்தரது கோளாறு பதிகத்தில் வழி நடைக்கு காத
நட்சத்திரங்களைக் குறிப்பிடும் போது :

” ஒன்பதோடு ஒன்றோடு ஏழுபதினெட்டோடு
ஆறும் உடனாய நாள்கள்…”
என்று கிருத்திகையை முதலாக வைத்தே எண்ணுகிறார் என்பர்.

ஆனால் அவருக்கு முன் காலத்திலேயே அசுவனி முதலாக
எண்ணப்பட்டு விட்டது.
வட நாட்டில் வருடப்பிறப்பு தீபாவளியன்று பிறப்பது இதனை ஒட்டியே
என்று கூறப்படுகிறது.

வட நாட்டில் சந்திரனை அடிப்படையாகக் கொண்டு வழங்கும் சாந்திரமானக்
கணக்காகும். இனி , சூரியன் அசுவனியில் முதலாக இருப்பதைக் கொண்டு வழங்கும் செளரமானக் கணக்கின்படி தமிழ் நாட்டில் சித்திரை மாதமே ஆண்டின் முதல் மாதமாகிறது.

இப்போது அசுவனி முதல் மாதமாகாமல் போனாலும் , பழைய கணக்குப்படியே நாம் வழங்கி வருகிறோம்.

ஓர் அமாவாசையிலிருந்து மற்றோர் அமாவாசை வரை ஒரு சாந்திரமான
மாதமெனக் கணக்கிடுவது வழக்கம். சூரியன் ஓரிராசியில் புகுவதனைச் சங்கிராந்தி என்பர்.
மகர ராசியில் புகுவதை மகர சங்கிராந்தி என்றும் என்றும் வழங்குவர். இந்த பெரு நுழைவு , அது நிகழும் தை மாதம் ஆண்டின் முதலாக இருந்ததைக் குறிக்கலாம்.

முன் பனிக்காலம்

அதனைப் பொங்கல் திருவிழா என் இன்று நாம் கொண்டாடுகிறோம்.

மார்கழியும் தையும்; முன்பனிக்காலம். மாசியும் பங்குனியும் பின் பனிக்காலம்
இக்குளிரிடையே மிகக் குளிர்ந்திருக்கும் நீரில் மூழ்குவது ஓர் அருமையான அனுபவம்.

அவ்வாறு குளித்ததுடன் இயற்கைச் சூடு உடம்பில் இருந்து வருவதால்
ஓர் இன்ப அனுபவம் தோன்றும். இயற்கையையோடு இயைந்த ஒரு நோன்பு நோற்கிறோம்
எண்ணம் நமக்கு தோன்றுகிறது. கடவுள் அருள் பெற இது ஒரு நல்ல வழி என்று கருதிய காலமும் உண்டு. தைந் நீராடல் என்று இதனை ஒரு
நோன்பாக நோற்று வந்தார்கள் நமது முன்னோர்கள்.

இதனைப் பரிபாடல் குறிப்பிடுகின்றது.”அம்பா ஆடல் ” என்ற சொற்தொடர்
பரிபாடலில் காணப்படுகிறது.

மணமாகாத பெண்கள் இந்த நோன்பு நோற்பர்.

” அம்பா ஆடல் ” என்பதற்குத் தாயுடன் ஆடுதல் என்று பொருள்.
பாவை போல ஒரு பெண் பிள்ளையின் – தாய் கடவுளின்
வடிவை அமைத்து வணங்கி வழிப்பட்டுப் பின் நீராடுவர்.

பாவை நோன்பு நோற்பவர் விரும்பத்தக்க சிறந்த கணவனைப்
பெறுவர் என்பது நம்பிக்கை.

இது நாட்டில் மழை பெய்ய நோற்கும் நோன்பு என்று கூட கொண்டனர்.
கற்பே மழைத் தரும் என்று நம் நம்பிய தமிழுலகம் இக்கன்னியர்
நோன்பை மழைக்கென நோற்கும் நோன்பாகவும் கருதினர்.

பின்னர் இந்த இரண்டையும் வேறு என பிரிப்பதும் வழக்கமாகிவிட்டது.

தை ஒரு திங்களும் தரை விளக்கிக் காமதேவனை வழிபட்டுக்
கணவனைப் பெறுவது ஒரு நோன்பாயிற்று. இதனை ஆண்டாளும் பாடுகிறாள்.

மழையை விரும்பிப் பாடுவது
பழமையை போல அம்பா ஆடலாகவே விளங்கியது.
இது நாளடைவில் ஆண்டாள் கையிலும் , மாணிக்கவாசகர் கையிலும்,
தெய்வ நோன்பாகவும் வளர்ந்தன போலும்.

பொதுவாக இவ்விழாக்களைப் பனிக்கால விழாக்கள் என்று கூறலாம்.
மார்கழியும் முன் பனிக்காலமே. ஆதலின் அதிலே அம்பா ஆடல் சிறப்பாகக்
கொண்டாடப்பட்டது. சங்க காலத்தில் தைந்நீராடலாக இருந்தது. ஆண்டாள்
காலத்தில் மார்கழி நீராடலாக மாறியது.

திருவெம்பாவை – திருப்பாவை தமிழ் நாட்டில் தோன்றிய காலத்தில்
இந்த நோன்பு மார்கழித் திங்களிலேயே நடைபெற்றது.

திருப்பாவையில்,

”மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் ”
— என்றே தொடங்கிறது.

திருவெம்பாவையும்,
” போற்றியாம் மார்கழி நீர்
ஆடேலோர் எம்பாவாய் ”

— என்றே முடிகிறது

” மார்கழி ” வட நூல் குறிப்பு.

மார்கழித் திங்களைச் சிறப்பித்துப் பேசும் வழக்கத்தை வடமொழி
நூல்களிலும் காணலாம்.
” மாதங்களில் நான் மார்கழி மாதம் ஆகின்றேன் ” என்று கண்ணன் கீதையில் கூறுகிறான்.
வால்மீகியும், பஞ்சவடிவில் இராமர் இருக்கும்போது,இலக்குமணன் , இராமனுக்கு விருப்பமான பனிக்காலம் வந்ததென்றும், இந்த மார்கழி மாதத்தினாலேயே ஆண்டு முழுவதும் அணி பெறுகிறதென்றும் இராமனிடம் கூறிகிறான்.

பெண்கள் அழகை பெற விரும்பினால் செய்யும் நோன்பு ஒன்றை விஷ்ணு
தருமோத்த புராணம் கூறுகிறது. இந்த நோன்பு மார்கழி மாதத்தில் நடைபெறும் என்றும்
அப்போது அவியுணவே கொள்ளுதல் வேண்டும் என்றும் அந்தப் புராணம் கூறுகிறது.

அம்பா ஆடல் என்பதற்கும் உலகத் தாயின் வடிவைப் பாவையாக
அமைத்து வழிபடுவது என்று பொருள் கூறலாம் என்று காலம் சென்ற
மு. இராகவையங்கர் கூறுகிறார். பாகவதம் மார்கழி மாதத்தில்
ஆயர் மகளிர் காத்தியாயினியை வழிபட்டு,அவியுணவு உண்டு கண்ணனை அடைந்தார்கள்
என்றும் கூறுகிறது.

இந்த வடநூற் குறிப்புகள் தென்னாட்டு தொடர்பால் எழுந்தன என்று கூறலாம்.

பாவை நோன்பு :

கார்த்தியானி விரதத்தைப் ” பாவை நோன்பு ” என்பதினால் ‘ எம்பாவாய் ‘
எனப் பாவையை நோக்கி முதலில் பாடிய பாடல்கள் ‘ ஏலோர் எம்பாவாய் ‘
என்ற தொடர் ஒவ்வொரு பாட்டிலும் முடிவாக வருகிறது.
அவியுணவு உண்ணுதலைப்பற்றி வடமொழி நூல்கள் கூறுகிறது.

ஆண்டாளும் ,
” பாலுண்ணோம் நெய்யுண்ணோம்
கோல அணிகலெல்லாம் பூணோம் ”
— என்று கூறிகிறாள்.
இதிலிருந்து இந்த நோன்பின் கடுமை நமக்கு விளங்குகிறது. அது மட்டுமல்லாது
அறம் செய்தலையும் வலியுறுத்துகிறது. ஐயமும் பிச்சையும் ஆந்துணையும் கைகாட்ட வேண்டுமெனப் பாடுகிறார். நோன்பு முடிந்த பின் எல்லா அணிகளையும் அணிவதோடு நெய் ஒழுக சிறந்த உணவை
உண்ணுவதனையும் குறிப்பிடுகிறது.

மழை நோன்பு.

இது மழை வேண்டி விழையும் நோன்பு என்பதும் விளங்குகிறது.

ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்துப்
பாழியம் தோள் உடைப் பற் பற்பநா பன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சர மழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.
(- திருப்பாவை- 4 )

இந்தப் பாடலில் விஞ்ஞான, அறிவியல் கருத்தும் அடங்கியும் காணலாம்.
மழை எப்படி பெய்கிறது என்பதை நாம் அறிவோம். சூரியனின் வெப்பதால்
கடல் , நீர் நிலைகளிலுள்ள தண்ணீர் வியாக மாறி , மீண்டும் மழையாக
பொழிவதை அறிவோம்.

அறியவில் பின் காலத்தில் கூறியதை ஆண்டாள் முன்னமே உரைத்துவிட்டாள்.

இந்தப் பாடலில் ஆண்டால் மழையை வேண்டிப் பாடுவதனை காணலாம். மழையின் பல்வேறு நிலைகளையும் ஆன்டவன் உடன் ஒன்றாக்கிப்
பாடுகின்ற சிறப்பே ”ஆண்டவன் அருளே மழை ” என்பதே கருத்து.

மாணிக்க வாசகரும் ,

” முன்னைக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தும் எம்பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்ம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்
[ திருவெம்பாவை ]
எனறு வேண்டிக் கொள்வதைக் காண்கிறோம்.

பண்டை காலத்துத் தமிழர் வழிபாடெல்லாம் தனி ஒருவர் வழி
பாடாகாமல் சமுதாயத்தின் நலங் கருதியவழி பாடாகவே அமைந்திருந்தது. சிலப்பதிகாரத்தில் வரும் வரிப்பாடலகளிலும் குரவைப் பாடல்களிலும்காணலாம்.
அதுபோலவே கன்னிப் பெண்கள் நோன்பிலும்
‘ நாடு முழுதும் வாழ மழை பெய்யவேண்டும் ‘ என்னும் பாட்டாகவே பாவைப் பாட்டு முடிகிறது.

நீராடல்.

நோன்பினை நோற்கும் பெண்கள் குளித்து மகிழ்வர் ; பாடிக்கொண்டே
செல்வர்; பாடிக்கொண்டே நீராடுவர் ; நீராடும்போது முழவொலி போன்ற ஒலியைத்
தங்கள் கையாலேயே நீரை எற்றுவதால் எழுப்புவர். வாத்ஸ்யாயனர் தமது
காம சூத்திரத்தில் ஜலக்கிரீடை என்னும் நீராட்டத்தின் போது தண்ணீரிலே முழவொலி
எழுப்பும் கலையைப் பற்றி கூறப்பட்டுகிறது. ஆடலும் பாடலுமாக இந்த நீராடல்
அமைவதனைப் பாவைப் பாட்டில் காணலாம்.

” மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல் பாடி
ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண் ஆரல் போற்
செய்யா ! வெண்ணீறாடி ! செல்வா ! சிறு மருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா !
ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்தொந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.
[ திருவெம்பாவை .11 ]

” மொய்யார் தடம் பொய்கை புக்கு
முகேர் என்னைக் கையால் குடைந்து குடைந்து ”
– என்று ஆடுவதைக் குறிக்கிறார் மாணிக்க வாசகர்.

அடுத்த பாட்டிலும் , வளை சிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவம் செய்ய
பூத்திகழும் பொய்கை குடைந்தாடுவதைப் பாடுகிறார்.

” பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நஞ்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பயகயப் பூம்புனல் பாய்ந் தாடேலோர் எம்பாவாய்.
[ திருவெம்பாவை 13 ]

அடுத்த பாட்டிலும் கலனும் குழலும் ஆடப் புனல் ஆடி ஆண்டவனையும்
அருளையும் பாடி நீராடுதலைப் பாடுகிறார்.

” காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள் பாடி அப்பொருள் ஆ மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம் மாபாடி
போதித்து நம்மை வளர்தெடுடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.
[ திருவெம்பாவை 14 ]

எனவே , நீராடுதல் , ஆடலும் பாடலுமாக முகேர் எனக் குடைந்து குடைந்து
டுவது தெரிகிறது. தாளத்திற்கேற்ப ஆடியும் பாடியும் வரும் ஒரு சிறந்த இசைக்
கூத்தே இந்நீராடல் எனக் கூறலாம்.

” பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கண் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
[ திருவெம்பாவை ]

பாவை நோன்பின் போது அவர்கள் கண்ணில் படுவது ,
மழையும் அவனே !
குளமும் அவனே !
எல்லாம் அவனே !

தமக்கேற்ற கணவனைப் பெற விரும்புதலும் இந்த நோன்பின் பயன்.
” எங் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் செரற்க…”
என்று மாணிக்க வாசகரும்,
” கண்ணனையே விரும்பி மற்றெங்கள் காமங்கள் மாற்று… ”
என்று ஆண்டாளும் பாடுகிறார்கள்.

ToTop