ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

திரு. புகாரி அவர்களின் கருத்து

அன்றுதொட்டு இன்றுவரை மாற்றங்களையே நாம் வாழ்வாய்ப் பெற்றிருக்கிறோம்.
இன்று நம் முன் ஓர் இனிப்பான மாற்றம் நம்மை மாறச்சொல்லி அன்புடன்
அழைக்கிறது.
திஸ்கியில் திளைத்திருந்தோம் நாம் இதுவரையில். இதற்குமுன் அஞ்சல் என்ற
தரம்கொண்டுதானே எழுதி வந்தோம். நான் என் எத்தனை கோப்புகளை அஞ்சலிலிருந்து திஸ்கிக்கு மாற்றியிருப்பேன். அதன்பின் திஸ்கி 1.6 லிருந்து 1.7. செய்த மாற்றமெல்லாம் ஒரு வலிதான் என்றாலும், அந்த வலிக்குப்பின் பிறந்த குழந்தை எத்தனை ஆரோக்கியம்.

இன்றும் திஸ்கி, குழுமங்களில் மட்டுமே கூடுகட்டிக்கொண்டு குஞ்சு பொறிக்க
முடியாத முட்டைகளை இட்டுக்கொண்டிருக்கிறது. வலைப்பூ, வலைத் தளங்களெல்லாம் யுனிகோடு சிறகுகளை தனிவானில் உயர்த்தி வெற்றிச் சிறகுகளுடன் பறக்கின்றன. ஏன்? அது மட்டும் எப்படி முடிந்தது. இது ஏன் முடியவில்லை.

எத்தனை எத்தனை எழுத்துத்தரங்கள் இப்போது? அஞ்சல், திஸ்கி, டாப்பு,
டாம்மு, கீப்பு, டூப்பு, சோப்பு, வழவழா, கொழகொழா. போதுமடா சாமி.
ஆளாளுக்கு ஒன்றை வைத்துக்கொண்டு அடித்துக்கொள்வது மலிந்துவிட்டது.
எல்லோரும் ஒன்றாய் இணைய இன்று யுனிதான் ஒரே வழி.

மாற்றுக்கருத்துக்களை மாற்றியெடுக்கும் பணியில் நான் முனைந்து செயல்பட்டு
வெற்றியும் கண்டிருக்கிறேன். எனவே மிக விரையில் யுனிகோடு குழுமங்கள்
தீபங்கள் ஏற்றி தீபாவளியே கொண்டாடும் என்ற நம்பிக்கை எனக்குப் பூரணமாய்
உண்டு. திஸ்கிதான் நரகாசுரன் என்று சொல்லும்போது மனம் கஷ்டமாகத்தான்
இருக்கிறது. ஆனால், மேலே ஏறுவதென்பது படிகளை மிதித்துத்தான். அஞ்சல்,
திஸ்கி 1.6, திஸ்கி 1.7 என்பதெல்லாம் படிகள் படிகள் படிகள். யுனிகோடு
என்ற நாற்காலியை எட்டிவிட்டால், பிறகெல்லாம் செங்கோல்தான் தமிழுக்கு.

பலரும், யுனிகோடில் எழுதி தங்கள் வலைப்பூவில் இட்டுவிட்டு பின் அதன்
தகுதரத்தை மாற்றி திஸ்கியாக்கி யாகூ குழுமத்தில் இடுகிறார்கள். இது
அபத்தமில்லையா? இரண்டு இடத்திற்கும் செல்வது தமிழ்தான். ஆனால் தரம்தான்
வேறு. கொக்குக்கு கூஜா, நரிக்கு தட்டு என்பதுபோல இருக்கிறதல்லவா?

வலைத்தளங்கள் தொடங்குவதெல்லாம் யுனிகோடில்தானே? ஏன் திஸ்கியிலேயே
தொடங்குவதில்லை. நானும் முதலில் திஸ்கியில்தான் என் வலைத்தளம்
வைத்திருந்தேன். அதை யுனிகோடாய் மாற்றி வருடம் ஒன்றாகப் போகிறது. காலம்
மாறிப்போச்சுங்க! யுனிகோடு முதலிடம் வகிச்சாச்சுங்க. வலைப்பூக்களைப்
பற்றி சொல்லவே வேண்டாம். மிக எளிதாக உருவாகக்கூடிய ஈசல் அது. அந்த ஈசலின் சிறகுகள் எல்லாம் யுனிகோடு தமிழ்தானே?

யுனிகோடுக்கு எழுத்துரு தேவையில்லை. ஏனெனில் விண்டோ சின் பெரும்பாலான எழுத்துருக்களில் தமிழும் உண்டு. ஆனால் அது யுனிகோடாக இருக்குமே தவிர, திஸ்கியாக இருக்காது.

இன்றைய உலகமே யுனிகோடு உலகம்தான். இனி நாளைய உலகைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. கூகுளின் முகப்பிலிருந்து அனைத்தும் தமிழிலேயே வரும். பாதிக்குமேல் இப்போதே வருகிறது.

தமிழில் தகவல் தேடும் தொழில் நுட்பம் யுனிகோடில்தான் உள்ளது. அதாவது
மாங்குமாங்கென்று நாம் இணைய குழுமங்களில் எழுதித் தள்ளுகிறோம். ஆனால்
எதுவும் தேடினால் கிடைப்பதில்லை. யுனிகோடாக இருந்தால், எந்தத் தமிழ்ச்
சொல்லை இட்டுத் தேடினாலும், அந்தத் தமிழ்ச்சொல் நம் குழும மடல் ஏதோ
ஒன்றில் இருந்தால், நச்சென்று வந்து விழுந்துவிடும். அதாவது உலகலாவ
விசயம் பரவும். தமிழும் ஆங்கிலத்தப்போல தேடியதும் தட்டுப்பட்டுவிடும்.
இது தமிழுக்கும் தமிழ் எழுதும் எழுத்தாளர்களுக்கும் மிக மிக அவசியம்.

http://groups-beta.google.com/group/anbudan
இங்கே சென்று பாருங்கள். மடல்கள் குவிந்துவிட்டன. ஏராளமான சோதனைகள்
செய்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

தமிழினி மெல்லச் சாவதோ
தீப்பொறி தீர்ந்தே போவதோ
விழிகளை விரித்தே காண்பீர்
வெற்றியின் நெற்றியில் தமிழே

அன்புடன் புகாரி

ToTop