ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

புத்தரின் தம்ம பதம்

தம்ம பதம் என்பது என்ன?

புத்தர் பிரான் அருளிய அறிவுரைகளும், சங்க விதிகளும், அவரைப்பற்றிய
விவரங்களும், வரலாறும் பெளத்த மதத் திருமுறைகளாக மூன்று பிரிவுகளாக அல்லது
தொகுதிகளாக உள்ளன. அவற்றைத் திரிபிடகங்கள் என்று அழைக்கிறார்கள்.
மூன்று கூடை அல்லது பெட்டி, பொக்கிஷங்கள் எனவும் கூறுகின்றனர். ஏனெனில் பிடகம்
என்றால் பெட்டி அல்லது கூடை, திரி என்பது மூன்று என்பதுதான்
உங்களுக்குத் தெரியுமே. (திரிபுர சுந்தரி).விநய பிடகம், சுத்த பிடகம், அபிதம்ம பிடகம் என மூன்று தத்துவப் பொக்கிஷங்களாக
பெளத்த திருமுறைகள் உள்ளன. தம்ம பதம் , மகாபாரத்தில் உள்ள பகுதியாக
பகவத் கீதை இருப்பதைப்போலவே, சுத்த பிடகத்தில் உள்ள ஐந்து பகுதிகளில்
ஒன்றான குத்தக நியாயம் என்ற பகுதியில் உள்ளது. தம்மத பதம் உலகின்
பல பகுதியில் பிரபலமாயுள்ளது.

ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டுமே 40க்கு
மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் உள்ளன. அமெரிக்காவில் இப்போது அதிகமாகப்
பரவி வரும் மதம் பெளத்தமதம் என்கிறார்கள்.

தம்ம பதத்தின் சூத்திரங்கள் படிப்பதற்கு எளிமையானவை. பெளத்த சமயக்
கொள்கைகளும் வாழ்க்கைக்குத் தேவையான நீதிகளும் தம்மபதத்தில்
நிறையவே இருப்பதால் அவற்றைப் படித்துத் தெளிந்துகொள்ளலாம்.
“இது நமது மொழியிலுள்ள திருவள்ளுவரது திருக்குறளைப் போன்று
அத்துணைச் சிறப்பு வாய்ந்தது” என்று தம்ம பதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டிய நூல் திருக்குறளே என்கிறார் வையாபுரிப்பிள்ளை. தம் இலக்கிய உதயம் பகுதி 11 எனும் நூலில்.
தம்ம பதத்தின் பெருமையை ஹெர்மான் ஓல்டன்பெர்க் எனும் ஜர்மானியப்
பேராசிரியர் இப்படிக் கூறுகிறார்.

“பெளத்த சமயத்தைப் பற்றித் தெளிவாய்த் தெரிந்துகொள்வதற்கு பெளத்த
தர்ம ஆராய்ச்சிகளை ஆரம்பிக்கும்போதே ஆராய்ச்சியாளனுக்கு ஒரு புனிதமானவரின்
கைகளால் தம்மபதத்தை அளிப்பதைவிட மேலான காரியம் ஒன்றும் இருக்க முடியாது.
தம்மபதம் தன்னிரகற்ற அழகுடையது. பொருள் நிறைந்தபழமொழிக்களஞ்சியம்.
பெளத்த சமயத்தைத் தெரிந்து கொள்ள உறுதிகொண்ட எவரும் திரும்பத்
திரும்பப் பார்க்க வேண்டிய நூல் இது.”

தமிழர்கள் புத்தரை, தயாவீரன், தர்மராஜன், அருளறம் பூண்டோன், அறத்தகை முதல்வன்,
பிறவிப் பிணி மருத்துவன், போதி மாதவன், மன்னுயிர் முதல்வன், புத்த ஞாயிறு எனப் பற்பல பெயர்களில் போற்றிப் புகழ்ந்துரைத்து வந்துள்ளனர்.

காஞ்சிபுரம், நாகைப்பட்டினம், மதுரை முதலிய நகரங்களில் பெளத்தம் நிலைத்திருந்தது
தமிழ்ப் பிக்குகள் இலங்கை மட்டுமல்ல சீனாவுக்குக்கூட கடல்கடந்து பெளத்த
மதத்தைப் பரப்பி வரச் சென்றிருக்கின்றனர். பல நூல்களையும் இயற்றியுள்ளனர்.
போதி தருமர், தர்மபால சாரியர், சாரிய புத்ததத்தேரர் ஆகியோர் அத்தகையோரில் அடங்குவர்.
போதி தருமர் காஞ்சியிலிருந்து சீனா சென்று புத்தமதத்தின் தர்மப் பிராச்சாரம் செய்தார். இளம்போதியார், சீத்தலைச் சாத்தனார் போன்ற தமிழ்ப் புலவர்கள் பெளத்த
மதத்தினராய் இருந்தனர்.

கோவலன் தந்தை மாசாத்துவர் பெளத்தர். மாதவியின் மகள் மளிமேகலை பெளத்த பிக்குணியானார். மணிமேகலை பெளத்த நூலே என்றுரைக்கும் திரு வி க” மணிமேலைச் சொல்லெலாம் அறம், பொருளெலாம் அறம், மணிமேகலையின் நாடெல்லாம் அறம், காடெல்லாம் அறம், புத்தர் பெருமானைத் தமிழில் காட்டும் ஒரு மணிநிலையம் மணிமேகலை” என்று கூறிச் சென்றுள்ளார்.

“பொய்யில் மெய்யைக் கற்பனை செய்துகொண்டு,
மெய்யில் பொய்யைக் காணும் மருளுடையார்
மெய்ப்பொருளை ஒருபோதும் அடைவதில்லை,
அவர்கள் வெறும் ஆசைகளைத் தொடர்ந்து அலைவார்கள்”

-தம்மபதம்-

ToTop