ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

மகளிர் முத்தைப்போன்றவர்கள்

அழகிய ஓர் இளம் பெண் , இளைஞன் ஒருவனைக் காதலித்தாள்.
அவனும் அவளைக் காதலித்தான்.
ஆனால், அவர்கள் காதலை அப்பெண்ணின் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.அதனால் ஒருநாள் அவர்கள் இருவரும் ஒருவரும் அறியாவண்ணம்
எங்கோ சென்றுவிட்டனர்;
தாய் அவளைத் தேடிப் புறப்பட்டாள்;
வழியில் வந்த சிலரைப் பார்த்து…,

”இந்த வழியில் ஒரு ஆண் மகனையும் , ஒரு பெண் மகளையும் கண்டீரா”
என வினவுகிறாள்.
அவர்களில் சிலர்… …,
”தாயே ! உன் மகளையும் , அவள் காதலனையும் வழியில் கண்டோம்;
அவர் போக்கில் தவறு இல்லை என்பது மட்டுமன்று ;
அதுவே உலகியல் முறையாம் என் உணர்ந்து அவர்களைப் போக விடுத்தோம் ;
ஆகவே, அவர் குறித்துக் கவலைப் படாது , திரும்பி வீட்டிற்குச் செல்வாயாக” என்றனர்.
” வெவ்விடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர் ! இவ்விடை
என்மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரைக் காணிரோ ? பெரும !
காணேம் அல்லேம் ; கண்டனம் கடத்திடை ;
ஆண் எழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய
மான் இழை மடவரல் தாயிர் நீர் போறீர் ?
பலவுறு நாறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுள்ளே பிறப்பினும், மலைக்கு அவை தாம் என்ன செய்யும் ?

நினையுங்கால், நும் மகள் நுமக்கும் ஆங்கு அல்லதை
நீருள்ளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும் ?
தேருங்கால், நும் மகள் நுமக்கு ஆங்கு அனையளே;
ஏழ் புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுள்ளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என் செய்யும் ?
சூழுங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே; என வாங்கு
சிறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தாளை வழிபடச் சென்றனள்;
அறந்தலை பிரியா ஆறும் மறு அதுவே ”

தாய்:
பெரியோர்களே! என் மகள் ஒருத்தியும் வேறு ஒருத்தியின் மகனும் பண்டு தமக்குத் தாமே காதல் கொண்டனர். அது இன்று பலராலும் அறிந்துக்கொள்ளப்பட்டது. அதனால் அவர்கள் இருவரும் ஒருமனப்பட்டு இனக்காட்டுவழியே வந்துவிட்டன; அவர்களைத் தாங்கள் கடந்து வந்த காட்டு வழியில் எங்கேனும் கண்டீர்களோ ? கண்டீராயின் கண்ட விதத்தை யான் அறியும் வண்ணம் கூறுங்கள்.

பெரியவர் : ஆ ணழகனாகிய அச்சிறந்தானோடு, கடத்தற்கரிய அ க்காட்டு வழியில்
செல்லத் துணிந்த, மாண்புமிக்க குணத்தைச் சிறந்த அணியாகக் கருதிய மடப்பம் மிக்க
அவ்விளையோளைப் பெற்ற பெருமை வாய்ந்த தாயே ! நீ கூறிய அவ்விருவரையும் காட்டு
வழியில் பார்த்தோம்.

தாயே ! பற்பல வகையிலும் பயன்படுத்தப்படும் நறுமணம் மிக்க சந்தனக் கட்டை
மலையில் தான் வளர்கிறது; ஆனால், அது அங்கு வளர்ந்தாலும், அது தன்னை அறைத்துப்
பூசிக் கொள்பவர்க்குப் பயன்படுவதல்லது, பிறந்த மலைக்கு எந்த வகையிலும் பயன்படுவதில்லை.

நினைத்துப் பார்த்தால் உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவு அத்தகையதே.
தாயே ! தலைசிறந்த வெண்முத்துக்கள் கடல் நீரில்தான் பிறக்கின்றன; ஆனால், அவை
அங்கே பிறப்பினும் அவை, தம்மை ஆ ரம் ஆ க்கி அணிந்து கொள்பவர்க்கு அழகு தருவதல்லது, தாம் பிறந்த கடலுக்கு எந்த வகையிலும் அழகு தருவதில்லை. ஆராய்ந்து பார்த்தால், உன் மகளுக்கும் உனக்கும் உள்ள உறவும் அத்தகையதே.

தாயே! எழுவகையாக எழும் இனிய இசை, யாழில்தான் தோன்றுகிறது; ஆனால், அது
தன்னை கேட்டு நுகர்வார்க்கு இன்பம் தருவதல்லது. தான் தோன்றிய யாழிற்கு எந்த வகையிலும் இன்பம் தருவதில்லை; ஆராய்ந்து நோக்கினால் உன் மகளுக்கும் உனக்கும்
உள்ள உறவு அத்தகையதே.
ஆகவே, தாயே ! சிறந்த கற்பு தெறியை மேற்கொண்டவளாய் காதலனோடு காட்டு
வழியில் போய்விட்ட உன்மகள் குறித்து வருந்தாதே; அவள் தலைசிறந்த ஒருவனைத் தன்
கணவனாக ஏற்றுச் சென்றுள்ளாள்; அது மட்டுமன்று, அவள் செயல் உலகியல் அறத்தோடு
ஒட்டியது ஆகும்.

ToTop