ezilnila.ca
A Tamil web portal since 1997
யுத்தமில்லாத பூமி வேண்டும் logo

சொந்த வீடு தரும் மகிழ்ச்சி

கணினித் தமிழ்: முத்து நெடுமாறன் ( மலேசியா )

கணினி கண்டுபிடிக்கப் பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. கண்டுபிடித்தவர் யார், எதற்காகக் கண்டுபிடித்தார் என்ற கேள்விகளுக்கு பலவாறான கருத்துகளும் உலவுகின்றன.
இன்றைய பயன்பாட்டைப் பொருத்த வரை, கணினிவழி செயல்படுத்தப்படும் செயல்கள் பலவற்றைத் தொகுத்து, அந்தத் தொகுப்பின் சாரத்தைச் சற்று கூர்ந்து பார்த்தால் அடிப்படை நோக்கங்கள் தெளிவாகும். மனிதர்கள் செய்யத் தயங்கும் பல செயல்களைக் கணினியிடம் விட்டுவிட முயல்கிறோம். செய்த கணக்கையே மீண்டும் மீண்டும் செய்வது, ஒரே கடிதத்தை ஆயிரக் கணக்கானோருக்கு அவரவர் சொந்தப் பெயரிட்டு எழுதுவது, அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஏற்கனவே கொடுத்த பதிலை மீண்டும் மீண்டும் கொடுப்பது இந்தச் செயல்கள் எல்லாம் நமக்கு உற்சாகத்தைத் தருவதுமில்லை, நமது உற்பத்தியைக் கூட்டுவதுமில்லை!

“தம்பி, போன வருஷம் நாம அவனுக்கு அனுப்பிய நோட்டீஸை ஏதே ஒரு கோப்புல வெச்சிருக்கேன் – கொஞ்சம் தேடிக் கொடுப்பா” – இது போன்ற விண்ணப்பங்களை, நாம் மகிழ்ச்சியோடு ஏற்பதில்லை! அந்த நோட்டீஸ் தொடர்பான இரண்டு சொற்களை உச்சரித்தால், அந்த ஆவணம் கண்முன்னே வந்து விழவேண்டும். இதுதான் இன்று நாம் விரும்புவது. இந்த “மந்திரம்” தப்பாமல் வேலைசெய்தால், தேடுதலும் ஓர் உற்சாகம் ஊட்டும் செயலாக அமையும்!

இணையத்தின் வெற்றிக்கு அடிப்படைக் காரணங்கள் சிலவற்றில் “தேடும் வசதி” தலையாயதாக அமைகிறது. யாஹூ, எம்.எஸ்.என், கூகல் போன்ற அமைப்புகள், நாம் விரும்பும் விவரத்தைத் தேடுவதற்குப் பெரிதும் உதவுகின்றன. நமக்குத் தெரிய வேண்டியதெல்லாம் விவரத்திற்குத் தொடர்புடைய ஒரு சில சொற்களே!.

ஆனால் இந்த அமைப்புக்களில் தேடுவதற்கு இது நாள் வரை நாம் ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டி உள்ளது. தமிழில் அமைந்துள்ள இணையப் பக்கங்கள், ஆவணங்களைக்கூட ஆங்கிலத்தைப் பயன்படுத்தித்தான் தேடிவருகிறோம்.

இதில் எல்லாம் தமிழும் இடம்பெறெ வேண்டும் என்று நம் எல்லோருக்குமே ஆசை இருக்கிறது. இப்போது அந்த ஆசை நிறைவேறத் துவங்கியிருக்கிறது.!ஆம். கூகுல் போன்ற அமைப்புக்களில் இனித் தமிழ்ச் சொற்களை தமிழிலேயே எழுதித் தேடலாம்.

இதுநாள் வரை இயலாதிருந்த இது இப்போது எப்படி சாத்தியமாயிற்று? விடை: யூனிகோட்..

யூனிகோட் குறியீட்டு முறை தமிழுக்குத் தரும் சிறப்புகளைக் குறித்து திசைகளின் முதலாவது இதழில் எழுதியுருந்தேன் (http://groups.msn.com/namathuthisaigal/kaatruveliyidaimuthu.msnw). அதில், “இப்போது நாம் பயன்படுத்தும் தமிழ், “வாடகை வீட்டுத்” தமிழ். நமக்கென்று ஒரு வீடு இல்லை – வீடு கட்ட வசதி இருந்தும் இடம் இல்லை. எனவேதான் வாடகை வீட்டில் இருந்து வருகிறோம். வீட்டில் நாம் குடியிருந்தாலும் வீட்டுக்குச் சொந்தக்காரர் நாம் அல்ல – ஓர் ஐரோப்பியர்! நகராண்மைக் கழகத்தைப் (அதாவது கணினியைப்) பொறுத்தவரை, இந்த வீட்டில் இருந்து வருபவர் ஓர் ஐரோப்பியர். அவருக்கு ஏற்றவாறே சூழ்நிலைகளையும் அமைத்துத் தருவார்.

வாடகை வீட்டில் இருந்து என்னதான் தமிழில் நாம் செய்தி அனுப்பினாலும், கணினியும் இணையமும் அதனை ஓர் ஐரோப்பிய மொழியில் அமைந்த செய்தியாகத்தான் கருதும்……யூனிகோடில் இந்தப் பிரசினை இல்லை. நிறைய இடம் உள்ளது. அதுவும் தமிழுக்கென்றே தனி இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த இடத்தில் எந்த “ஸ்டைலில்” வீடு கட்டினாலும், அது ஒரு தமிழரின் வீடு என்பதை கணினியும் இணையமும் உணர்ந்து கொள்ளும். அதற்கேற்றாற் போல் சூழ்நிலைகளையும் அமைத்துக் கொடுக்கும்…. யூனிகோட் அமைப்பில் தமிழ் வரிகளுக்குப் “பாதுகாப்பு” வழங்கப்படும். அனுப்பப்படும் செய்தி பெறப்படும் போது, தமிழிலேயே தோன்றும்!” என்று குறிப்பிட்டிருந்தேன்.

எனவே திசைகள் வெளிவந்ததும் நான் செய்த முதல் வேலை, கூகுல், எம்.எஸ்.என். அமைப்புக்களில் தமிழில் அனுப்பபடும் செய்தி தமிழ்லேயே தோன்றுகிறதா என்று சோதித்துப் பார்த்ததுதான். அந்தத் தேடலின் விடைகளை இதோ நீங்களும் பாருங்கள்:

artmuthu-2

இதில் தேடுதலுக்கான சொல் தமிழில் அமைந்திருப்பதையும், அவற்றிற்கான விடைகளும் தமிழிலேயே அமைந்திருப்பதையும் பார்க்கலாம். இதே போல் அஞ்சல் என்ற சொல்லைப் பயன்படுத்தித் தேடலை மேற்கொண்டபோது:

artmuthu3

கூகுலில் மட்டுமன்றி எம்.எஸ்.என்.னிலும் இது போன்ற தேடலை மேற்கொண்டேன்:

artmuthu4

எனவே, யூனிகோட் அமைப்பில் அமைந்த தமிழ் ஆவணங்களைத் தேட, கூகல், எம்.எஸ்.என் அமைப்புகளில் தமிழைப் பயன்படுத்தலாம். இந்த அமைப்புகள் இவை தமிழ்ச் சொற்கள் என்பதை உணர்ந்து தமிழ்லேயே விடை தரும்., தேடும் ஆவணத்தில் உள்ள ஓரிரு சொற்களை மட்டும் கொடுத்தால் போதும்  இணையத்தையே கூவி எழுப்பிவிடும் “கூகல்” – அதுவும் தமிழில் கூவுகிறது என்றால் மகிழ்ச்சிக்கு எல்லை உண்டா?

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

பலர் பல வழிகளைப் பயன்படுத்துவார்கள் இணையப் பண்பாடும் அதுதானே!. நான் பயன்படுத்துவதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

யூனிகோட் அமைப்பில் உள்ள பக்கங்களை எல்லா விண்டோஸ் அமைப்புகளிலும் “படிக்கலாம்”. ஆனால், தமிழில் “அடிப்பதற்கு” (உள்ளீடு செய்வதற்கு), விண்டோஸ்2000 அல்லது விண்டோஸ் XP தேவைப்படும். (புதிய மெக் கணினிகளிலும் கூட இயலும், இதைப் பிறகு காண்போம்).

தமிழில் உள்ளீடு செய்ய நான் பயன்படுத்துவது முரசு அஞ்சல். இது இயங்கிக்கொண்டிருக்கும் போது, இதன் சின்னம்,சிறியதாக திரையின் கீழ் (வலது பக்கம்) இருக்கும். அதன் மேல் உங்கள் சுட்டியின் (mouse) வலது பட்டனைத் தட்டினால், ஒரு பட்டியல் தோன்றும். அதில் “Encoding” என்ற சொல்லைத் தேர்தெடுத்து, உடன் தோன்றும் இணைப்புப் பட்டியலில் “Unicode” சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வளவுதான். இனி, உங்கள் கூகல் பக்கத்திற்குச் சென்று (http://www.google.com) வழக்கம் போல் F12 அழுத்தி, தமிழில் தேட வேண்டியதுதான்.

தேடப்பட்டப் பக்கங்கள்

கொடுத்தச் சொல்லை எடுத்துச் சென்று, கிடைத்த பக்கங்களைப் பட்டியலிட்டுக் கொடுக்கும் கூகல். ஆங்கிலத்தில் செய்வதைப் போலவே, பட்டியலைத் தட்டினால், பக்கங்கள் வரும். இந்தப் பக்கங்களும் யூனிகோடில் இருப்பதால் – உங்கள் உலாவியில் (browser) மாற்றங்கள் தேவையில்லை – தானாகவே தமிழில் தோன்றும்.

திசைகளில் வெளிவந்த அனைத்து கதைககளையும், கவிதைகளையும், கட்டுரைகளையும் கூகல் வழி தமிழிலேயே கூவி அழைக்கலாம். எழுதியவரின் பெயரோ, கதை-கட்டுரையின் தலைப்போ அல்லது அதில் பேசப்படும் பொருளோ போதும் – தேடி எடுத்துவிடலாம். இந்த “மந்திரம்” வேலை செய்கிறது!

இன்றைய சூழ்நிலையில், மிகக் குறைவான பக்கங்களே நமக்குக் கிடைக்கின்றன. திசைகள் இணைய தளத்தைத் தவிர ஓரிரு சோதனைப் பக்கங்கள் மட்டுமே யூனிகோட் குறியீட்டு முறையில் அமைந்திருக்கின்றன. நாளடைவில் மற்ற பக்கங்கள் யாவும் யூனிகோட் முறைக்கு மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கூவி அழைக்கும் போது, ஒன்றல்ல இரண்டல்ல, ஓர் ஆயிரம் பக்கங்கள் கிடைக்க வேண்டும்! அப்போதுதான் நமது சொந்த வீட்டின் மகிமை நமக்கு விளங்கும்!

ToTop