ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

கணிஞர் உமர்தம்பி அவர்களின் மறைவு!

umar_photoதமிழ் கணினித்துறையில் தொண்டாற்றிவந்த கணிஞர் உமர்தம்பி அவர்கள் 2006 ஜூலை 13ல் இயற்கை எய்தினார்.

தமிழ்கணினிக்கு இவர் ஆற்றிய சேவை மிகவும் பெரியது. தமிழ் யுனிகோடை இணையத்தில் பலரும் பயன்படுத்த பல செயலிகளையும் எழுத்துருக்களையும் உருவாக்கியதுடன் உதவிக்கட்டுரைகளையும் எழுதி பெரிதும் உதவி புரிந்தவர்.

அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.
உமர் அவர்களின் மரணச்செய்தி கேட்டு தமிழ்-உலகம் மடலாடற் குழுவிற்கு அன்பர்கள், நண்பர்கள் எனப் பலர் தங்கள் நினைவுகளை வெளிப்படுத்தி அஞ்சலி செலுத்திய மின்னஞ்சல்களின் தொகுப்பு.

தமிழ் இணையத்துக்காக எழுத்துருக்கள், செயலிகள் என்று பலவற்றை செய்தவர்.
http://www.geocities.com/csd_one. மிகுந்த உற்சாகத்துடன் தமிழ்-உலகம், ஈ-உதவி,
தமிழ்மணம் போன்ற குழுமங்களில் பங்கெடுத்துக் கொண்டவர். ஏராளமான கட்டுரைகளை எழுதியவர்.
எல்லாமே தமிழ்க் கணிமை தொடர்பானவையே. கூடவே அறிவியல் தொடர்பான கட்டுரைகளைத் தனது வலைப்பதிவில் எழுதியும் வந்தவர்.

தமிழில் வலைப்பதிவுகள் வளர முக்கிய காரணமாக இருந்தவர். அவருடைய தேனி இயங்கு எழுத்துரு இங்கே 90% பேருடைய வலைப்பதிவுகளில் இயங்குகிறது. அந்த வகையில் தமிழ் வலைப்பதிவர்கள் என்றென்றும் நன்றிகூற வேண்டியவர் தேனி உமர்.

அவரது மரணச்செய்தி மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. உமர் அவர்களது குடும்பத்தார், உற்றார் உறவினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

தகவல்: http://muftiblog.blogspot.com/2006/07/blog-post.html

என்னால் நம்பவே முடியவில்லை! தமிழ்க் கணிமையின் பயன்பாட்டைக் கூட்டியதில் நண்பர் உமர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர். அவரோடு தமிழ் உலகம் மடற்குழுவில் பலமுறை உரையாடி இருக்கிறேன்.

நிமிர்ந்த நெஞ்சும், கனிவான சொற்களும் உடையவர். தமிழின் மேல் ஆராத பற்றுடையவர். அதை பாராட்டும் வகையில் வெளிக்காட்டியவர்.

அவருடைய குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

அன்புடன்,
இராம.கி.

***
அன்பு நண்பர் உமரின் மரணம் பற்றய செய்தி அதிர்ச்சியுறச் செய்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய மனமார நினைந்து பிரார்த்திக்கிறேன். தமிழ் உலகம் தனது
இரங்கலை அவரின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்க விரும்புகிறது. அவர் குடும்பத்தினரின் அல்லது உறவினர்களின் முகவரி தெரிந்தால் கட்டாயம் தமிழ் உலகின் இரங்கலைத் தெரிவித்துக் கடிதம் எழுதுவேன்.

பழனி
சிங்கை
மட்டுறுத்துனர்கள் மற்றும்
உறுப்பினர்கள் சார்பில்

***

அன்பு நண்பர் உமரின் மரணம் பற்றய செய்தி அறிந்து சொல்லொணாத் துயருற்றேன். அவரின் ஆன்மா அமைதியுற ஏக இறையை உளமார வேண்டுகிறேன்.
அத்துடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்பு,
ஞானவெட்டியான்

***

அன்பு நண்பர் உமரின் மரணம் அதிர்ச்சியுறச் செய்கிறது. அவரின் ஆத்மா சாந்தியடைய கண்கள் கசியப் பிராதிக்கிறேன்.
கடந்த சிலமாதங்களாக அவரோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் போனது.
ஈ-சங்கமம் இணையஇதழுக்கு அவரது பங்களிப்பும் தமிழ் உலகம்
மடலாடாற்குழுவிலும்அவரது பங்களிப்பை என்னாலும் மற்ற நண்பர்களாலும்
மறக்க இயலாது.பலசமயங்கள் நான் இணையத்தில் இருந்தால் “சாட்” செய்வார்.
இ-சங்கமம் கெளரவ ஆசிரியராக இருந்தாலும் ஆசிரியராக இருந்த தம்பி
விஜயகுமார் உமர் அவர்களைப் பல வேலைகள் சளைக்காமல் கேட்டு அலுப்பில்லாமல் செய்தும் எனக்கும் தகவல் தெரிவித்த சகோதரப் பாங்கை இழந்துவிட்டேனே என்று எண்ணும்போது நெஞ்சு விம்மித் தணிகிறது.
முகம் தெரியாவிட்டாலும் அவர் அகம் தெரிந்தவன் என்ற அளவில் இந்த இளம்
வயதில்..அய்யோ கொடுமையோ! வெங்கொடுமைச் சாக்கேடே! சூடுதணியாத
இளம்குருதி குடிப்பதற்கோ என்கிற கவிஞர் கண்ணதாசனின் வரிகள் நினைவில் எழ
என் கண்களை கண்ணீர் திரையிட்டு மறைக்கிறது. உன் புகழை எழுதவேண்டிய
நான் உனக்கு இவ்வளவு சீக்கிரம் அஞ்சலி செலுத்துவேன் என்று கனவிலும் கருதவில்லை.
பத்துநாட்கள் நோயில் படுத்திருந்தார்; மரணம் அவரைக் கொண்டுபோய்விட்டது
என்றால் கூட சிந்தித்திருக்கலாம். இன்னும் இறந்துவிட்டார் என்பதை என்னால்
நினைக்கவேமுடியவில்லை.
தந்தினிய குடும்பத்தை, ஆறாத்துயரில் அரற்றுங்கள் என்று சொல்லி மீளாத் துயிலில்
வீழ்ந்தாரா? இன்றைய இணைய உலகிர்குத் தேவையான தங்கநிகர் உமரை
இழந்துவிட்டோம். ஒருநாள் உன்னைச் சந்திப்பேன் என்று எண்ணிகொண்டிருந்தேன்;
எட்டாத தொலைவு சென்றுவிட்டாயே சகோதரா!

கண்ணீரோடு
ஆல்பர்ட்,
அமெரிக்கா.

***
நண்பர் உமர் மறைவு பற்றிய செய்தி துணுக்கிட வைத்தது. செய்தி அரை குறையாக வந்திருப்பதால், யாரோ தவறாகக் கொடுத்த செய்தியாக இருக்கக்கூடாதா என்று நினைக்க வைக்கிறது.

நண்பர் உமர் தமிழ்க் கணினி வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர். அவரது கையேடுகளும், எழுத்துருக்களும் ஒரு புதிய தலைமுறைக்குக் கணித்தமிழை அறிமுகப் படுத்தியது. ஆழ்ந்த தமிழ்ப் பற்றும், கணினியறிவும், அதை எடுத்துச் சொல்லும் திறனும், பொதுத்தொண்டாற்றும் மனப்பாங்கும், ஒன்று கூடி வருவது அரிது. அத்தகைய பண்பாளரின் மறைவு கணித்தமிழுக்கு ஒரு பேரிழப்பு. அவருடைய முயற்சிகளால் கணித்தமிழுக்கு ஈர்க்கப் பட்டவர்களில் ஒரு சிலராவது அவரது தொண்டுகளைத் தொடர்வதே அவருக்குச் செலுத்தும் நன்றிக்கடனாகும்.

அவரது இல்லத்தார்க்கு நம் ஆழ்ந்த இரங்கல்கள்.

வருத்தத்துடன்,

மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.

***

அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்,
நம் சித்தம் குழுமத்தின் கூட்டுப்பிரார்த்தனையில் இந்த வாரம் உமர் அவர்களின்
குடும்பத்திற்காகவும் பிரார்த்திக்கப்படும், அன்பர்கள் அனைவரும் வரும் ஞாயிறு
(16-07-06) காலை 9.30 ( இந்திய நேரம்) முதல் 9.35 வரை பிரார்த்திக்குமாறு
கேட்டுக்கொள்கின்றேன்…வணக்கம்.

வருத்தமுடன்,
சித்தத்தின் சிவா….:(

***

நண்பர் உமர் மறைவு குறித்த செய்தி அதிர்ச்சியடைய வைத்துவிட்டது.
அவரின் தேனீ எழுத்துரு காலத்தால் அவர் பெயர் சொல்லி நிற்க்கும்.

அவர் பிரிவால் வாடும் இல்லாத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

சிவகுமார்
கோவை

***

உமர் நல்ல நண்பர் அவர்.

பல முறை எனது எழுத்துரு பிரச்சனைகளை மின்னஞ்சல் மூலம் கழைய உதவியவர்.
பொதுநலவதி. தமிழ் பற்றாளர். கணினிவல்லுநர்.

நண்பர் மணிவண்ணன் கூறியது போல் “யாரோ தவறாகக் கொடுத்த செய்தியாக இருக்கக்கூடாதா” என நானும் நினைக்கிறேன்.

அன்னாரின் மறைவு தமிழ் கணினித் துறைக்கு ஓர் பேரிழப்பாகும்.

அவரது இல்லத்தார்க்கு நம் ஆழ்ந்த இரங்கல்கள்

துயரத்துடன்
பழ பழ

***

நண்பர் ஆசிப், சாபு போன்ற உமரின் நெருங்கிய நண்பர்கள் தயவு செய்து
அவரது மரணச் செய்தியை ஊர்ஜிதப்படுத்தக் கேட்டுகொள்கிறேன்.

“கேளுங்கள் கொடுப்பேன்” என்கிற மேன்மையான குறிக்கோளுடன் பல கட்டுரைகள், மென்பொருட்கள், எழுத்துரு, எழுத்துரு மாற்றி இணைய அகராதி இன்ன பல கணினி , இணையம், சம்பந்தமான வற்றை தமிழ் கூறும் நல் உலகத்திற்கு அவர் வழங்கினார்.
நான்காம் (இணையத் தமிழ்) தமிழுக்காக அவர் செய்த சேவை மகத்தானது.
எனது வேண்டுகோளுக்கு இணங்கி தற்காலிக எழுத்துரு ஏற்றி தயாரித்து அனுப்பினார். இந்த செயலி மூலம் எழுத்துருக்களை கணினியில் நிறுவாமலேயே பயன்படுத்தலாம் . இது நீங்கள் பயணம் செய்யும்போது தமிழில் எழுதப் பயன்படும்.
அவரது பல கட்டுரைகளையும் எழுத்துருக்களையும் எழில் நிலா தளத்தில் பார்க்கலாம்
https://ezilnila.ca/

அவரது அகால மரணத்தைக் கேட்டு பெரும் அதிர்ச்சியும் துயரமும் அடைகிறேன்.
அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அவரது குடும்பத்திற்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்
அவரது குடும்பத்தினரின் முகவரியை யாராவது கண்டறிந்து
தமிழ் உலகத்தாருக்கு தெரிவித்தால் அவரகளுடன் தொடர்புகொள்ள உதவியாக இருக்கும்
அவரது நினைவு என் மனதில் என்றுமிருக்கும்

மிகுந்த வருத்தத்துடன்

இண்டி ராம்

பி.கு. அவரது நண்பர்கள் தயவு செய்து அவரது அகராதி இணையப்பக்கத்தையும்

டேட்டா பேசையும் வேறு தளத்திற்கு மாற்ற வேண்டுகிறேன்
http://www24.brinkster.com/umarthambi/tamil/ETamil_search.asp

இல்லாவிட்டால் காலாவட்டத்தில் அவைகள் அழிக்கப்பட்டுவிடும்.
அந்த டேட்டாபேசில் நான் பல வார்த்தைகளை இட்டுள்ளேன்.
நண்பர் இராமகிரு”ணன் உருவாக்கியுள்ள புதிய தமிழ் வார்த்தைகளை
அங்கு இட்டு பலருக்கு உதவலாம்
எதனால் திடீரென்று மரணமடைந்தார், சாலை விபத்தா?
மரண சமயத்தில் தமிழகத்திலா அல்லது அரபுநாடுகளிலா இருந்தாரா?
இந்தகாலத்தில் இம்மாதிரியான அரைகுறை செய்திகளைப்
படிப்பதற்கு வருத்தமாகத் தான் இருக்கிறது

இண்டி ராம்

***

வணக்கம்

அவர் பிரிவால் வாடும் இல்லாத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்

நட்புடன்
அனலை திரு
ஒட்டாவா, கனடா
http://www3.sympatico.ca/s.thiru/

***

தமிழ்மணம் வலைப்பதிவுத் திரட்டி தந்த சோகச் சேதி அதிர்ச்சி அளித்தது.
http://www.adirai.com/modules.php?
op=modload&name=News&file=article&sid=400085
இனிய நண்பர் உமர்தம்பி தம் சொந்த ஊரில் காலமாகிவிட்டார்கள்:
http://groups.google.com/group/anbudan/msg/df8ae2fe199df294

நண்பர் உமர் தன் இயங்கு எழுதுரு தேனீயை வடிவமைத்துத் தந்து யுனித்தமிழையும்
வலைப்பதிவுகளையும் வளர்த்த அரும்பாடு பட்டவர் ஆவார்.
எனக்குப் பல எழுத்துச் சீர்மை எழுத்துக்களை வடித்துத் தந்தும் இருக்கிறார். பலமுறை உரையாடியிருக்கிறோம்.
யுனிகோட் வலைப்பதிவுகள் இன்று வளர்நிலை என்றால்
உமர்தம்பி அவர்களின் பங்களிப்பு முக்கியக் காரணம்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரிலும் அதிரை போல
ஒரு வலைத்தளம் அமைத்தல் உமருக்கு மக்கள்
போற்றும் நினைவஞ்சலியாகும்.

உமர்தம்பி நம் நினைவுகளில் என்றும் வாழ்வார்கள்.
அவரது குடும்பத்தாருக்கு என் அநுதாபங்கள்,
நா. கணேசன்

***
நண்பர் உமரின் அகால மரணம் மனதுக்கு வேதனை
தருகிறது.

தமிழ் எழுத்துரு பிரச்னைகளைக் களைய பல முறை தனி மடல்களில் உதவி செய்திருக்கிறார்.
எனக்கே சலிப்பு வந்து “போதும் விடுங்க, இப்படியே இருந்துட்டு போகட்டும்” என்றால் கூட விடாது, “ஏன் இது உங்க கணில வரலேன்னு எனக்கு தெரியணும்”
என்று பிடிவாதமாய் உதவியிருக்கிறார்.

இந்த நல்ல நண்பரை நேரில் சந்திக்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் மேலிடுகிறது.

அவர் குடும்பத்தாருக்கு என் இரங்கல்கள்.

சுவாமிநாதன்
லாஸ் ஏஞ்சலஸ்

***

என் இரங்கலும் உமரின் குடும்பத்தவர்க்கும், பல்லாயிரக்கணக்கான தமிழ் நெஞ்சங்களுக்கும்.

Regards,
Jeyapal

அன்புடன்,
ஜெயபால்

***

நண்பர் உமரின் அகால மரணம் மனதுக்கு வேதனை தருகிறது.

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்.

அவர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.

அன்புடன்,
அன்பு.

***

தாய்த் தமிழுக்கு தளறாமல் உழைத்து வந்த..
தோழர் “தேனீ” உமர் தம்பி அவர்களது மறைவு…
தமிழ் கூறு நல்லுகிற்கே ஏற்பட்ட மாபெரும் இழப்பு.

ஊரோடு மட்டுமல்ல.. உலகோடும்
ஒட்டொழுக வாழ்ந்து பார்த்த அந்த பண்பாளரிடம்..
ஆறாத அன்பும் மாறாத மதிப்பும் கொண்டிருந்தேன்….

அன்றைய தமிழ் இணையத்தில்..
மேற்படி நண்பர்களோடு ஒட்டியே பேசிக்கொண்டிராமல்…
அவ்வப்போது.. வெட்டிப் பேசியே ஆகவேண்டியிருந்த…
அந்த வேகமான நாட்களில்…

இன்னொரு புறம்..
அதற்கு இணையாக.. டார்வீனியம் தொடர்பான
இழையன்றும் ஓடிக்கொண்டிருந்த போதுதான்
தோழரோடு பரிச்சியம் ஏற்பட்டிருந்தது..

அதனையட்டி.. தாம் எழுதிருந்த
ஒருசில கட்டுரைகளின் தொடுப்புக்களை மட்டும்..
தொடர்ந்து அனுப்பி வைப்பதை.. அன்றைய தினம்..
வழக்கமாக கொண்டிருந்தார்.. ஆனால்….

அதற்கெல்லாம் நன்றி சொல்ல.. பாவி நான் மறந்து போனேன்…

தமிழுக்குச் சேவை என்றால்..
அது தமிழினத்திற்கும் சேவைதானே…?

நன்றி தோழர்.. மிகவும் நன்றி….

வணக்கத்துடன்…/பூபதி

***

அன்பு நண்பர் உமர்தம்பியின் மரணச்செய்தி என்னைக் கலங்க வைத்துவிட்டது.

என்னால் நம்பவே முடியவில்லை.
அன்பான நண்பர் உமர் தம்பியை நாம் இழந்துவிட்டோமா?
என்ன கொடுமை இது?
இதை எப்படி நம்புவது?

நான்கு வாரங்களுக்கு முதல் ஒரு யுனிகோட் செயலி பற்றி அறிவதற்காக இரண்டு அஞ்சல்கள் அனுப்பினேன். பதில் இல்லை.
உடனே பதில் அனுப்பாவிட்டாலும் இரண்டு மூன்று நாட்கள் சென்ற பின்னர் கூட அவர் பதில் அளிப்பதுண்டு. எனவே பேசாமல் இருந்துவிட்டேன்.
ஆனால் அவரிடமிருந்து எந்தப்பதிலும் எனக்குக் கிடைக்கவேயில்லை.

நண்பர் உமர்தம்பி எழுதிய கட்டுரைகள் பலவற்றை ‘எழில்நிலா’ தளம் கொண்டிருக்கின்றது.
அதனை படித்து பயன்பெற்ற பலரது வாழ்த்து அஞ்சல்கள் எனக்குக் கிடைக்கும்போதெல்லாம் அதனை அவரிற்கு அனுப்பிவைப்பேன். அவர் ‘தமிழ் யுனிக்கோட்’ கணினியில் வலம்வர எவ்வளவோ செய்தார்.

அவரது கட்டுரைகளை ‘எழில்நிலா’வில் பிரசுரிப்பதற்கு அனுமதி கேட்கும்போதெல்லாம் ‘எழில்நிலாவிற்கு அனுமதி தேவையேயில்லை. தாராளமாக பிரசுரிக்கலாம்.’ என்று சொல்வார்.

அவர் ‘ஒருங்குறி’ ஜிமெயில் குழுமத்திற்கு அனுப்பிய அஞ்சல்களில் நான் கடைசியாக
படித்த ஒரு அஞ்சல் இது. இதன் பின்னர் அவரின் அஞ்சல்களை நான் காணவில்லை.
———————————————————————–
அன்பின் ராம்,

இது விண்டோச்98 இலும் தொழிற்படும்(இப்போது அதிலிருந்துதான் தட்டச்சு
செய்கிறேன்). உள்ளிடப்படும் இடம் Plain text box ஆக இருந்தால் தமிழில்
தட்டெழுத முடியும். என்றாலும் முழுமையாக இ-கலப்பை போல் இருக்கும் என்று
எதிர்பார்க்கக் கூடாது. அதனுடைய செயல்பாடே தனி. ஆனால் எங்கு சென்றாலும்
எந்தக் கணினியிலும் யுனிகோடு தமிழில் கூகுளில் தேடவோ, அஞ்சல் எழுதவோ
முடியும்.

அன்புடன்,
உமர்

————————————————————————

அன்புச் சகோதரரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுவதுடன் அவரின்
குடும்பத்தாரிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஆறாத்துயருடன்
மகேன்.

எழில்நிலா.காம்
https://ezilnila.ca

நண்பர் உமர்தம்பியின் பயனுள்ள கணினிக்கட்டுரைகளை பின்வரும் முகவரியில் பார்க்கலாம்.

https://ezilnila.ca

எழுதப்பழகுவோம் எச்.ரி.எம்.எல்-
யுனிகோடும் இயங்கு எழுத்துருவும்-
யுனிகோடும் தமிழ் இணையமும்-
யுனிகோடின் பன்முகங்கள்-
RSS ஓடை-ஒரு அறிமுகம்-
தெரிந்து கொள்ளுவோம்: இயங்கு எழுத்துரு-
இன்னும் பல …

***

உமர் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார் என்பதனை கேட்டு மிக அதிர்ச்சி அடைந்தேன்.
நம்ப முடியவில்லை.

தமிழ் இணையத்தின் மூலமும் வேறு வழிகளிலும் தமிழின் வழர்ச்சிக்கு அயராது
உழைத்தவர். குறிப்பாக தேனீ எனும் தமிழ் ஒருங்குறி ஃபொன்ற் ஐ உருவாக்கி இலவசமாக  வினியோகித்தார். எ-கலப்பை குடும்பத்தில் உமரும் ஒருவர்.

உமரின் குடும்பத்தினர், உறவினர், உற்றார், தமிழ் அன்பர்கள் அனைவருக்கும்
எகலப்பை குடும்பம் சார்பிலும், தமிழ்_ஆராய்ச்சி குழுமம் சார்பிலும், எனது
குடும்பம் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துகொள்கின்றேன்.

ஞாயிறு அன்று உமரை நினைவூற்றும் உலகழாவிய பிரார்த்தனையில் நாமும் கலந்திடுவோம்.

உமர்தம்பி என்றும் எம் நினவில் இருப்பார்.

வேதனையுடன்
சி சிறீவாஸ்

***
நண்பர்களுக்கு

சற்றுமுன் உமர்தம்பி அவர்களின் மகன் மொய்னூதீனிடம் தொலைபேசி வழி பேசினேன்.  உமர் அவர்களுக்கு மூன்று மகன்கள், இவர்களில் மூத்தவர் மொய்னூதீன்.

கடந்த ஒரு வருட காலமாகவே உடல் நல குறைவால் இன்னற்பட்டிருந்தார் உமர்தம்பி. அவருக்கு வயது 53.  தற்போதைய சூழலில் மொய்னூவிடம்  வெகு குறைவாகவே பேசினேன். மொய்னூவும் கணினித்துறையில் ஈடுப்பட்டுள்ளார்.  கடந்த மாதம் திருமணமான இந்த இளைஞர் துபாய் நாட்டில்  வேலை பார்க்கிறார்.
இவர் அனுமதியுடன் கீழுள்ள தகவல்களை இங்கு இடுகிறேன்.

-வாசன்

(தகவல்கள் இங்கு தவிர்க்கப்பட்டிருக்கின்றன)

***

வணக்கம்
திரு.உமரின் இழப்பைக்கேட்டு மிகவும் வேதனையுற்றேன்..!
அன்னாரின் ஆன்மா அமைதிகொள்ள பிரார்திப்போம்.!

இறுதி வரை அவரின் உருவை காண இயலாமல் சென்றுவிட்டது. தமிழ்-உலக அன்பர்கள் தயவு செய்து  தங்களை இணையத்தில்(தமிழ்-உலகில்) அடையாளம் காட்டிக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்(மீண்டும் தொந்தரவு செய்கிறேன்).!

அனைவரும் என்னைவிட வயதில் மூத்தவர்களே. தமிழ் உலக மடற்குழுவும் கட்டுப்பாடாக நடந்து வரும் குழுவே.பின் எதற்காக குழு உறுப்பினர்கள் தங்களை மறைத்துக்கொள்கின்றார்கள் எனத்தெரியவில்லை.
நண்பர் திரு.உமர் மறைந்த செய்தி கேட்டு அவர் எப்படியிருப்பார்(எப்படியிருந்திருப்பார்) என மனம் சற்று புலம்புகிறது. இணையத்தில் எவ்வளவோ சேவைகள் செய்து மறைந்து போன அவரை நினைத்து அனைவரும் மடல்களை பரிமாறிக்கொள்ளும் அன்பர்கள் அவர் எப்படியிருப்பார் என்பது தெரி
யாவண்ணம் மறைந்து விட்டார். தயவு செய்து இந்த ஒரு கோரிக்கையை(புகைப்படம்) தமிழ்-உலக குழு அன்பர்கள் பரிசீலிக்கவும்.

நன்றிகளும் நண்பரின் மறைவின் வருத்தங்களுடன்

இப்ரஹிம்

***

*உமர் தம்பி காக்கா – என் நினைவுகள்:*

துயரமாய் இருக்கிறது, இவ்வளவு சீக்கிரத்தில் நம்மை விட்டுப்பிரிந்து
விட்டார்களே எண்றெண்ணி, ஆனால் ஆதரவாய் இருக்கிறார்கள் தமிழ் இணைய உலகின் வல்லுநர்களும், எழுத்தாளர்களும் மற்றும் வாசகர்களும். தமிழ் வலைஞர் உலகில் மும்பை குண்டுவெடிப்பு செய்திகளை எல்லாம் பின்னுக்குத்தள்ளிவிட்டது “ஒருங்குறி உமர்” அவர்களின் மறைவுச் செய்திகளும் அநுதாபங்களும். மதங்களைத் தாண்டி மனிதர்களுக்கு சேவையாற்றியிருக்கிறார்கள் உமர் காக்கா அவர்கள்.

சமீபத்தில் திருக்குர்ஆனை ஒருங்குறியை பயன்படுத்தி நான் மின்னஞ்சலில்
அனுப்பவேண்டி ஒரு ப்ராஜக்ட் தன்னார்வமாக எடுத்துக்கொண்டேன். (
http://www.quran.tamilbookskadal.com)
<http://www.quran.tamilbookskadal.com%29%c2%a0/>அப்பொழுது
என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அதன் எழுத்துருவின் பெயர்கள்.

இப்பொழுதும் உணருகிறேன், உமர் அவர்களின் மரணம், மதம் எனும் மாயையை
மாய்த்திருக்கிறது. மதம்பாராமல் ஒவ்வொருவரும் தான் கண்ணீர் விடுவதாகவும்,
துக்கப்படுவதாகவும் எழுதியிருக்கிறார்கள், பலர் சந்திக்க நினைத்து நிறைவேறாமல்
போனதை எண்ணி வருந்துகிறார்கள். தமிழினத்திற்காக சப்தமில்லாமல் மதம் கடந்த
சேவையாற்றியிருக்கிறது அவர்களின் தேனி எழுத்துரு.

அவர்கள் உயிரோடிருக்கும் காலத்திலேயே (சுமார் 2 மாதங்களுக்கு முன்) uniumar
என்று பெயரிட்டு ஒரு ப்ளக்கின் (Plug-in) (அவர்களின் மூலக்குறிகளைக் கொண்டே)
உருவாக்கினேன். அதன் செயல்பாடுகளை பார்வையிட்ட அவர்கள் என்னைப்
பாராட்டினார்கள். (http://uniumar.tamilbookskadal.com). முன்பு சாதாரன
பக்கத்திலேயே வைத்திருந்த நான், பின்னர் ஒரு யோசனை தோன்ற, என் எண்ணத்தை அவர்களிடம் வெளியிட்ட பின், சப்டொமைன் திறந்து அதன் FTP பாஸ்வேர்டையும் அவர்களிடம் தந்திருந்தேன். அது அவர்களுடைய ஆக்கங்களை தொகுக்க நான் எண்ணியதே. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன் அவர்களுக்கு மஞ்சட்காமாலை என்னும் கொடிய நோயும் பீடித்துக்கொண்டது.

*பத்து வரிகளில் பல ஆயிரக்கணக்கான/இலட்சக்கணக்கான ரூபாய்களை கொடுக்கும்
மென்பொருள் துறையில் சிறிதும் ஆதாயம் எதிர்பார்க்காமல் அவர்கள் வெளியிட்ட தமிழ் எழுத்துரு தேனீ இன்று தமிழ் இணைய உபயோகிப்பாளர்களிடம் 90 சதவீதம்
பயன்படுத்தப்படுகிறது.*

ஒரு சமயம் அவர்கள் “ஆங்கிலம்-தமிழ் மாற்றி” வெளியிட்டார்கள். அதை பார்வையிட்ட நான் அவர்களின் பெயர் எங்கும் இல்லாததை கவணித்தபின் அவர்களின் கூறிய பின் உமர் என்று வெளியில் மட்டும் போட்டுக்கொண்டார்கள். மூலக்குறிகளில் (source code) அவர்கள் பெயரை இடவில்லை. http://uniumar.tamilbookskadal.com வெளிட்டு அவர்களிடம் தொலைபேசி வாயிலாக மூலக்குறியை என்கிரிப்ட் செய்ய விரும்பியதை தெரிவித்தேன். அதற்கவர்கள் தான் என்கிரிப்ட் செய்திருந்தால் நான் பயன்படுத்தியிருக்க முடியுமா என்று என்னை வினவியது சுருக்கென்றது. பின்னர் GNU காப்புரிமையின் கீழ் வெளியிட யோசனை சொன்னார்கள்.

*எதிர்பார்ப்பு:*
பல சமயம் அவர்களிடம் பேசுகையில், தமிழ் இணையப் பத்திரிக்கைகள் இன்னும்
ஒருங்குறியை பயன்படுத்தாமையை குறைபட்டுக்கொண்டார்கள். அதேசமயம் அதற்கு பகரமாக வாசகர்கள் அந்த இணையதளங்களின் பக்கங்களை உடனடியாக ஒருங்குறிக்கு காப்பி செய்து கொள்ள வசதியாக ஒரு கருவியையும் வெளியிட்டார்கள். பல்வேறு எழுத்துருக்களிலிருந்து ஒருங்குறிக்கு மாற்றும் நுட்பத்தையும் நமக்கு விட்டுச்சென்றிருக்கிறார்கள்.

ஊருக்கு செல்லும்பொழுதெல்லாம் அவர்களிடம் சிறிது நேரம் சந்தித்து பேசுவேன்.
அவர்களுடைய மகன் எனக்கு நண்பர் ஆகையால் எனக்கு பல்வேறுசமயங்களில் ஆலோசனையும் அறிவுறைகளும் வழங்குவார்கள். சென்ற முறை நண்பருடைய திருமணத்திற்கு சென்றிருந்தபோது நான் ஏனோ பேசவில்லை, அவர்களின் உடல்நலம் மிகவும் பாதித்திருந்ததை எண்ணிய வருத்ததால் இருக்கலாம்.

சமுதாய ஆர்வலரான அவர்கள் இஸ்லாமிய சமுதாயம் இரண்டுபட்டு நிற்பதை பலமுறை வருந்தியிருக்கிறார்கள்.

கணிணித்துறை மட்டுமல்லாது பல்வேறு தொழில்நுட்பங்களின் செயல்பாடுகளை அறிந்து வைத்திருந்தார்கள். அதேசமயம் எல்லா நுட்பங்களையும் தன் பிள்ளைகளுக்கும் கற்றுத்தந்திருக்கிறார்கள். அவர்கள் நமக்கு தந்தவைகளின் (தேனி) பல்வேறு கட்டத்தில் அவர்களுடைய மூத்த மகன் மொய்னுதீனும் பக்கபலமாக இருந்திருக்கிறார்.

*என் விருப்பம்:*

சப்தமில்லாமல் தமிழினத்திற்காக மாபெரும் சேவையாற்றி, தனக்கிருந்த புற்றுநோய்
பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாமலும், அநுதாபம் தேடிக்கொள்ளாமலும், தன்னுடைய சேவையை சிறிதும் விளம்பரம் செய்யாமலும் உலகை விட்டுச்சென்ற உமர்தம்பி அவர்களின் குடும்பத்தினை தமிழக அரசு கௌரவிப்பதுடன் அவருடைய எழுத்துருக்களை அங்கீகரிக்கவேண்டும், கணிப்பொறியில் சேவைசெய்பவர்களுக்கான விருதுகளில் “உமர் தம்பி” என்று பெயரிட்டு விருதுகள் வழங்க வேண்டும்.

விண்வெளித்துறையில் அதிக அறிவும் ஆர்வமும் உள்ள இளம் விஞ்ஞானிகளான அவர்களுடைய் பிள்ளைகளின் அறிவை இந்திய அரசு பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

பல்வேறு காலகட்டங்களில் தமிழ் முஸ்லிம்கள் தமிழுக்காக ஆற்றிய தொண்டுகள்
மறக்கடிக்கப்பட்டது போல் இதையும் உதாசீனப்படுத்தக் கூடாது.

நினைவுகளுடன்,
மாஹிர் (அதிரைவாசி)
சென்னை

***

நண்பர் உமர் அவர்களின் மரணம்
எம் தமிழ் உலகிற்கே ஏற்பட்ட ஓர் பேரிழப்பு

நண்பரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு
அமீரகத் தமிழர்கள் அமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை
தெரிவித்துக்கொள்கிறோம்

அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்

வருத்ததுடன்
பாரத்

***

அன்பானவர்களுக்கு,

நம்பவே இயலாத ஓர் இழப்பு சகோதரர் உமர்தம்பி அவர்களின் மறைவு.

தொலைபேசிவழியாக செய்தி கேட்டதும் என்னால் முதலில் நம்ப இயலவில்லை கடந்த சில நாட்களுக்கு  முன் அவரின் செல்லிடபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன் அப்பொழுது கூட அவரின் பேச்சில் உற்சாகம் குறையவில்லை. அப்பொழுது அவர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றிருந்ததாக கூறினார்.
நான் கேட்ட பொழுது கூட சும்மா தொண்டையில் ஒரு புண் ஆறவே இல்லை அதனை காட்டத்தான் சென்னை வந்தேன் என்றார். இப்பொழுது நமது நெஞ்சில் ஆறாத இரணமாய் சோகம்.

துபாயில் சுமார் 18 ஆண்டுகள் பணியிலிருந்துள்ளார் அப்பொழுது பணி நிமித்தமாக சரியான நேரத்திற்கு உணவு எடுத்துகொள்ளாததால் குடலில் புண்கள் ஏற்பட்டு அதுவே பின்னாளில் புற்றுநோயாக மாறியிருகின்றது கூடவே சர்கரையும் சேர்ந்து கொள்ள கடந்த ஒரு வருடமாக வேதனைபட்டு கொண்டிருந்தார் இத்துடன் மஞ்சள் காமாலையும் சேர்ந்து கொள்ள கடைசியில் …. நம்மை பிரிந்துவிட்டார். ஆனால் இத்தனை வேதனைகளையும்  தாங்கி கொண்டே இணையத்திலும் தனது பங்களிப்பினை செய்து வந்துள்ளார்.

சங்கமம் இதழினை தாயும் தந்தையுமாய் இருந்து வளர்த்தவர், சிறந்த வழிகாட்டி, கணினி தொழில் நுட்பத்தினை ஒரு குருவாய் இருந்து போதித்தவர்,சிறந்த கட்டுரை ஆசிரியர்,சிறந்த புகைப்பட நிபுணர்,சிறந்த கல்வியாளர் குறிப்பாய் சொல்லவேண்டுமானால் பன்முகத்தன்மை கொண்ட ஒரு சிறந்த மனிதர்.

“”திரு. உமர் அவர்கள் காலமானபொழுது அவரது வயது.53
அவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் தான் மூத்த மகனுக்கு திருமணம் ஆனது.
மூத்த மகன் துபாயில் பணியில் உள்ளார்.
இரண்டாவது மகன் இந்த கல்வியாண்டில்தான் தனது கல்லூரி படிப்பினை முடித்துள்ளார்.
மூன்றாவது மகன் தற்பொழுது தான் பள்ளி கல்வி பெற்றுவருகிறார்.
தனது உடல் வேதனைகளை குடும்பத்தாரிடம் கடைசிவரை அவர் கூறியதே கிடையாது , அவருக்கு என்ன வியாதி என்று கடைசி நிமிடங்களில் தான் அவர்களுக்கு தெரியவந்திருக்கிறது.””

ஆல்பர்ட் அண்ணா மூலம் தான் முதலில் திரு.உமர் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. ஆரம்பத்தில் நான் அவரை என் போன்ற ஒரு இளைஞர் தான் என நினைத்தேன் போக போகத்தான் தெரிந்தது அவரது வயது 50 க்கு மேல் என. இருந்தாலும் வயது வித்தியாசம் பாராமால் நல் விசயங்களுக்கு தனது உடல் நோயின் வேதனைகளையும் தாங்கி கொண்டு தமிழ் இணையத்திற்காக அவர் ஆற்றிய அரும்பணியினை போற்றியே ஆகவேண்டும்.

அவரது மூத்த மகன் மைனுதீனிடம் பேசிக்கொண்டிருந்தபொழுது ” எனது அப்பா பயன்படுத்தி வந்த அஞ்சல் பெட்டியினை திறந்து பார்த்த பொழுது அவரது மறைவுச் செய்தி அவருக்கே வந்திருந்ததை என்ன வென்பது” என்ற மைனுதீனின் வார்த்தைகள் என் கண்ணில் நீரினை வரவழைத்துவிட்டது.

மைனுதீனுடன் தொடர்பு கொள்ள அவரது செல்லிடபேசி எண்:+91- 9894486277

சகோதரரின் மறைவு சங்கமம் குழுமத்திற்கு மட்டும் அல்ல தமிழ் இனத்திற்கே பேரிழப்பாகும்.

சகோதரரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்.

ஆறாத்துயருடன்,
கே.எம்.விசயகுமார்.

***

நண்பர் உமர் மறைந்து விட்டார் என்பது என்னை பெரிதும் அதிர்ச்சி
அடைய செய்து விட்டது.
கணினி தொழில்நுட்பத்தில் தன்னலம் கருதா தமிழ்நலம் கருதிய தமிழ்மகன்.
நான் கணினியில் தடுமாறிய போதெல்லாம் சலிக்காது மனம்
கோணாது வழிகாட்டிய பண்பாளர்.என்னை போன்ற பாமரனும்
கணினியை கையாள்வது எளிது என்பதை தனது கருத்துக்களாலும்
திறனாலும் ஊக்குவித்த சிந்தனையாளர்.

என் நினைவைவிட்டு அகலாது- அவரது நினைவுகள்.
அவரது மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமன்றி தமிழ் கணினி
உலகிற்கும் பெரும் இழப்பாகும்.

அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு
இரங்கலை தெரிவிக்க வழி இருந்தால் குழுவில் அறிவிக்க வேண்டுகின்றேன்

சே.கதிர்காமநாதன்

***

ஆழ்ந்த அனுதாபங்கள்
அன்புடன்

சாபு
துபாய்

***

வணக்கம்,

நம்பியபடி தமிழர் நாங்கள் நடந்து கொண்டிருந்தோம்,
உமருதம்பி, நீங்கள் நலமோடு இருப்பீர்கள் என்று நம்பினோம்.

அதிவீர(ராம்)பட்டினத் தமிழராய்,நம் மனம் கவர் நண்பராய்
அமைந்திருந்தார் உமருதம்பி

அன்று, செந்தமிழில் சீறாப்புராணம் எழுதினார் உமருப்புலவர்,
நேற்றுவரை, செழுமைத்தமிழில், ஒருங்குறிப்புராணத்தை வரைந்தார் உமருத்தம்பி.

உமருதம்பியின் கனவுகள் ஆயிரம்! ஆயிரம்!
அன்போடு சிலவற்றை தமிழுலக நண்பர்கள் நாம் நிறைவேற்றினால்,அதுவே அவருக்கு
ஆறுதல்! ஆறுதல்!

தமிழன்பகலா,
கண்ணன் நடராசன்

***
கணிஞர் திரு.உமரின் மறைவு அறிந்து மிக்க அதிர்ச்சியுற்றேன். நேர் முகமாக அவரை அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழ் வலைத்தளங்கள் மூலமாகவும், மின்னஞ்சல் குழுமங்கள் மூலமாகவும் அவரது எளிமையை , தொண்டை, உதவும் கரங்களை உணர முடிந்தது. தமிழ் கணினி உலகம் ஒரு அரிய நண்பரை கொடையாளியை இழந்து விட்டது . இது ஒரு பெரும் இழப்பே. அவரை இழந்து தவிக்கும் அவரது உற்றார் உறவினர் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .

அன்புடன்,
குமார் குமரப்பன்

***

Dear Members & Friends of INFITT:

Umar Thambi, a valuable contributor to Tamil computing, passes away

It is with deep regret that INFITT shares with all of you the news that Umar also known as Umar Thambi, has passed away on 12 July 2006, at around 5.30PM, at his home in Adirampattinam.

Umar was a valuable contributor to the Tamil computing arena and a Tamil computing enthusiast, who was always willing to help anyone in need. What made him special was his maturity, his easy accessibility, his simple and effective presentation skills and his willingness to spend his time for the benefit of the Tamil community. Some of his contributions were the ‘Thenee’ group of fonts, numerous small utilities that made Tamil data entry much easier for the common man and an ongoing compilation of a database for Tamil technical terms.

For more information, one can visit the following links:

http://vettippechu.blogspot.com/2006/07/blog-post_13.html

http://muftiblog.blogspot.com/2006/07/blog-post.html

http://www.adirai.com/modules.php?op=modload&name=News&file=article&sid=400085&mode=thread&order=0&thold=0

Tamil community and Tamil Computing, in particular, has lost a dear friend, an ardent supporter and a valuable contributor. INFITT joins many others in expressing its deep condolences to Umar’s family. May his soul rest in peace.

Arun Mahizhnan
Executive Director
INFITT

***
எதேச்சையாக இங்கே வந்த நேரம் .. நண்பர் உமரின் பிரிவுச் செய்தியைக் காணக்கிடைத்ததில் வேதனை கொள்கிறேன்.. அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் .. எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் மறுமை வாழ்வையும் சிறப்பாக்கிவிட உளம்நிறைந்த பிரார்த்தனைகளையும் முன்வைத்துக்கொள்கிறேன்…
நிலா முற்றம் ஆகிய எமது இணையத்துக்கு ஆரம்ப காலங்களில் நேரடி பங்களிப்பினை வழங்கியிருந்த உமர் அவர்கள் பிரிவுச் செய்தியை தாமதாகவே அறியக்கிடைத்தது… அவர் பற்றிய எண்ண அலைகளை எமது சமூகத்திலும் இணைத்திருக்கிறோம் … இங்கும் எமது கவலைகளைத் தெரிவித்துக்கொள்ள மனம் விரும்பி இணைந்துகொள்கிறோம்.

நன்றிகள்.
நிலா முற்ற இணைய சமூகம்.

ToTop