ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

இலங்கைத் தமிழர்களே தமிழ் தகவற் தொழிநுட்பத்தினை ஆரம்பகாலத்திலேயே உள்வாங்கிகொண்டவர்கள்

உத்தமம் நிறுவனத்தின் தலைவர் திரு .முத்து நெடுமாறனுடனான நேர்காணல்.

” … இலங்கைத் தமிழர்களே தமிழ் தகவற் தொழிநுட்பத்தினை ஆரம்பகாலத்திலேயே உள்வாங்கிகொண்டவர்கள். “பாமினி” எழுத்துரு, இலங்கையைச்சேர்ந்த முன்னோடிகளிடமிருந்து வெளிவந்ததுதான்…”

இலங்கைத் தமிழறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களுடைய வாசகமொன்றினை இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன்.”தமிழின் மேன்மை, அதன் தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில் உள்ளது.”.
தமிழ் இணையம் 2000 மாநாடுக்கான ஆயத்தவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தவேளையில்
நிகழ்ந்த தங்கள் முன்னைய வருகை எமக்கு நினைவிருக்கிறது. துரதிஷ்டவசமாக இலங்கையினால் அம்மாநாட்டுக்கு அனுசரணை வழங்க முடியவில்லை.அடுத்த “தமிழ் இணையம் 2004 மாநாடு இலங்கையில் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏதேனும் இருக்கின்றதா?

அடுத்த மாநாட்டுக்கான இணங்குகையினை தெரிவிப்பதற்காக உத்தமம் தன் கதவுகளை எல்லா நாடுகளுக்குமே திறந்துவைத்துள்ளது. இதுவரை எவருமே திடமான வாக்குறுதிகளை தரவில்லை.

சரி, அவை ஒருபுறமிருக்க, தமிழ் கணினி தமிழ் இணையம் என்பவற்றின் இன்றைய நிலை பற்றிக்கூறமுடியுமா?

தமிழ் கணினியும் தமிழ் இணையமும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பெருமளவில் பரிணாமமடைந்திருக்கிறது.

தொழிநுட்ப பரப்பிலாகட்டும் அல்லது உள்ளடக்கப் பரப்பிலாகட்டும் கூட்டானதும் சமுதாயம் சார்ந்ததுமான இயக்க முனைப்புகளை நாம் பார்க்கிறோம். உண்மையில் இது ஒரு நல்ல போக்கு. அத்தோடு இது, இனியும் தமிழ் தகவற் தொழிநுட்பம் என்பது கணினிக்கூடங்களிலும் கருத்தரங்குகளிலும் மாத்திரமே இருக்காது என்பதற்கான அறிகுறியும்கூட.

பயனாளர் இடையீட்டினை முழுமையாக தமிழிலேயே சாத்தியப்படுத்துமுகமாக , பிரதான போக்கிலிருக்கும் மென்பொருட்களை பல குழுக்கள் மொழிபெயர்த்துக்கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். உலகளாவிய ரீதியில் தமிழ் இலக்கியங்களையும் மரபுவழி ஆவணங்களையும் மின்னணுவியல் ஆவணங்களாக மாற்றும் தொடக்கப்பணிகளையும் நாம் பார்க்கிறோம். தமிழ் மின்னணுவியல் அமைவுகளின் நிலைபேற்றுத்தன்மைக்கான அழுத்தத்தினையும் நாம் பார்க்கிறோம்.

தமிழ் கணினி இயல், சிறப்பான தளத்தில் வழிநடத்தப்பட்டுள்ளது, வழிநடத்தப்படுகின்றது என்பது உண்மையிலேயே ஒரு நல்ல அறிகுறி.

யுனிகோட் எழுத்துக் குறிமுறை பற்றி கூறமுடியுமா?

நான் நினைக்கிறேன், யுனிகோட் நிறைய நற்பலன்களைக் கொண்டிருக்கிறது.

மேலும் ஓர் உலகளாவிய தராதர நிறுவனம், யுனிகோட் கூட்டமையம், ஒரு நியமத்தினை வெளியிட்டு ஆதரவு வழங்கும்போது, அது ஒரு பயனுறுதியான கட்டுமானத்தினை வரிவடிவங்களுக்கு வழங்குகிறது.

அத்தோடு, செயல்முறைப்படுத்தல் வழிமுறைகளூடாக ஒவ்வொரு தனி வரிவடிவத்துக்குமான தனிச்சிறப்பான முறைவழியாக்கத்திற்கும் (Processing) வழிசெய்கிறது.

இதனால் புதிய தொழிநுட்ப முன்னேற்றங்களை வழங்கவும் பெறவுமான மிகப்பெரும் வளச்சுரங்கத்தினை, எல்லா இந்திக் மொழிக்கூட்ட வரிவடிவங்களின் பயனாளர்களிடமிருந்தும் பெறக்கூடியதாக இருக்கிறது.

எடுத்துக்காட்டக , சிங்களம் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பணியாற்றக்கூடிய ஒரு செய்நிரலினை , அடிப்படையில் பாரிய சிரமங்களெதுவுமில்லாமல் எழுதமுடியும். சிங்கள அச்சிடுமுறையில் ஏற்படும் ஒரு முன்னேற்றத்தினை தமிழுக்குமாக விரிவுபடுத்த்திக்கொள்ள முடியும். தமிழில் ஏற்படும் முன்னேற்றங்களை சிங்களத்துக்கும் விரிவுபடுத்திக்கொள்ளலாம்.

வெளிவரும் எல்லா தொழிநுட்பங்களினதும் இயல்பிருப்பு (Default) குறியீட்டுத் திட்டமாகவும் யுனிகோட் இருக்கிறது. தொழிநுட்பவியல் தீர்வுகள், வழங்குகையிலிருந்து (தொழிநுட்பம்) உள்ளடக்கத்தினை (உரை) வேறுபடுத்துவதைநோக்கிச் செல்லும்போது , யுனிகோட்தான் இயல்பிருப்பு குறிமுறையாக எடுத்துக்கொள்ளப்படும்.

இது உத்தமத்தினால் சிபாரிசு செய்யப்படுகிறதா?

தமிழ் தகவற் தொழிநுட்பத்தின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய மிகச்சிறந்த தீர்வுகளை அடையாளங்காண்பதற்கும் சிபாரிசு செய்வதற்குமான கருத்துப் பரிமாற்றங்களுக்கு உத்தமம் வசதிசெய்து தருகிறது. தமிழ் இணையம் 2001 மாநாடு கோலாலம்பூரில் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், உத்தமம், வெவ்வேறு நாடுகளுக்குமான கணினி இயல் தேவைகளை கருத்திலெடுத்துக்கொண்டதுடன், 8-bit இடத்திலமைந்த , வெவ்வேறு தேவைகளை பூர்த்திசெய்யக்கூடியதான குறிமுறைகளிரண்டை சிபாரிசுசெய்தது.

இதைப் போன்றே 16-bit இடஒதுக்கீட்டிலும், தராதர நிறுவனம் ஒன்றினால் வெளியிடப்பட்ட ஒரு நியமமாக யுனிகோட் மட்டுமே இருப்பதை உத்தமம் கண்டுணர்கிறது.

ஆயினும் யுனிகோட் இற்கு மாற்றான குறிமுறையொன்று தமிழின் சிறப்புத் தேவைகளை பூர்த்திசெய்யும் என தமிழ் கணினி இயல் தொழிற்துறையின் உறுப்பினர்கள் சிலர் கருதுகிறார்கள். இவ் ஆய்வுக்கு வசதிசெய்வதற்கான செயற்குழு ஒன்றின் உருவாக்கத்தினை நாம் ஊக்குவித்திருக்கின்றோம்.

இலங்கையின் ICTA, தமிழ் விசைப்பலகை நியமப்படுத்தலுக்கான பணிகளை செய்துகொண்டிருக்கிறது. இவ்விடயத்தில் உத்தமத்தினது சிபாரிசும் முனைப்புறுத்தலும் என்ன?

குறிமுறை விடயம் போன்றல்லாது, விசைப்பலகை நியமப்படுத்தல் என்பது சற்று இலகுவானது. தமிழ் நாடு அரசினால் ஒழுங்குபடுத்தப்பட்ட தமிழ் இணையம் 99 மாநாடு நடைபெற்றுக்கொண்டிருந்தவேளையில், பல்வேறு விசைப்பலகை வடிவங்களை கற்பதற்கும், ஒரு தனி நியமத்தினை முன்மொழிவதற்குமான பணிப் படை ஒன்று அமைக்கப்பட்டது. அச்செயற்குழு இப்பணியை செய்துமுடித்ததுடன், தமிழ் 99 நியமத்தையும் கொண்டுவந்தது. பின்னர் இதனையே தமிழின் நியம விசைப்பலகையாக உத்தமம் ஆமோதித்தது.

இது வழக்கிலிருக்கும் ஏனைய விசைப்பலகை வடிவங்களை புறந்தள்ளுவதாகாது. தமிழ் மென்னிய உற்பத்தியாளர்கள் இவ்விசைப்பலகையினையும் “தெரிவுகளுள்” ஒன்றாக சேர்த்துக்கொள்ளமுடியும். ஆகக்குறைந்தது ஒரு விசைப்பலகை வடிவம், “எல்லா” மென்பொருட்களிலும் காணப்படுவதை இது உறுதிப்படுத்துகிறது.

1986 முதல் தமிழ் இணையத்தோடு தாங்கள் இணைந்திருப்பதாக அறிகிறோம். தமிழ் தகவற் தொழிநுட்பத்தின் பரிணாமம் பற்றியும் இன்றைய நிலைக்கு அது எவ்வாறு முன்னேறிவந்திருக்கிறது என்பது பற்றியும் கூற முடியுமா?

என்னுடைய முதல் மென்பொருள் Assembly செய்நிரல் மொழி ஒன்றினால் எழுதப்பட்டது (அம்மொழி இரும (ஒன்றும் சைபரும்) குறியீடுகளை விடவும் ஒரு படி மட்டுமே மேலானது). காரணம் என்னவென்றால், அக்காலத்தில் ஆங்கிலத்தைத் தவிர வேறு எதுவுமே கணினி இயலுக்கு பொருத்தமானதாக கருதப்படவில்லை. எனவே நாம் அடிமட்ட நிலைகளுக்குச் சென்று மனிதமுறையாக (Manually) தந்திரங்களை கணினியில் பிரயோகித்து, அது இயல்பாக இயங்கும் நிலையிலேயே தமிழை பின் கதவால் புகுத்தினோம். Lotus123 அல்லது WordStar போன்ற நியம செயலிகளில் தமிழ் எழுத்துருக்களைக் காண்பதென்பது ஒரு சவாலாகவே இருந்தது. அச்சில் தமிழை காண்பதென்பது மற்றுமொரு சவாலாக இருந்தது.
அக்காலம் முடிந்துவிட்டது.

நவீன இயங்குதளங்கள் பன்மொழிச் சூழலில் இயங்கக்கூடிய வண்ணமே வடிவமைக்கப்பட்டன. மொழிகளை அகிலந்தழுவிய வகையில் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய தொழிநுட்பங்களே தெரிவுசெய்யப்படுகின்றன. இது வரிவடிவங்களைப் புலப்படுத்துவதற்காக மட்டுமல்ல, வரிவடிவங்களை முறைவழியாக்குவதற்குமாகவே (Processing) . எத்தனை மொழிகளுக்கும் ஆதரவளிக்கக்கூடியவகையில் எழுத்துப்பிழை திருத்திகள் விரிவுபடுத்தப்படமுடியும். ஆள்களப் பெயர்களும் (Domain names) மின்னஞ்சல் முகவரிகளும் கூட தமிழில் இருக்க முடியும்.

இன்றைய சவால் என்னவென்றால், தொழிநுட்பத்திலிருந்து அமுலாக்கத்திற்கும் பயன்பாடுக்கும் மாறிக்கொள்ளலே.நாம் ஒரு வெளிப்பாட்டில் இணைந்துகொள்ளவேண்டிடுமெனில், அங்கே நாம் பயன்படுத்தவென அடிப்படைக்கூறுகள் உண்டு. ஏற்கனவே நாம் ஆங்கிலத்தில் செய்துகொண்டிருப்பவற்றை மட்டுமே தமிழிலும் செய்துகொள்வதோடு எம்மை நிறுத்திவிடக்கூடிய எதுவுமே அங்கு இல்லை.

தமிழ் தகவற் தொழிநுட்பத்தின் எதிர்காலம் என்ன?

இலங்கைத் தமிழறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களுடைய வாசகமொன்றினை இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன்.”தமிழின் மேன்மை, அதன் தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில் உள்ளது.”. தமிழ் தகவற் தொழிநுட்பத்தின் எதிர்காலம் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டில்தான் உள்ளது.அதிக மக்களால் அது பயன்படுத்தப்படுகையில் அதிக பரப்புக்களை நாம் கண்டறிகிறோம். தடைகளை அகற்றுதலை நாம் தொடர்ந்துகொண்டிருக்கவேண்டும். அப்போது, தமிழ், புதிது புதிதாய் முகிழ்க்கும் தொழிநுட்பங்களைஎல்லாம் உள்வாங்கிக்கொள்ளும். ஒரு பத்தாண்டு காலத்துக்குள் உண்மையிலேயே நிறைய “தமிழ் ” மின்னஞ்சல்களும் வலைப் பரிமாற்றங்களும் நிகழ்கின்றன. இந்நிலை மற்ற எல்லாப் பரப்புக்களிலும் தொடருமாயின், ஒரு மிகப் பிரகாசமான எதிர்காலத்தினை நான் காண்கிறேன்.

உத்தமத்தினுடைய வகிபாகம் என்ன? எவ்வாறு உத்தமத்தோடு இணைந்துகொள்ளமுடியும்? உறுப்பினர்கள் பெறக்கூடியது என்ன?

தமிழ் தகவற் தொழிநுட்பத்தினை அபிவிருத்திசெய்வதற்கும் முன்னேற்றுவதற்கும் உதவுதலே உத்தமத்தின் முதன்மை வகிபாகம்.தகவற் தொழிநுட்ப உலகில் ஆங்கிலத்தைப்போல் தமிழை தகைமையுடையதாய் மாற்றும் புதிய தொழிநுட்பங்களை ஊக்குவிப்பதில் முக்கிய வகிபாகத்தினை எடுக்கவேண்டிய தேவை உத்தமத்துக்கு உள்ளது.

தமிழர் புலம்பெயர் வாழ்விடங்கள் எங்கனும் தமிழ் தகவற் தொழிநுட்பத்தினை பரவலாக்குவதற்கான தேவையும் உத்தமத்துக்கு உள்ளது.இதன்மூலம் உலகெங்கும் பரதிருக்கும் ம்தமிழர்களுடைய வலையமைக்கப்பட்ட சமூகத்தை உருவாக்க முடியும்.

மூன்றாவதாக, முழு புலம்பெயர் வாழ்விடங்களுக்கும் பயன்படக்கூடிய மரபுஆவண நடுவங்கள், மின்னணுநூலகங்கள் போன்ற, தகவற் தொழிநுட்பத்தினை அடிப்படையாகக்கொண்ட தமிழ் வளங்களின் அபிவிருத்திக்கு உதவும் தேவைப்பாடும் உத்தமத்துக்கு உள்ளது.

மேலும், கட்டுப்படுத்தும் அதிகாரங்களை கொண்டிராத ஒரு தன்னார்வ நிறுவனமாக உத்தமம் இருந்தபோதிலும், தனது பிரதிநிதித்துவ கட்டமைப்புக்கூடாகவும் அதன் வல்லுனர்களின் சேர்ந்திருப்பாலும் தமிழ் தகவற் தொழிநுட்ப நியமங்களை அமைப்பதில் மேலான ஆலோசகராக சேவையாற்றுகிறது.

இலங்கைத் தமிழர்கள் உலகெங்கும் பரந்திருக்கிறார்கள். தமிழ் தகவற் தொழிநுட்பத்தில் அவர்களது பங்களிப்பினை எவ்வாறு நீங்கள் பார்க்கிறீர்கள்?

இலங்கைத் தமிழர்களே தமிழ் தகவற் தொழிநுட்பத்தினை ஆரம்பகாலத்திலேயே உள்வாங்கிகொண்டவர்கள். “பாமினி” எழுத்துரு, இலங்கையைச்சேர்ந்த முன்னோடிகளிடமிருந்து வெளிவந்ததுதான். மின்னணு, அச்சுவெளியீட்டு வடிவங்களில் தமிழின் குறிப்பிடத்தக்களவு உள்ளடக்க அபிவிருத்திக்கான முனைப்புக்களை அது இயலுமாக்கியது.

எப்படியாயினும், தொழிநுட்பப்பரப்பில் அதிகளவான பங்குபற்றல் எமக்குத் தேவைப்படுகிறது. பன்னாட்டு நியமங்களில் (யுனிகோட் போன்றவை) தமிழின் தனிச்சிறப்பான தேவைகள் பற்றிய கருத்தாடல்கள் நிகழும்போது, இலங்கைத்தமிழ் வழக்கிற்கான பிரதிநிதித்துவம் எமக்குத் தேவைப்படுகிறது. இலங்கைத்தமிழின் தனிச்சிறப்பானதேவைகளை உறுதிப்படுத்திக்கொள்ளவும், அப்படி ஏதேனுமிருப்பின் அவற்றை கருத்திலெடுத்துக்கொள்ளவும் இது எமக்கு உதவும்.

தமிழ் வழங்குமுறையானது, வாழ்விடங்களின் சூழலைப்பொறுத்து மற்ற மொழிகளின் செல்வாக்குக்கு உட்படுகிறது. எடுத்துக்காட்டாக, மலேசியத் தமிழின் அன்றாட வழங்குமுறையில் ஏராளமான மலாய் சொற்களை நாம் பார்க்கலாம். தேடல், உருவாக்கம், எழுத்துப்பிழை திருத்துதல் போன்றவற்றை இத்தகைய சொற்களுக்கும் இயலுமாக்குவது எமது நாட்டில் ஒரு தேவையாக உருவாகிவருகிறது.இதைப்போலவே, இங்கே பேசப்படும் தமிழிலும் கடன்பெறப்பட்ட சொற்கள் இருக்கமுடியும்.

இத்தகைய சொற்களை எவ்வாறு சீராக ஒழுங்குபடுத்துவது? இவையே, நியமங்களை உருவாக்குவதில் இலங்கை மொழியியலாளர்களும் தொழிநுட்பவியலாளர்களும் பெரும்பங்காற்றவேண்டிய பரப்புகளாகும்.

எமது வாசகர்களுக்கு ஏதேனும் கூறவிரும்புகிறீர்களா?

தமிழ் நாட்டுக்கு வெளியே, தமிழ் பயனாளர்களதும் வல்லுனர்களதும் மிகப்பெரும் சமுதாயம் இலங்கையில் வாழ்கிறது. பன்னெடுங்காலமாக தமிழ் மொழி, கலாசாரம், இலக்கிய்ம் என்பவற்றுக்கு இச் சமுதாயம் தனது பங்களிப்பினை வழங்கிவந்துள்ளது.தமிழ் உலகிற்கான தொடர்ச்சியான பங்களிப்பினை , உலகளாவிய தமிழர் வாழ்விடங்கள் அனைத்தும் இலங்கையிடமிருந்து எதிர்பார்க்கிறது. இலங்கைத் தமிழர்கள் இந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் , மெச்சத்தக்களவில் நிறைவேற்றுவார்கள் என்பதில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.

நிறைவாக, இலங்கை மக்களுக்கும் தங்கள் வாசகர்களுக்கும் உத்தமத்தின் சார்பில் எனது நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழில்- மு.மயூரன், திருக்கோணமலை.
நேர்கண்டவர்- ஜெயதீபன் உலகப்பிரகாசம்.
மூலம்: தினக்குரல் வாரசஞ்சிகை
நன்றி: சூரியன்.கொம்

ToTop