ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

திரு.அல்பர்ட் அவர்களின் கருத்து

யூனிகோடு – இது ஒரு கோடா? கேடா? ஒரு உரையாடல்”

தணிகாசலம் :
வாங்க…வாங்க…சோணா… எங்க பாக்க முடியறது இல்ல? மடலாடற்குழுக்கள்ல கூட ஒங்களப் பாக்க முடியறதுல்ல?!
சோணாச்சலம் : அது…வந்து…இப்ப எல்லாம் யூனிகோடு கீனிகோடுங்கிறாங்க… கொஞ்சம் மெரண்டு போயு அதப்பத்துன வெபரம் தெரிஞ்சுகிட்டு எழுதலாம்ன்னுதான்….! நீங்கதான் இப்ப யூனிகோடுல பூந்து வெளையாடுறீங்களே…ஒங்களை ஒருநடை கேட்டுப்போட்டு  எழுதலாம்ன்னுதான் வந்தேங்க…?!

தணி : சோணா…நீங்க வழக்கமா எழுதுற திஸ்கியில எழுத வேண்டியதுதானே? இப்ப நான் யூனிகோடுல எழுதுறேன்னு பலர் நெனைக்கிறாங்க. ஆனா, எனக்கு யூனிகோடுல எழுதத் தெரியாதுன்னு பலபேருக்குத் தெரியாது.

சோணா: அட, இது என்ன…புதுசா கரடி உடுறீங்க?

தணி : உண்மையைத்தான் சொல்றேன். எனக்கு யூனிகோடுல எழுதத் தெரியாது. நான் பாவிப்பதெல்லாம் முரசு தான்!

சோணா: என்ன முரசுலயே யூனிகோடு எழுதுறீங்களா? ரெம்பச் சிம்பிளாச் சொல்லிப்போட்டீங்க?

தணி : முரசுல வழக்கம்போல திஸ்கியில விஸ்கி சாப்பிட்ட மாறி எழுதி அத, சுரதாவோட பொங்குதமிழ் பக்கம் போய் நான் முரசில எழுதியத அங்க வெட்டிப்போட்டு, TSC ன்னு இருக்கிறதுல ஒரு கிளிக் பண்ணேன்னு வசுக்கங்க மந்திரம் போட்ட மாறி “யூனிகோடு”க்கு மாறிரும்.
அத வெட்டி என்னோட ஈ-மெயில்ல போட்டு அனுப்பீருவேன். இதான் யூனிகோடோட ரகசியம்.

சோணா : நான், இவ்வளவு நாளா, நம்பாளு தணி சுளுவா யூனிகோடை கத்துகிட்டு சும்மா அடிச்சு தூள் கெளப்புறார்ன்னு இல்ல நெனைச்சுகிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா வெட்டி அடிச்சு ஒட்டி யூனிகோடு எழுதுறேங்கிறீங்க?

தணி : ஓய்! சோணா… வாழ்க்கையில எதுதாம் செரமம் இல்ல சொல்லுங்க? அப்டிப் பாத்தா எல்லாமே செரமம்தான்…. வெட்டி ஒட்டுறதுக்கு எல்லாம் சிரமம் பாத்தா எபடி?

சோணா : நேரடியாச் சாப்புடறதுக்கு எதாச்சும் வழி இருந்தாச் சொல்லுங்க; சொம்மா சுத்திவளைச்சுச் சாப்புடற வேலை எல்லாம் வேண்டாங்கிறேன்.

தணி : சத்தியமா..எனக்குத் தெரிஞ்சதத்தான் இப்ப ஒங்ககிட்டச் சொன்னேன். நேரடியா எப்படி யூனி கோடுல தட்டச்சு செய்யிறதுன்னு எனக்குத் தெரியாது? வெவரம் தெரிஞ்சவங்க இதப்பத்தி வெளிப்படையா….இப்டி….இப்டிச் செய்யோணும். இப்டிச் செஞ்சா நீங்க நேரா யூனிகோடுல தட்டச்சு செய்யலாம்ன்னு சொல்றாங்களா? எதோ மாயமந்திரம் செய்யிறதைப் போல நெனைச்சுகிட்டு சொல்றாங்க. படிப்படியா நம்மளப்போல அரைவேக்காடுகளுக்கு சொல்லிக் குடுக்க யாருங்க இருக்காங்க?

சோணா : அதுமட்டுமில்ல….தணி….இதுல இன்னொரு பிரச்னையும் இருக்கு. இப்ப நீங்க முரசில அடிச்சு பொங்குதமிழ் போய் ஒட்டி வெட்டி அனுப்புறேன்னு சொன்னீங்க. சரி அதை முரசில அப்புறம் யூனிகோடு கோப்பா சேமிச்சு வைக்க என்ன செய்யிறீங்க?

தணி : ம்ம்ம்ம்ம்…அங்கதானே ஒதைக்குது இந்த யூனிகோடு…! பொங்குதமிழ் மாற்றித் தரும் யூனிகோடை என்னால சேமிச்சு வைக்க முடியிறதில்ல; காரணம். நான் முரசில என்னோட சேமிப்புகளை போட்டா எல்லாம் கேள்விக்குறியா????????? இப்படித்தான் தெரியுது. அதுக்கு என்ன செய்யிறதுன்னு எனக்கு இன்னும் தெரியல…கொஞ்ச நாள் போனா தன்னால தெரியும்ன்னு பேசாம இருக்கேம்.

சோணா : அப்ப, நீங்க எழுதுற கட்டுரை, கதை எல்லாம் யூனிகோடுல சேமிக்க முடியாமப் போகுதுன்னா அந்த யூனிகோடு இருந்தென்ன? போயென்ன? விட்டுத் தள்ளுங்க யூனிகோடை. அது ஒரு சோடை…!

தணி : யூனிகோடுங்குற ஒருங்குறிக்கு நான் மாறணும்ன்னு சொல்றதுக்கு ஒரே காரணம்; தமிழ் வளரணும்: வாழணும். அதுக்கு இந்த யூனிகோடு வேணும்!

சோணா : என்னாங்க? நாம எழுதுனதை சேமிச்சு வச்சுக்க முடியாத கோடு ஒரு கேடு இல்லீங்களா? அது எப்படி வளரும்? வாழும்?

தணி : நமக்குத் தெரியல; அதனால சேமிச்சுவைக்க வழி தெரியல. அவ்வளவுதான். யாராவது ஒரு யூனிகோடு புண்ணியவாளர் சொல்லாமலா போகப்போறார். கணக்கு வழக்கு இல்லாத எழுத்துரு முறை இருக்கு; அது ஒழிஞ்சுட்டுதுன்னா உலகத் தமிழர்கள் எல்லாம் ஒருங்குறிங்கிற இந்த ஒரே கோடான யூனிகோடுக்கு மாறீருவாங்க! படிக்க எழுத எல்லாத்துக்கும் ஒரேஎழுத்துரு என்று ஆயிருச்சுன்னா வலையுலகில் கணித்தமிழ் வளரும்; வாழும்! இது பொயில்லை
சத்தியமான உண்மை, சோணா!

சோணா : நீங்க சொல்ற இந்தப் பாயிண்டை ஒத்துக்கிறேன். அதே சமயத்துல பாருங்க…. ஜி மெயில்ல மட்டும்தான் நீங்க அனுப்புற யூனிகோடைப் படிக்க முடியுது. மத்த எந்த மெயில்லயும் வெறும் எண்கள் மற்றும் புரியாத கூளம் குப்பை எழுத்தாத்தான் தெரியுது. வலைப்பூ, மற்றும் இணைய இதழ்கள் யூனிகோடுல இருப்பதைப் படிக்க எளிதாக இருக்கிறது. ஆனா ஹாட்மெயிலிலோ,  யாகூவிலோ கிரந்தமாகத்தானே தெரியுது.

தணி : நீங்க சொல்றது வாஸ்தவம்தான்! நானும் UTF 8 எல்லாம் முயற்சி பண்னிப் பாத்துட்டேன்.  உகூம்…பிரயோசனமே இல்ல; இதுக்கு கணினி அறிஞர்கள்ங்கிறதைவிட யூனிக்கோடு ஸ்பெசலிஸ்ட்டுகள் என்ன சொல்றாங்க? கொஞ்சம் பொறுத்து இருந்து பார்ப்போம். சரி…சரி நேரமாச்சு…இன்னொரு நாளைக்கு இதப்பத்திப் பேசுவோம்; இப்ப போயிட்டு வர்றேன்..சோணா!

ஆல்பர்ட்,
விஸ்கான்சின்,
அமெரிக்கா.

ToTop