ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

இணையத் தமிழ் இனி எப்படி இருக்கும்?

யுனிகோட் அமைப்பில் தனக்குரிய இடத்தைத் தமிழ் பெற்றாலன்றி இணையத்தில் அதன் வளர்ச்சி வேகமாகச் சாத்தியமில்லை என்கிறார்கள் கணித் தமிழ் நிபுணர்கள்.(Unicode Consortium) யுனிகோட் கன்சார்டியம் என்பது உலகளவில் கம்ப்யூட்டர் பயன்பாட்டு முறைகளைச் சீரமைத்து ஒழுங்குபடுத்தும் பன்னாட்டு அமைப்பு என்று பொதுவாகப் புரிந்து கொள்ளலாம். சர்வதேசக் கம்ப்யூட்டர் நிபுணர்கள், முன்னணிக் கம்ப்யூட்டர் நிறுவனங்கள், அரசுகள், தன்னார்வலர்கள் எனப் பல தரப்பினரும் அங்கம் வகிக்கும் அமைப்பு இது. ஆங்கிலத்துக்கு நிகராக இதர மொழிகளைச் சார்ந்தவர்களும் கம்ப்யூட்டரைக் கையாளும் திறனை எளிமைப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். இதற்காகக் கம்ப்யூட்டரில் புழங்கும் உலக மொழிகள் ஒவ்வொன்றுக்கும் சர்வதேச அளவிலான பயன்பாட்டுப் பொதுத்தன்மையை வகுத்தளிக்கும் தலையாய பணியை யுனிகோட் செய்து வருகிறது.

இந்த யுனிகோட் அமைப்பில் தமிழுக்கு உரிய இடத்தைப் பெறுவதில் என்ன பிரச்சனை?

அதற்கு முன்பு சில ஆதார உண்மைகளை அறிந்து கொள்வது அவசியம்.

0,1 என்ற இரு எண்களைக் கொண்டுதான் (அல்லது இவ்விரு எண்களின் வெவ்வேறு கூட்டணிகளை கொண்டு) தனக்குள்ளே செலுத்தப்படும் எந்த விசயத்தையும் கம்ப்யூட்டர் பதிவு செய்து கொள்கிறது. ஒரு மொழியைக் கம்ப்யூட்டரில் பயன்படுத்த வேண்டுமென்றால் அந்த மொழியின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு எண்ணை ஒதுக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு எண்ணை நிர்ணயிப்பதைத்தான் குறியீட்டு முறை (Encoding) என்கிறார்கள். எந்த மொழியிலும் எந்த விசயத்தையும் கம்ப்யூட்டரில் சேமிக்க இதுவே அடிப்படை. சேமித்த விசயத்தை அச்சிட்டு உபயோகப்படுத்த எழுத்து வடிவம் வேண்டும். அதை Font என்கிறார்கள். கம்ப்யூட்டரில் விசயத்தை உட்செலுத்த கீ போர்டு எனப்படும் விசைப்பலகையும் தேவை.

ஒரு மொழி, கம்ப்யூட்டரிலும் அதன் வழியாக இணையத்திலும் தங்குதடையின்றி முழுமையாகப் புழங்குவதற்கு வழி வகுப்பவை இவை. துரதிருஷ்டவசமாக இந்த மூன்றிலுமே தமிழில் ஏகப்பட்ட சிக்கல்கள்.

தமிழக அரசின் தரப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ விசைப்பலகையாகத் தமிழ்நெட் 99 அறிவிக்கப்பட்டாலும் இன்னும் புழக்கத்தில் அது பரவலாகவில்லை. தட்டச்சு மற்றும் ஒலியியல் (பொனடிக்) முறை அடிப்படையிலான விசைப்பலகைகளும் கணித் தமிழர்களிடையே உபயோகத்தில் உள்ளன. அதுபோல வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு விதமான எழுத்து வடிவங்களைக் கையாளும் போக்கும் இருக்கிறது. இவற்றுடன் குறியீட்டு முறையிலும் மாறுபட்ட நிலைப்பாடுகளைக் கொண்ட குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்தத் தடைகளையெல்லாம் கடந்தால்தான் ஆங்கிலத்துக்கு நிகராகத் தமிழும் இணையத்தில் பீடுநடைபோட முடியும்.

யுனிகோட் குறியீட்டு முறை தற்போது 16 பிட் அடிப்படையிலானது. ஆங்கில மொழிக்குரிய அஸ்கி (ASCII-American Standard Code for Information Interchange) குறியீட்டு முறை 8 பிட்டுகள் அடிப்படையிலானது. 8 பிட் என்பதை 1,2,4,8,16,32,64,128 என்ற விகிதத்தில் குறியீட்டுப் பரப்பு விரிவடைவதைக் குறிக்கும். 16 பிட் என்பது 256, 512 என்ற விகிதத்தில் செல்லும். இந்த 16 பிட் அடிப்படையிலான குறியீட்டுப் பரப்பில் உலக மொழிகளுக்கு மொத்தம் 65,000 இடங்கள் வரை ஒதுக்கியிருக்கிறது யுனிகோட்.

தற்போதுள்ள யுனிகோட் ஒதுக்கீட்டில் தமிழுக்கு அளிக்கப்பட்ட இடங்கள் 128. இதிலும் 67 இடங்கள் காலியாக உள்ளன. தொலைநோக்குக் கண்ணோட்டத்துடன் பார்த்தால் தமிழுக்கு இது பெரும் தடையாக இருக்கும்.

எப்படி?

உதாரணத்துக்கு தினமணி என்பது எழுத்து வடிவப் பதிவுப்படி நான்கு குறியீடுகளைக் கொண்டது. இதுவே இப்போதுள்ள யுனிகோட் 8 பிட் குறியீட்டு முறைப்படிப் பார்த்தால் த் + இ + ன் + அ + ம் + அ + ண் + இ என 8 குறியீடுகளாகப் பதிவாகும். அதாவது நமது கண்ணுக்குத் தினமணி என்பது நான்கு எழுத்தாகத் தெரிந்தாலும் கம்ப்யூட்டர் அதைக் கொண்டு வர 8 குறியீடுகள் தேவை. இது தமிழில் தகவல்களைப் பதிவு செய்வதிலும் சேமிப்பதிலும் தாமதத்தை ஏற்படுத்தும். மேலும் சேமிப்பதற்கான இடமும் அதிகம் தேவைப்படும். அகர வரிசைப்படுத்துதல் மற்றும் தேடுதலின்போது ஆங்கிலம் போல எளிதாக அன்றி கூடுதல் நேரம் தேவைப்படும். இணையம் என்றாலே கண்ணிமைக்கும் வேகத்தில் தகவல்கள் குவிய வேண்டும். ஆனால் தமிழின் இப்போதைய குறியீட்டு முறை அத்தகைய வேகத்தை உறுதி செய்வதாக இல்லை.

யுனிகோட் ஒதுக்கீட்டில் தமிழுக்கு 320 இடங்கள் கேட்க வேண்டும் என்பதே கணித் தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்களின் சமீபத்திய உரத்த குரல்.

யுனிகோட் அமைப்பில் மத்திய அரசு உறுப்பினராக இருக்கிறது. இந்திய மொழிகளுக்கான ஒதுக்கீட்டுப் பரிந்துரையை முதன் முதலாக யுனிகோட்டிடம் சமர்ப்பிக்கும்போதே 320 இடங்கள் கேட்டிருந்தால் எளிதில் கிடைத்திருக்கும். அவ்வாறு கோராமல் இந்தியை ஒட்டியே இதர இந்திய மொழிகளும் யுனிகோட் ஒதுக்கீட்டு முறையைப் பெற மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

இப்போது யுனிகோட்டின் லேட்டஸ்ட் பதிப்பு (4.0) வந்துவிட்டது. அதில் தமிழுக்குரிய இடங்கள் பழைய 128 மட்டுமே.

சீன, கொரிய மற்றும் ஜப்பான் எழுத்துகள் சித்திர எழுத்துகள். எண்ணிக்கையில் தமிழைவிடப் பல மடங்கு அதிகமானவை. கொரிய மொழிக்கு மட்டும் 12,177 இடங்களை யுனிகோட் ஒதுக்கியிருக்கிறது. சீன, கொரிய மற்றும் ஜப்பான் மொழிகளுக்குச் சேர்த்து சுமார் 25,000 இடங்கள் வரை ஒதுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. (சிங்கள மொழிக்காரர்கள் கூட சளைக்காமல் போராடி 400 இடங்களை வாங்கிவிட்டார்கள்)

அவர்களுக்கெல்லாம் ஆயிரக்கணக்கில் யுனிகோட்டில் இடம் கிடைக்கும்போது தமிழுக்கு மட்டும் ஏன் சில நூறு கிடைப்பதிலேயே சிக்கல்..?

அவர்களெல்லாம் வருங்காலத்தை முன்கூட்டியே யோசித்து அதற்கேற்பத் தங்களுக்குள் ஒருமித்த சிந்தனையை உருவாக்கி, விடாமல் போராடித் தங்களுக்குரிய இடத்தைப் பெற்றுவிட்டார்கள். தமிழுக்காக அத்தகைய ஒருமித்த குரல் ஒலிக்காததன் விளைவைத்தான் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

யுனிகோட் அமைப்பில் மத்திய அரசு தவிர உறுப்பினராக இருக்கும் ஒரேமாநில அரசு தமிழக அரசுதான். தமிழுக்குத் தேவையான கூடுதல் இடங்களின் முக்கியத்துவத்தை மத்திய அரசுக்குப் புரிய வைத்து, கணித் தமிழ் அறிஞர்களிடையேயும் ஒன்றுபட்ட கருத்தை உருவாக்கி யுனிகோட் அமைப்பிடம் நமக்குரிய இடத்தைப் பெறுவதில் தமிழக அரசுதான் முழுவீச்சில் இறங்கவேண்டும்.

கடந்த யுனிகோட் கலந்தாய்வுக் கூட்டத்தில் இந்திய அரசின் சார்பாகப் பங்கேற்ற பிரதிநிதி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை என்று விபரம் தெரிந்த கணித் தமிழ் அறிஞர்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

தாங்கள் கேட்ட இடத்தை யுனிகோட் தர மறுத்ததால் சீனா அதிரடி வேலையில் இறங்கியது. தங்களுக்கென்று தனியே ஒரு குறியீட்டு முறையை வகுப்பதாகவும் அந்தக் குறியீட்டு முறையிலான மென்பொருள்களையே இனி சீனாவுக்குள் பன்னாட்டு நிறுவனங்கள் விற்க முடியும் என்றும் தடாலடியாக அறிவித்தது. அவ்வளவுதான் கோடானுகோடி மதிப்புள்ள வர்த்தக வாய்ப்பைப் பன்னாட்டு நிறுவனங்கள் தவற விடுமா…? அவர்களும் யுனிகோட் அமைப்பில் உறுப்பினராகத்தானே இருக்கிறார்கள். உடனடியாக சீனாவுக்காகப் பேசிக் காரியத்தை முடித்துவிட்டார்கள்.

உலகத் தமிழர்கள் 9 கோடி என்கிறார்கள். உலகின் தலைசிறந்த கம்ப்யூட்டர் வல்லுநர்கள் வரிசையைத் தமிழர்கள் அலங்கரிப்பதாகச் சொல்கிறார்கள். ஆனாலும் காரியம் நடந்தபாடில்லை.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு வெளியேறியவர் மைக்கேல் கெப்லான். இவர் தனியாக ஒரு மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். தமிழில் அபரிமிதமாக ஆர்வம் காட்டுகிறாராம். இணையத் தமிழ்ச் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் உத்தமம் அமைப்பில் தன்னார்வலராக அங்கம் வகிக்கிறார். அதன் வழியாக யுனிகோட் கலந்தாய்வுக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

தமிழுக்குக் கூடுதல் இடங்கள் வேண்டும் என்று யுனிகோட் கூட்டத்தில் தமிழறிஞர்கள் குழு வயுறுத்தினால், மைக்கேல் கெப்லான் கட்டையைப் போடுகிறாராம். ஏன் வேண்டாம் என்கிறீர்கள் என்று கேட்டால், தற்போதுள்ள யுனிகோட் முறைப்படியே முன்னணிப் பன்னாட்டு நிறுவனங்கள் மென்பொருள்களைத் தயாரித்து வருகின்றன. ஒவ்வொரு மொழிக்காகவும் இதை மாற்றிக்கொண்டேயிருந்தால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிறாராம். இது எப்படி இருக்கு?

உண்மையில் அவர் யாருக்காகக் குரல் கொடுக்கிறார்? என்று பாயும்புலி பண்டார வன்னியன் ரேஞ்சில் கிள௱ந்தெழுந்து கேட்கிறார்கள் கணித் தமிழ் பொங்கும் இளைஞர்கள் சிலர். கேட்பது நியாயம்தானே!

உத்தமம் (INFITT) அமைப்பின் தொழில் நுட்பக் குழு தொடர்ச்சியாக யுனிகோட்டுடன் உறவாடி வருகிறது. என்றாலும் யுனிகோட்டில் தமிழுக்குக் கூடுதல் இடங்கள் தேவை என்பதில் மாறுபட்ட கருத்துகளைத் தவிர்த்து, தமிழக மற்றும் அயலகக் கணித்தமிழ் அறிஞர்கள் ஓரணியில் திரண்டால்தான் அது சாத்தியம்.

தமிழுக்குக் கூடுதல் இடங்கள் அவசியம் என்பதை யுனிகோட்டுக்கு உணர்த்த அதை ஒரு இயக்கமாகவே நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார் கணித்தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகிகளுள் ஒருவரான சாஃப்ட் வியூ ஆண்டோ பீட்டர்.

நல்லயோசனை. Allot More Space for Tamil என்று யுனிகோட்-டுக்குத் தமிழர்கள் சரமாரியாக இ-மெயில் அனுப்பலாம். (முக்கியக் கோரிக்கையை வயுறுத்தி குடியரசுத் தலைவருக்குத் தந்தி அனுப்புவோமல்லவா… அதுமாதிரி)

யுனிகோட் இணையதள முகவரி: www.unicode.org

தபால் முகவரி: The Unicode Consordium, P.O.Box 391476, Mountain View CA 94039-1476, USA. Phone +1-650-693-3010 Fax: +1-650-693-3921.

யுனிகோட்-டில் தமிழுக்குக் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டு அது இறுதி வடிவம் பெற்று உபயோகத்தில் வர நான்கைந்து ஆண்டுகளாவது பிடிக்கும். அதுவரை இப்போதுள்ள பயன்பாட்டு முறைகளை நெறிப்படுத்தி இணையத்தில் தமிழின் பரப்பை விரிவுபடுத்த ஒரு இடைக்கால அல்லது மாற்று ஏற்பாடு தேவை என்கிறார் திண்டுக்கல் கணித்தமிழ் பொறிஞர் ஆர்.துரைப்பாண்டி. அல்டிமேட் சாப்ட்வேர் சொலுஷன்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவரான இவர், ஆங்கிலத்திருந்து கம்ப்யூட்டரே தமிழில் மொழிபெயர்த்துத் தரும் தமிழ்ப்பொறி என்ற மென்பொருளை, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் தயாரித்தவர். சமீபத்திய இணைய மாநாட்டை ஒட்டி முதல்வர் ஜெயலலிதா இந்த மென்பொருளை வெளியிட்டது நினைவிருக்கலாம்.

Translation.com என்றொரு ஆங்கில இணையதளம் இருக்கிறது. அந்த இணைய தளத்தின் வழியாக ஸ்பானிஷ், ஜெர்மன், பிரெஞ்சு போன்ற எந்த மொழிகளைச் சேர்ந்த இணைய தளத்தை பிரவுஸ் செய்தாலும் அவற்றை அப்படியே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் படிப்பதற்கு ஏதுவாகத் தந்துவிடுகிறதாம். அதைப் போலத் தமிழில் ஒரு மென்பொருள் தயாரிப்பதுதான் தனது கணித்தமிழ்க் கனவு என்று தாகம் பொங்கச் சொல்கிறார் துரைப்பாண்டி. கம்பீரமான கனவு! நனவாகட்டும்!

கடந்த பத்தாண்டுகளில் தமிழில் எண்ணற்ற மென்பொருட்கள் வந்துள்ளன. சரியான மென்பொருளை இனங்கண்டு அதை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு இன்னும் கணித்தமிழ்ச் சமூகம் பக்குவப்படவில்லை. எந்த மென்பொருளாக இருந்தாலும் சரி அதை, உன் பொருளா… என் பொருளா? என்று தயாரிப்பு சார்ந்து பிரித்துப் பார்த்தே ஏற்பதும் நிராகரிப்பதும் நடக்கிறது.

யுனிகோட் பிரச்சனையில் மட்டுமின்றிப் புதிய மென்பொருள்களை ஏற்றுக்கொள்வதிலும் உள்ளூர்த் தமிழர்களும் (இங்கேயும் வெவ்வேறு அணிகள் உண்டு) உலகத் தமிழர்களும் – அதாவது அயலகத் தமிழர்களும் – எதிரெதிர் அணியில் நிற்பதாக ஒரு கருத்து நிலவுகிறது.

அது எந்த அளவுக்கு உண்மை…?

கணித்தமிழ் உலகில் பயனர் இடைமுகம் என்றொரு சொல் புழக்கத்துக்கு வந்திருக்கிறது. User Interface என்றால் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கு எளிதில் புரியும்.

மற்றவர்களுக்கு?

கம்ப்யூட்டரில் பொதுவாக வெவ்வேறு மொழி சார்ந்தோ அல்லது வெவ்வேறு மென்பொருள் சார்ந்தோ பலரும் பலவிதமான பயன்பாட்டு முறைகளுக்குத் தங்களைப் பழக்கப்படுத்தியிருப்பார்கள். புதிய பயன்பாட்டு முறை அல்லது புதிய மென்பொருள் புழக்கத்துக்கு வரும்போது ஏற்கனவே அவர்களுக்குள்ள பரிச்சயம் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதுதான் பயனர் இடைமுகம்.

புதிய மென்பொருள் தயாரிப்புகளில் பயனர் இடைமுகம் இன்று முக்கிய அம்சமாகத் திகழ்கிறது.

User Interface Engineering அல்லது Human Interface Engineering

என்பது கம்ப்யூட்டர் உலகில் இப்போது பரவலாகப் பேசப்படும் விசயம் என்று சுட்டிக்காட்டுகிறார் முரசுஅஞ்சல் நிறுவனரும் மலேசியக் கணித் தமிழறிஞருமான முத்து நெடுமாறன்.

மலேசியாவில் பொதுவாக ஒரே மென்பொருளில் ஆங்கிலம், மலாய், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் கம்ப்யூட்டரை இயக்கும் வசதி இருக்கும். இதற்கேற்பவே அங்கு புதிய மென்பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன. கணித் தமிழ் உலகமும் பயனர் இடைமுகத்தைக் கருத்திற்கொண்டு புதிய மென்பொருள்களை வெளியிட வேண்டும் எனவும் அவர் பரிந்துரைக்கிறார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த இணைய மாநாட்டுக்கு வந்திருந்த வெளிநாட்டு அறிஞர்களில், உத்தமம் அமைப்பின் செயல் இயக்குநரும் சிங்கப்பூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியருமான அருண் மகிழ்நன் மற்றும் முத்து நெடுமாறனுடன் தனியாக உரையாடியபோது, அவர்கள் கணித் தமிழ் சார்ந்த கவனத்திற்குரிய பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.

யுனிகோட் மட்டுமின்றிக் கணித்தமிழ் சார்ந்த இதர முக்கியப் பிரச்சனைகளிலும் தமிழ்நாட்டு அறிஞர்களுக்கும் வெளிநாட்டு அறிஞர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக ஒரு கருத்து நடமாடுகிறதே… அது உண்மையா? என்று கேட்டால், இல்லை… என்று அமைதியாக, அழுத்தமாகச் சொல்கிறார் அருண் மகிழ்நன். முத்து நெடுமாறனும் அதை ஆமோதிக்கிறார்.

கணித்தமிழ் உலகில் இரண்டு வகையான சிந்தனைப் போக்குகள் உள்ளன. ஒன்று, தமிழ்நாட்டு அறிஞர்கள் சார்ந்தது. இன்னொன்று, வெளிநாட்டு அறிஞர்கள் சார்ந்தது. எனினும் தமிழ்நாட்டுக்கு உள்ளேயே இருவேறுபட்ட கருத்துகள் உண்டு. அதேபோல் வெளிநாட்டு அறிஞர்களுக்குள்ளும் இருவேறுபட்ட கருத்துகள் உண்டு. இந்த வேறுபாடுகளெல்லாம் அறிவு சார்ந்தவையே தவிர, தேசப் பாகுபாட்டால் எழுந்தவை அல்ல என்பதே உண்மை என்கிறார் அருண் மகிழ்நன்.

தமிழ் மென்பொருள் தயாரிப்பை இரண்டு கட்டங்களாக வகைப்படுத்தலாம். முதலாவது, அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் அந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் எழும் பிரச்சனைகளைத் தீர்ப்பது. இரண்டாவது, Future Enhancement என்று சொல்லக்கூடிய இருப்பதைவிட மேலும் வசதிகளைக் கூட்டுவது. இப்போது நாம் இரண்டாவது கட்டத்திலிருக்கிறோம் என்று வரையறுக்கிறார் முத்து நெடுமாறன்.

கம்ப்யூட்டரில் ஆங்கிலத்துக்கு நிகரான செயல்பாட்டு வசதியை அல்லது தகுதியைத் தமிழால் பெற முடியுமா…?

நிச்சயமாகத் தமிழால் முடியும் என்று ஒருமித்த குரலில் சொல்கிறார்கள் அருண் மகிழ்நனும் முத்து நெடுமாறனும் தமிழால் முடியும்… என்றாலும் தமிழகத்தால் முடியவில்லை… அப்படித்தானே… என்றால், உரத்த சிரிப்பையே பதிலாகத் தருகிறார்கள்.

தமிழால் முடியும் என்ற செய்தி எல்லோருக்கும் சென்றடைவதற்குத்தான் உத்தமம் பல நிலைகளில் பணியாற்றிக்கொண்டிருக்கிறது என்று சொல்கிறார் அருண்.

கணித் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு உத்தமம் உரக்கச் சொல்லட்டும்.

கணித் தமிழ் உலகின் பரப்பை விரிவடையச் செய்யும் மென்பொருள் வரவு இன்று எந்த நிலையில் இருக்கிறது?

Operating Systems என்று சொல்லப்படும் இயங்கு தளங்கள் மற்றும் இதர அடிப்படைத் தேவைகள் சார்ந்த மென்பொருள்கள் தமிழில் இதுவரை சுமார் 45 வரை வெளியாகியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆரம்பகாலத்தில் தமிழில் ஒரு மென்பொருளின் விலை 18,000 முதல் 20,000 ரூபாய் வரை கூட இருந்தது. படிப்படியாகக் குறைந்து இன்னும் 5,000 ரூபாய்க்கு வந்திருக்கிறது. அதற்கும் குறைந்த விலையிலும் மென்பொருள்கள் கிடைக்கின்றன.

இணைய அகராதி, கலைக்களஸசியம், சொல்திருத்தி, தமிழில் தேடுபொறி, தமிழில் இ-மெயில், விரும்பும் ஆவணங்களை அல்லது பக்கங்களை அப்படியே ஸ்கேன் செய்து விரும்பும் விதத்தில் திருத்தியமைக்க உதவும் OCR, கணித்திரையில் தோன்றும் வரிகளைப் படிக்க உதவும் UText Synthesizer- இப்படிப் பலவாறாகத் தமிழ் மென்பொருள் முயற்சிகள் வெற்றி கண்டிருக்கின்றன அல்லது வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் போலத் தமிழிலேயே ஒரு பிரவுஸரை வெளிக்கொணர்வதற்கான முயற்சி, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் நடந்து வருகிறது.

யுனிகோட் அடிப்படையிலான குறியீட்டு முறைக்கும் அது சார்ந்த பயன்பாட்டுக்கும் தமிழ் முழுமையாக மாறும் பட்சத்தில், ஆங்கிலத்தில் பிரபலமான google தேடு பொறி மூலம் விரும்பும் தகவல்களை உடனடியாகப் பெறுவது போலத் தமிழிலும் பெறலாம் என்கிறார்கள் கணித் தமிழ் அறிஞர்கள். அதாவது மரம் என்று தமிழில் அடித்து, அது சார்ந்த இணையத் தகவல்கள் அனைத்தையும் ஆங்கிலம் போல ஒருங்கே பெற முடியும்.

Windows XP-ல் லதா என்ற பெயரில் ஒரு எழுத்து வடிவம் இருக்கிறது. அதன் மூலம் இப்போதுகூட google தேடு பொறியில் தமிழ்ச் சொல்லைப் போட்டுத் தகவல்களைப் பெறலாம். ஆனால் ஆங்கிலம் போல ஒன்றுபட்ட முறைக்குத் தமிழ் இன்னும் மாறாததால் தகவல்கள் சொற்பமாகவே கிடைக்கும்.

ஜாவா அடிப்படையிலான இயங்கு முறைகள் தமிழில் இன்னும் எளிதாக்கப்படவில்லை. ஜாவா சார்ந்த இயங்கு முறைகள் தமிழில் பெருகப்பெருக, ஆங்கிலத்திற்கு நிகரான அதிநவீன பயன்பாட்டு வாய்ப்புகள் அனைத்தையும் தமிழிலும் அனுபவிக்க முடியும் என்கிறார்கள் அறிஞர்கள்.

தமிழ் மென்பொருள் முயற்சிகள் ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் சங்கத் தமிழிருந்து நவீன இலக்கியம் வரை அனைத்தையும் இணையத்தில் ஏற்றும் முயற்சிகளும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.

ஸ்விட்சர்லாந்தைத் சேர்ந்த டாக்டர் கல்யாணசுந்தரம் மதுரைத் திட்டம் (Project Madurai) என்ற பெயரில் ஓர் இணைய முயற்சியைத் தீவிரமாக மேற்கொண்டிருக்கிறார்.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, காப்பியங்கள், சைவ, வைணவ நூல்கள் என இதுவரை சுமார் 200 வகையான தமிழ் இலக்கியங்களை இணையத்தில் இடம்பெறச் செய்திருக்கிறார் கல்யாணசுந்தரம்.

சென்னையில் காரைக்கால் அம்மையார் பாடல் புத்தகத்தை விலைக்கு வாங்குவதற்காகத் தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை என்று மோரீஷஸிருந்து ஒருவர் மெயில் அனுப்பியிருந்தார். எங்கள் இணையத்தில் அம்மையாரின் பாடல்கள் இருப்பதைத் தெரிவித்துப் பதில் அனுப்பினேன். அவர் உடன் download செய்து பயன்படுத்திக் கொண்டார். இது இணையத்தால் மட்டுமே சாத்தியம் என்று பெருமிதத்துடன் சொல்கிறார் கல்யாணசுந்தரம்.

கற்க கசடற… என்று ஒரு குறளை ஒருமுறை நான் கம்ப்யூட்டரில் டைப் செய்து இணையத்தில் ஏற்றிவிட்டேன் என்றால் உலகிலுள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் அனைவரும் அதை அப்படியே நகல் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொருவரும் கற்கக் கசடற… என்று டைப் செய்ய வேண்டியதில்லை என்றும் அவர் இணையத்தின் பலன்களைப் பட்டியலிடுகிறார்.

கல்யாணசுந்தரத்தின் ஆதரவுடன் தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation) என்றொரு இணையத்திட்டமும் செயல்பட்டு வருகிறது. ஜெர்மனியைச் சேர்ந்த கணித் தமிழ்ப் பொறிஞர்கள் கண்ணன் மற்றும் சுபாஷிணியின் முயற்சியில் உருவான திட்டம் இது.

தமிழ் ஓலைச்சுவடிகள் அனைத்தையும் இணையத்தில் ஏற்றிப் பாதுகாப்பது; வில்லுப்பாட்டு, கரகாட்டம் போன்ற தமிழர்களின் மரபார்ந்த கலாசார அடையாளஜகளை மல்டி மீடியா முறையில் பதிவு செய்து இணையத்தில் உலா விடுவது போன்ற பணிகளை இக்குழு செய்து வருகிறது.

ஜெர்மனியிலுள்ள பெர்ன் நூலகத்தில் மட்டும் 1000 தமிழ் ஓலைச் சுவடிகள் இருக்கிறதாம். இதைப்போல பிரிட்டிஷ் மற்றும் ஆம்ஸ்டர்டாம் நூலகங்களிலுள்ள தமிழ் ஓலைச் சுவடிகள் மற்றும் தமிழகத்திலுள்ள ஓலைச் சுவடிகளின் பிரதிகளைப் பெற்று இணையத்தில் ஏற்றும் முயற்சியில் இக்குழு தீவிரமாக இறங்கியிருக்கிறது.

மரபு குலையாமல், உள்ளது உள்ளபடி தமிழைப் பாதுகாக்கும் அதிநவீன ஏற்பாடு. ஆகா… அற்புதம்!

இணையத்தில் தமிழின் வேகமான முன்னேற்றத்துக்கு வரப்பிரசாதமாக அமைந்திருக்கும் இன்னொரு விசயம் எது தெரியுமா?

Open Source Software எனப்படும் தன்னார்வப்படைப்புகள். பல்வேறு நாடுகளைஷ சார்ந்த கம்ப்யூட்டர் வல்லுநர்கள் தாங்களாகவே முன்வந்து ஒருவருக்கொருவர் இ-மெயிலில் கலந்துரையாடி, பொதுப்பயன்பாட்டுக்காகத் தயாரித்தளிக்கும் மென்பொருள்களே Open Source Software எனப்படுகிறது.

உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளமே பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து யுனிக்ஸ் இயங்குதளம் புழக்கத்தில் உள்ளது. யுனிக்ஸைத் தயாரித்த நிறுவனத்திருந்து வெளியேறிய கம்ப்யூட்டர் வல்லுநர்கள் லினக்ஸ் (Linux) என்ற புதிய இயங்கு தளத்தைத் தயாரித்துப் பொதுப் பயன்பாட்டுக்காகப் புழக்கத்தில் விட்டார்கள். குறுகிய காலத்தில் மைக்ரோசாஃப்ட் மற்றும் இதர முதல் வரிசை பன்னாட்டு நிறுவனங்களை அசர வைக்கும் அளவுக்கு லினக்ஸின் பயன்பாடு மிக வேகமாகப் பரவியது.

குறிப்பிட்ட இணைய தளத்திலிருந்து யார் வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்தக்கூடிய மென்பொருள் லினக்ஸ். விண்டோஸ் மற்றும் இதர நிறுவனத் தயாரிப்புகள் போல பெரும் விலை கொடுக்க வேண்டியதில்லை. லினக்ஸ் மென்பொருளின் மூலக் குறியீடும் பகிரங்கமாக்கப்படுவதால், யாரும் தங்கள் தேவைக்கேற்ப மாற்றியமைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சீன மொழியில் லினக்ஸைக் கொண்டு வரும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழிலும் Mandrake என்ற பெயரில் லினக்ஸ் வரப்போகிறது. லினக்ஸ் மற்றும் விண்டோஸ் பயன்பாடு இணைந்த லிண்டோஸ் ஏற்கனவே வந்துவிட்டது.

விண்டோஸுக்கு மாற்றாக ஒரு தன்னார்வப் படைப்பை உண்டாக்கும் முயற்சியில் சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய மூன்று நாடுகளும் ஏற்கெனவே கைகோர்த்துவிட்டன.

உலக நாடுகளின் அரசுகள் இப்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகளையே பெரிதும் சார்ந்திருக்கின்றன. அடுத்த ஐந்தாண்டுகளில் இந்த இடத்தைத் தன்னார்வப் படைப்புகள் பிடித்துவிடும் என்று உறுதியாகச் சொல்கிறார் கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியரும் தன்னார்வப் படைப்பியக்கத்தின் ஜெனரல் கவுன்சலுமான எபென் மாக்லென்.

தன்னார்வப் படைப்புகளில் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை என்று மைக்ரோசாஃப்ட் மற்றும் இதர பன்னாட்டு நிறுவனங்கள் புகார் கூறி வந்தன. தன்னார்வப் படைப்பாளிகள் அதையும் தகர்த்துவிட்டார்கள்.

விண்டோஸ் எக்ஸ்பி சார்ந்த கட்டமைப்புக்குள் புகுந்து ஒரே ஒரு ஆவணத்தை யாராவது எடுத்துக் கொடுத்தால் இவ்வளவு டாலர் பரிசாகத் தருகிறோம் என்று மைக்ரோசாஃப்ட் சவால் விட்டது. கம்ப்யூட்டர் கில்லாடிகள் தங்கள் கைவரிசையைக் காட்டி, ஒன்றல்ல… ஏகப்பட்ட ஆவணங்களை அம்பலப்படுத்திவிட்டார்கள். அசந்துவிட்டது மைக்ரோசாஃப்ட்.

உலகளவிலான கம்ப்யூட்டர் சந்தை வெகுசில பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் சிக்காமல் தடுப்பதுடன், நவீன தொழில்நுட்பத்தின் பலன்களைக் குறைந்த விலையில் எல்லோருக்கும் பரவலாக்கும் தன்னார்வப் படைப்புகள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்தியக் கம்ப்யூட்டர் கட்டமைப்பை லினக்ஸ் சார்ந்ததாக மாற்றுவதற்கான வேலையை வேகமாகச் செய்ய வேண்டும் என்று புதிய பாரதத்துக்கான கனவு ததும்பிய குடியரசுத் தலைவர் கலாம் அழைப்பு விடுத்திருக்கிறார்.

Open Source Software – தொழில் நுட்பப் படைப்பாளிகளுக்கு ஒரு சமூக முகம் அவசியம் என்பதைப் பறைசாற்றுகிறது. நாம் என்பதை நான் ஆகக் குறுக்கிவிட்ட உலகமயமாக்கல் யுகத்தில், கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் சமூக முகத்தை மீட்டெடுத்துப் புதுப்பித்திருக்கிறது.

கணித்தமிழ் உலகப் படைப்பாளிகளே… ஒன்றுபடுங்கள்!

இணையத்தமிழ் இனி வெல்லட்டும்!

– சுகதேவ் –

நன்றி: தினமணிகதிர்

மேலே உள்ள கட்டுரைகளில் காணப்படும் சில தவறுகள் பற்றி திரு.முத்து நெடுமாறன் அவர்கள் தினமணி கதிர் இதழிற்கு அனுப்பிய அஞ்சலில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்..

தினமணி கதிர் இதழில் (7.9.03, 14.9.03, 21.9.03) “உத்தமம்’ (உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம்) பற்றியும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் தமிழ் மொழிக்கான குறியீடுகளைத் தரப்படுத்த அந்த அமைப்பு ஆற்றி வரும் பணிகள் குறித்தும் கட்டுரைகள் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. மனமார்ந்த பாராட்டுகள்.

அதே சமயம் அந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள ஒன்றிரண்டு தகவல் பிழைகளை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டியதும் எங்கள் கடமையாகிறது.

உதாரணமாக, மைக்கேல் கப்ளான் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மை என்னவெனில் அவர் இப்போதும் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

அவர் உத்தமத்தின் பணிக்குழு உறுப்பினர் என்ற முறையில், தமிழ் யூனிகோட் குறித்து ஆராய்ந்து வரும் யூனிகோட் தொழில்நுட்பக் குழுவில் பங்கேற்று, இப்போதுள்ள யூனிகோடுக்கு மாற்றாக வைக்கப்படும் திட்டத்தின் மீது விவாதங்கள் நடக்காதவாறு தடுத்து வருகிறார் என்ற ரீதியில் கட்டுரைகளில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அவர் உத்தமத்தின் பணிக்குழுவில் இடம்பெறும் முன்னரே யூனிகோட் தொழில்நுட்பக் குழுவின் முழுமையான உறுப்பினராக இருந்து வருகிறார்.

யூனிகோட் கன்சார்ஷியத்திற்கும் உத்தமத்திற்குமிடையே இரு தரப்பினரது முழு சம்மதத்துடனே ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றி வருகிறார். அவர் விவாதங்களைத் தடுக்கவில்லை. இப்போது நடைமுறையிலுள்ள தமிழ் யூனிகோட் பலவிதங்களில் பயன்படுத்தப்பட்டு வருவது அதில் பெரிய குறைபாடுகள் இல்லை என்பதையே காட்டுகிறது என்றுதான் சுட்டிக்காட்டுகிறார்.

இப்போதுள்ள யூனிகோடிற்கு மாற்றாக வைக்கப்படும் திட்டம் தமிழக அரசின் சார்பில் முன் வைக்கப்படுவதால் அதைத் தமிழ் நாட்டுக்கு வெளியே உள்ள கணினி அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர் என்பதும் சரியல்ல. உத்தமம் அமைப்பில் நாடு சார்ந்த கருத்து மோதல்கள் ஏதும் இல்லை. அது உலகு தழுவிய நோக்குடனேயே செயல்பட்டு வருகிறது.

தற்போது நடைமுறையில் இருந்து வரும் தமிழ் யூனிகோட் குறைபாடு உடையது, தமிழுக்கு நலன் தராது என்று எல்லாக் கணினித் தமிழ் அறிஞர்களும் கருதுவதைப் போன்ற கருத்து, கட்டுரைகளில் தொனிக்கிறது. அது சரியல்ல. ஒரு சில கணினித் தமிழ் அறிஞர்களுக்குச் சில தயக்கங்கள் இருந்த போதிலும், பல கணினி அறிஞர்கள் அதை ஏற்றுப் பயன்படுத்தியும் வருகிறார்கள்.

தற்போதுள்ள யூனிகோடிற்கு மாற்றாக வைக்கப்படும் திட்டத்தை ஆய்வு செய்ய ஒரு புதிய பணிக்குழுவையும் உத்தமம் அமைத்து வருகிறது. ஒருதலைப்பட்சமாக உத்தமம் முடிவுகள் எடுக்காது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ் வளர்ச்சி காண நீங்கள் காட்டிவரும் ஆர்வத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்,

முத்து நெடுமாறன்
தலைவர், உத்தமம்,
சிங்கப்பூர்.

ToTop